சாந்திப்பிரியா 
பிருகு முனிவர் தூதுவரானார்

ஒருவருக்கொருவர் யாரை அதித்தியாக அழைக்கலாம் என்று ஆலோசனை செய்யத் துவங்க அவர்களுடைய கருத்தில் ஒற்றுமை ஏற்படவில்லை. ஆகவே அவர்கள் அனைவரும் மீண்டும் மகரிஷி நாரதரிடம் வந்து அவரிடமே யாரை அழைக்கலாம் என யோஜனை கேட்டார்கள். அதையே எதிர்பார்த்துக் காத்திருந்த மகரிஷி நாரதரும் சற்றும் தயங்காமல் அவர்களில் மிகவும் மூத்தவரும் அனுபவசாலியுமான பிருகு முனிவரை தேவலோகத்துக்கு அனுப்பி யாகத்தின் தன்மையை மும்மூர்த்திகளுக்கும் விளக்கிக் கூறி யாகத்திற்கு அவர்களை அதித்தியாக வருமாறு வேண்டிக் கொள்ளலாம் என்றும், அப்படி பிருகு முனிவர் மும்மூர்த்திகளிடம் சென்று வேண்டிக் கொள்ளும்போது யார் எதையுமே கூறாமல் வருவதற்கு முழு மனதோடு சம்மதிக்கிறார்களோ, யார் இன்முகத்துடன் சாந்தமாக விடை தருவாரோ அவர்களை பிருகு முனிவர் அழைத்து வரலாம் என்றும், ஒருவேளை மூவருமே எந்த விதமான மறுப்பும் கூறாமல் வருவதற்கு சம்மதித்து விட்டால் மூவரையுமே அழைக்கலாம் என்றும் கூறினார்.

அதைக் கேட்ட முனிவர்கள் அதிக ஆனந்தம் அடைந்தார்கள். ‘அடடா, பிருகு முனிவர் சென்று அழைத்தால் மும்மூர்த்திகள் மறுக்க மாட்டார்கள். அவர் அறிவு ஞானத்துக்கு மட்டும் அல்ல அவர் வயதுக்கும் ஏற்ற மரியாதையை தந்து அவரை கௌரவிப்பார்கள்’ என்று அவரவர் மனதுக்கு ஏற்ப கற்பனையில் மிதந்தார்கள். ஆகவே மகரிஷி நாரதர் கூறிய யோசனையை ஒரு மனதாக ஏற்றுக் கொண்ட முனிவர்கள் மகரிஷி நாரத முனிவரின் தலைமையில் பிருகு முனிவரிடம் சென்று அவரை அந்த யாகத்தின் பிரதிநிதியாக செல்ல வேண்டும் என அழைப்பு விடுக்க பிருகு முனிவரும் தன்னை அனைவரை விட உயர்ந்தவராக எண்ணுகிறார்களே என்ற இறுமாப்புக் கொண்டு அந்த யாகப் பிரதிநிதியாக மும்மூர்த்திகளிடம் செல்ல சம்மதம் தெரிவித்தார். அடுத்து மடமட என்று காரியங்கள் நடைப்பெற்றது. யாகத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கிய போது பிருகு முனிவரை சற்றும் தாமதிக்காமல் மேலுலகம் சென்று மும்மூர்த்திகளில் ஒருவரை அதித்தியாக அழைத்து வருமாறு முனிவர்கள் கேட்டுக் கொள்ள பிருகு முனிவரும் மேலுலகத்துக்கு உடனே விரைந்து சென்றார். பிருகு முனிவர் மற்றவர்களின் பிரதிநிதியாகச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதும், மேலுலகில் இருந்த விஷ்ணு பகவான் தன்னை மறந்து சிரித்துக் கொண்டார். பிருகு முனிவருக்கு ஒரு சாபத்தின் விளைவாக அவர் அந்த நாள்வரை பெற்று இருந்த ஞான சக்தி அழிக்கப்பட வேண்டி இருந்தது. அது இப்போது இந்த காரியத்தின் மூலம் நிறைவு பெற இருந்தது.

முதலில் பிருகு முனிவர் பிரும்ம லோகத்தை அடைந்தார். அவர் பிரும்ம லோகத்தை அடைந்தபோது அங்கு பிரும்மா தமது அரச சபையில் மனைவி சரஸ்வதி தேவி சகிதம் அமர்ந்து இருந்தார். பூதகணங்களும், தேவதைகளும் சபையில் நிறைந்து இருக்க பிருகு முனிவர் அங்கு சென்றதும், அவரை அனைவரும் மரியாதையுடன் வரவேற்றார்கள். ஆனால் பகவான் பிரும்மா வேண்டும் என்றே அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்தார். ஆகவே கர்வமுற்ற பிருகு முனிவர் தாமாகவே அங்கிருந்த ஒரு ஆசனத்தில் சென்று அமர்ந்து கொண்டார். சபையில் எதோ முக்கியமான விவாதம் நடந்து கொண்டு இருந்தபோது, பிருகு முனிவர் நடுவில் குறுக்கிட்டு எதையோ கூற முயல, பகவான் பிரும்மா அவரை கடிந்து கொண்டார். ‘அழையாமலேயே சபைக்கு வந்து, கூறாமலேயே ஆசனத்தில் அமர்ந்து கொண்டதும் அல்லாமல், விவாதத்தில் அவர் கருத்தைக் கேட்காதபோதே கருத்தைக் கூறுவது ஒரு பழுத்த முனிவருக்கு அழகா?’ என்று பகவான் பிரும்மா கூற வந்தது கோபம் பிருகு முனிவருக்கு. எழுந்தார் ‘பிரும்மனே, நான் அனைவரையும் விட அறிவில் சிறந்தவன். வெறும் கேளிக்கைக்காக இங்கு வரவில்லை. பூலோகத்தில் மக்களின் நன்மைக்காக நடைபெறும் யாகத்துக்கு பெருமையுடன் உம்மை அழைக்க வந்தேன். ஆனால் நீங்களோ என்னை உதாசீனம் செய்வதாக நினைத்துக் கொண்டு, அந்த யாகத்தின் பிரதிநிதியாக வந்துள்ள என்னை அவமதித்ததின் மூலம் அந்த யாகத்தை அல்லவா அவமதித்து விட்டீர்கள். நீங்கள் ஸாத்வீக குணத்துடன் நடந்து கொள்ளாமல் கோபத்தை முன் காட்டி ஒரு பழுத்த முனிவரின் மனத்தைக் காயப்படுத்தியாதும் இல்லாமல் சபை நடுவே அவமானப்படுத்தி விட்டீர்கள். ஆகவே நான் இப்போது உமக்கு சாபமிடுகிறேன், கேளுங்கள் . எந்த மக்களின் நன்மையைக் கருதி யாகம் நடைபெறுகிறதோ, அந்த மக்களின் பிரதிநிதியான என்னை அவமதித்து விட்டதினால் இனி பூலோகத்தில் உள்ள எந்த மக்களும் உமக்கு ஆலயம் அமைத்து உம்மை பூஜிக்க மாட்டார்கள்’ என்று கோபத்துடன் சாபத்தை தந்துவிட்டு அங்கிருந்து உடனே கிளம்பி கைலாயத்துக்கு பகவான் சிவபெருமானைக் காணச் சென்றார். பகவான் பிரும்மாவோ முனிவரின் சாபத்துக்கு அஞ்சவில்லை. பிருகு முனிவர் வந்து அழைக்கும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மும்மூர்த்திகளும் ஏற்கனவே முடிவு செய்திருந்ததுதானே!

 பிருகு முனிவரை சந்தித்த நாரதரும் பிற முனிவர்களும்  அவரை 
யாகத்தின் பிரதிநிதியாக செல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள்
 பிரும்மா மீது கோபம் கொண்ட பிருகு  முனிவர்  இனி பூமியில் 
உமக்கு ஆலயம் கிடையாது என்று பிரும்மாவை  சபித்தார் 
……தொடரும்