சாந்திப்பிரியா  

அதைக் கேட்ட மகரிஷி நாரதருக்கும் பகவான் பிரும்மாவிற்கும் அழுகையே வந்து விட்டது. தேவை இல்லாமல் இப்படி ஒரு காரியம் நடக்க நான் காரணமாகி விட்டேனே என மகரிஷி நாரதர் வினசப்பட்டார். ஆனால் அவற்றை இப்போது யோசனை செய்ய நேரமில்லை. ‘இப்போது உடனடியாக நாம் செய்ய வேண்டிய காரியம் பட்டினியாகக் கிடக்கும் பகவான் விஷ்ணுவிற்கு ஆகாரம் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று பகவான் சிவபெருமானிடம் மன்றாடிய பகவான் பிரும்மாவை சமாதானப் படுத்தினார் பகவான் சிவபெருமான். பகவான் விஷ்ணு இப்போது பூமியில் உள்ளதினால் பூலோகவாசியாக உருவை எடுத்துதான் நம்மால் அதை செய்ய முடியும். அதற்கான ஒரே வழி இந்த காரியத்தை செய்ய லஷ்மிதேவியும் உடன்பட வேண்டும். ஆகவே அவளையும் அழைத்துக் கொண்டு பூலோகம் சென்று ஏதாவது செய்யலாம் என முடிவு செய்தார்கள்.

லஷ்மிதேவியைப் பார்க்கப் போகும் வழியில் என்ன உருவம் எடுத்து அந்த வனத்தில் போய் தங்குவது? எப்படி பகவான் விஷ்ணுவிற்கு உணவு அளிப்பது என்று பல்வேறாக யோசனை செய்தார்கள். அவர்கள் மூவரும் லஷ்மி தேவி தவத்தில் இருந்த இடத்தை அடைந்தார்கள். லஷ்மிதேவியை தவத்தில் இருந்து எழுப்பி நடந்ததை கூற , லஷ்மி தேவியும் பதைபதைத்துப் போனாள். எப்படியாவது அவரைக் காப்பாற்றி என்னை அவருடன் சேர்த்து வைக்க நீங்கள்தான் அருள் புரிய வேண்டும் என பகவான் சிவபெருமானிடம் அவள் மன்றாடிக் கேட்டாள்.

பகவான் சிவபெருமான் லஷ்மிதேவியிடம் கூறினார் ‘ சரி நீ ஒரு ஆட்டு இடைச்சி அவதாரத்தை எடுத்து வா. நானும் பிரும்மாவும் கன்றும் பசுவுமாக அவதரிக்கிறோம். எங்களை ஓட்டிக் கொண்டு சென்று இந்த ஊர் மன்னனிடம் விற்று விடு. அவன் கொட்டகையில் உள்ள பசுக்களை ஒரு இடையன் தினமும் ஓட்டிச் சென்று புற்களை மேய விடுகிறான். அப்படி அவன் பசுக்களை அழைத்துச் செல்கையில் மகரிஷி நாரதர் அவனை திசை திருப்பி இந்த வனப்பகுதிக்குள் தினமும் வருமாறு செய்ய வேண்டும். அப்படி வனப் பகுதிக்குள் வரும்போது, தினமும் நான் பகவான் விஷ்ணு உள்ள இடத்துக்குச் சென்று அவருக்கு பாலை ஆகாரமாக தருகிறேன். அதன் பின் அவர் ஸ்ரீனிவாசராக அவதாரம் எடுக்கும்போது, நீயும் ஆகாசராஜரின் மகளாகப் மாறி விட்டால் அதன் பிறகு அவரை திருமணம் செய்து கொள்ள நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்’ என்று கூறவும், அதைக் கேட்ட லஷ்மி தேவி மனம் மகிழ்ந்து உடனே அவர்கள் கூறியபடி இடைச்சி வேடத்தில் அங்கு தோன்ற, பகவான் சிவனும் பகவான் பிரும்மாவும் பசுவும் கன்றுமாக மாறினார்கள்.

ஆனால் அப்போது அவர்கள் லஷ்மி தேவியை பகவான் விஷ்ணு உடனே மணக்கப் போவது இல்லை. ஸ்ரீனிவாசராக உள்ள பகவான் விஷ்ணு பூர்வ ஜென்மத்தில் வேதவதிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முதலில் லஷ்மியின் துணை அவதாரமான பத்மாதேவியை மணந்து கொண்டப் பின்னரே அடுத்த சில நாட்களில் லஷ்மிதேவியையும் தன்னுடன் இணைத்துக் கொள்ள உள்ளார் என்ற விவரத்தைக் கூற விரும்பவில்லை. அப்படி செய்தால் காரியம் கெட்டு விடும் என நினைத்தார்கள்.

அடுத்தப் பிரச்சனை மன்னனின் அரண்மனையில் உள்ள பசுக்களோடு எப்படி சேர்ந்து கொள்வது? ஆட்டு இடைச்சி வேடத்தில் இருந்த லஷ்மி தேவி நகருக்குள் பசுவையும் கன்றையும் ஓட்டிச் சென்று அரண்மனைக்கு அருகில் பலருக்கும் பால் விற்கத் துவங்கினாள். வந்தவர்களிடம் எல்லாம் தன்னால் அவற்றைப் பேணிக் காக்க முடியவில்லை என்றும் ஆகவே அவற்றை விற்று விட தயாராக உள்ளதாகவும் புலம்பினாள். அந்தப் பசுவோ ஒரே வேளைக்கு ஒரு பெரிய அண்டா நிறைய பால் தருவதைக் கண்டும், அந்தப் பசுக்களின் அழகு சௌந்தர்யமாக இருந்ததினாலும் பலரும் அதை வாங்க ஆசைப்பட்டார்கள். ஆனால் அவர்கள் கொடுக்க வந்த விலை மிகக் குறைவு என்று அவற்றை ஏற்க இடைச்சி உருவில் இருந்த லஷ்மி தேவி மறுத்து வந்தாள்.

அதற்குள் அந்த செய்தி அரசனின் காதுக்கும் எட்டியது. அன்றுதான் சொல்லி வைத்தால் போல அரசனுக்கு பிறந்த நாள் வந்தது. அரசவை ராஜ குருவும் அன்று கன்றுடன் கூடிய புதிய பசுவை வாங்கி அவற்றுக்கு பூஜை செய்து அரண்மனையில் வைத்துக் கொண்டால், அவருக்கு அதிருஷ்டம் பெருகும் என்று அரசரிடம் கூற, என்ன விலைக் கேட்டாலும் கொடுத்து விட்டு அந்த பசுவையும் கன்றையும் அந்த இடைச்சியிடம் இருந்து வாங்கி வருமாறு அரசர் உத்தரவிட்டார். இப்படியாக பசுவும் கன்றும் அரண்மனை பசுக் குடிலுக்கு வந்து அங்கிருந்த பசுக்களுடன் சேர்ந்துவிட்டது. அதை அரசருக்கு விற்றப் பின் லஷ்மி தேவி மீண்டும் வனத்துக்கு சென்று விட்டாள்.

மன்னா  இந்த உயர்சாதிப் பசுவை என்னால் வளர்க்க 
முடியவில்லை. ஆகவே இதை  வைத்துக் கொண்டு 
ஏதாவது சன்மானம் கொடுத்து என்னை அனுப்புங்கள் 
என்று  இடைச்சி கேட்டாள் 
…………தொடரும்