சிறு விளக்கம்
சாந்திப்பிரியா 
நான் துலா புராணத்தை எழுதியபோது ஒருமுறை என்னிடம் கேட்கப்பட்ட கேள்வியையும்  அதற்கான விளக்கத்தையும் கீழே தந்துள்ளேன். 

கேள்வி:- ஒருவர் இறந்தப் பின் அவருடைய ஆத்மா மட்டுமே மேல் உலகம் செல்லும். அவர்களுடைய உடல் பூமியில் புதைக்கப்படுகிறது அல்லது எரித்து விடப்படுகிறது எனும் போது, யம லோகத்தில் அவர் கைகளை வெட்டினார்கள், அவர் உடலை நாய்கள் தின்றது,  யமதர்மராஜர் தர்மலனை ஸ்யாமா மற்றும் சபள என்ற வெறி நாய்கள் கடித்துக் குதறுமாறு ஆணை இட்டார், அவரை கொதிக்கும் எண்ணையில் போட்டார்கள் என்றெல்லாம் கூறப்படுவது அபத்தமாக உள்ளதே.
பதில்:- கேள்வி நியாயமானதுதான். ஆனால் உண்மை நிலை வேறானது. ஒருவர் இறந்தப் பின் அவர்களது ஆத்மா மட்டுமே யம லோகத்துக்கு செல்கிறது என்பதும் உண்மையே. ஆனால் பதிமூன்று ஜென்ம காலத்துக்கு பிறவி எடுக்கும் அந்த  ஆத்மா  மேல் உலகிற்கு சென்றதும், முதலில் அந்த ஆத்மாவிற்கு அதன் சுய உருவத்தையும், அதன் உணர்வுகளையும், அது பூமியில் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில்  கொடுக்கிறார்கள்.  அதாவது பூமியில் இருந்த உருவத்தின் அதே எண்ணங்களுடன் உருவங்களுடனான  ஒரு மாய உருவிலான உடலில் புக வைக்கிறார்கள். அப்படிப்பட்ட மாய உடல்கள் இந்த காரணத்திற்காகவே  யம லோகத்தில் கோடிக் கணக்கில் உள்ளன. அந்த மாய உடல்கள் பூமிக்கு வர இயலாது. காரணம் அது ஜடப் பொருளால் ஆனது அல்ல. ஆனால் அதைப் போன்ற தோற்றத்தை தரும் மாய உடல்கள் அவை.  மாய உடலில் புகுந்து கொண்டு விட்ட  ஆத்மாவிற்கு அந்த நிமிடம் முதல் ஆத்மா என்ற  நினைவு இருக்காது.  தன்னை பூமியில் இருந்த மனிதனாகவே நினைத்துக் கொள்ளும். ஆகவே அந்த ஆத்மாவின் சொந்தக்காரனுக்கு அவனவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனைகளைத் தரும்போது அவை அந்த வேதனைகளை அனுபவிக்கும். அந்த மாய உருவத்தின் உடலுக்கு இழைக்கப்படும் அனைத்து கொடுமைகளும்,  செயல்களும் அந்த மாய உருவ உடலில் உள்ள ஆத்மாவின் எண்ணங்களைத் தாக்கும். அப்போது உண்மையில் தான் பூமியில் உள்ள உடலில் உள்ளது போலவே நினைத்துக் கொண்டுள்ள அந்த மாய உடலில் உள்ள ஆத்மா அந்தக்   கொடுமைகளைக் கண்டு  அலறித் துடிக்கும். இந்த நிலை அதற்கு மறு பிறப்பு தரப்படும் வரை நீடிக்கும்.

மாய உடலில் உள்ள ஆத்மாக்கள் தம்மை 
மனிதனாகவே நினைத்துக் கொள்ளும்  

தான் பூமியில் இருந்த உடலுடனேயே உள்ளதாக நினைத்துக் கொண்டுள்ள ஆத்மாக்களின் நினைவலைகளில் அந்த நிகழ்வுகள் ஆழமாகப் பதியும். ஒவ்வொரு ஆத்மாவிற்கும் உள்ளே கோடிக்கணக்கான கம்பியூட்டர் போன்ற நினைவு துணுக்குகள் (Memory Chips) அலை வடிவில் உள்ளன. அவை அந்த ஆத்மாக்களின்  தனிப்பட்ட நினைவலைகள்.  அவற்றை அந்த ஆத்மாவிடம் இருந்து பிரிக்க முடியாது. அதை பிரித்து விட்டால் அது ஆத்மாவல்ல. அழிந்துபோன ஆத்மா ஆகிவிடும்.   மாய உருவிலான உடலுக்கு தரப்படும் தண்டனைகள் உண்மையில் உள்ள உடலுக்கு தரப்படும் தண்டனையைப் போலவே உள்ளதினால்  அதன் எண்ணங்களில் நெகிழ்ச்சியும், துன்ப வேதனைகளும் பதியும்.  அதற்காகவே இது செய்யப்படுகிறது. ஆகவே யம லோகத்தில் அவர் கைகளை வெட்டினார்கள், அவர் உடலை நாய்கள் தின்றது,  யமதர்மராஜர் தர்மலனை ஸ்யாமா மற்றும் சபள என்ற வெறி நாய்கள் கடித்துக் குதறுமாறு ஆணை இட்டார், அவரை கொதிக்கும் எண்ணையில் போட்டார்கள் என்று கூறப்படும் அனைத்தும் உண்மையாக நடைபெறும் நிகழ்ச்சிகள். இந்த செய்தியில் மாறுதல் ஒன்றுதான்- தண்டனைகளைப்  பெறுவது  தமது எண்ணங்களுடன் உள்ள ஆத்மாக்களின்  மாய உடல்கள்.  இதில் அபத்தம் எதுவுமே இல்லை

கேள்வி:- இது போன்ற புராணங்களில் அவர்கள் ஏழாயிரம் மனைவிகளை மணந்து கொண்டார்கள். பத்தாயிரம் வருடம் தவம் செய்தார்கள் என்றெல்லாம் கூறப்படுகிறதே. அப்படி என்றால் மனிதர்கள் பத்தாயிரம் ஆண்டுகளாக வசித்து இருக்க முடியுமா? ஏழு அல்லது எட்டாயிரம் மனைவிகளுடன் வாழ்ந்து இருக்க முடியுமா? அதுவும் அபத்தமாகவே உள்ளதே.
பதில்:- இதில் அபத்தம் எதுவுமே இல்லை. மனிதர்கள் தாராளாமாக பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். நீங்கள் படித்து இருப்பீர்கள். இந்த யுகம் பிரும்மாவினால் படைக்கப்பட்டபோது அதை நான்கு யுகங்களாகப் பிரித்தார். மனிதர்கள் தோன்றியதையும் யுகங்களையும் ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி  பால் தரும் பிராணிகளான மம்மல்கள்  என்பவை 85 மில்லியன் வருடங்களுக்கு முன் இருந்துள்ளன என்றும், மனிதர்கள் எதோ ஒரு ரூபத்தில் 2.50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்து இருந்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது.  நம்மில் யாருக்காவது  ஆராய்ச்சியாளர்களின் கூற்றான  பூமியின் வயது  4,540,000,000,000  (4.54 பில்லியன் ) ஆண்டுகள் என்பதை நம்ப முடிகிறதா? 
இதைக் கண்டு பிடித்து உள்ள ஆராய்சியாளர்களினால் அந்த காலத்தில் யார் எப்படி எத்தனை வருடங்கள் இருந்துள்ளார்கள் என்ற கணக்குகளை இதுவரை  கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால்தான் புராணங்களில் கூறப்படும் சத்ய யுகத்தில் வாழ்ந்திருந்தவர்களின் சராசரி வாழ்கையின் (வயது) அளவு 100,000 வருடங்கள், திரேதா யுகத்தில் இருந்தவர்களின் சராசரி வாழ்கையின் (வயது) அளவு 10,000 வருட காலங்கள், துவாபர யுகத்தில் 1000 ஆண்டுகள் மற்றும் கலி  யுகத்தில்  100 ஆண்டுகள்  என்பதை ஆராய்ச்சியாளர்களால் கூட ஆதாரபூர்வமாக மறுக்க முடியவில்லை. இந்த வயதுக் கணக்குகள் புராணங்களில் உள்ளன.
கடந்த நூறு அல்லது இருநூறு ஆண்டுகளில் இருந்த நமது ராஜா மகாராஜாக்களின் வாழ்க்கையைப்  பார்த்தால் அவர்களில் சிலர் நூற்றுக்கணக்கான மனைவிகளை  மணந்து கொண்டு  இருந்த வரலாறு உள்ளது.  ஆகவே மனித இனம் முன்னேறிய காலத்திலேயே இந்த நிலை உள்ளதைக் காணும்போது  2,50,000 ஆண்டுகளுக்கு முன்னர் லட்ஷ வருடங்கள் வரை வாழ்ந்திருந்ததாக கூறப்படும் தேவ மனிதர்களுக்கு ஆயிரக்கணக்கில் மனைவிகள் இருந்திருந்ததில் ஆச்சர்யம் என்ன உள்ளது?