சாந்திப்பிரியா 

அப்போது ஒரு நாள் தொண்டைமானின் கனவில் பகவான் விஷ்ணு தோன்றினார். அவர் அவரிடம் கூறினார் ‘ மன்னா, நீ பூர்வ ஜென்மத்தில் எனக்கு ஒரு வாக்கு கொடுத்தாய். நீ அடுத்தப் பிறவி எடுத்து ராஜாங்கத்தை ஆளும்போது, எனக்கு ஒரு ஆலயம் அமைத்துத் தருவாய் என்பதே அந்த வாக்குறுதி. அதன்படி நீயும் இப்போது அரசனாகி விட்டாய். ஆகவே எனக்கு ஷேசாசலத்தில் ஒரு ஆலயம் அமைத்தால் அங்கு நானே வந்து குடி புகுவேன். அங்கு வந்து நான் ஆலயத்தில் அமர்ந்து கொண்டு கலியுகம் முடியும்வரை மக்களைக் காத்து வருவேன். ஆகவே அங்குள்ள பகவான் வராஹ ஸ்வாமியின் ஆலயத்துக்கு அருகிலேயே எனக்கு ஆலயம் அமைக்க ஏற்பாடு செய்’.

அதைக் கேட்ட தொண்டைமான் விழித்தெழுந்ததும் ஒரு விஸ்வகர்மாவை அழைத்து வந்து ஆலயம் அமைக்க ஏற்பாடுகளை செய்து பெரிய ஆலயம் ஒன்றை அமைத்தார். கண்களுக்குப் புலப்படாமல் இருந்த அந்த ஆலயத்துக்கு அனைத்து தேவர்களும், முனிவர்களும், கடவுட்களும் பூலோகத்து மக்களும் வந்தார்கள். அங்கு பகவான் விஷ்ணு வந்து குடியேறியதும் பகவான் பிரும்மா தானே வந்து இரண்டு விளக்குகளை ஏற்றி வைத்து கலியுகம் முடியும்வரை அவை அங்கு ஓளி வீசிக் கொண்டு இருக்கும் என்று கூறினார். அந்த ஆலயத்தில் நடைபெற்ற விழாவை பகவான் பிரும்மாவே இருந்து நடத்தியதினால் அந்த விழாவை பிரும்மோத்சவம் என்று அழைத்தார்கள்.

சிறு விளக்கம்:-

இந்த ஆலயம் முதலில் தேவ லோகத்தில் அதே இடத்திற்கு மேல் பகுதியில் விச்வகர்மாவினால் பிரும்மாண்டமாகக் கட்டப்பட்டது என்றும், அதில் மேல்கூறிய அனைத்து வைபவமும் நடைபெற்றப் பின்னரே, அது அப்படியே கீழிறங்கி வந்து தொண்டைமான் கட்டிய ஆலயத்தின் பூமிப் பகுதிக்குள் மறைந்து கொண்டது என்பதினால்தான் இந்த ஆலயத்தில் உண்மையாகவே விஷ்ணு பகவான் பகவான் ஸ்ரீனிவாசராக குடி உள்ளார் என்பதும் ஒரு நம்பிக்கையாக உள்ளது.

பூமியில் தொண்டைமானால கட்டப்பட்ட ஆலயம் கட்டப்பட்டு கொண்டு இருந்த நேரத்தில் பகவான் ஸ்ரீனிவாசர் தனது மனைவியான பத்மாவதியுடன் அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் தொண்டைமானுக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. கனவில் தனக்கு பகவான் விஷ்ணு ஒரு ஆலயம் அமைக்க கட்டளை இட்டதைத் தொடர்ந்து அவரது தெய்வீக அவதாரம் எனக் கருதப்படும் பகவான் ஸ்ரீனிவாசரும் அல்லவா இங்கு நேரில் வந்துள்ளார். ஆகவே பகவான் விஷ்ணுவே நேரில் வந்து ஆலயத்தில் குடி புக உள்ளார் என்பது நிரூபணம் ஆகிவிடும் போல உள்ளதே என எண்ணியவர் மனதில் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.

தொண்டைமானின் நாட்டில் இப்படியாக பல அதிசய நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கையில் மகரிஷி நாரதர் சும்மா இருப்பாரா? அவர் அடுத்து செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமான காரியமும் இருந்ததே. முதலில் விதிப்படி பகவான் விஷ்ணுவுடன் வேதவதியான பத்மாவதியை திருமணம் செய்து வைத்தாகி விட்டது. அடுத்து தவத்தில் உள்ள உண்மையான லஷ்மி தேவியை இனி பகவான் விஷ்ணுவுடன் இணைத்து வைக்க வேண்டும். பகவான் விஷ்ணுவின் ஸ்ரீனிவாச அவதாரமும் வெளிப்பட வேண்டும். இதை மனதில் கொண்ட மகரிஷி நாரதர் உடனடியாக லஷ்மி தேவி தவம் இருந்த கொல்லாபுரத்துக்கு கிளம்பிச் சென்றார்.

லஷ்மி தேவி தவம் இருந்த யாத்துக்குச் சென்றவர் அவள் கண் விழிக்கும் வரைக் காத்திருந்தார். எப்போதும்போல லஷ்மி தேவி தவத்தையும் பூஜையையும் செய்து முடித்தப் பின் வெளியில் வர அங்கு மகரிஷி நாரதர் நின்று கொண்டு இருந்ததைக் கண்டாள். ‘என்ன நாரதரே, உமக்கு என்ன ஆயிற்று? எதற்காக இங்கு வந்து நின்று கொண்டு இருக்கின்றீர்கள் ? உள்ளே வந்து அமர்ந்து இருக்கலாம் அல்லவா ‘ என்று விசாரிக்க மகரிஷி நாரதர் கூறினார் ‘ அம்மா, நான் சொல்ல என்ன உள்ளது? நீங்கள் இங்கு உங்கள் கணவருடன் இணைய வேண்டும் என்று தவம் இருந்து கொண்டு இருக்கையில் ஷேசாசலபுரத்தில் உங்கள் கணவர் விஷ்ணுபிரான் பத்மாவதி என்று ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு உல்லாசமாக இருக்கிறாரே என்பதினால் எனக்கு உங்கள் மீது இரக்கம் வந்துவிட்டது. ஆகவேதான் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும் வகையில் உங்களுக்குத் துணையாக இருக்கவே இங்கு வந்தேன்’ என்று பீடிகையுடன் ஒரு செய்தியைப் போட்டார்.

அது போதாதா லஷ்மி தேவியின் கோபத்தைக் கிளற? ‘ என்ன என் நாதன் இன்னொருவளை மணந்து கொண்டு விட்டாரா. இதோ இப்போதே கிளம்பிச் சென்று நியாயம் கேட்கிறேன். தயவு செய்து என்னுடன் கிளம்பி வந்து அவர்கள் உள்ள இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள் ‘ என்று அவரிடம் கெஞ்சிக் கேட்கத் துவங்க அதையே எதிர்பார்த்திருந்த மகரிஷி நாரதரும் சற்றும் தயங்காமல் லஷ்மி தேவியை அழைத்துக் கொண்டு ஷேசாசலத்துக்குச் சென்றார்.

நாரதர் தனது நாடகத்தை மீண்டும்  துவக்கினார் 
 ………தொடரும்