சாந்திப்பிரியா 

நடந்ததை நினைத்து பகவான் விஷ்ணு கவலைக் கொண்டார். ஒரு சிறிய விஷயத்திற்காக இப்படி தன்னை விட்டு லஷ்மி தேவி விலகிச் சென்று விட்டாளே என்று துக்கம் ஏற்பட்டது. லஷ்மிதேவியும் வைகுண்டத்தை விட்டுச் சென்றப் பின் வைகுண்டம் களை இழந்து காணப்பட்டது. படோபகாரங்கள் இல்லை. வைகுண்டத்தில் இருந்தவர்களோ ஏனோ தானோ என்று இருந்தார்கள். எங்கு சென்றாலும் ‘பெருமானே, லஷ்மி தேவி எங்கே சென்று விட்டாள். அவள் இல்லாமல் இந்த லோகம் வெறிச்சோடிக் கிடக்கிறதே. லஷ்மி தேவி இங்கு இல்லாததினால் முன்னைப் போல பூமியிலும் மக்கள் எம்மை ஆராதித்து அழைக்காமல் பூஜை புனஸ்காரங்களை செய்வதில்லை. அதனால் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய அவிர் பாகம் கூட எங்களுக்கு கிடைப்பது இல்லையே. நாங்கள் ஒரு விதத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் போல இருப்பதாக அல்லவா உணர்கிறோம்’ என்று கூறி கண்ணீர் விட்டார்கள். அவற்றைக் கேட்ட பகவான் விஷ்ணு கவலைக் கொண்டார். ஆகவே அவளைத் தேடிக் கொண்டு லோகம் லோகமாக- இந்தரலோகம், சந்ரலோகம், தேவலோகம், பாதாளம், கைலாயம் என அனைத்து இடங்களிலும் சுற்றி அலைந்தவர் அவளை எங்குமே காணாமல் முடிவாக பூமிக்கு வந்து சேர்ந்தார்.

லஷ்மி, லஷ்மி என கூக்குரல் எழுப்பி அவளை அழைக்கத் துவங்கி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தார். ஆனால் அவர் குரல் மதிப்பின்றி இருந்தது. லஷ்மி தேவியோ அவர் கூப்பிட்ட குரலை ஏற்று வரவே இல்லை. அவள் இந்தியாவின் தென் பகுதியில் இருந்த கொல்லாபுரம் என்ற ஊரில் இருந்த வனத்துக்குச் சென்று தவத்தில் இருந்ததினால் அவள் எங்கு சென்று என்ன அவதாரத்தை எடுத்து மறைந்து இருப்பாள் என புரியாமல் திகைத்தவர், அன்ன ஆகாரம் இன்றி பித்து பிடித்தவர் போல அவளை தேடிக் கொண்டு அலைந்து கொண்டு இருந்தபோது ஒரு சோழ மன்னன் ஆட்சிப் பகுதியில் இருந்த வனப் பகுதியில் சென்று அங்கிருந்த ஒரு பள்ளத்தில் உட்கார்ந்தார். அங்கு அமர்ந்தவர் அப்படியே மயங்கி உட்கார்ந்து விட்டார். பல காலம் அப்படியே கிடந்தவர் மீது கரையான் புற்றும் எழுப்பி அவரை மூடி விட்டது. ஆனால் அவருடைய வாய் மட்டும் லஷ்மி….லஷ்மி என முனகிக் கொண்டே இருந்தது.

பலகாலம் ஆகியும் பகவான் விஷ்ணுவோ மற்றும் லஷ்மி இருவருமே வைகுண்டத்தில் இல்லை என்பதாலும், வைகுண்டமே களை இழந்து காணப்பட்டதாலும் அதைக் குறித்துப் பேசலாம் என பகவான் விஷ்ணுவை தேடிக் கொண்டு சென்ற மகரிஷி நாரதருக்கு வைகுண்டத்தில் லஷ்மியைக் காணாமல் பகவான் விஷ்ணு அவளைத் தேடிக் கொண்டு பூலோகம் சென்று விட்டிருந்தது தெரிய வந்தது. ஆகவே சற்றும் தாமதிக்காமல் பகவான் விஷ்ணுவைத் தேடி அலைந்தவர் பகவான்விஷ்ணு மயங்கிக் கிடந்த நிலையை பார்த்து அதிர்ந்து போனார். ஒரு புற்றில் மறைந்துக் கிடந்த பகவான் விஷ்ணுவின் குரல் மூலம் அவர் உள்ள இடத்தைக் கண்டு பிடித்தார்.

புற்றின் உள்ளே இருந்து லஷ்மி…லஷ்மி என பகவான் விஷ்ணு முனகிக் கொண்டு இருந்தது மட்டுமே தெரிந்தது. அப்போதுதான் தனது ஞான திருஷ்டியினால் பகவான் விஷ்ணு மயங்கி அமர்ந்து இருந்த நிலை அவருக்கு புரிந்தது. அவரை குரல் கொடுத்து அழைத்தார். ஆனாலும் பகவான் விஷ்ணு பதில் கொடுக்கவில்லை. தேவலோகத்தை சேர்ந்தவர்கள் எந்த காரணத்தையும் கொண்டும் பூமியில் பிரம்மனால் படைக்கப்பட்டு உள்ள எந்த ஜீவனையும் ஹிம்சிக்கக் கூடாது. அப்படி செய்ய வேண்டும் எனில் அந்த ஜீவன்களை அழிக்கத் தக்க காரணம் இருக்க வேண்டும். ஆனால் இப்போதோ பூமியில் அமர்ந்துள்ள பகவான் விஷ்ணுவை சுற்றி அரண் ஒன்றை எழுப்பி ஒரு கவசம் போல சுற்றி அவர் வெயிலிலும், மழையிலும் நனையாமல் இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் கரையான்கள் ஒரு புற்றைக் கட்டி உள்ள நிலையில் அதை எப்படி அழிப்பது? அப்படி அந்த புற்றை அழித்தால் அத்தனைக் கரையான்களும் அல்லவா கொல்லப்பட்டு விடும். இந்த எண்ணத்தினால் உந்தப்பட்ட மகரிஷி நாரதர் தனது தந்தை பகவான் பிரும்மனிடம் ஓடோடிச் சென்று பகவான் விஷ்ணுவின் நிலைமையை எடுத்துக் கூறினார். அதைக் கேட்ட பகவான் பிரும்மாவும் பதற்றம் அடைந்து மகரிஷி நாரதரை அழைத்துக் கொண்டு பகவான் சிவபெருமானை காணச் சென்றார்.

பகவான் சிவபெருமான் அவர்கள் வந்த விவரத்தை கேட்டு அறிந்து கொண்டார். ஆனால் அவரோ சற்றும் பதட்டப்படவில்லை. அவர் கூறினார் ‘ பிரும்மனே, கவலைப்படேல். லஷ்மி தேவியும் மனம் உடைந்து ஒரு கொல்லாபுரம் எனும் ஒரு ஊரில் உள்ள வனத்தில் தவத்தில் அமர்ந்து இருக்கிறாள். அவளாலும் விஷ்ணுவின் பிரிவைத் தாங்க முடியவில்லை. அவள் விஷ்ணுவை மீண்டும் அடைய வேண்டும் என்றுதான் தவத்தில் இருக்கிறாள். ஆனால் அவள் விஷ்ணுவை பிரிந்து சென்று விட்டதினால் அவளால் உடனே அவரை அடைய முடியாது. அதற்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டும். இது விதி. அதனால்தான் அவள் தவத்தில் அமர்ந்து இருக்கிறாள். நடப்பது அனைத்துமே விஷ்ணு மற்றும் லஷ்மிக்கு ஏற்பட்ட பூர்வ ஜென்ம விதியின் காரணமே. அதை இப்படித்தான் அனுபவித்து அவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்ற விதிக்கு ஏற்பவே அதன் முதல் பகுதி முனிவர்கள் செய்திருந்த யாகத்தினால் துவங்கி விட்டது. விஷ்ணு பூமியில் ஸ்ரீனிவாச அவதாரத்தை எடுத்து அந்த அவதாரத்தில்தான் மீண்டும் லஷ்மியை அடைய முடியும். ஆகவே விஷ்ணுவும் லஷ்மியும் மீண்டும் மனித உருவில் அவதாரம் எடுத்து மணம் புரிந்து கொண்டு தமது சக்தியை வெளிப்படுத்த வேண்டும். அதுவரை நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். ‘ என்றார்.

புற்றுக்குள் அமர்ந்திருந்த விஷ்ணு  மூடிய  
கண்களுடன்  அமர்ந்திருந்து லஷ்மி….லஷ்மி முனகிக் கொண்டே இருந்தார்
……….தொடரும்