சாந்திப்பிரியா

 
பாகம்- 4
கண்ணபிரான் உத்தவருடையக் கருத்தே சரியானக் கருத்து என்று முடிவு செய்தார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதைப் போல யாகத்துக்கு செல்ல வேண்டும், அங்கு வரும் சிசுபாலனின் அவதூறுப் பேச்சு அல்லது அவன் வெளிப்படுத்தும் தடித்த வார்த்தைகள் என்பன அவனுடைய தாயாருக்கு கண்ணன் கொடுத்த நூறு என்ற எண்ணிக்கையைத் தாண்டினால் அதுவே அவனைக் கொல்ல முடிவெடுக்கும் தக்க சமயமாக மாறும் என்பதை புரிந்து கொண்டார். ஆகவே முதலில் தருமரின் யாகத்துக்குச் செல்லக் கிளம்பினார். வில்லு, தண்டு என அனைத்து ஆயுதங்களையும் ஏந்திய படையினர், சாமரம் வீசுவோர், குடைகளைப் பிடிப்போர், அமைச்சர்கள், புரோகிதர்கள், மித்ருக்கள் என அனைவரும் சூழ்ந்து செல்ல கண்ணபிரான் சிங்காரித்து வைக்கப்பட்டு இருந்த சிப்ரபம் என்ற அலங்காரத் தேரில் ஏறிக் கொண்டு தர்மரின் யாகசாலையை நோக்கிச் சென்றபோது வீதி முழுவதும் நிறைந்திருந்த வீடுகளின் உள்ளிருந்தவர்கள் வெளியில் வந்து கண்ணனுக்கு வாழ்த்துக் கூறி அனுப்பினார்கள். அற்புதக் கண்ணனை, ஆனந்தமயமான கிருஷ்ணரைக் காண வழி முழுவதும் ஜனங்கள் நிறைந்து நின்றதினால் தேரை மெல்ல மெல்லவே ஓட்டிக் கொண்டு செல்ல வேண்டி இருந்தது.
மெல்ல மெல்லச் சென்ற தேர் இரவதகமலை என்ற இடத்தை அடைந்தது. அந்த மலையைச் சுற்றி கண்ணுக்கு இனிமையான காட்சிகள், பச்சிலை செடி – கொடிகள், மூங்கில், பனை போன்ற மரங்களும் நிறைந்திருந்தன. மலை அடிவாரத்தில் அங்காங்கே பெரிய பெரிய நிறைந்திருந்தன. எங்கும் பசுமை, எங்கும் பசுமை. பச்சை பசேல் என்ற காட்சி. மனதுக்கு ரம்யமாக இருந்தது. அனைத்தையும் நிதானமாக நின்று கொண்டு பார்த்தார் பரந்தாமன். அங்காங்கே சிங்கமும் , புலியும் சுற்றித் திரிந்தாலும் யாருக்கும் அவை தீங்கிழைக்கவில்லை. மரங்களில் கனிகளும், காய்களும் நிறைந்தே இருந்தன. அங்கு ஒரு பர்ணசாலை அமைத்து அனைவரும் கிருஷ்ணருடன் அங்கு இரவு தங்கினார்கள். கூட வந்திருந்த சேனைகளின் யானைகள் அங்கிருந்த குளத்தில் இருந்து நீரை உறிஞ்சி அனைத்து இடங்களிலும் தண்ணீரை பீச்சி அடித்து விளையாடின. குதிரைகளோ கால் குளம்புகளை கற்கள் மீது வைத்துச் சென்றபோது கிளுகிளு என்ற சப்தத்தை மேளதாளம் போல எழுப்பின. ஒட்டகப் படையின் ஒட்டகங்களோ நீண்டு இருந்த கழுத்தைக் கொண்டு வானளாவி இருந்த மரக்கிளைகளை ஒடித்து இலைகளைத் தின்றன. ஆறுவகைப் பருவக்கால மரங்களும் செடி கொடிகளும் அங்கிருந்தன. சூரியனும் மேற்கடலை நோக்க, திக்கெங்கும் சிவந்து கிடக்க பகல் பொய் இரவும் வந்தது. மறுநாள் காலை சேவல்கள் கொக்கரிக்க அனைவரும் எழுந்து காலைக் கடன்களை முடித்து ஸ்நானம் செய்து தம்மை தயார்படுத்திக் கொண்டு தருமரின் யாகசாலையை நோக்கி செல்லலாயினர்.
நாடுகள், நகரங்களைக் கடந்து அனைவரும் சென்றார்கள் கண்ணபிரான் யமுனை நதியைக் கடந்து நகருக்குள் பிரவேசிக்கிறார் என்பதை கேள்விப்பட்ட தருமாரோ சதுரங்க சேனையோடும், தமது சகோதரர்களுடனும் வந்து கிருஷ்ணரை எதிர்க் கொண்டு அழைத்தார். தருமரைக் கண்ட கண்ணனோ, தேரில் இருந்து இறங்கிச் சென்று, தன்னை விட முதியவர் தர்மர் என்பதினால் அவர் பாதங்களில் விழுந்து அவரை நமஸ்கரித்தார். அவரை எழுப்பிய தருமர் அவரைக் கட்டி அணைத்தார். அதன் பின் தர்மருடைய அனைத்து சகோதரர்களும் கண்ணனை கட்டி அனைத்து தாம் கொண்டு வந்திருந்த தேரில் அவரை ஏற்றிக் கொண்டு சென்றார்கள்.
இந்திரப்பிரத்த நகரோ இல்லை இந்திரலோகமோ என்று கூற முடியாத அளவு நகர் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கண்ணனும் , பாண்டவ சகோதரர்களும் தேரில் இருந்து இறங்கி கோட்டைப் போல அலங்கரித்திருந்த நீண்ட மண்டப வாயிலுக்குள் புகுந்து யாக சாலைக்கு செல்லத் துவங்கினார்கள். யாக சாலையில் நிறைய ஆசனங்கள் போகப்பட்டு இருக்க, இங்கே அமருங்கள், இங்கே அமருங்கள் என ஒவ்வொருவரும் கண்ணனை உபசரித்துக் கூப்பிட, கண்ணனுக்கென அமைத்து இருந்த தனி சிம்மாசனாத்தில் அவரை அமர வைத்தார்கள். தருமருக்கு அடுத்து இருந்த ஆசனம் அது. அங்கு கூடி இருந்த மற்ற அரசர்களும், ஆட்களும் சிறுவர், பெரியவர் என்ற பேதம் இன்றி ஒன்றாகவே பழகினர். அதன் பின் அனைவரும் அமர்ந்தவுடன் தருமர் யாகத்தை துவக்கும் முன் கண்ணனைப் பார்த்துக் கூறலானார்
‘யது குலப் பிரபுவே, உங்கள் வரவு நல்வரவாக இருக்கட்டும். உலகிலே தன்னை விட அனைத்திலும் பலவானை (செல்வத்தில், செருக்கில், பலத்தில், அதிகாரத்தில் என அனைத்திலும்) வேண்டும் என்றே அதிக புகழ் பாடி அவர்கள் மனத்தைக் குளிர வைப்பது பேடித்தனம் ஆகும். அது போலவே போலியாக புகழ் பாடப்படுவதை, அவை அனைத்தும் போலியானவை என்பதை அறிந்து கொள்ளாமல், புகந்துரைகளையும் பலவான்கள் ஏற்றுக் கொள்வது அவர்கள் மூடர்களே என்பதையே எடுத்துக் காட்டும். ஆனால் நீரோ அந்த நிலைக்கு அப்பாற்ப்பட்டவர். உங்களைப் புகழ்ந்து பேசுவோர் அவற்றை பொய்யாகக் கூறியதில்லை. நீரும் அவை அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. ஆனாலும் உங்கள் மகிமையைக் கூறாமல் என்னால் இருக்க முடியாது.
நாங்கள் வலிமையோடு இன்று இந்த பரத கண்டத்தை ராஜ்ஜியம் செய்து வருகிறோம் என்றால் அதற்கு நீங்களே காரணம். உங்கள் அருளினால் அனைத்து திக்குக்களிலும் சென்று அளவற்ற திரவியமும் தேடிப் பெற்றோம். இந்த யாகம் சிறப்புடன் நடைபெற நாங்கள் தேடி வைத்துள்ள திரவியங்கள அனைத்தையும் ஏற்றுக் கொண்டு யாகமும் சிறப்பாக நடைபெற நீங்களே இங்கு யாகத்தின் பாதுகாவலனாகவும் இருந்தவாறு இந்த யாகத்தையும் எங்களுக்காக செய்ய வேண்டும். வரும் காலத்திலும் இன்று போலவே நானும் எனது சகோதரர்களும் உம சொல்லை மீறாமல் வழி நடந்து வருவோம்’.
அதற்கு பதிலாக கண்ணபிரான் கூறினார் ‘ தருமபுத்திரரே,
‘திக்குகள் அனைத்திலும் சென்று திரவியம் தேடியது என் வலிமையினால் அல்ல. அது உங்கள் பெருமையைக் காட்டுகிறது. இந்த ராயசூய யாகம் செய்வதற்கு உரியவர் யார்? நான் அல்ல. நீரே அதை செய்ய வேண்டும். இந்த யாகத்துக்கு இக்கட்டான வேறு காரியங்கள் நடந்தால் அவற்றை நான் பார்த்துக் கொள்வேன். ஆகவே இந்த யாகத்திலே உமது செயலை யாராவது தடுத்தால் அவர்களது தலையை இந்த சக்ராயுதம் வெட்டி வீழ்த்தும். ஆகவே எந்த பயமும் இல்லாமல் யாகத்தை துவக்கவும்’ என்று கூறி முடிக்க யாகமும் துவங்கியது. யாகப் புகை அந்த இடத்தை சூழ்ந்தது. யாகம் முடிந்தப் பின் யாக முறைப்படி முதலில் அங்கிருந்த அனைத்து அந்தணர், புரோகிதர்களுக்கு திரவியங்கள் வழங்கப்பட்டன. அத்தனை ஜனங்களும் கூடி இருந்த இடத்திலும் யாருக்கும் விட்டுப் போகாமல், யாருக்கும் குறைவில்லாமல், அனைவருக்கும் மன மகிழ்ச்சியோடு செல்லும் வகையில் தருமர் தனது கையினாலேயே தானப் பொருட்களை அனைவருக்கும் கொடுத்தார். அங்கு ஏழைகள், வசதியானோர் என்ற பேதம் இன்றி அனைவருமே பெற்றவை சரி சமமானதாகவே இருந்தது.
தான தருமங்கள் முடிந்ததும், அடுத்து செய்ய வேண்டிய அக்கிர பூஜைக்குத் தக்கவர் யார் என்ற கேள்வி எழுந்தபோது, அங்கிருந்த விட்டுமர் கூறினார் ‘தருமா புத்திரரே, பிறர் கூறாமலேயே அனைத்தயும் நீரே அறிவீர்கள். ஏன் என்றால் நியாயம் என்பதை நீங்கள் அளவில்லாமல் கற்றுக் கொண்டு உள்ளீர்கள். உங்களுக்கு துணையாக கண்ணபிரான் வேறு இங்கு இருக்கிறார். இங்குள்ளவர்களின் ஏற்றத் தாழ்வுகளையும் நன்றே அறிந்துள்ளவர் நீங்கள். ஆகவே அக்கிர பூஜையை ஏற்க்ல்க யார் தகுதியானவர் என்று குழம்பத் தேவையே இல்லை. அக்கிர பூஜையை ஏற்க கூடியவர் யார்? நம் இல்லத்தில் உள்ளவர்கள், பிதா போன்ற பெரியவர்கள், உறவினர்கள், யாக புரோகிதர், மருமக்கள், புவிக்கு அரசர் போன்ற ஆறு பிரிவினரே அக்கிர பூஜையை ஏற்கத் தகுதியானவர்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவர்களைத் தவிர குணத்தால் சிறந்தவர்காளையும் இப் பூஜைக்கு தேர்வு செய்யலாம் என்றே முதிமை மிக்க ஞானிகள் கூறுவார்கள்’ என்று கூறியவர் மேலும் தொடர்ந்து கூறுகையில் ‘மானிட உருவிலே இங்கு வந்து வீற்றுள்ள கண்ணனை மானிடர் என்றே கருதக் கூடாது. அங்கு, இங்கு எனாதபடி அனைத்து உலகிலும் உள்ள அவதாரப் புருஷர் அவர். அவருக்கு இச்சை, அகங்காரம் போன்ற நீச்ச குணங்கள் எதுவுமே இல்லை. நன்மைகள், தீமைகள் அவரைப் பாதிப்பது இல்லை. எங்கும் நிறைந்தவர், எல்லாவற்றையுமே அறிந்தவர் அவர். மாயத் தோற்றத்தைக் கொண்டவர், பழையவர். புதியவர் என்ற பேதத்தைப் பாராதவர். மூன்று குணங்களைக் கொண்டு மூன்று தொழில்களை செய்பவர்- படைக்கிறார், காக்கிறார், அழிக்கிறார்.
ஆதியிலே நீரை சிருஷ்டித்து, அந்த நீரிலே கர்பத்தை உருவாக்கி, பிரும்மாவைப் படைத்து, அவர் மூலம் இந்த பிரபஞ்சத்தையும் படைத்து, நீரிலே மூழ்கிய பூமியையும் மேலே கொண்டு வந்து , தேவர்களையும், ரிஷி முனிவர்களையும், மற்றோர்களையும் வாட்டி வததித்த ராக்ஷசர்களையும், அசுரர்களையும் நரசிம்மராக, ராமனாக, பரசுராமராக, கிருஷ்ணராக தோன்றி அழித்து அனைவரையும் காத்தவர். அவ்வளவு ஏன், இங்குள்ள சிசுபாலனின் மூன்றாவது நான்காவது கைகளையும், மூன்றாம் கண்ணையும் மறையச் செய்தவர். இப்படியாகப் பல அவதாரங்களில் பல மகிமைகளை செய்துக் காட்டி உள்ளவர் மானிட உருவிலே இங்கு வந்துள்ளார். ஆகவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இந்த அவையில் வீற்று உள்ள கண்ணபிரானே அக்கிர பூஜையின் அர்க்கியத்தை ஏற்கத் தகுதியானவர் என்பது எங்களுடைய எண்ணம்’ என்று கூறி முடிக்க விட்டுமர் வார்த்தையைக் கேட்ட தருமாறும் அக்கிர பூஜையை கிருஷ்ணருக்கே செய்தார். விட்டுமர் என்பவர் சந்தனு மகாராஜனின் புதல்வர் ஆவார்.

 

…………..தொடரும்  

 

முந்தைய பாகங்கள்