அய்யா வழி

அய்யா வைகுண்டர் வரலாறு

சாந்திப்பிரியா

அய்யா வழி தோன்றக் காரணம்

பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஜாதிக் கொடுமைகள் நிறைந்து இருந்த நேரம் . முக்கியமாக தென் இந்தியாவில் கன்யாகுமரி மற்றும் கேரளப் பகுதிகளான திருவனந்தபுரம், திருவான்கூர் போன்ற இடங்களில் அந்தக் கொடுமை மிக அதிகம் இருந்தது. ஜாதிக் கொடுமைகள் எந்த அளவு இருந்தது என்றால் உயர் ஜாதியினர் முன்னால் தாழ்ந்த ஜாதியினர் செருப்பு அணியக் கூடாது, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் இடுப்புக்கு மேல் அவர்களது உடலை துணியால் மறைத்திருக்கக் கூடாது. திறந்த மார்புடன் இருக்க வேண்டும். உயர் ஜாதியினர் எந்த தாழ்ந்த ஜாதியினரையாவது கொன்றாலும் தண்டிக்க சட்டம் கிடையாது. கீழ் ஜாதியினர் எனக் கூறப்பட்டவர்கள் ஆலயங்களுக்குள் நுழையக் கூடாது. அவர்கள் தமது பெயர்களாக கடவுளின் பெயர்களை வைத்துக் கொள்ளக் கூடாது. உயர் ஜாதியினரிடம் பேசும் போது பத்தடி தள்ளி நின்று பேசவேண்டும். எந்த நிலையிலும் தலைப்பாகை கட்டிக் கொள்ளக் கூடாது எனப் பலவிதமான நியாயமற்ற கட்டுப்பாடுகளினால் தாழ்ந்த ஜாதியினர் முக்கியமாக நாடார்கள், சாணர்கள் போன்றோர் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டு இருந்தனர். அதன் எதிரொலியாகப் பிறந்ததே இந்த இயக்கம். அந்த நேரத்தில்தான் கன்யாகுமரிப் பகுதியில் அப்படிப்பட்ட அடக்கு முறைக்கு ஆளானவர்களின் இரட்ஷகராக அவதரித்தவர் அய்யா வைகுண்டர் என்பவர் . அவரை விஷ்ணுவின் அவதாரம் எனப் போற்றி வணங்குகின்றனர். அன்று நிலவி வந்த ஜாதிக் கொடுமைகளை எதிர்த்து நின்று தவித்திருந்த மக்களுக்குத் துணைவராக வாழ்ந்து மறைந்தார்.

 அய்யா வைகுண்டரின் ஒரு  ஆலயம் 

அய்யா வைகுண்டர் தோன்ற காரணமான பின்னணிக் கதை
உலகம் படைப்பதற்குப் முன்னரே பிரும்மா, விஷ்ணு, சிவன் மற்றும் பல தெய்வங்களையும் சக்தி படைத்தாள். அவர்கள் படைப்பினைத் தொடர்ந்து வேதங்கள், வானரங்கள், பிற அண்டங்கள் என அனைத்தும் தோன்றின. அந்த நேரத்தில் தீய எண்ணம் கொண்ட ஒருவனும் படைக்கப்பட்டான். அவன் ஆள ஒரு இராஜியமும் உருவாயிற்று. நல்லவர்களையும் தீயவர்களையும் படைத்தால்தானே பூவுலகில் உள்ளவர்கள் நன்மை தீமைகளை புரிந்து கொள்ள முடியும்.

அதற்காக ஈசன் எனப்படும் சிவபெருமான் ஒரு பெரிய யாகம் செய்தார். அந்த யாகத்தின் மூலம் ஒரு பொல்லாதவனைப் படைத்தார். அவனுக்கு குரோணி எனப் பெயர் சூட்டினார். மலைப் போன்ற சரீரத்தைக் கொண்டு மாமிசப் பிண்டமாகப் பிறந்த அசுரன் குரோணி பிறந்த பின் பல நாட்கள் உறங்கிக் கொண்ட இருந்தான். உறங்கிய பின் எழுந்தவனுக்குப் பசி தாளவில்லை. பயங்கரமான சப்தம் போட்டவாறே எழுந்தவன் எழுப்பிய ஓசை தேவர்களை நடுங்க வைத்தது. பசி எடுத்ததும் பூவுலகை நோக்கினான். அங்கு இருந்த அனைவரையும் கொன்று விழுங்கினான். அப்படியும் அவனுடைய பசி அடங்கவில்லை என்பதினால் கடல் நீர் முழுவதையும் குடித்துக் காலி செய்தான். அதுவும் போதவில்லை என்பதினால் கயிலையை வந்தடைந்து அதையும் முழுங்கினான். நல்லவேளையாக அப்போது ஈசன் அங்கு இல்லை. கைலாயத்தை விழுங்கியும் பசி அடங்காமல் வைகுண்டத்தை நோக்கி ஓடினான். அவன் வருவதைக் கண்ட விஷ்ணு அங்கிருந்துத் தப்பி ஓடினார். அவனிடம் இருந்து பிரபஞ்சத்தைப் பாதுகாக்க அவர் தவத்தில் இருந்த ஈசனை துதித்தார். கண் விழித்த ஈசனிடம் நடந்த அனைத்தையும் கூறி அந்த குரோணியை அழிக்க அவர் உதவ வேண்டும் எனக் கேட்க அவனை உடனே அழித்தால் போதாது. அவன் மீண்டும் மீண்டும் வருவான். ஆகவே அவனுடைய வம்சம் முழுவதையும் அழிக்க வேண்டும். இல்லை என்றால் வெவ்வேறு ரூபங்களில் அவன் தோன்றிக் கொண்டே இருந்து அனைவரையும் துயரில் ஆழ்த்துவான் என்றார். ஆகவே அவனை ஆறு துண்டுகளாக வெட்டிப் போட்டு அந்த துண்டுகளில் இருந்து அவனுக்குப் பிறக்கும் வம்சத்தினரை யுகயுகமாக ஆறு யுகங்களில் நல்லவராக அவதாரம் எடுத்து விஷ்ணு கொன்றால்தான் அவன் வம்சமே முழுமையாக அழியும் என்றார்.

 அய்யா வைகுண்டர் திருவிதிருவிழக்களில் பக்தர்கள் 

சிவபெருமானின் ஆணைப்படி விஷ்ணுவும் சிவபெருமானின் ஆசி பெற்று குரோணியுடன் சண்டையிட்டு அவனை ஆறு துண்டங்களாக வெட்டிப் போட்டு அந்த துண்டங்களை ஒவ் ஒன்றாக உயிர் பிழைக்க வைத்து அவனையும் அந்த துண்டங்கள் மூலம் பிறந்த அசுரர்களையும் சதுர யுகம், நெடிய யுகம், கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் போன்ற ஐந்து யுகங்களில் கிருஷ்ணர், இராமர், முருகன் எனும் சுப்ரமண்யர் போன்ற அவதாரங்கள் எடுத்து அழித்தப் பின் அவனது ஆறாவது துண்டத்தை ஆறாவது உகத்தில் அதாவது கலிகாலத்தில் கலியை அழிக்கப் பிறப்பு எடுக்க வேண்டி இருந்தது. அந்த கலியை அழிக்கவே அய்யா வைகுண்டர் வடிவத்தை விஷ்ணுவானவர் எடுக்க நேரிட்டதாம்.

அய்யா வைகுண்டர் தோற்றமும் அவர் கதையும்
1809 ஆம் ஆண்டு. ஸ்வாமித் தோப்பில் தாமரைக்குளம் என்ற கிராமத்தில் இருந்த வெய்யேலி மற்றும் பொன்னு நாடார் என்ற பெற்றோர்களுக்குப் பிறந்தது ஒரு ஆண் குழந்தை. அதன் பெயரை அவர்கள் முடிசூடும் பெருமாள் என வைக்க சாமி பெயரை எப்படி தாழ்ந்த குலத்தவர் வைக்கலாம் என அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆகவே குழந்தையின் பெயரை முத்துக்குட்டி என மாற்றி வைக்க வேண்டியதாயிற்று.

அந்தக் குழந்தைக்கு இருபத்தி இரண்டு வயதானபோது அதற்கு இனம் புரியாத வியாதி தோன்றி அவதிப்பட மருத்துவர்களும் அது தீர்க்க முடியாத வியாதி எப்னக் கூறி அவர்களைக் கை விட்டு விட்டனர். ஆகவே அவருடைய தாயார் விஷ்ணுவை வேண்டிக் கொண்டார். விஷ்ணுவும் முத்துக்குட்டியின் தாயாரின் கனவில் தோன்றி அவனை திருச்செந்தூருக்கு மாசித் திருவிழாவின்போது அழைத்து வந்தால் வியாதி குணமாகும் என்றார்.
அந்த காலங்களில் வாகன வசதிகள் சரிவரக் கிடையாது. முத்துக்குட்டியாலோ நடக்க இயலாத நிலை. ஆகவே அவரது பெற்றோர்கள் தமது உறவினர்கள் சிலரை துணைக்கு அழைத்துக் கொண்டு முத்துக்குட்டியை ஒரு கட்டையில் தூளியாக் கட்டிய சேலையில் படுக்க வைத்து ஒருவர் மாற்றி ஒரு குழுவாக தூக்கிக் கொண்டு செல்லத் துவங்கினார்கள்.
திருச்செந்தூருக்கு இன்னும் சில தூரமே பாக்கி. அங்கு இருந்த ஒரு ஆற்றின் அருகில் மரத்தடியில் அனைவரும் இளைப்பாறினர். அப்போது யாருமே எதிர்பார்க்காத விதத்தில் தூளியில் படுத்து இருந்த முத்துக்குட்டி தூளியில் இருந்து வெளியில் குதித்தூர். திருச்செந்தூர் நோக்கி ஓடத் துவங்கினார். படுத்தப் படுக்கையில் கிடந்தக் குழந்தை திடீரென எழுந்து எப்படி ஓடுகிறது என எவருக்கும் புரியாமல் அவரைப் பிடிக்க அவர் பின்னால் ஓடினார்கள். ஆனால் முத்துக்குட்டியின் வேகத்துக்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. முதலில் முத்துக் குட்டி திருச்செந்தூரில் நுழைந்தார். அங்குள்ள வீதிகளில் நடக்கலானார். அதன் பின் கடற்கறைக்குச் சென்று கடலுக்குள் இறங்கி நடக்கத் துவங்கினார். அவர் பின்னால் அவரைத் துரத்தி வந்தவர்கள் அவரை நெருங்கும் முன்னரே குழந்தை கடலுக்குள் இறங்கத் துவங்கியது. ஐயோ குழந்தை கடலுக்குள் இறங்குகின்றதே என பரிதவித்து ஓடிச் சென்று கடலுக்குள் முழுகியவரை வெளியில் எடுத்து வர முயன்றார்கள். கடலுக்குள் முழுகியக் குழந்தை காணவே இல்லை. வந்தவர்கள் எத்தனை தேடியும் அவர் எங்குமே கிடைக்கவில்லை. ஆகவே அனைவரும் கடல் கறையில் இரண்டு நாட்கள் தங்கி ஒரு வேளை சடலமாவது கிடைக்குமா எனப் எதிர் பார்த்தபடி காத்து இருந்தனர். இரண்டு நாள் ஆகியும் அவர் வெளி வராததினால் அனைவரும் முத்துக்குட்டி கடலில் முழுகி இறந்து விட்டதாகக் கருதி திரும்பிச் சென்று விட்டனர். ஆனால் அவருடைய பெற்றோர் மட்டும் அங்கிருந்து செல்லவில்லை. முத்துக்குட்டியின் உடல் கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்து இருந்தனர்.

மூன்றாம் நாள். 1833 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இருபதாம் தேதி. முத்துக்குட்டி கடலுக்குள் இருந்து வெளியில் நடந்து வந்தார். ஆனந்தம் அடைந்த அவர் தாயார் அவரை நோக்கி ஓடி அவரைக் கட்டி அணைக்க முயன்றபோது அவளைத் தடுத்து நிறுத்தினார் முத்துக்குட்டி. தான் பழைய முத்துக்குட்டி இல்லை எனவும், தான் விஷ்ணுவின் அவதாரமாக மாறி வந்துள்ளதாகவும் கூறினார். அந்த கடலுக்குள் அவருக்காக விஷ்ணுவும் மகாலஷ்மியும் காத்திருந்தனர் எனவும், முத்தக்குட்டியின் உடலில் இருந்த சம்பூர்ணதேவன் என்ற உயிரை விலக்கி விட்டு தம்மை விஷ்ணுவின் அவதாரக் குழந்தையாக பிறப்பு எடுக்க வைத்து அனுப்பி உள்ளார் எனவும், தாம் கண்களுக்குப் புலப்படாமல் பரவி உள்ள கலியை அழிக்கப் பிறவி எடுத்துள்ளதாகவும் (கலிகாலத்தின் மாயைகளை) கூறினார். நடந்த அதிசய நிகழ்ச்சி அனைத்து இடங்களிலும் பரவியது. தான் மறு பிறப்பு எடுத்து வந்துள்ள நோக்கம் முழுமைப் பெற வேண்டும் என்றால் தான் ஸ்வாமித் தோப்புக்கு சென்று ஆறு வருடம் தவம் இருக்க வேண்டும் எனக் கூறியப் பின் வைகுண்டர் எனப் பெயரடைந்தவர் ஸ்வாமித் தோப்பிற்குக் கிளம்பிச் சென்றார். வழி நெடுக அவரைத் தொடர்ந்து மக்கள் செல்லத் துவங்கினார்கள்.

மகிமைகள்
ஸ்வாமித் தோப்புக்குச் செல்லும் வழி முழுவதும் அவர் சக்தி வெளிப்பட்டது. ஒரு இடத்தில் அவர் மீது கல்லையும் மண்ணையும் தூக்கி எறிந்த முஸ்லிம் மக்கள் வீடுகளில் எங்கிருந்தோ தோன்றிய கருடன்களும் குரங்குகளும் வந்து அந்த வீடுகளில் இருந்த மேல் ஓடுகளை உடைத்து எறிய அந்த முஸ்லிம் மக்கள் வைகுண்டரிடம் வந்து மன்னிப்புக் கேட்க கருடன்களும் குரங்குகளும் மறைந்தன.

வழியில் தம்முடன் வந்தவர்கள் தாகம் அடங்க பதனீர் விற்பவனிடம் பதனீர் கேட்டார். அவனிடம் அத்தனை பதனீர் இல்லை. ஆனால் வைகுண்டர் அதை வாங்கி முதலில் குடித்தப் பின் மற்றவர்களைக் குடிக்குமாறுக் கூறினார். அவர்களும் தாகம் தீர பதநீரை குடிக்கக் குடிக்க பதனீர் குறையவே இல்லை. அனைவரும் வயிறு வீங்கக் குடித்தப் பின்னரும் பதநீர் மீதம் இருந்தது. அனைவரும் வியந்தனர்.

இன்னொரு இடத்தில் வைகுண்டர் தமது கால்களை அலம்பிக் கொள்ள அந்த இடத்து அதன் சொந்தக்காரன் (ஜாதி வேறுபாடினால்) அங்கு வந்து அவரைத் திட்ட, அடுத்த சில வினாடிகளில் அனைவரின் எதிரிலும் அவனுக்கு கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்பட்டு துடி துடித்தான். அவன் வைகுண்டரிடம் தான் நடந்து கொண்ட ஈனச் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மனிப்புக் கேட்க அவரும் அவனை மன்னித்து அவனது வாயிற்று வழியை அங்கேயே குணப்படுத்தினார். இப்படியாக வழி நெடுகிலும் பல மகிமைகளைக் காட்டியபடியும், பலரது நோய்களை குணப்படுத்திக் கொண்டும் சென்றவர் ஸ்வாமித் தோப்பை அடைந்து அங்கு தங்கினார்.

அது பத்தொன்பதாம் நூற்றாண்டு. தம்மை தொடர்ந்து வந்தவர்களை நாமம் இட்டுக்கொள்ளுமாறும், தலைப்பாகை கட்டிக் கொள்ளுமாறும் கூறினார். அவர் மகிமையைக் கண்டு பலரும் அவரிடம் வந்தனர். அவருடைய புகழ் பெருகிக் கொண்டே போக அதனால் ஆத்திரம் அடைந்த ஜாதி வெறியினர் அவரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் திருவாங்கூர் மன்னனிடம் சென்று கூறினார்கள். கிருஸ்துவ மதப்போதகர்கள் இந்தியாவில் தாங்கள் விரும்பிய அளவிற்கு மதப் பிரசாரமும், மத மாற்றமும் செய்ய இயலாமல் போவதின் காரணமே அய்யாவின் வளர்ச்சி என்று பயம் கொண்டு ஆங்கிலேய அரசுக்கு அவரைக் குறித்து தவறான தகவல்களை தொடர்ந்து அனுப்பலாயினர். அப்போது அந்த இடம் திருவாங்கூர் திவானினால் நிர்வாகிக்கப்பட்டு இருந்தது. ஆகவே அவரும் ஆங்கிலேய அரசின் ஆணைப்படி காரணம் இன்றி வைகுண்டரை பிடித்து வர சிறிய படையை அனுப்பினார். அவர்கள் வருவதைக் கண்ட வைகுண்டர் கடலுக்குள் நுழைந்து விஷ்ணுவிடம் நடந்ததைக் கூற அவரோ இன்னும் சில காலம் அவர் பொறுமையுடன் அத்தனை கொடுமைகளையும் சந்தித்தே ஆக வேண்டும் எனவும் அவர் எந்த நிலையில் இருந்தாலும் தாம் அவரை காப்பதாக உறுதி மொழி கூறி அனுப்பினார்.

 ஆலய கருவறை எனும் சன்னதி.  இதில்  அய்யா வைகுண்டருக்கு 
சிலை கிடையாது. அவர் பயன்படுத்திய பொருட்கள் 
மட்டுமே வைக்கப்பட்டு உள்ளன.

கடலில் இருந்து வெளிவந்த வைகுண்டரை திவான் அனுப்பிய ஆட்கள் கை கால்களில் விலங்கிட்டு அங்காங்கே நின்று அவரை அடித்துக் கொண்டே நகரின் அனைத்து சாலைகளிலும் அனைவரும் பார்க்கும்படியான நிலையில், தீய எண்ணத்துடன், ஒரு கொடுமையான கைதியை சிறைப் பிடித்துச் செல்வது போல அவரை இழுத்துச் சென்றனர். அவர்கள் எண்ணமே அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதே. அதைக் கண்ட அவருடைய பக்தர்கள் அழுது புலம்பினார். ஆனால் அதை ஐயா வைகுண்டர் மனதார தாங்கிக் கொண்டார். வேறு சிலர் “ஐயோ இவர் சக்தி வாய்ந்தவர் என நினைத்து ஏமார்ந்து விட்டோமே” என அவரை விட்டு விலகிச் சென்றனர். அப்படி விலகியவர்கள் அவர் மீது கல் எரிந்து மேலும் அவமானப் படுத்தினார்கள். ஆனாலும் நடந்த அனைத்து அவமானங்களையும் பொறுமைக் காட்டி சகித்துக் கொண்டே சென்றார் அய்யா வைகுண்டர்.

திருவாங்கூர் மன்னர் முன் அழைத்துச் சென்று நிறுத்தப்பட்டார். அவர் மீது தேசத் துரோகத்தின் பல குற்றங்களைக் கூறிய திவான் ‘எங்கே உன் சக்தியை எங்களிடம் காட்டு’ என்று ஏளனம் செய்து அவரை சிறையில் அடைத்தார். அசுத்த நீரும், கிருமிகளும், புழுப் புச்சிகளும் நிறைந்து ஓடிய அறையில் அவரை சிறை வைத்தனர். ஒருநாள் எரிந்து கொண்டு இருந்த சுண்ணாம்புக் களவாயில் அவரை தள்ளி விட்டனர். அவர் தங்கி இருந்த அறையை நன்கு மூடி விட்டு மிளகாய் வற்றலை பற்ற வைத்தனர். ஆனால் அந்த செயல்கள் எதுவுமே அவரை பாதிக்கவில்லை. வைகுண்டர் ஒன்றுமே ஆகாதது போலவே பொலிவாக பொறுமையுடன் இருந்தார். அவை எதுவுமே அவர் உடலையோ அல்லது உள்ளத்து உறுதியையோ குறைக்கவில்லை. ஆகவே அவர் மீது இன்னும் ஆத்திரம் அடைந்தவர்கள் அவரை இரண்டு நாட்கள் பசியோடு வைக்கப்பட்டு இருந்த புலிக் கூண்டில் தள்ளி விட்டு அதை மூடினார்கள். அவரைக் கண்ட புலியோ அவர் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டது. அவரை ஒன்றும் செய்யவில்லை. அதை தமது ஈட்டியினால் குத்தி ஆத்திரம் அடையச் செய்ய முயன்ற காவலனின் ஈட்டியை அந்த புலி தட்டிவிட அனைத்தையும் வெறித்தனமான எண்ணத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்த திவானின் அமைச்சனான ஒரு நம்பூத்திரியின் உடலில் அந்த ஈட்டி பாய்ந்து அவர் மரணம் அடைந்தார். அதைக் கண்டு பயந்து போன திவான் அவரை சில நிபந்தனைகளுடன் விடுதலை செய்தார்.

அய்யா வைகுண்டர் வைகுண்டம் சென்றார்
சுமார் 166 ஆண்டுகளுக்கும் முன் அதாவது 1833 ஆம் ஆண்டு கலியுகத்தை அழித்து தர்ம நெறியை நிலை நாட்ட மனித உருவில் தோன்றிய திருமாலின் பிறப்புடன் ஆரம்பம் ஆயிற்று. 1839 ஆம் ஆண்டு அங்கிருந்து மீண்டும் ஸ்வாமித் தோப்பிற்கு கிளம்பிச் சென்று ஒரு இடத்தில் தங்கியபடி (தற்போது ஆலயம் உள்ள இடம்) தமது இயக்கத்தை தீவிரப்படுத்தினார். பல போதனைகளையும், நல்லொழுக்கத்தையும், பக்தி மார்கத்தையும் பரப்பி வந்தவர் 1851 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இரண்டாம் தேதியன்று மறைந்தார். (வைகுண்டத்துக்குத் திரும்பிச் சென்றதாகக் கருதுகிறார்கள்).

அய்யா வைகுண்டர் வழி
முன் காலத்தில் கீழ் ஜாதியினர் சுத்தமாக இருந்தது இல்லை. கள் அருந்துவதும் புகையிலைப் போடுவதும் தொடர் பழக்கமாக அவர்களிடம் இருந்தது. மீன் இல்லாத உணவு தயாரிக்கப்பட மாட்டாது. ஆகவே அவர்களுடைய வாழ்கையின் முறைகளை மாற்ற அய்யா நினைத்தார். முதலில் அவர்கள் சைவ சாப்பாடு அருந்துபவர்களாக மாறினாலேயே சமுதாயாத்தில் அவர்களுக்கு மதிப்பு ஏற்படும் என நினைத்தார்.

ஆகவே துவையல் பந்தி என்ற பெயரில் கடலில் தினமும் மூன்று வேளைகள் குளிக்க வேண்டும், அவர்களுடைய துணிகளை உடனடியாகத் துவைத்து உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும, அந்த நேரத்தில் பச்சரிசி மற்றும் பருப்பை உப்புத் தண்ணீரில் சமைத்து அருந்த வேண்டும் ,ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும் என கடுமையானக் கட்டுப்பாடு வைத்த பயிற்சியைத் துவக்கினார்.

இப்படியாக வாகைப் பதி என்ற இடத்தில் ஆறு மாதம் துவயல் பதி என்ற பயிற்சி தந்தார். அதன் பின் முத்தப்பதிக்கு சென்று அங்கும் அதை தொடரச் செய்தார் . அந்த இடத்தில் அவர்கள் காய்கறிகள் மட்டுமே அருந்த அனுமதிக்கப்பட்டனர். அதன் பின் துவையல்காரர்கள் என அழைக்கப்பட்ட அவர்கள் கிராமம் கிராமமாகச் சென்று அய்யா வழி இயக்கத்தைப் பரப்பினர். அவர்களுக்கு சென்ற இடங்களில் எல்லாம் பல பிரச்சனைகள் தோன்றினாலும் அனைத்தும் பனி விலகுவது போல விலகிக்கொண்டே இருந்தன.

இன்றைக்கு கன்யாகுமரி மாவட்டத்தில் ஸ்வாமித் தோப்பு என்ற இடத்தில் உள்ள அவரது ஆலயம் இந்து மதத்துக்கு உள்ளேயே ஒரு தனி மத இயக்கமாக தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, நாக்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி போன்ற பல இடங்களிலும் பரவலாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இணைந்து உள்ள மதமாக வளர்ந்து பெருமளவு பக்தர்களைக் கொண்டு உள்ளது. நாடெங்கிலும் உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவருடைய பக்தர்கள் குவிந்து கிடக்கிறார்கள். அவருக்கு வழிபாட்டுத் தலங்கள் அமைந்து உள்ளன. இன்றும் கன்யாகுமரி, ,திருச்சங்கோடு, திருவனந்தபுரம் போன்ற இடங்களில் அய்யா வைகுண்டர் ஆண்டு விழாவின்போது அந்த நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்து அரசாங்கமே அவருக்கு பெருமை சேர்க்கின்றார்கள் என்பதில் இருந்து அவர் பெருமையைப் பரிந்து கொள்ளலாம். சூட்சும வடிவில் அவர் மக்களை அருள் புரிந்துக் காத்து வருவதாக நம்புகிறார்கள். இது தனித் தன்மைக் கொண்ட பக்தி நெறி இயக்கம். அய்யாவின் பிறந்த நாள் பெரும் விமர்ச்சையாகக் கொண்டாடப் படுகின்றது. அன்று பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் ஸ்வாமித்தோப்பு ஆலயத்துக்கு வந்து வணங்கிச் செல்கிறார்கள்.

அய்யா வைகுண்டர் ஆலயம்
ஸ்வாமித் தோப்பு அய்யாவின் ஆலயத்துக்குச் செல்பவர்கள் யாராக இருந்தாலும் அங்குள்ள கிணற்று நீரில் குளிதப் பின்னரே ஆலயத்தில் நுழையலாம். என்றும் வற்றாமல் உள்ள அந்தக் கிணறு அய்யா வைகுண்டர் நிறுவியுள்ளதாம். அது புனித நீராம். அதில் குளித்தால் தீராத நோய்கள் நீங்குமாம். அது போல இந்த ஆலயத்துக்குச் செல்லும் ஆண்கள் தலையில் தலைப்பாகையைப் போல ஏதாவது துணியைக் கட்டிக் கொள்ள வேண்டும். மேல் ஆடை அணியக் கூடாது.

அய்யா வைகுண்டரின் கொள்கைகள்
1) உருவ வழிபாடு கூடாது
2) அன்னதானம் தரப்பட வேண்டும்
3) மக்கள் தங்கி இளைப்பாற நிழல் தாங்கல்கள் நிறுவப்பட வேண்டும்
4) மாமிசம் அருந்தக் கூடாது, மிருக பலி தரக் கூடாது
5) நெற்றியில் விளக்குத் திரி போல நாமம் இட வேண்டும்
6) உடலையும் உள்ளத்தையும் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்
7) கூட்டாக வழிபாடு செய்ய வேண்டும்.

அகிலத்திரட்டு அம்மானை- நூல்
தான் முன் பிறவிகளில் எப்படி எல்லாம் பல்வேறு அவதாரங்கள் எடுத்து – இராமனாக, கிருஷ்ணராக, சுப்ரமண்யராக, நரசிம்மராக- வந்து தீயவர்களான இராவணண், துரியோதனன், சூரன் போன்றவர்களை அழித்தேன் என்ற கதையை தன் சீடரான இராமகோபால் என்பவர் மூலம் எழுதிய அகிலத்திரட்டு என்ற நூலில் விவரமாக அவர் எடுத்து உரைத்தார். அந்த நூலில் கூறப்பட்டு உள்ளவை பெருமளவில் புராணங்களில் எழுதப்பட்டு இருந்ததில் இருந்து மாறுபட்டு உள்ளது. ஆனால் அந்த நூலே அய்யா வழியினரால் வேத புத்தகமாகக் கருதப்படுகின்றது.