சாந்திப்பிரியா

பாகம்-3
 

இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த பசுபதி எனும் சிவபெருமான் அனைத்து இடங்களிலும் வியாபித்து இருப்பவர். இந்த உண்மையை அறியாதவர்கள் முக்தியை அடைய முடியாது. ஆகவேதான் சிவபெருமானும் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடியாத தாம் படைத்துள்ள ஆன்மாக்கள் தம்மை வணங்கித் துதித்து மோட்ஷம் அடைய இந்த பூமியிலே எண்ணிலா ஸ்தலங்களை படைக்க வைத்தார். அவரால் படைக்கப்பட்ட அறுபத்தி எட்டு தலங்களில் ஆறு தலங்களே மிகச் சிறந்தவை என்றாலும், காசி, திருவாரூர் மற்றும் சிதம்பரம் என்ற மூன்று தலங்களே அதி மேன்மைப் பெற்றவை. திருவாரூரிலே பிறந்தவர்களுக்கும், காசியிலே இறந்தவர்களுக்கும், சிதம்பரத்திலே சிவபெருமானின் பாதங்களை தரிசித்தவர்களுக்கும் மோட்ஷம் நிச்சயம் என்பது சத்தியமான உண்மையாகும்.

திருவாரூரிலே பிறப்பதற்கு பூர்வ ஜென்ம புண்ணியம் வேண்டும். பிறர் பொருளை அபகரிக்காமல், பாவத்துக்கு பயந்து தர்ம நெறியிலே சம்பாதித்து, இறுதி காலத்திலே மோட்ஷம் தேடி காசிக்குக் செல்லும் வழியிலே இறக்காமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு காசியிலே சென்று இறக்கவும் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆனால் எந்தப் புண்ணியமும் செயாதவன் கூட சிதம்பரத்துக்குச் சென்று  சிவபெருமானின் பாதங்களைப் பார்த்த மட்டிலேயே அவனுக்கு முக்தி கிடைக்கும். சிதம்பரத்திலே உள்ளவன் அங்குள்ள சிவபெருமானை தரிசிக்காமல் முக்தியைத் தேடி காசிக்கு சென்றாலும், அவனுக்கு உடனே முக்தி கிடைக்காது. அங்கு சென்று வழிபட்டு, சாஸ்திர நியமத்தை செய்தால் மட்டுமே முக்தி கிடைக்கும். ஆனால் காசியில் உள்ளவர்கள் சிதம்பரத்தில் வந்து மரணம் அடைந்தால், வேறு வழிபாடு செய்யாமல்  இறைவனின் பாதங்களை தரிசித்தால் மட்டுமே போதும், அவர்கள் முக்தி பெறுவார்கள். ஆகவே இந்த பூஉலகில் உள்ள அனைத்து ஷேத்திரங்களிலும் மேன்மையான தலம் சிதம்பரம் மட்டுமே. அதற்கு ஈடு இணையே இந்த பூஉலகில் வேறு எதுவும் இல்லை.

பிண்டமும் பிரும்மாண்டமும் சமம் என்பார்கள். பிண்டமாகிய சரீரத்தில் இடப் பக்கத்தில் உள்ள  இடைக்கால நாடிக்கும், வலப்பக்கத்தில் உள்ள பிங்கலை எனும் நாடிக்கும் , இடைப் பகுதியில் உள்ள சுழுமுன நாடி என்பது இலங்கைக்கும், இமயமலைக்கும் நடுவில் உள்ள தில்லை எனும் நாடி போல உள்ளது. காரணம் தில்லியில்தான் சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடுகிறார். ஒருவரின் இதயத்திலும் மகிழ்ச்சி நிறையும்போது மகிழ்ச்சியால் மனம் நர்த்தனம் ஆடுகிறது என்பார்கள்.
சரீரம் என்பது பிரும்மபுரம் போன்றது ஆகும். சரீரத்தின் உள்ளே உள்ள இதயமோ சிவபெருமானின் வீடு போன்றது ஆகும். அந்த இதயத்தில் ஆகாயம் போல உள்ள வெற்றிடமே சிவம் வசிக்கும் இடம். அது போலத்தான் சரீரத்தின் வெளியே உள்ள பிரும்மாண்டமே பிரும்மபுரம் ஆகும். அதில் உள்ள தில்லைவனமே சிவபெருமானின் வாசஸ்தலம், அதில் வாயுவாக ஆகாசத்தில் உள்ளவரே சிவம். அந்த ஆகாசமோ சரீரத்தைப் போல அழிவைக் கொண்டது அல்ல. ஆதனால்தான் அழிவு அற்ற நிலையில் இருந்த அம்பலம் ( அனைவரும் பார்க்கும்படியான இடம்)  எனும் தில்லைவனத்துக்குப் போ.  {தில்லை வனமே சிதம்பரம் என்பது. ஆகாசத்தில் சித்தன் ஆடிய நடனத்தினால் இந்த இடம் சித்தனும் +அம்பலமும் என்பது சித்தம்பலம்  அதாவது  சிதம்பரம் என பின் நாளில் ஆனது}

சிவமே சிந்தனையில் இருந்தால்  சித்தங்கள் அலை மோதுமோ?   சிரமே பணிந்தால் அது சிவனுக்கின்றி வேறு யாருக்காகுமோ என்ற நிலையில் இருந்து கொண்டு அந்த தலத்திலே  சிவ பூஜையை செய்து கொண்டு சிவ வழியில் நடந்து வந்தால் சிவபெருமானைக் காணலாம்’ என்று மத்தியன்தின முனிவர் தனது மகனுக்கு  தில்லை வனம் என்கின்ற சிதம்பரத்தின் மகிமையை எடுத்துரைத்தார்.

அதைக் கேட்டு ஆனந்தம் அடைந்த இளம் பாலகர் (இனி பாலகரை பாலக முனிவர் என்றே அழைப்பதே மரியாதைக்குரிய சொல்லாகும்) தான் உடனே கிளம்பி தில்லைவனத்துக் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை தனது தந்தையிடம் தெரிவித்து அவரது  அனுமதியைக் கோரினார்.

அவருடைய தந்தையும் மறுக்காமல் தனது தவப் புதல்வருக்கு தில்லை செல்ல அனுமதி தந்தார். தவப் புதல்வர் என்று கூறும் பெருமையைப் பெற்றவர்கள்  யார் என்றால்  தந்தை வழியில் ஏழு வம்சத்தையும், தாய் வழியில் ஏழு வம்சத்தையும், தன் வழியில் ஏழு வம்சத்தையுமாக இருபத்தியொரு வம்சங்களை செழிக்கச் செய்பவரே தவப் புதல்வர் ஆவார்.

………தொடரும்