சாந்திப்பிரியா 

சிறு விளக்கம் :

கதையை மேலே தொடரும் முன் இங்கு ஒரு செய்தியை விளக்க வேண்டும். பரப்பிரும்மனால் படைக்கப்பட்ட மும்மூர்த்திகளுக்கு மூன்று மனைவிகள் இருந்தார்கள். மும்மூர்த்திகளைப் போலவே அவர்களின் மனைவிகளினாலும் ஒரே நேரத்தில் பல்வேறு மாய அவதாரங்களை எடுக்க முடியும். வெவ்வேறு அவதார தோற்றத்தை அந்த மாய உருவங்கள் வெளிப்படுத்தினாலும், அனைத்து அவதாரங்களும் அவர்களின் பிம்பங்களே. ஒவ்வொரு கடவுளுக்கும் பல அவதாரங்கள் உண்டு. சில நேரங்களில் அவர்கள் ஒரே நேரத்தில் பல அவதாரங்களை எடுப்பார்கள். அவற்றில் உண்மை அவதாரத்தை விட்டு மற்ற அனைத்துமே துணை அவதாரங்கள். அந்த துணை அவதாரங்களுக்கு அதிக காலம் ஒதுக்கப்படுவது இல்லை. இருப்பது போல காணப்பட்டு, அப்படியே மறைந்தும் விடுவார்கள். ஆகவேதான் லஷ்மி தேவியானவள் ஒரே நேரத்தில் சீதை மற்றும் வேதவதியாக தோன்ற முடிந்தது. மேலும் ஒரே தெய்வம், அதே ரூபத்தில், ஒரே நேரத்தில், பல இடங்களிலும் காட்சி அளிக்க முடியும். மூல தெய்வம் ஓரிடத்தில் இருக்க தமது உடலில் உள்ள சக்தி கணங்களை பல்வேறு இடங்களிலும் சென்று தன்னுடைய உருவில் தோற்றம் (அதை மாயத் தோற்றம் என்று கூறுவார்கள்) தரும் நிலையே அதுவாகும். இந்த அவதார தத்துவம் பகவான் தத்தாத்திரேயர் சரித்திரத்தில் கூறப்பட்டு உள்ளது.

ஓரே ஆத்மா எப்படி பல உடல்களாகத் தோன்ற முடியும் என்று யோசிக்கிறீர்களா? கடவுட்களுக்கு ஆத்மா என்பது கிடையாது. உண்மையில் முதலில் பரப்பிரும்மன் படைத்தது பல லட்சக் கணக்கான ஜீவன்களைக் கொண்ட மும்மூர்த்திகளைதான். அதாவது பரப்பிரும்மன் என்ற உருவமில்லாத சக்தி தன்னுள் உள்ள சக்தியையும் சிவனையும் வெளிக் காட்டி அதன் பின் தான் படைத்த இரு மூர்த்திகளையும் இரண்டிரண்டாகப் பிரித்து ஆண் பெண் என்ற தத்துவத்தை வெளிப்படுத்தினார். அதனால்தான் மும்மூர்த்திகளையும் குறித்துக் கூறும்போது, அவர்களுடைய மனைவிகளான மூன்று தேவிகளும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். ஆகவேதான் பல லட்ஷக்கணக்கிலான ஜீவ அணுக்களை தன்னுள் அடக்கி வைத்துள்ள அந்த மும்மூர்த்திகள் மற்றும் அவர்களுடைய மனைவிகளினால் பல உருவங்களை ஒரே நேரத்தில் அவ்வபோது எடுக்க முடிகிறது. இதுதான் பரப்பிரும்மனினால் நிர்ணயிக்கப்பட்டு உள்ள தத்துவத்தின் ரகசியம்.

லஷ்மி தேவி பத்மாவதியாகப் பிறந்த கதை

முன்னொரு காலத்தில் இப்போது திருப்பதி என்றழைக்கப்படும் இடத்தின் அருகில் இருந்த நாட்டை சுதர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் மகவு பிறந்தது. அந்த ஆண் மகனின் ஜாதகத்தை ஆராய்ந்த பண்டிதர்கள், அந்தப் பிள்ளையின் முன் பிறவி அபாரமான பிறவி என்றும், அவன் பகவான் விஷ்ணுவின் ஆசிகளைப் பெற்றே இந்தப் பிறவியை எடுத்துள்ளான் என்றும், வரும் காலத்தில் அவன் ஆகாயம் அளவு விரிந்து இருக்கும் வகைக்கான பெருமையுடன் இருப்பான் என்றும் கூறியதினால் அவனுக்கு ஆகாசராஜன் என்று பெயரிட்டு அன்போடு வளர்த்தார்கள். சுதர்மன் ஒரு வேட்டைப் பிரியன். அவன் அடிக்கடி வனங்களுக்குச் சென்று வேட்டை ஆடுவார். அது போல ஒருமுறை அவர் வேட்டைக்கு சென்று கொண்டு இருந்தபோது, இடையில் ஒரு பெரிய நீர் நிலையைக் கண்டார். அதன் பெயர் கபில தீர்த்தம் என்பதாகும். வேட்டை ஆடிக் களைப்புற்ற மன்னன் அந்த நீர் நிலைக்குச் சென்று நீரைப் பருகிக் கொண்டு இருந்தபோது ஒரு நாக தேவதை அந்த நீரில் ஆடிப்பாடி திரிவதைக் கண்டார். அவளைப் பார்த்த உடனேயே அவள் மீது அவருக்கு மோஹம் ஏற்பட்டு விட்டது. அத்தனை அழகான வனப்புடன் அவள் காட்சி அளித்தாள். அவளைக் கண்டு மனதைப் பறி கொடுத்த மன்னன் தொடர்ந்து சில நாட்கள் அங்கு வந்து அவளுடன் அன்புடன் பழகத் துவங்கினான். அந்த நாக தேவதையும் சுதர்மனின் அழகில் மனதைப் பறி கொடுத்து அவனைக் காதலித்தாள். ஆனால் இருவருக்கும் ஒரு பெரிய பிரச்சனை. இருவரும் வெவ்வேறு பிரிவினர்- ஒருவர் மனிதர், மற்றோருவளோ நாக வம்சத்தை (பாம்பு) சேர்ந்தவள். அவளால் சில நாட்களே நீருக்கு வெளியில் இருக்க முடியும். மீதி நாட்கள் அவள் நாகலோகத்துக்கு சென்று விட வேண்டும். இல்லை எனில் அவளை வெளியில் வர விட மாட்டார்கள். இன்னொன்று, அவளுக்கு ஒரு பகுதி வரை மனித உடல், மீதி பாம்பு உடல். ஆகவே எப்படி இருவரும் எப்படி திருமணம் புரிந்து கொள்வது? ஆகவே அது குறித்து நன்கு ஆலோசனை செய்ததும், வேறு வழி இன்றி இருவரும் கந்தர்வ விவாகம் செய்து கொண்டார்கள்.

நாக கன்னிகை சில நாட்களுக்குத்தான் நீருக்கு வெளியில் கன்னிகையாக இருக்க முடியும். மற்ற நேரத்தில் அவள் பாதாளத்துக்குள் சென்று நாக மங்கையாகவே வாழ முடியும் என்பதினால் கந்தர்வ விவாகம் செய்து கொண்டப் பின் அவள் நீரின் வெளியில் இருக்கும்போதெல்லாம் அந்த மன்னன் வந்து அவளுடன் இணைந்து இருந்தார். நாக கன்னிகை நாகராஜரின் மகள். நாகராஜனோ, ஆதிசேஷனின் வம்சாவளியை சேர்ந்தவர் என்பதினால் அவர்கள் சில விசேஷ சக்திகளை பெற்று இருந்தார்கள். ஆதிசேஷனே நாக வடிவில் மனிதத் தலையுடன் பதஞ்சலி என்ற பெயரில் மனிதப் பிறவி எடுத்த ரிஷி என்றும் கூறுவார்கள். அவர் ஐந்து அல்லது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வெளியிலேயே வாழ்ந்திருந்த முனிவர். அதனால்தான் ஆதிசேஷனின் வம்சத்தினரான நாக தேவதைகளினால் மனித உருவுடன் இருக்க முடிந்தது. அதனால்தான் மனித உருவில் இருந்த அவளால் சுதர்மனுடன் இணைந்து கொள்ள முடிந்தது.

இப்படி சில நாட்கள் அவர்கள் சந்தோஷமாக இருந்து கொண்டிருக்கையில் அவள் கருவுற்றாள். அவர்களுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. நாக கன்னிகை நீருக்கு வெளியில் கன்னிகை உருவில் இருந்ததினால் அவர்களுக்கு பிறந்த குழந்தையும் மனித உருவிலேயே அமைந்து இருந்தது. அதே நேரத்தில் அந்த நாக கன்னியுடன் தான் காதல் வயப்பட்டு இருந்ததை சுதர்மன் தந்து மனைவிக்கு ஏற்கனவே கூறி இருந்தார். அந்த காலங்களில் மன்னர்கள் எத்தனை பெண்களை தன்னுடன் வைத்துக் கொண்டாலும், அதை பிழையாகப் பார்த்தது இல்லை என்பதினால் அவர் மனைவி அதை பெரியதாகப் பொருட்படுத்தவில்லை.

சுதர்மன் தனது மனைவியிடம் எதையுமே மறைக்காமல் முதலில் இருந்தே அனைத்தையுமே கூறி இருந்ததினால், வேறு வழி இன்றி அந்த நாக கன்னிகை மூலம் பிறந்தக் குழந்தையை அரண்மனைக்கு எடுத்து வந்து தனது மனைவியிடமே கொடுத்து அந்தக் குழந்தையையும் தன் குழந்தையுடன் சேர்த்தே வளர்த்து வந்தார். அந்தக் குழந்தைக்கு தொண்டைமான் என்று பெயரிட்டார். ஆகாசராஜனும் தொண்டைமானும் ஒன்றாகவே வளர்ந்து வந்தார்கள். காலப் போக்கில் சுதர்மனும், அவரது மனைவியும் மரணம் அடைய மூத்தவரான ஆகாசராஜன் மீது அரசுப் பொறுப்பு விழுந்தது. அவர் அரச பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும் தனது தந்தைக்குக் கொடுத்த வாக்கின்படி தனது சகோதரரை நல்ல முறையில் காப்பாற்றி வந்தார். அந்த தொண்டைமான்தான் பிற் காலத்தில் ஸ்ரீனிவாசருக்கு முதலில் ஆலயம் அமைத்தவர். இன்றுள்ள ஆலயம் அந்த தேவ ஆலயத்தின் ( கற்களால் கட்டப்படாத தேவ ஆலயம்) மீது எழுந்துள்ள ஆலயமே ஆகும் என்பதாக நம்புகின்றார்கள் .

 நாக தேவதையை சந்தித்த ஆகாச ராஜன் 
அவள் மீது காதல் கொண்டு அவளை 
கந்தர்வ விவாஹம் செய்து கொண்டார் 
……தொடரும்