அஷ்டவாக்கர கீதை

சாந்திப்பிரியா

நாம் அனைவரும் பகவத் கீதை என்பதையே கேள்விப் பட்டு இருப்போம். ஆனால் அதைப் போலவே உள்ளது இன்னொரு கீதையும். அஷ்டவாகர கீதை எனப்படும் அந்த கீதை பலருக்கும் தெரியாது. அஷ்டவாகர கீதை என்பது வேத காலத்தில் எழுதப்பட்டு உள்ள சமிஸ்கிருத நூலாகும். இதை எழுதியவர் யார் என்பது தெரியவில்லை. ஆனால் அதை எழுதியவர் அஷ்டவாகரா என்ற முனிவர் என்று கூறுகிறார்கள். இன்னொரு கூற்றின்படி இந்த நூல் அஷ்டவாகர முனிவர் என்பவர் மிதிலையின் மன்னனான ஜனக மகாராஜருக்கு கூறிய ஞான உரை என்று கூறுகிறார்கள். அஷ்டவாக்கரா யார்?

முன்னொரு காலத்தில் உதலாக்கா என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் சிறந்து விளங்கி பண்டிதர். அவருக்கு இருந்த பல சீடர்களில் கஹோடா என்பவரும் ஒருவர். அந்த சீடரின் குணதிசயத்தையும், கல்வியில் இருந்த ஞானத்தையும் கண்ட உதலாக்கா முனிவர் அவருக்கே தன்னுடைய மகளான சுஜாதா என்பவளை மண முடித்துக் கொடுத்தார். சில காலம் ஓடியது. சுஜாதா கர்ப்பம் அடைந்து நிறை மாத கர்பிணியானாள். கிராமங்களில் கூறுவார்கள், கர்பவதிகள் நல்லவற்றையே காது கொடுத்துக் கேட்க வேண்டும், இறைவனின் நாமத்தை வாய் நிறைய கூறிக் கொண்டே இருக்க வேண்டும், மற்றும் இறைவன் பாடல்களை கேட்க வேண்டும். அப்போதுதான் பிறக்க உள்ள குழந்தையும் நல்ல குணத்துடன் பிறப்பான்.

இதை மனதில் கொண்ட சுஜாதா தன்னுடைய கணவருக்கு தனது தந்தை தினமும் செய்து வந்த உபதேசங்களையும், அவருக்குக் கற்றுக் கொடுத்து வந்த வேத பாடங்களையும் அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டு கேட்பதுண்டு. அதே சமயத்தில் அவள் வயிற்றில் வளர்ந்து வந்தக் குழந்தையோ அவற்றை தானும் கிரகித்துக் கொண்டது. குரு தனக்கு சொல்லிக் கொடுத்தப் பாடங்களை வீட்டில் வந்து கஹோடா மீண்டும் மீண்டும் கூறியவாறு அதை மனப்பாடம் செய்வார். அப்படி செய்யும்போது அவர் உச்சரிப்புக்களில் சில பிழைகள் ஏற்படுவது உண்டு. அதை கவனித்து வந்த சுஜாதாவின் வயிற்றில் வளர்ந்தக் குழந்தை அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் வயிற்றில் இருந்தே அவர் செய்யும் பிழைகளைக் உரத்தக் குரலில் கூறி தவற்றை திருத்தும். முதல் சில நாட்கள் எதோ ஆசிரி குரல் போல இருந்த அந்த குரலைக் கேட்டு வந்த கணவன், மனைவி இருவரும், சில நாட்களில் அதை செய்வது அவள் வயிற்றில் உள்ளக் குழந்தைதான் என்பதைக் கண்டு பிடித்தார்கள். ஆத்திரம் அறிவை மறைக்கும் என்பார்கள். தன் குழந்தையே தன்னை திருத்துவதா என கோபமுற்ற கஹோடா தன்னை மறந்து அதற்கு சாபமிட்டார். ‘நீ பிறந்தாலும் அஷ்ட கோணலாகப் பிறக்க வேண்டும்’. ஆனால் அடுத்த நிமிடமே தனது ஆத்திர புத்தியை நினைத்து கஹோடா மனம் வருந்தினார். ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலைமையில் இருந்தார்.

இதற்கிடையில், அந்த குழந்தை பிறக்கும் முன், தன்னுடைய குடும்பம் செழிப்பாக இருக்க வேண்டும் என நினைத்த கஹோடா தன்னுடைய வாதத் திறமையை சபையில் காட்டி சன்மானம் பெற்று வர வேண்டும் என எண்ணிக் கொண்டு ஜனக மன்னனிடம் சென்றதும் அங்கு நடைபெற்ற வாதப் போட்டியில் அரச பண்டிதரிடம் தோற்றுப் போனார். அந்த அரசவை பண்டிதரின் நிபந்தனைப்படி தோற்பவர்கள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு மரணத்தை அடைவார்கள். ஆகவே வாதப் போட்டியில் தோல்வி அடைந்த கஹோட் முனிவரும் அந்த தண்டனைப் பெற்று மரணம் அடைய வேண்டி இருந்தது.

அவர் மரணம் அடைந்ததும் அவர் சாபமிட்டபடி சுஜாதாவிற்கு குழந்தை எட்டு கோணல்களுடனான உடம்புடன் பிறக்க, அஷ்ட என்றால் எட்டு என்றும் வாக்ரா என்றால் கோணல் என்றும் பொருள் வரும் வகையில் அதற்கு அஷ்டவாக்ரா எனப் பெயரிட்டார்கள் . அதே நேரத்தில் கஹோட்டின் குருவான உதலாக்கா முனிவருக்கும் ஒரு குழந்தைப் பிறந்தது. அதற்கு ஸ்வேதகேது எனப் பெயர் சூட்டினார்கள். குழந்தை அஷ்டவாக்கரா வளரத் துவங்கினாலும் அவனுடைய தாயார் அவனுக்கு தந்தை மரணம் அடைந்த செய்தியை கூறவில்லை. அவனையும் அவனுடைய தந்தையின் குருவான உதலாக்காவிடமே கல்வி பயில அனுப்பினாள். அஷ்டவாக்கராவும், ஸ்வேதகேதுவும் சேர்ந்தே அவரிடம் கல்வி பயின்றார்கள். அவர்கள் இருவரும் இணைபிரியாத நண்பர்களும் ஆயினர். அஷ்டவாக்ரா ஏற்கனவே கருவில் இருந்தபோதே பல வேதங்களை கற்றறிந்து இருந்ததினால் அபார கல்வி ஞானத்தைப் பெற்றார்.

தனது தந்தை மரணம் அடைந்த செய்தியை முதலில் அறிந்திராத அஷ்டவாக்கரா உதலாக்காவே தனது தந்தை என்று நினைத்து இருந்தார். ஆனால் பின்னர் சில காலம் பொறுத்து தனது தந்தைக்கு ஏற்பட்ட நிலையை எப்படியோ தெரிந்து கொண்ட அஷ்டவாக்கரா தனது தந்தையின் மரணத்துக்குக் காரணமான பண்டிதரை பழி வாங்க சமயம் பார்த்துக் காத்திருந்தார். ஒரு முறை அரண்மனையில் மீண்டும் வாதப் போட்டி நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள முடிவு செய்த அஷ்டவாக்கரா தன்னுடைய நல்ல தோழரான ஸ்வேதகேதுவுடன் ஜனகர் அரண்மணைக்குச் சென்று அரச பண்டிதரான பாண்டியை -தனது தந்தையின் மரணத்துக்குக் காரணமானவரை – வாதப் போட்டியில் சந்திக்க அனுமதி கோரினார்.
போட்டியின் நிபந்தனையின்படி வாயில் காவலாளி முதல், அமைச்சர்கள் வரை அனைவரையும் வாதத் திறமையால் தோற்கடித்துக் கொண்டே சென்றனர். போகும் வழி நெடுக அந்த இரண்டு சிறுவர்களும் காட்டிய திறமை மன்னனின் காதில் எட்ட, அவர் அந்த இரு சிறுவர்களையும் அரச சபைக்கு உடனே அழைத்து வருமாறு கூறினார். அவர்கள் அரச சபைக்குள் நுழைந்ததுமே அஷ்டவாக்கராவின் அங்கஹீனத்தைக் கண்டு
அங்கிருந்த அனைவரும் பெரியதாக சிரித்து கேலி செய்ய கோபமடைந்த அஷ்டவாக்கரா, மன்னனைப் பார்த்து “அரசே, நான் இந்நாள் வரை உங்கள் அரச சபையில் படித்த மேதாவிகள்தான் உள்ளனர் என நினைத்திருந்தேன். இங்கு வந்ததும்தான் தெரிகின்றது இந்த அவையில் செருப்பு தைப்பவர்கள்தான் உள்ளனர் என்பது. ஏன் எனில் அவர்களுக்குத்தானே தோலின் மீது நாட்டம் இருக்கும். எந்த ஒருவனுடைய உருவத்தையும் கொண்டு அவனை எடை போடக் கூடாது. அவனுடைய திறமையைதான் சோதித்துப் பார்த்து அவனைப் பற்றிய முடிவு எடுக்க வேண்டும்” எனக் கோபமாகக் கூறியதும், அந்த சிறுவன் கூறியதைக் கேட்ட அனைவரும் வாயடைத்து நின்றனர். சற்றே சங்கடம் அடைந்த மன்னனும் அஷ்டவாக்கராவிடம், அவனை கேலி செய்தவர்களின் சார்ப்பில் தானே மன்னிப்புக் கேட்டு விட்டு, சிறுவன் என்றும் பாராமல் அவனை போட்டியில் கலந்து கொள்ள அனுமதித்தார்.

போட்டி துவங்கியது. அஷ்டவாக்கரா சற்றும் தயக்கம் இன்றி அரச பண்டிதரான பாண்டியுடன் ஆன்மீகத்தில் வாதம் செய்யத் துவங்க, நீண்ட வாதங்களுக்குப் பிறகு அரச பண்டிதர் தோற்றுப் போனார். ஆகவே போட்டியில் தோற்று விட்ட அரசவைப் பண்டிதருக்கு என்ன தண்டனை தரவேண்டும் என மன்னன் கேட்கவும், அஷ்டவாக்கரா கூறினார் “என் தந்தை மரணம் அடைந்தது போலவே பண்டிதரும் நீரில்மூழ்கடிக்கப்பட்டு மரணம் அடைய வேண்டும்”.

அதைக் கேட்ட அரசவைப் பண்டிதரான பாண்டி சற்றும் கலக்கம் அடையவில்லை. ஆனால் அதுவரை தான் ரகசியமாகக் காத்து வந்த ஒரு உண்மையை அனைவர் முன்னிலையிலும் கூறினார். “ ஐயா, நான் வருண பகவானின் மகன். ஆகவே நீரில் மூழ்கடித்தாலும் எனக்கு மரணம் கிட்டாது. மேலும் உன் தந்தையின் மரணத்துக்கோ, அல்லது மற்றும் தோற்றுப் போன பலரின் மரணத்திற்கோ நான் காரணம் அல்ல. உண்மையில் என் தந்தை ஒரு பெரிய யாகம் செய்து கொண்டு உள்ளார். அதில் நன்கு ஞானம் பெற்ற பண்டிதர்கள் தேவையாக இருந்ததினால்தான் என்னிடம் தோற்றவர்களை அங்கு அனுப்பி வந்தேன். ஆகவே அதற்காக அனைவரிடமும் மன்னிப்புக் கேட்கின்றேன். நான் அறியாமல் செய்து வந்த தவறை நிவர்த்திக்கும் வகையில், என்னால் இறந்து போனதாக கருதப்பட்டு மேலுலகில் நடைபெறும் யாகத்தில் பங்கேற்றுக் கொண்டு இருந்த அனைவரையும் திரும்ப அழைக்கின்றேன்” என்று கூறி விட்டு அஷ்டவாக்கராவின் தந்தையை மேலுலகத்தில் இருந்து வரவழிக்க அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் அவருடைய தந்தை சபையில் வந்து நின்றார்.

தன்னுடைய மகனுடைய வாதத் திறமையைப் பற்றிக் கேள்விப்பட்ட அவருடைய தந்தை கஹோட் மிக்க மகிழ்ச்சி அடைந்து, தன் மகனை உடனடியாக அங்கிருந்துச் சென்று சாமங்கா என்ற நதியில் குளித்துவிட்டு வருமாறு கூறினார். அவரும் அந்த நதியில் சென்று குளித்துவிட்டு நீரில் இருந்து எழுந்த பொழுது அங்கஹீனம் மறைந்து போயிற்று. அதைக் கண்டு அனைவரும் மகிழ்ந்து போக ஜனகரும் அஷ்டவாக்கராவையே தன்னுடைய குருவாக ஏற்றுக் கொண்டார். அந்த அஷ்டவாக்கரா தந்த போதனைகளினால் ஒரு முறைக் பெரும் குழப்பத்தில் இருந்த ஜனகர் மனத்தெளிவு பெற்று ஞானம் அடைந்தாராம். அந்த ஞான பாடமே அஷ்டவாக்கர கீதை எனப்படுவதாக கூறுகிறார்கள். அஷ்டவாக்கர கீதை என்பது பகவத் கீதையைப் போன்ற கீதை. ஆனால் இது மன்னன் ஜனகருக்கு எழுந்த சந்தேகங்களுக்கு முனிவர் அஷ்டவாக்கரர் விளக்கம் அளித்தது என்கிறார்கள். அஷ்டவாக்கர கீதையில் ” இந்த உலகமே மாயையானது. எவன் ஒருவன் ஆத்ம ஞானம் பெறுகின்றானோ அவனே கடவுளுடைய முழுமையான அருளைப் பெற்றவன் ஆகிறான். அப்படிப்பட்ட அருள் கிடைக்கும்போது அவன் பேரானந்த நிலையை அடைகின்றான். தனது அறியாமையினால்தான் உலக பந்தத்தில் அகப்பட்டுக் கொண்டு அவதிப்படுகின்றான்” என்பதை விளக்குகின்றார்.