காஷ்மீரத்தில் ஆதி சங்கரர் ஆலயம்
சாந்திப்பிரியா
மலை மீது உள்ள ஆலயம் 
மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியில் இருந்தபோது நான் இரண்டு விஷயங்களைக் குறித்து கேள்விப்பட்டு இருந்தேன். அந்த செய்திகள்  என்ன என்றால் ஆதி சங்கரர் தவம் இருந்த குகை ஓம்காரீஸ்வரத்தில் உள்ளது. அடுத்து ஆதிசங்கரருக்கு ஒரு ஆலயம் காஷ்மீரத்தில் உள்ளது. ஆகவே ஆவலினால் உந்தப்பட்டு  ஒம்காரீஸ்வரருக்குச் சென்று ஆதி சங்கரர் தவம் இருந்த குகையை பார்த்து விட்டுத் திரும்பினோம். ஆனால் காஷ்மீரத்து ஆதி சங்கராச்சாரியார் ஆலயத்திற்குச் செல்லும் பாக்கியம் கிட்டவில்லை.
ஒம்காரீஸ்வரருக்குச் சென்று பார்த்து விட்டு வந்ததும் அது பற்றியக் கட்டுரை ஒன்றை வார்த்தை சித்தர் என அழைக்கப்பட்டவரும், தற்போது மறைந்து விட்டவருமான திரு வலம்புரி ஜான் என்பவர் ஆசிரியராக இருந்த தாய் எனும் ஒரு வார இதழில் எழுதி இருந்தேன். அது அநேகமாக 1984 அல்லது 1985 ஆம் ஆண்டாக இருக்கலாம். ஆனால் காஷ்மீரத்தில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரின் ஆலயம் பற்றி இப்போதுதான் எழுத சந்தர்ப்பம் வந்தது.
காஷ்மீரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 1100 அடி உயரத்தில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரின் ஆலயம் முதலில் 200 AD யில் பேரரசரான அசோகரின் மகனால் கட்டப்பட்டது என்றும் அதன் பின் ஒன்பதாம் நூற்றாண்டில் சீரமைக்கப்பட்டது என்றுக் கூறுகிறார்கள்.  இன்னும் சில செய்திகளின்படி  இந்த ஆலயம் சந்திமான் என்பவரால் கட்டப்பட்டு அதன் பின் கோதபயா என்ற காஷ்மீரத்து மன்னனினால் சீர்படுத்தப்பட்டு உள்ளது என்கிறார்கள்.
788 – 820 AC கால கட்டத்தில் வாழ்ந்திருந்த ஆதி சங்கரர் ஹிமயமலைப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டு இருந்த நேரத்தில் இந்த ஆலயம் தற்போது உள்ள மலைக் குன்று போன்ற இடத்தில் இருந்த சிறு குகையில் தங்கி இருந்தவாறு காஷ்மீரத்தில் சனாதன தர்ம பரிபாலனங்களை பரப்பி  வந்துள்ளார். அந்த கட்டத்தில் அந்தப் பகுதிகளில் புத்த மதம் பெருமளவில் பரவத் துவங்கி இந்து மதத்தைப் பின்னுக்கு தள்ளத் துவங்கியது. ஆகவே இந்து மதம் அழியக் கூடாது என்று எண்ணிய ஆதி சங்கரர், இங்கு வந்து அங்கேயே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அந்த குகையில் தவம் இருந்து ஹிந்து தர்மத்தை மீண்டும் நிலைநாட்டவும், சிவபெருமானின் பெருமைகளைப் பரப்பவும் முயற்சிகளை மேற்கொண்டாராம்.
ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் 
படத்திற்கு நன்றி : CVB   நியூஸ் சர்விஸ் 
 அவர் நிறுவிய அதே சிவலிங்கம்தான் தற்போது ஆலயத்தில் உள்ளது என்று நம்புகிறார்கள். ஆகவே முதலில் இந்த ஆலயம் சிவபெருமானின் ஆலயமாகவே கருதப்பட்டு இருந்தது. ஆனால் ஆதி சங்கரர் அங்கு தங்கி இருந்ததினால் அவரை கௌரவிக்கும் விதத்தில் அந்த ஆலயத்தின் பெயரை சங்கராச்சாரியார் ஆலயம் என மாற்றி விட்டார்கள். அப்படி புனர் பெயரிடப்பட்ட கால கட்டங்களோ, பிற விவரங்களோ யாருக்கும் சரிவரத் தெரியவில்லை. ஆனால் அந்த ஆலயத்திற்கான மின்சார வசதி 1925 ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்டு உள்ளது.
இன்னொரு செய்தியின்படி ஆதிசங்கரர் இந்த குகையில் வந்து தவம் இருந்தப் பின்னரே பூரண ஞானம் அடைந்தார் என்றும் கூறுகிறார்கள். மலை மீது தக்கீ சுலைமான் (Takhte-i-Sulaiman) என்ற இடத்தில் உள்ள இந்த ஆலயத்திற்குச் செல்ல சுமார் நூறு படிகளை ஏறிச் செல்ல வேண்டும். பக்தர்கள் எளிதில் அந்த ஆலயத்திற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தினால் உந்தப்பட்டு அந்தப் படிக்கட்டுக்களை டோக்ரா பகுதியின் அரசராக இருந்த மகாராஜா குலாப் சிங் என்பவரே அமைத்துத் தந்துள்ளார்.
 
ஆலய  தரிசனத்திற்குச்   செல்லும் மக்கள் 
படத்திற்கு நன்றி : CVB  நியூஸ் சர்விஸ் 

சிவபெருமானுக்காக கட்டப்பட்ட காஷ்மீரத்தின் மிகப் பழமையான இந்த ஆலயம் பலமுறை பழுது பார்க்கப்பட்டும் உள்ளது. இரண்டுமுறை அங்கு நிகழ்ந்த பூகம்பத்தினால் ஆலயம் முற்றிலும் அழியவில்லை என்றாலும், சிறிதளவு சேதம் ஏற்பட்டது என்பதினால் சரித்திரப் புகழ் பெற்ற இந்த ஆலயம் பழுது பார்க்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் உள்ளே பூஜையில் மக்கள் 
படத்திற்கு நன்றி :  CVB  நியூஸ் சர்விஸ்

இந்த ஆலயம் மதப் பெருமை மட்டும் பெற்றிருக்கவில்லை. அதில் காணப்படும் கலை அழகு சொட்டும் கட்டிடக் கலையும் அதற்குப் பெருமை சேர்க்கின்றது. ஒரு மிகப் பெரிய எட்டுமுக பீடம் அந்த ஆலயத்தை தாங்கி நிற்கின்றது. ஆலயத்திற்கு ஏறிச் செல்லும் படிக்கட்டுக்களின் இருபுறத்திலும் பல குறிப்புக்கள் பொறிக்கப்பட்டு இருந்தன. ஆலயத்தின் உட்புறம் பெர்ஷிய மொழியில் எழுதப்பட்டு உள்ள குறிப்புக்கள் மாபெரும் மன்னனான ஷாஜகான் காலத்தை  சேர்ந்தவையாம். அந்த ஆலயத்தின் மீது நின்றபடிப் பார்த்தால் காஷ்மீர் மானிலத்து இயற்கை காட்சிகள் அற்புதமாகத் தெரியும். ஆலயம் தற்பொழுது பழுது பார்க்கப்பட்டு நல்ல மேற்கூறையுடன் அமைக்கப்பட்டு உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள இந்த ஆலயம் ஆதி சங்கரருக்குப் பெருமை சேர்க்கும் ஆலயம் என்பதில் ஐயம் இல்லை.