துலா புராணம்- 17
காவிரி ஆற்றின் மகிமை

சாந்திப்பிரியா

அடுத்து அகஸ்தியரை மீண்டும் வணங்கி எழுந்த அரிச்சந்திரன் அவரிடம் கேட்டார் ‘ முனிவரே, தயவு செய்து காவேரி ஆறு பிறந்தக் கதை மற்றும் அதன் மகத்துவம் போன்றவற்றை எமக்குக் கூறுவீர்களா?’ என்று கேட்டான்.

அகஸ்தியர் அந்தக் கதையைக் கூறலானார் ”முன்னொரு காலத்தில் கவேரன் என்ற ஒரு ராஜ ரிஷி இருந்தார். அவர் சகல வித்தையிலும் சிறந்தவர். தெளிவான ஞானம் கொண்டவர். சில காலம் மிக கர்வியாக இருந்தப் பின் மனம் மாறி ஆன்மீக வாடைக் கொண்டார். தான் மோட்ஷம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்தையும் துறந்து விட்டு ஹிமய மலை அடிவாரத்தில் சென்று தவம் இருக்கலானார். அவருடைய தவத்தை மெச்சிய பிரும்மா அவர் முன் தோன்றி ‘உனக்கு என்ன வேண்டும்’ என்று அந்த மன்னனிடம் கேட்டார். அவன் தனக்கு மோட்ஷம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தவம் இருந்ததாகக் கூற பிரும்மா மாயாதேவியை அழைத்தார். அவள் அவர் முன் வந்து நின்றதும் பிரும்மா அவளைப் பார்த்துக் கூறினார் ‘ மகளே, நீ இந்த யோகிக்கு மகளாகத் தோன்றி அவருக்கு முக்தி அளிக்க வேண்டும். ஒரு கட்டத்தில் நீ காவேரி நதியாகி சர்வ புண்ணியத்தையும் தரும் தீர்த்தமாகவும் ஆவாய். உ௭னுடைய இன்னொரு அம்சமாக லோபாமுத்திரை என்ற பெண் தோன்றுவாள். அந்த அம்சத்தில் நீ அகஸ்திய முனிவருக்கும் மனைவியாக இருப்பாய்’ என்று கூறி விட்டு அந்த மன்னனிடம் கூறினார் ‘மன்னா, உனக்கு விரைவில் இந்த மாயாதேவியே விஷ்ணுமாயா என்ற பெயர் கொண்ட மகளாகப் பிறப்பாள். அவள் மூலம் நீ மோட்ஷத்தை அடைவாய். பின்னர் அவள் நதியாகவும் இருந்து அனைவருக்கும் நன்மை புரிவாள் ‘. இப்படிக் கூறி விட்டு பிரும்மா மறைந்து விட்டார். விரைவில் அந்த மன்னனுக்கு விஷ்ணு மாயை மகளாகப் பிறந்தாள். மன்னன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்தக் குழந்தையை வைத்துக் கொண்டு மனைவியுடன் ஆனந்தமாக வாழ்ந்து வந்தான்
இப்படியாக இருக்கையில் ஒருமுறை அவளிடம் மன்னன் கூறினான் ‘பெண்ணே நீ எனக்கு மகளாகப் பிறந்ததினால்தான் எனக்கும் முக்தி பெரும் வழியும் கிடைத்தது. மோட்ஷத்திற்கு செல்லத் தடையாக இருந்த அனைத்து கர்மாக்களும் என்னை விட்டு விலகி விட்டன’. அதைக் கேட்ட விஷ்ணு மாயை தன் தந்தையைப் பார்த்துக் கூறினாள் ‘நீங்கள் கூறியது சத்தியமே. முக்தி என்பது உங்கள் கரத்தில் உள்ளது. நானும் உங்கள் மகளாகப் பிறந்து புண்ணிய நதியுமாக ஆக இருக்கிறேன். உலகில் தந்தையின் கீர்த்தியைக் கூறுபவர்கள் வைகுண்டத்துக்கு செல்வார்கள். அவர்களது பித்ருக்களும் பிரும்மாவை அடைவார்கள். அதனால் உங்கள் மூலம் நானும் பெருமையை அடைந்துள்ளேன் என்பதும் உண்மையே ‘.

விஷ்ணு மாயா தன்னைப் படைத்த 
பிரும்மாவை வணங்கினாள் 

அதைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்த மன்னனும் காவேரியை பெரிதும் போற்றிப் புகழ்ந்தார். தனக்கு மகளாக அவள் வந்ததற்கு பெருமைப் படுவதாகவும், அதை விவரிக்க வார்த்தையே கிடைக்கவில்லை என்றும் கூறினார். சில காலம் கழிந்தது. அந்த மன்னனும் அதன் பின் இல்லற இன்பங்களை மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டான். நாளடைவில் ஒரு சன்யாசி போல இருந்து கொண்டு பல இடங்களுக்கும் சென்று கொண்டு இருந்தார். பரமானந்த சொரூபியாக இருந்து மகாவிஷ்ணுவை தியானம் செய்தவண்ணம் இருந்து கொண்டு மரணம் அடைந்தார்.

அதற்கு இடையில் விஷ்ணுமாயையும் தன்னைப் படைத்த பிரும்மா கூறியது போல சிறிது ஜலமும் ஆகி, லோபாமுத்திரை என்றப பெயர் கொண்ட கன்னியாகவும் மாறி தன்னுடைய புண்ணிய தீத்தத்திலேயே தானும் ஸ்நானம் செய்து மெளனமாக தவம் இருக்க அவள் முன் விஷ்ணு பிரசன்னம் ஆனார். அவரை வணங்கியவள் அவரிடம் கேட்டாள் ‘ பிரபோ, உலகிற்கு நன்மை செய்ய நதி ரூபமாக பல இடங்களுக்கும் செல்ல விரும்புகிறேன். அந்த நதியில் நாஸ்தீகர், பாவிகள், நன்றி கெட்டவர் என யார் வந்து குளித்தாலும் அவர்களின் பாவங்கள் விலக வேண்டும். அதற்கு நீங்கள் அருள் புரிய வேண்டும்’ என்று கூறியவுடன் அவள் கேட்ட வரத்தை விஷ்ணு பகவான் தந்து விட்டுக் கூறினார் ‘ எனது பக்தையான உன் ஆசையை நிச்சயமாக நிறைவேற்றுவேன். நான் சஹஸ்ய மலையில் திவ்ய மரமான நெல்லி மரமாகத் தோன்றுவேன். அப்போது பிரும்மா விராஜ நதியின் நீரைக் கொண்டு வந்து எனக்கு அர்ச்சனை செய்வார். அந்த தீர்த்ததுடன் பூரண பிரவாகமுள்ளவளாகக் நீ கிளம்பி தக்ஷிண கங்கை என்ற பெயருடன் தென் பகுதிக்குச் செல்வாய். தென் நாட்டில் உள்ளவர்கள் அனைவருமே உன் நீரில் ஸ்நானம் செய்தால் ஸ்வர்கத்துக்கு செல்வார்கள். உலகில் கங்கை நதியை விட மேலும் சிறந்த நதி என்ற பெருமையை உனக்கு நான் அளிக்கிறேன். என் பாத சம்மந்தத்தினால் நீ மேலும் அதிக பவித்திரமடைவாய். என் பாதத்தில் நனைந்து நீ உண்டானதால் நீ கங்கையை விட அதிக பெருமை பெற்றவள் ஆக மாறுவாய். அது மட்டும் அல்ல உன் மடியிலும் நான் ரங்கனாதராக இருக்கப் போகிறேன். சர்வ புண்ணிய தீர்த்தங்களிலும் நான்கு யுகம் ஸ்நானம் செய்தால் கிடைக்கும் பலனை உன் நதியில் ஒரே ஒருமுறைக் குளிப்பவர்கள் பெறுவார்கள். நைமிசாரண்யத்தில் நான்கு யுகம் கடும் தவம் செய்வதினால் உண்டாகும் பலனை சஹஸ்ய  மலையில் நெல்லி மரத்தடியில் உள்ள உனது ஜலத்தில் ஸ்நானம் செய்பவர்கள் பெறுவார்கள்.

மகளே, உனது தீர்த்தத்திற்கு சஹஸ்யமலக தீர்த்தம் மற்றும் சங்க தீர்த்தம் என்ற பெயர்கள் உண்டாகும். அகஸ்திய முனிவர் இங்கு வந்து தவம் புரிந்து உனது தீர்த்தத்தை தனது கமண்டலத்தில் கொண்டு செல்வார். நீ லோபமுத்திரை என்ற பெயரில் அவருக்கு பத்தினியாகவும் இருப்பாய்’. இப்படியாகக் கூறிய பின் அவர் மறைந்து விட்டார். விஷ்ணு மாயையும் மகாவிஷ்ணுவையே நினைத்து அங்கு தவத்தில் இருந்தாள். அந்த சமயத்தில் சம்சாரத்தில் வெறுப்புக் கொண்ட அகஸ்தியர் பிரும்மச்சாரியாகவே இருந்து முக்தி பெற வேண்டும் என்பதற்காக அங்கு வந்து கடும் தவம் புரிந்தார்.

அங்கு வந்து கடும் தவத்தில் இருந்த  அவர் தவத்தை மெச்சிய பிரும்மா அவர் முன் தோன்றிக் கூறினார் ‘அகஸ்தியரே நீங்கள் இப்படி ஏன் கடும் தவம் புரிகிறீர்கள்? மோட்ஷம் பெறத்தானே? இதற்கு  சன்யாச கோலம் எதற்கு?  நித்ய கர்மாவினால் சம்சாரம் விருத்தி அடைந்து விடும் என நீங்கள் பயப்பட வேண்டாம். கர்மாவினாலேயே முக்தியும் பெறலாம். ஜனன மரணமும் அதன் மூலமே ஒழியும். நீங்கள் விருப்பப்படும் சன்யாசத்தை அனுஷ்டிப்பதில் பல கடுமையான விதி முறைகள் உள்ளன. அதில் சிறிது தவறினாலும் பாவமே ஏற்படும்.

 அகஸ்திய  முனிவரிடம் தான் படைத்தவளை  மணந்து 
கொள்ளுமாறு  பிரும்மா அறிவுரை கொடுத்தார் 

இந்த்ரியங்களை இழுக்கும் விஷயங்களில் விரக்தி உள்ளவனாக இருந்து கொண்டு மான அவமானங்களை சமமாகக் கருதிக் கொண்டு வாழ்பவன் முக்தி பெறுவான். சம்சாரத்தில் இல்லற போகங்களில் விரக்தி உள்ளவனாக இருந்து கொண்டு விஷ்ணு பக்தியோடு பஞ்ச மஹா  யக்கியம் செய்பவன் பெரும் சக்தி அடைவான். அவனைக் கண்டு அனைவருமே அஞ்சுவார்கள். சன்யாசியாக  உள்ள நேரத்தில் சமதர்மங்களில் சற்று வழுவினால் கூட தவம் வலிமை கலைந்து விடும். ஆனால் அதே சமயத்தில் போகங்களை அனுபவித்துக் கொண்டு துறவற வாழ்வை மேற்கொண்டால் முக்தி நிச்சயம்’ என்று கூற, அகஸ்தியர் கவலைக் கொண்டு ‘பிரபோ, என்னை ஏன் அனாவசியமாக சம்சார சாகரத்தில் இழுத்து விட முயலுகிறீர்கள்?’ என்று கேட்டார். பிரும்மா கூறினார் ‘ அகஸ்தியரே, நீர் தவ வலிமை உள்ளவர். என் அருளால் நல்ல ஆசாரம் உள்ளவளும், பதிவிரத்தையும் மற்றும் நற்குணங்களும் கொண்டவள் உமக்கு மனைவியாகக் கிடைப்பாள். உன் தவத்தால் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். என்னுடைய பெண் காவேரி எனப்படுபவள் அழகானவள். அவளை இந்த உலகிருக்கு நன்மை தர படைத்துள்ளேன் . அவளை விதிப்படி மணந்து கொண்டு சர்வ லோகத்தையும் துன்புறுத்தி வரும் விந்திய மலையின் அகங்காரத்தை நீ அடக்க வேண்டும். அதற்கான வலிமை உனக்கு காவேரியால் மட்டுமே கிடைக்கும். அங்கிருந்து சஹஸ்ய மலைக்குச் செல். அங்கு காவேரி ஒரு நதியாக மாறுவாள். அதே சமயத்தில் அவள் அம்சத்தில் லோபாமுத்திரை தோன்றுவாள். அவளை ஏற்றுக் கொண்டு உலக நன்மைக்காக உன் வலிமையை பயன்படுத்து’ என்று கூறி விட்டு மறைந்து விட்டார் .

உடனே அகஸ்த்தியர் தன்னைத் தானே பார்த்துக் கொண்டார். இளைத்து இருந்த அவருடைய உடல் பெருத்து இருப்பதைக் கண்டு ஆச்சர்யம் கொண்டார். இதுவும் பிரும்மனின் லீலையே என்று நினைத்தவாறு அங்கிருந்துக் கிளம்பிச் சென்று விந்திய மலை மீது ஏறினார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுகாக தன்னை உயரமாக்கிக்  கொண்டே போய்  சூரிய ஒளியையே மறைத்தவாறு இருக்கத் துவங்கிய விந்திய மலையை சமாதானமாகப் பேசி தக்க தருமணத்தில் தனது தவ வலிமையினால் அதை பூமியோடு பூமியாக இருக்கும் வகையில் இருக்க வைத்து விட்டு ‘நான் வரும்வரை நீ இங்கிருந்து எங்கும் செல்லக் கூடாது. மீறினால் விளைவு கடுமையாக இருக்கும்’ என்று அதை எச்சரித்தப் பின் காவேரியை தேடிக்கொண்டு ஹிமாலயத்துக்கு சென்றார். அங்கு தவத்தில் அமர்ந்து இருந்தவளைக் கண்ட அகஸ்தியர் அவளிடம்  ‘ஜகதம்பிகே, நீ ஏன் தவத்தில் இருக்கிறாய்?’ என்று கேட்க திடுக்கிட்டு அவள் எழுந்தாள்.

…..தொடரும்
முந்தைய பாகங்கள்