சாந்திப்பிரியா
 

இப்படியாக பூர்வ ஜென்மத் தாயாரான வகுளா தேவியின் அரவணைப்பில் இருந்த அவதாரப் புருஷரான பகவான் விஷ்ணுவிற்கு ஸ்ரீ வராஹா ஸ்வாமியின் ஆலயத்தில் தங்க இடம் கிடைத்ததும் அவருக்கு ஸ்ரீனிவாசன் என்ற பெயரை வகுளாதேவி சூட்டினாள். பகவான் விஷ்ணுவின் அவதாரமான இந்த பகவான் ஸ்ரீனிவாசரே முன் அவதாரத்தில் பகவான் கிருஷ்ணராக இருந்தவர். யசோதைக்கு அவள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்வதாக முன் அவதாரத்தில் பகவான் கிருஷ்ண அவதாரத்தில் இருந்தபோது கொடுத்திருந்த வாக்கைக் காப்பாற்ற வகுளாதேவிக்கு இப்போது மகனாக வந்துள்ளார்.

அவர்கள் இருவரும் வராஹப் பெருமான் கொடுத்திருந்த இடத்தில் சிறிய குடிலை அமைத்துக் கொண்டு அங்கு வாழத் துவங்கினார்கள். அதே நேரத்தில் பகவான் ஸ்ரீனிவாசன் என்ற பெயரைக் கொண்ட பெருமாள் வனத்துக்குச் சென்று வேட்டை ஆடத் துவங்கினார். வேட்டை ஆடி மிருகங்களைக் கொல்வது பாபமில்லையா என்று கேள்வி எழும்பலாம். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. ஸ்ரீனிவாசப் பெருமாள் வேட்டை ஆடியதும் ஒரு மாயையே. பூர்வ ஜென்மங்களில் பலர் செய்திருந்த பாவங்களினால் அவர்கள் இந்த ஜென்மத்தில் மிருகங்களாகப் பிறந்து இருந்தார்கள். அவர்களுக்கு சாப விமோசனம் பகவான் விஷ்ணுவின் மூலமே கிடைக்க இருந்தது. அதனால்தான் ஜடப் பொருளான ஒரு மிருக உருவில் இருந்த அந்த ஆத்மாக்களை அதனதன் காலம் முடிந்ததும் பகவான் ஸ்ரீனிவாச அவதாரத்தில் இருந்த விஷ்ணு பகவான் விடுதலை செய்யவே இந்த வனத்துக்கு வந்ததும் அல்லாமல் வேடனாகவும் மாறி இருந்தார். இறந்தவை வெறும் மாயையான ஜடப் பொருட்களே. அதனுள் இருந்த ஆத்மாக்கள் அவரால் விடுதலை செய்யப்பட்டு அடுத்தப் பிறவியை எடுக்கச் செல்ல அவற்றில் சில சொர்கத்தையும் அடைந்தன.

ஒரு கட்டத்தில் பத்மாவதியாக அவதரித்து உள்ள லஷ்மி தேவியை அடைவதற்கு ஒரு நாடகம் தேவையாக இருந்தது. ஆகவே அவர் தன்னை ஒரு வேடனாக காட்டிக் கொள்ள வேண்டும். மிருகங்களை முன் வைத்தே அவர் பத்மாவதி அவதாரத்தில் இருந்த லஷ்மி தேவியின் இருப்பிடத்துக்குச் செல்ல வேண்டும். அகவே தனது பூத கணங்களை சில மிருகங்களாக அந்த வனத்தில் அவதரிக்கச் சொல்லி இருந்தார்.

சிறு விளக்கம் :-
இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூற வேண்டும். பகவான் ஸ்ரீனிவாசர் உருவில் விஷ்ணு பகவான் அவதரிப்பதற்கு முன்னரே என்னென்ன நேரத்தில் என்னென்ன நடக்க வேண்டும், எந்தெந்த பூத கணங்கள் எப்போது அங்கு அவதரித்து, அங்கு நடக்க உள்ள நாடகத்துக்கு எந்த விதத்தில் துணை புரிய வேண்டும், ஒன்றன் பின் ஒன்றாக என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்றெல்லாம் ஏற்பாடு செய்து வைத்து வைக்கப்பட்டு இருந்தன. அதற்குக் காரணம் அவர் பகவான் ஸ்ரீனிவாசராக அவதரித்தப் பின் அந்த மனித உருவத்தில் இருந்து கொண்டு அவற்றை செய்ய இயலாது. அவர் இயங்க இருந்தது ஒரு சக்தி அற்ற மனித உருவில். அந்த பகவான் ஸ்ரீனிவாச உருவில் சில காலம் இருந்தபடி மனித உருவிலான காட்சிகளை நடத்திக் காட்ட வேண்டும். அப்போது அவரால் தெய்வீகத்தைக் வெளிப்படுத்தி அந்த சக்தியை பயன்படுத்த முடியாது.

ஆனால் அவர் நடத்தும் நாடகம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடையும்போது அவர் தெய்வீகமும், அவர் யார் என்பதும் வெளிப்படும். அதுவரை தெய்வம் என்ற நிலையில் இல்லாத மனித உருவிலான வாழ்கைதான் அவர் வாழ வேண்டும். அதனால்தான் அவர் ஸ்ரீனிவாசராக (பெயர் கொண்ட நிலை) மாறுவதற்கு முன்னரே வகுளாதேவிக்கு தான் யார் என்பதைக் காட்டி விட்டு, இந்த ஜென்மத்தில் அவளுடைய பாத்திரம் என்ன என்பதையும் கூறி விட்டு அவள் தனக்கு திருமணம் செய்து பூர்வ ஜென்ம தாக்கத்தை நிறைவேற்றிக் கொள்வாள் என்றார். அதன் பின் தனக்கு ஒரு பெயர் வைக்குமாறு கூற அவளும் அவருக்கு ஸ்ரீனிவாசன் எனப் பெயரிட்டதுமே அவர் தெய்வீகத்தை துறந்து விட்டு மனித உருவில் முழுமையாக மாறினார். வகுளா தேவியும் அவள் வாயினால் ஸ்ரீனிவாசன் என்ற பெயரை அவருக்கு வைத்ததுமே தன் பூர்வ ஜென்மைக் கதையை மறந்து விட்டாள். இனி இருவருக்குமே அவர்கள் யார் என்பது சில காலம் பொறுத்து பகவான் ஸ்ரீனிவாசர் அவதாரத்தில் உள்ள பகவான் விஷ்ணு தானாகவே வெளிப்படுத்தும்போது மட்டுமே தெரிய உள்ளது.

இப்படியாக அவர்கள் அந்த வனத்தில் வராஹ ஸ்வாமியின் ஆலயத்துக்கு உட்பட்ட பகுதியில் வாழ்ந்து கொண்டு இருந்த போது ஒரு நாள் அவர் சிலருடன் சேர்ந்து காட்டில் வேட்டை ஆடிக் கொண்டு இருந்தபோது பத்மாவதி அரண்மனைக்கு அருகில் இருந்த பகுதியைக் காண நேரிட்டது. அந்த இடத்தில் ஒரு பெரிய யானை வந்து கொண்டு இருந்ததைக் கண்டு அதன் மீது அம்பை வீசி அதை காயப்படுத்த அந்த யானை பிளரிக்கொண்டு ஓடத் துவங்கியது. அதைத் துரத்திப் பிடிப்பதாகக் கூறி விட்டு தன்னிடம் இருந்த வெண் குதிரை மீது ஏறிக்கொண்டு அதைத் துரத்தத் துவங்கினார். ஆனால் அந்த யானையோ அதை விட வேகமாக ஓடி அரண்மனை நந்தவனத்தில் இருந்த நீர் குளத்தின் அருகில் சென்று நின்றது. அதன் அருகில் பகவான் ஸ்ரீனிவாசர் சென்று இறங்கியதும், அந்த யானை அவரை வணங்கி விட்டு மறைந்து விட்டது. ஆனால் அவர் அப்போது மனித உருவில் இருந்ததினால் அவருக்கு அது தன்னை வணங்கியது ஏன் என்பது தெரியவில்லை. அவரை வணங்கிய யானை ஒரு ஜென்மத்தில் அவரால் முதலையின் வாயில் இருந்து காப்பற்றப்பட்ட கஜேந்திரன் ஆகும். அது ஏன் இந்த ஜென்மத்தில் இங்கு வந்து பிறந்தது என்பது தனிக் கதை. அது இங்குள்ள பகவான் ஸ்ரீனிவாசர் சரித்திரத்துடன் அதிகம் சம்மந்தப்பட்டது இல்லை என்பதினால் அதை இங்கு கூறவில்லை. எங்கு சென்று மறைந்து கொண்டது என்பதும் புரியவில்லை. அந்த யானை அங்கிருந்து எங்கோ சென்று விட்டதும் பகவான் ஸ்ரீனிவாசர் தனது குதிரையில் இருந்து இறங்கி அந்த தாடகத்தில் நீர் அருந்தினார். அசதியாக இருந்ததினால் அப்படியே அங்கிருந்த மர நிழலில் படுத்துக் கொண்டு இளைப்பாறியபோது அந்த இடத்துக்கு பத்மாவதி தனது தோழிகளுடன் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் வந்தாள்.

காட்டில் மிருகங்களை வேட்டை ஆடினார் 
 
 யானையை துரத்திக் கொண்டு ஸ்ரீனிவாசர்  
உருவில் இருந்த விஷ்ணு சென்றார் 
……..தொடரும்