சாந்திப்பிரியா 
நாரத லீலை துவங்கியது

யோசனை செய்தவாறே பிருகு முனிவரை தேடிக் கொண்டு மகரிஷி நாரதர் பூலோகத்தை அடைந்தார். முனிவர்கள் ஒரு இடத்தில் தங்குவது இல்லை. அங்காங்கே சென்று எங்கெல்லாம் யாகங்கள் நடைபெறுமோ அந்த யாகங்களில் கலந்து கொண்டு திரிவார்கள். ஆகவே யாகங்களில் தேடினால் அவரைக் கண்டு பிடித்து விடலாம் என்று எண்ணினார். பூலோகம் வந்த மகரிஷி நாரதருக்கு கங்கைக் கரையில் பெரிய யாகம் ஒன்று நடைபெறுவதாகவும், அங்குதான் அனைத்து முனிவர்களும் உள்ளதாகவும் செய்தி கிடைக்க விரைந்து கங்கைக் கரையை அடைந்தார். அங்கு சென்று கேட்டால் பிருகு முனிவர் உள்ள இடம் தெரிந்து விடும். கங்கை நதியோ மிகப் பெரிய நதி. அதன் எந்தக் கரையில் போய் தேடுவது என்பது எளிதல்ல என்றாலும் யாகம் என்று கூறினாலே அது அநேகமாக இமயமலை அடிவாரப் பகுதியில்தான் நடைபெறும் என்பது மகரிஷி நாரதருக்கு தெரிந்து இருந்ததினால் இமய மலையின் அடிவாரத்தில் ஓடிய கங்கையில் இருந்த யாகசாலையைத் தேடி நடக்க அவர் எதிர்பார்த்தது வீணாகவில்லை. கங்கைக் கரையில் பெரிய யாகம் நடை பெற்றுக் கொண்டு இருந்தது. அந்த யாக சாலையில் பல முனிவர்கள் குமுழி இருந்தார்கள். அங்கு சென்றதும் அவர் தேடிக் கொண்டு இருந்த பிருகு முனிவரும் அங்கு இருந்ததைக் கண்டார். யாகசாலையை மகரிஷி நாரதர் அடைந்ததும், அனைவரும் அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தார்கள். மகரிஷி நாரதர் மா முனிவர் அல்லவா!

யாகத்தின் இடைவேளையில் யாகத்தின் தலைமை முனிவரான காஷ்யபரிடம் அந்த யாகம் என்ன காரணத்துக்காக நடைபெறுகிறது என்று மகரிஷி நாரத முனிவர் கேட்க, காஷ்யபர் அது உலகின் பொது நன்மைக்காக நடைபெறுவதாகவும், இன்னும் சில யுகத்தில் கலியுகம் பிறக்க உள்ளதினால் அது பிறக்கும் முன் மக்கள் மனதில் நல்லொழுக்கத்தைப் பெருக்கி, ஆன்மீக பக்தியை வளர்த்து வைக்க வேண்டும் என்றும், அப்படி செய்தால் கலி யுகத்திலும் மக்கள் அமைதியுடன், தர்ம நெறியுடன் இருந்து வாழ வழி வகுக்கலாமே என்று ரிஷி முனிவர்கள் எண்ணுவதினால் அதற்க்கு உதவுமாறு மும்மூர்த்திகளிடம் அந்த வேண்டுகோளை வைக்கும் வகையில் அந்த யாகம் நடை பெறுவதாகவும் கூறினார்.

தான் வந்த வேலை சுலபமாக நடப்பதை எண்ணி மகரிஷி நாரதர் மகிழ்ந்தார். மகரிஷி நாரதர் புன்முறுவலித்தவாறு அவரிடம் கேட்டார் ‘ முனிவரே, மிகவும் நல்ல விஷயத்துக்காக நீங்கள் செய்யும் இந்த யாகம் வெற்றி பெற வேண்டும் என்று மனப்பூர்வமாக ஆசி கூறுகிறேன். சரி வந்ததுதான் வந்தேன் . நானும் இதில் கலந்து கொண்டு இந்த யாகத்தில் அதித்தியை ஏற்க வருவரிடம் ஆசிகளைப் பெற்றுக் கொண்டு செல்கிறேன்’ என்று பொடி வைத்துப் பேசிய பின் அங்கு அமர்ந்து கொண்டார்.

அதித்தி என்று மகரிஷி நாரதர் கூறியதும்தான் அங்கிருந்த ரிஷி முனிவர்களுக்கு ஞானம் வந்தது. ‘அடடா…அதித்தியாக மும்மூர்த்திகளில் யாரை அழைக்கலாம் என யோசனை செய்யாமலேயே யாகத்தை ஆரம்பித்து விட்டோமே ..நல்ல வேளை மகரிஷி நாரத முனிவர் தக்க நேரத்தில் வந்து நம் கண்களை திறந்து விட்டார்’ என எண்ணியவாறு அதித்தியாக யாரை அழைக்கலாம் என அவர்களுக்குள் விவாதம் செய்யத் துவங்கினார்கள். யாராலும் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் மூர்த்தியை அழைப்பதில் உடன்பாடு ஏற்படாததினால், மகரிஷி நாரதரிடமே அதற்கான ஆலோசனையை அவர்கள் கேட்க அவர் கூறினார் ‘ இதோ பாருங்கள் முனிவப் பெருமான்களே, இந்த யாகம் மிக முக்கியமான யாகம். உலக நன்மையை மனதில் கொண்டு இதை செய்கிறீர்கள். கலி யுகம் பிறக்கும் முன் மக்களுக்குத் தேவை அமைதியான எண்ணம், ஆன்மீக எழுச்சி மற்றும் பக்தி மார்க்கம் போன்றவை. அவை உண்மையில் ஏற்பட வேண்டும் என்றால் அதை அளித்து அருள் புரியும் வகையில் உள்ள குணம் கொண்டவர் ஒருவரே அதித்தியாக இந்த யாகத்துக்கு வர வேண்டும். ஆகவே மும்மூர்த்திகளில் யாரை அழைக்க வேண்டும் என நீங்கள் முடிவு செய்யுங்கள்’ என்றார். ஆனால் முனிவர்கள் அதை முடிவு செய்ய முடியாமல் திண்டாடுவதினால் மகரிஷி நாரதரே அதற்கான விடையைத் தருமாறு வேண்டினார்கள்.

மகரிஷி நாரதர் கூறினார் ”இந்த பிரபஞ்சத்தில் மூன்று குணங்கள் கொண்டவர்களே உள்ளார்கள். அந்த மூன்று குணங்களான ரஜஸ், தமஸ் மற்றும் ஸாத்வீக குணங்களைக் கொண்ட கடவுளை பிரதிபலிப்பவர்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளவர்கள். இந்த பூமியில் அமைதி நிலவ வேண்டும், மனிதர்கள் ஸாத்வீகர்களாக, இரக்கம் கொண்டவர்களாக, பொறாமை இல்லாதவர்களாக, அக்கிரமம் செய்யாதவர்களாக, ஆன்மீக மனம் கொண்டவர்களாக, தர்ம நெறி உள்ளவர்களாக மனதார மாற வேண்டும் என்றால் அந்த சூழ்நிலையை கொடுக்க அந்த குணங்களைக் கொண்ட கடவுளால் மட்டுமே முடியும். ஆகவே அந்த குணங்களில் அமைதியான குணமான ஸாத்வீக குணம் கொண்டவர்களாக மனிதர்கள் பூமியில் மாற வேண்டும் எனில் அந்த குணத்தைக் காட்டும் கடவுளே அதித்தியாக வர வேண்டும். அப்படிப்பட்ட குணத்தைக் கொண்டவர் அங்கு வந்து யாக அவிர் பாகத்தை ஏற்று யாகத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற வகையில் நீங்கள் யாரையாவது அழைக்கலாம் ‘ என்று மகரிஷி நாரதர் கூற சில முனிவர்கள் ‘ நாரதப் பெருமானே தயவு செய்து அந்த மூன்று குணங்களின் முக்கிய ரூபமான சாத்வீக குணம் கொண்டவரை எமக்குக் அடையாளம் காட்ட முடியுமா?’ என்று கேட்டார்கள்.

அதையே எதிர்பார்த்துக் காத்திருந்த மகரிஷி நாரதர் கூறினார் ‘ மகா முனிவர்களே, நீங்கள் கேட்டது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் அந்த மூன்று ரூபங்களை கொண்டவர் யார் என்பதை நான் எப்படி அடையாளம் காட்டுவது? அனைவருமே ஒரே குணத்தைக் பிரதிபலிப்பவர்கள் இல்லை என்பதும் உண்மை. அவ்வபோது அந்தந்த நிலைக்கேற்ப அவரவர் குணங்கள் வெளிப்படுகின்றன என்பதும் உண்மையே. ஆனால் இப்போது இந்த யாகத்துக்கு அதித்தியாக வர வேண்டியவர், இந்த யாகத்துக்கு வரும் நேரத்தில் எந்த மன நிலையில் இருக்க வேண்டும் என்பதே முக்கியம். இந்த யாகத்தில் எந்த மன நிலையில் அவர் வருவாரோ, அதே மன நிலை இந்த உலகில் நிலவ அவர் ஆசி கூறுவார். அப்போது அது பலிக்கும். பின் வரும் விளைவுகளை ஆராயாமல் கண்மூடித்தனமாக தான் நினைத்ததை நடத்தும் குணத்தைத் தரும் ரஜோகுணத்தை வெளிப்படுத்துபவர் இங்கு தேவை இல்லை. நாளை, நாளை என நாளைக் கடத்திக் கொண்டு உடனடியாக செய்ய வேண்டிய எதையும் உடனே செய்யாமல், வரும் போது பார்க்கலாம் என சோம்பேறித்தனமாக உள்ள நிலையான தமஸ் குணம் கொண்டவரும் இங்கு தேவை இல்லை. ஆனால் அனைத்தையும் விவேகமாக ஆராய்ந்து, அமைதியாக சிந்தித்து, ஆழமான உணர்வுகளைக் கொண்டு, சினம் கொள்ளாமல் சாந்தமாக இருக்கும் ஸாத்வீக குணம் கொண்டவரே இங்கு தேவை. ஆகவே இந்த யாகத்துக்கு அதித்தியாக வர வேண்டும் என்று நீங்கள் விரும்பும் மூர்த்தியானவர், யார் உங்களில் அவர்களை அழைக்கச் செல்கிறார்களோ, அந்த நேரத்தில் அவர்களிடம் மும்மூர்த்திகளில் யார் சாத்வீக குணத்தை வெளிப்படுத்த உள்ளார் என்பதைப் பொறுத்து அவரைத்தான் நீங்கள் அழைக்க வேண்டுமே தவிர முமூர்த்திகளில் அந்த ரூபங்களை பிரதிபலிப்பவர் யார் என்று பொதுவாக கேட்கக் கூடாது. நான் முன்னரே கூறியபடி அனைவருக்கும் அனைத்து குணமும் இருக்கும் என்பதினால் எந்த நேரத்தில் அதை பிரதிபலிக்க வேண்டும் என்பதல்லவா முக்கியம். அப்படிப்பட்ட குணத்தை வெளிப்படுத்துபவரை நீங்கள் அழையுங்கள் . உங்கள் யாகம் வெற்றி பெரும்’ என்றார்.

அதைக் கேட்ட முனிவர்கள் ஆனந்தம் அடைந்தாலும், அவர்களில் தகுதியான யாரை அந்த காரியத்தை செய்ய அனுப்பலாம் என்பது பெரிய கேள்விக் குறியாக நின்றது.

தொடரும்