துலா புராணம்-1
காவிரி ஆற்றின் மகிமை
சாந்திப்பிரியா

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்தந்த சிறப்புக்களை அறிந்து கொண்டு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு புராணத்தைப் படிப்பது மூலம், நமது குடும்பங்களில் அமைதி நிலவும், மகிழ்ச்சி பெருகும், மற்றும் செல்வம் சேறும் என்பார்கள். அதனால்தான் அந்த காலத்தில் இருந்தவர்கள் புராணங்களை ஒவ்வொரு பாகமாக படிப்பதை  வீடுகளில் ஒரு தினக் காரியமாகவே வைத்துக் கொண்டு இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் காலட்சேபம், கச்சேரிகள் போன்றவற்றுக்கும் சென்று கொண்டு இருந்தவாறு தெய்வீக செய்திகளை காதுகளில் விழ வைத்துக் கொண்டு இருந்ததினால் அது தன்னால் இதயத்தில் தங்கியது. ஆகவே அவர்கள் மன நிம்மதியுடன் இருந்துள்ளார்கள். ஆனால் அந்த காலங்களில் புராணங்கள் மிகப் பெரிய அளவில் எழுதப்பட்டு இருந்துள்ளதினால் அதை இந்த காலத்தில் உள்ள மக்களால் நேரம் இன்மையினால் படிக்க முடிவது இல்லை. ஆகவே, காலத்துக்கு ஏற்ப இளைஞர்களுக்கு நல்ல காரியத்தை எடுத்துக் காட்ட வேண்டும் என்றால், அதற்கேற்ப நம்மால் ஆன சிறு செயலை செய்ய வேண்டும் என்று விரும்பியதன் முயற்சியே சில புராணங்களை நான் வெளியிடத் துவங்கியதின் காரணம்.

துலா புராணம் என்பது காவேரி நதியின் பெருமையையும், துலா மாதத்தில் அதில் குளிப்பதினால் கிடைக்கும் புண்ணியத்தையும் விவரிக்கின்றது. காவேரி ஆற்றின் பெருமையை அகஸ்தியர் மற்றும் நாரத முனிவர்கள் போன்றவர்கள் மன்னன் அரிச்சந்திரனுக்கும் தர்மருக்கும், திரைபதிக்கும் பல கதைகளை கூறி விளக்குவதாகவும், அகஸ்தியருக்கே பகவான் சில கதைகளைக் கூறியதாகவும் எழுதப்பட்டு உள்ளது. அது மட்டும் அல்ல வியாச முனிவர் அர்ஜுனனுக்கும் இதன் பெருமையை கதையாகக் கூறி  விளக்கி உள்ளார். ஆக மொத்தத்தில் இந்தப் புராணத்தில் கதைக்குள் பல கதைகள் உள்ளன. அவை படிக்க சுவையாக உள்ளது மட்டும் இல்லாமல், நமக்குத் தெரியாத புரியாத பல விஷயங்களைக் கொண்டு உள்ளன. நான் எழுதிய இந்தப் புராணம் சுமார் 60 வருடத்துக்கு முன்னர் ஸ்ரீ வத்ஸ வெ. ஸோமதேவ சர்மா என்பவர் வைதீக தர்ம வர்த்தினி என்ற புத்தகத்தில் எழுதி உள்ள புராணத்தை அடிப்படையாகக் கொண்டது. இதே புராணத்தை வேறு சிலரும் எழுதி உள்ளார்கள். அவற்றில் உள்ள செய்திகள் சிறிது மாறுபட்டு உள்ளன. ஆனால் அனைத்திலும் காணப்படும் மூலச் செய்திகள் அநேகமாக ஒன்றாகவே உள்ளன. இந்த அற்புதமான புராணத்தை அனைவருக்கும் புரிந்திடும் வகையில் எளிமையாக எழுத முயற்சி செய்துள்ளேன். இப்படி பெருமை வாய்ந்த காவேரியின் மூலக் கதை கிரந்த வார்த்தைகளில் முப்பது அத்தியாயங்களாக எழுதப்பட்டு உள்ளது என்கிறார்கள்.

முன்னொரு காலத்தில் கவேரா எனும் மன்னன் இருந்தான். அவனுக்கு மாயா தேவியானவள் ஒரு பெண்ணாகப் பிறக்கின்றாள். பின்னர் அவளே ஒரு நதியாகி சமுத்திரராஜனை மணக்கின்றாள். அப்படி காவேரா எனும் மண்ணுக்குப் பிறந்தவளே காவேரி என்ற பெயரைப் பெற்று நதியானவள். அவள் சமுத்திரராஜனை மணப்பதினால் அனைத்து நதிகளும் அவளிடம் வருகின்றன. அதனால்தான் காவிரியில் கங்காதேவியும் வாசம் செய்வதாக துலா புராணம் தெரிவிக்கின்றது. ஆயிரம் வருஷம் கங்கையில் தினம் குளித்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் ஐப்பசி மாதத்தில் காவிரியில் ஒரு நாள் குளித்தாலே கிடைத்து விடும் என்பது ஐதீகம். வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி என காவிரியின் பெருமையை விவரிப்பதே துலா புராணம் ஆகும். ஐப்பசியில் தினமும் சூரிய உதயத்திற்கு முன் காவிரியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பார்கள். மாதத்தில் கடைசி இரண்டு நாட்களில் நீராடுவது மேலும் சிறப்பாகும். காவிரியில் புனித நீராடிய பிறகு துலா புராணத்தினை முழுவதுமாகவோ அல்லது ஒவ்வொரு பகுதியாகவோ தினமும் படிப்பது சகல நலன்களையும் தரும் என்ற நம்பிக்கையுண்டு. காவேரிக்கு அத்தனை சிறப்பு வந்தது ஏன்? அதற்கு ஒரு சிறு கதை உண்டு.

பாகம்-1

துலா மாதத்தில் ஒரு முறை சிவபெருமான் ரிஷப வாகனத்தின் மீது ஏறி உலகை சுற்றிக் கொண்டு இருந்தார். அப்போது அவருடைய வாகனமான நந்தி எனும் ரிஷபம் சற்று மமதைக் கொண்டு காவிரி ஆற்றின் அருகில் வந்த சிவபெருமானின் பரிவாரத்தை விட்டு விலகி தனியே காவிரி ஆற்றின் நடுவில் தங்கி விட்டது. அதனால் கோபமுற்ற சிவபெருமானும் அதன் கர்வத்தை அடக்க எண்ணினார். அதை தன் கால் விரலால் மிதித்து காவேரி ஆற்றின் நடுவில் அதள பாதாளத்தில் மூழ்கி இருக்குமாறு அழுத்தி விட்டார். அதனால் கண்ணீர் விட்ட நந்திதேவரான ரிஷபமும், சிவபெருமானிடம் தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, தனக்கு விமோசனம் தருமாறு வேண்டிக் கொண்டது. ஆகவே சிவபெருமானும் மனமிறங்கி இனி அந்த ரிஷபம் அங்கேயே இருந்து கொண்டு காவிரியில் வந்து நீராடுபவர்களுக்கு தன்னுடைய சார்ப்பில் அருள் புரிந்து வருமாறு கட்டளையிட்டு விட்டு மறைந்தார். ஆகவே காவேரியில் அமுங்கி உள்ள ரிஷபத்தின் மீது சிவபெருமானின் கட்டைவிரல் பதிந்து இருந்ததினால் காவேரியில் துலா மாதத்தில் வந்து நீராடுபவர்களுக்கு சிவபெருமானின் அருள் நேரடியாகக் கிடைப்பதாக நம்புகிறார்கள். இந்த துலா மாத ஸ்நானம் மாயவரத்தில் ஓடும் காவிரியில் அதிகம் கொண்டாடப்படுகின்றது. அதனால்தான் ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகுமா என்று பெரியோர்கள் கூறுவார்கள். மேலும் கர்நாடகத்தில் மைசூரில் தலைக் காவேரி ஓடும்  இடத்திலும் துலா மாதத்தில் இந்த  ஸ்நான நிகழ்ச்சி பெருமளவில் நடைபெறும்.


பாகம்-2

நிசுலாபுரத்தை ஆண்டு வந்த தர்ம வர்மா எனும் ராஜரிஷி ஒருமுறை தால்ப்ய முனிவரைப் பார்த்துக் கேட்டார் ,’ஹே பகவான், எந்தப் புண்ணியத்தினால் அனைவரும் சத்புத்ரர்களைப் பெற்று, அனைத்து சுகபோகங்களையும் அடைவார்கள்?. எந்தப் புண்ணியத்தினால் அவர்களது பாபங்கள் விலகுகின்றன. அவர்கள் ஈஸ்வர கிருபை பெற்று மோட்ஷத்தை எப்படிப் பெறுகிறார்கள் போன்றவற்றை எனக்கு விளக்குவீர்களா?’ என பவ்யமுடன் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த தால்ப்ய முனிவர் ‘ அரசனே, நீ உத்தமமான கேள்வியைத்தான் கேட்டு இருக்கின்றாய். நீ உண்மையிலேயே புண்ணியம் செய்தவன். இந்த சந்தேகம் ஒருமுறை குருஷேத்திரத்தில் இருந்த அரிச்சந்திரன் என்ற மன்னனினால் கூட அகஸ்திய முனிவரிடம் கேட்கப்பட்டது.  அப்போது அவன் அயோத்தியாவை ஆண்டு வந்த மன்னனாக இருந்தவன். அரிச்சந்திரனின்  அந்தக் கதையை உன் சந்தேகங்களுக்குப் பதிலாக இப்போது கூறுகிறேன் கேள் என்று கூறிய பின், அந்தக் கதையைக் கூறலானார்.
ஒருமுறை குருஷேத்திரத்துக்கு அஸ்வமேத யாகம் செய்ய அரிச்சந்திரன் சென்று இருந்தபோது, அங்கு அனைத்து ரிஷி முனிவர்களையும் அழைத்து இருந்தான். அப்படி வந்தவர்களில் சௌர்ணகர், வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், துர்வாசர், அத்திரி, கௌதமர், பாரத்வாஜர் விட்யாசர், பராசரர், வால்மீகி, நாரதர், மாண்டல்யர், மற்றும் அகஸ்தியர் போன்ற அனைத்து பெரும் ரிஷிகளும் இருந்தார்கள். வந்த அனைத்து ரிஷி முனிவர்களையும் ஒருவரைக் கூட விடாமல் அர்க்ய பாத்யம் கொடுத்து வரவேற்று அவர்களை நமஸ்கரித்தான்.  யாகம் பல நிலைகளையும், விதி முறைகளையும்  கொண்டது. அதை ஒவ்வொரு கட்டமாகவே செய்ய வேண்டும். ஆகவே யாகத்திற்கான முதல் கட்டமான விநாயக பூஜையை துவக்கும் முன்னர் அங்கு கூடி இருந்த அனைவர் முன்னிலையிலும் சௌர்ணகர் அங்கு அரிச்சந்திரன் செய்ய வந்துள்ள யாகத்தை  குறித்த செய்திகளைக் கூறத் துவங்கினார்.
அங்கிருந்த நாரதர் சௌர்ணகர் பேசத் துவங்கும் முன் அந்த யாகம் குறித்து ஒரு சின்ன விஷயத்தை அகஸ்திய முனிவர் கூற உள்ளார். ஆகவே அதை முதலில் கேட்போம் என்று கூறிவிட்டு அகஸ்தியரைப் பார்க்க அகஸ்திய முனிவரும் கூறலானார்  ‘சௌர்ணகரே, யாகம் செய்வது நல்லதற்கே. யார் யாகம் செய்தாலும் அவர்களை  ஆசிர்வதிப்பது நமது கடமை. அதைப் போலவே எந்த யாகத்தையும்  செய்ய  அரிச்சந்திரனுக்கு அனைத்து நல்ல பண்புகளும், குணங்களும் உள்ளன என்பதும் உண்மையே. ஆனால் இந்த யாகத்தை இன்று செய்ய அரிச்சந்திரன் தகுதிடையவனா என்பதை முதலில் பார்க்க வேண்டும். ஏன் என்றால் முன்னர் ஒரு காலத்தில் நம் முன் நிற்கும் இதே அரிச்சந்திரன், விஸ்வாமித்ரா முனிவருக்கு கடன்பட்டு அதனால் அவதியுற்று, பசியால் அலைந்து திரிந்த நேரத்தில் தன்னை அறியாமலேயே கின்தமர் எனும் முனிவரை கண்டார்.  அப்போது இவன் இருந்த மன நிலையில் அவரை நமஸ்கரிக்காமலும், ஏறெடுத்தும் பார்க்காமலும் சென்றான். ஆகவே கின்தமர் ஒரு கணம் யோசனை செய்தார். ‘அரிச்சந்திரன் ஏன் இன்று என்னை உதாசீனப்படுத்திக் கொண்டு சென்று விட்டான்? அப்படி செய்ய மாட்டனே. மேலும் அவன் முகமும் களை இழந்து காணப்படுகிறதே. பாவம், இன்று என்ன ஆயிற்றோ தெரியவில்லை. இல்லை என்றால் வேண்டும் என்றே அப்படி அவமதிப்பது போல செல்ல மாட்டான்’ என கருணைக் கொண்டு அவனுக்கு சாபமிடாமல் இருந்து விட்டார்.
ஆனால் சற்று தள்ளி இருந்த இன்னொரு இடத்தை அடைந்தபோது அங்கிருந்த மஹா  ரிஷியான மஹரிஷியையும் அது போலவே பார்க்காமல் சென்று விட, ஒரு பிராம்மணரை அவமதித்த பாவம் அவனை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதை நீங்கள் அறிந்து உள்ளீர்களோ  இல்லையோ என்பதினால் இதைக்  கூற வேண்டி இருந்தது. ஆகவே முதலில் அரிச்சந்திரன் அந்த பாவத்தைத் தொலைக்க வேண்டும். அந்த பாவத்தைத் தொலைக்க  ஒரு எளிய வழி இந்த யாகத்தை அவன் துவக்கும் முன்னால் அவன்  குறைந்த பட்ஷம் துலா மாதத்தில் காவேரி நதியில் துலா ஸ்நானம் செய்வதுதான். அதற்குப் பிறகே அவன் இந்த யாகத்தை செய்யத் தகுதி உள்ளவனாக ஆவான்’ .
அகஸ்தியார் கூறியதை கேட்ட அரிச்சந்திரன் ஆச்சர்யமடைந்தான். எந்த காலத்திலோ  தான் அறியாமல் செய்திருந்த பாபம் இன்னமும் தன்னைத் தொடருவதை அப்போதுதான் உணர்ந்தான். ஆனாலும் என்ன செய்வது. அதற்கு ஒரு விடிவு வேண்டுமே, இல்லை என்றால் இங்கு யாகத்தை எப்படித் துவக்குவது?. இதை யோசனை செய்தவன் அந்த மகரிஷியைப் ‘ ஸ்வாமி நான் என்றென்றும் தேவ முனிவர்களுக்குக் கடமைப்பட்டவன். ரிஷி முனிவர்களுக்கும் கடமைப்பட்டவன்.  நான் அறியாமல் செய்து விட்ட பாபத்தைப் போக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயமாக செய்ய சித்தம் கொண்டவனாக உள்ளேன்.  தயவு செய்து நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குக் கூற வேண்டும். அதை கண்டிப்பாக செய்துவிட்டே இந்த யாகத்தை துவக்குவேன் என்பது உறுதி. அதற்க்கு முன்னால் காவேரி ஆற்றின் மகிமையையும், துலா மாதத்தில் அதில் குளிப்பதினால் கிடைக்கும் புண்ணியங்களையும், ஸ்நானம் செய்யும் முறைகளையும் அதன் பலன்களையும் எனக்குக் கூறுவீர்களா?. துலா மாதத்திற்கு முன்னால் வேறு எந்த மாதத்திலாவது அதில் குளித்து விட்டு இந்த யாகத்தை செய்யக் கூடாதா? எல்லா மாதங்களைக் காட்டிலும் துலா மாதம் மட்டும் எப்படி உயர்ந்ததாக உள்ளது? தயவு செய்து எனக்கு விரிவாக எடுத்து உரைக்க வேண்டும்’ என்று வினயமாகக் கேட்டான்.
அதைக் கேட்ட அகஸ்திய முனிவரும் மனம் மகிழ்ந்தார். அனைவரும் ஆயாசமாக அமர்ந்து கொள்ள அகஸ்திய முனிவர்  அவனுக்கு காவேரியின் மகிமையை விஸ்தாரமாக கூறத் துவங்கி, காவேரி ஆற்றின் ஜலம் அனைத்தும் புண்ய தீர்த்தமாகும், காவேரியிலுள்ள கற்கள் அனைத்தும் சிவபெருமான் மற்றும் விஷ்ணுவின் ரூபங்களை பிரதிபலிப்பவை, மணல்கள் முழுவதுமே பிற தேவதைகள் என்றும், துலா மாதத்தில் அனைத்து நதிகளும் புண்ய தீர்த்தங்களும் காவேரியில் சங்கமிக்கின்றன என்பதினால், அந்த மாதத்தில் வந்து காவேரியில் குளிப்பவர்கள் பஞ்ச மகா பாதகங்களிலிருந்தும் விடுபடுகின்றனர் என்றும் கூறினார். தொடர்ந்து காவேரி ஆற்றின் மகிமைக் குறித்தும், காவேரி ஆற்றின் கரையில் எத்தனை லட்ஷ சிவலிங்கங்கள், சாலிக்கிராமங்கள்  புதைந்து உள்ளன, எத்தனை நதிகள் அதில் கலக்கின்றன ( அந்தக் குறிப்பிட்ட மாதத்தில் அனைத்து நதிகளின் தேவதைகளும்  தம்முடன் அவரவர் நதிகளில் நீரை ஆயிரம் தங்கக் குடங்களில் கொண்டு வந்து  காவேரியில் உள்ள நந்தி தேவர் முதுகில் உள்ள சிவபெருமானின் காலடி சுவட்டின் மீது அதைக்  கொட்டி அபிஷேகம் செய்தப் பின் அங்கு வந்து காவேரி நதியில் சம்பிரதாயமாக குளிப்பார்களாம். அதனால்தான் 64 கோடி தேவர்களும், நதிகளும் அங்கு வந்து குளிக்கின்றார்கள் என்ற பெருமையை காவேரி பெற்றுள்ளது.) மற்றும்  அதில் ஸ்நானம் செய்வது எத்தனை புண்ணியத்தை தரும் என்ற அனைத்தையுமே ஒரு பெரும் உரையாகவே விளக்கிக் கூறினார். (காவேரி ஆற்றின் பெருமையை இந்த புராணத்தின் இறுதியில் கூறி உள்ளேன்).  அதன் இடையிடையே சில உதாரணக் கதைகளையும் கூறினார்.
அகஸ்தியர் கூறிய விவரங்களை கவனமாகக் கேட்டுக் கொண்டு இருந்த அரிச்சந்திரன் அகஸ்திய முனிவரிடம் மீண்டும் கேட்டான், ‘மகரிஷியே, தாங்கள் காவேரியின் பெருமையையும், துலா மாதப் பெருமையையும் கூறுகையில், அதன் இடையில் ஒரு செய்தியைக் கூறினீர்கள். மகா பாபம் செய்து, நரகத்திற்குப் போக பாத்யதையான ஒரு பிராம்மண ஸ்திரீயானவள், அவளது மரணத்திற்குப் பின்னால் சொர்கலோகம் சென்றதாகக் கூறினீர்களே, தயவு செய்து அவள் யார், என்ன பாபம் செய்திருந்தாள், அவளால் எப்படி சொர்கத்துக்குச் செல்ல முடிந்தது என்ற கதையை எனக்கு கூறுவீர்களா?’ எனக் கேட்டான். அங்கு அமர்ந்து இருந்த அனைத்து முனிவர்களும் அகஸ்திய முனிவர் கூறத் துவங்கியக் கதையை ஆவலுடன் கேட்டபடி அமர்ந்து கொண்டு இருந்தார்கள்

 

.…………………தொடரும்