சாந்திப்பிரியா 
நாரதர் கைலாயம் சென்ற கதை

இந்த காரணங்களை மனதில் ஏந்தியவாறு இருந்த மகரிஷி நாரத முனிவர் கவலை அடைந்தார். ஆகவே பகவான் கிருஷ்ணர் அவதாரத்தில் இருந்த பகவான் விஷ்ணு யசோதைக்கு கொடுத்த வாக்கின்படி இப்போது நிச்சயமாக அவர் ஒரு அவதாரம் எடுக்க நியாயம் உள்ளது. ஆனால் அது எப்போது என்பது தெரியவில்லையே என மகரிஷி நாரதர் எண்ணினார். அதைக் குறித்து யாரிடம் சென்று யோசனை கேட்கலாம் என எண்ணியவர் தனது தந்தையின் நினைவு வர அவரைக் காண பிரும்ம லோகத்துக்கு கிளம்பிச் சென்றார். மகரிஷி நாரத முனிவர் பகவான் பிரும்மாவின் புதல்வர். பிரும்ம லோகத்துக்கு செல்லத் துவங்கிய மகரிஷி நாரதரை வழியிலேயே அவர் தந்தை பகவான் பிரும்மன் சந்தித்தார். ‘ என்ன நாரதா, இத்தனை அவசரம் அவசரமாக எங்கே போகிறாய்?’ என்று பகவான் பிரும்மா கேட்டதும், மகரிஷி நாரதர் தனது கவலையின் விவரத்தை எடுத்துரைத்தார். அதைக் கேட்ட பகவான் பிரும்மாவோ தானும் அதைக் குறித்து விவாதிக்கவே கைலாயத்துக்கு சென்று கொண்டு இருப்பதாகக் கூறி மகரிஷி நாரதரையும் தன்னுடன் அழைத்துச் செல்ல மகரிஷி நாரதரும் மகிழ்ச்சியுடன் தனது தந்தையுடன் கைலாயத்தில் இருந்த பகவான் சிவபெருமானின் சபைக்கு சென்றார்.

அவர்கள் கைலாயத்துக்கு சென்று இருந்த நேரத்தில் பகவான் சிவபெருமானின் அரச சபையில் அனைத்து தேவதைகளும், தேவ கணங்களும், கடவுட்களும், பூத கணங்களும் கூடி இருந்தார்கள். அப்போது அந்த சபையில் விஷ்ணு பகவான் இல்லை. பகவான் பிரும்மாவுடன் வந்த மகரிஷி நாரதருக்கு சிவபெருமான் தனி ஆசனம் தந்து அதில் அமரச் செய்து பெருமை தந்தார். அனைவரையும் விட்டு விட்டு முதலில் மகரிஷி நாரதரிடம் பேசிய பகவான் சிவபெருமான் அவர் முகத்தில் காணப்படும் கவலை ரேகைக்கான காரணம் என்ன என்று வினவினார். மகரிஷி நாரதரும் சற்றும் யோசனை செய்யாமல் தனது கவலைக் குறித்து அங்கு கூடி இருந்த அனைவரிடமும் கூறி, கிருஷ்ணாவதாரத்துக்குப் பிறகு எந்த அவதாரத்தையும் விஷ்ணு பெருமான் எடுக்கவில்லை என்பதினால், விஷ்ணு பகவான் மீண்டும் கலியுக வரதராக அவதரித்து, கலியுகம் பிறப்பதற்கு முன்னரே மக்களின் மனதில் தர்ம நெறி, பக்தி போன்றவற்றை வளர்த்து மக்களின் தீய செயல்களின் தாக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்கு என்ன வழிமுறையை செய்யலாம் என்று அங்கு கூடி இருந்தவர்களிடம் ஆலோசனைக் கேட்டார்.

மகரிஷி நாரதர் பேசி முடித்ததும், வேறு சிலரும் அவர் கூற்றை பிரதிபலிப்பது போலவே தமது அபிப்பிராயங்களை எடுத்துக் கூற அனைத்தையும் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்த சபையினர் கால நிர்ணய கோலப்படி இந்த சங்கடத்திற்கு பிருகு முனிவர் மூலமே நிவாரணம் கிடைக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளதினால், நாரத முனிவர் பிருகு முனிவரிடம் சென்று அவரை அதற்கு தக்க நிவாரணம் காண ஏதாவது செய்யுமாறு கேட்டுக் கொள்ள வேண்டும் என ஒருமனதாக முடிவாயிற்று. அதைக் கேட்ட மகரிஷி நாரதர் சங்கடம் அடைந்தார். தன் கவலையை எடுத்துரைக்க தான் அங்கு வந்து எதையோ கூறப் போய் தானே சங்கடத்தில் வீழ்ந்து விட்டோமே என கவலைக் கொண்டார்.

பிருகு முனிவர் மகா முன் கோபி. அவரிடம் நேரடியாக கேட்கப் போய் ஏடாகூடமாக அவர் மறுத்து விட்டால் காரியம் வீணாகி விடும். ஆகவே என்ன செய்வது? அவரை தம் வழிக்கு அழைத்து வர என்ன செய்யலாம் என்ற யோசனைகள் அவர் மனதை சூழ்ந்தன. அப்போது அவரைப் பார்த்து பகவான் சிவபெருமானும், பகவான் பிரும்மாவும் கூறினார்கள் ‘நாரதா, நீ பல்வேறு விளையாட்டுகள் நடத்தக் காரணமாக இருந்துள்ளாய். உனக்கு தெரியாத தந்திரங்கள் கிடையாது. உன்னை விட்டால் இந்த காரியத்தை வேறு எவராலும் வெற்றிகரமாக செய்ய முடியாது. ஆகவே இந்த காரியத்தில் உனக்கு பூரண வெற்றி கிடைக்க எங்கள் ஆசிர்வாதங்கள் உனக்கு இருக்கும்’ என்று பல்வேறாக அவரை புகழ்ந்து கூறினார்கள். அதைக் கேட்ட மகரிஷி நாரதரும் சரி வருவது வரட்டும், என்ன நடக்க வேண்டும் என்றுள்ளதோ, அதுவே நடக்கும் என தீர்மானித்தவர் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு பிருகு முனிவரைக் காண பூலோகத்துக்குக் கிளம்பிச் சென்றார். அனைத்து சம்பவங்களுமே கால நிர்ணயப்படி அல்லவா நடக்கத் துவங்கி இருந்தது !!

……தொடரும்