தீய ஆவிகள் , ஏவல்கள்

சாந்திப்பிரியா

பாகம்-6

இந்த பிரபஞ்சத்தில் நல்ல ஆவிகள், தீயவை மற்றும் துர்தேவதைகள் என மூன்று  பிரிவு உள்ளது என்று கூறினேன் அல்லவா. அவற்றின் தடங்களை கீழுள்ள படத்தில் காணலாம்.

மந்திரவாதிகள் பிடித்து வைத்துக் கொள்ளும் தீய  தேவதைகள் மூலம் நடைபெறும் நிகழ்வுகளை  பார்த்தோம்.  அது போல விண்வெளியில் சுற்றி அலையும் துர் தேவதைகள் அல்லது தீய ஆவிகள் என்ன செய்கின்றன? அவைகளே மந்திரவாதிகளை விட இன்னும் ஆபத்தானவை. முன்னரே நான் கூறினேன் அல்லவா, இந்த விண்வெளியில் சுற்றித் திரியும் துர்தேவதைகள் அல்லது தீய ஆவிகள் யாருடைய உடலிலாவது சென்று புகுந்து கொண்டு அவர்கள் மூலமாக தீமைகளை விளைவிக்கும். அவை  மனதில் ஒரே ஒரு நினைவு மட்டுமே இருக்கும். தான் பூமியில் இல்லாமல் பிரபஞ்சத்தின் வெளியில் சுற்றித் திரிவதினால் தானும் ஒரு கடவுளுக்கு சமம்.  ஆகவே தன்னையும்  மனிதர்கள் கடவுளை வணங்குவதைப் போலவே வணங்க வேண்டும்.  அப்படி தனக்கு உரிய மரியாதையைத் தராவிடில் அவர்களை நிம்மதியாக வாழ விடக்கூடாது.  அதனால்தான் அது பூமியில் உள்ள மனிதர்கள் எவருடைய உடலிலாவது புகுந்து கொண்டு  அந்த மனிதர் மூலம் அவரை சுற்றி உள்ள  மற்றவர்களையும்  நிம்மதி  இல்லாமல் செய்து விடுகின்றது. அதில் அதற்கு ஒரு ஆனந்தம் கிடைக்கின்றது. அந்த நிலையை மற்றவர் துன்பத்தில் கொடூர மகிழ்ச்சி அடைபவர் -Sadist – என்று கூறலாம். ஆனால் அதே சமயம் தன்னை வணங்கித் துதிப்போரை அவை அதிகம் வாட்டி வதைப்பது இல்லை.

இப்படி செய்வதினால் அவை என்ன லாபத்தை அடைகின்றன?  துர்தேவதைகள் தாமாகவே அந்தக் காரியங்களை செய்வது இல்லை துர்தேவதைகளை ஆட்டுவிப்பது அந்தந்த துர் தேவதைகளின் மூல தெய்வங்களே. தாம் மனிதர்களினால் வணங்கப்படாதாதினால் இப்படி செய்தால்தான் பயத்தினால் தம்மை மனிதர்கள் வணங்குவார்கள் என்று அவை நினைக்கின்றன. இதற்கு உதாரணமாக பல கிராம தெய்வங்களின் வரலாற்றையும் படித்துப் பாருங்கள். சில இடங்களில் உள்ள மாரியம்மன் வரலாற்றைப் படித்துப் பாருங்கள். நான் இப்போது கூறியதின் அர்த்தம் விளங்கும். மக்களை பயமுறுத்தியே தம்மை வணங்க வைப்பதும் ஒரு சில தெய்வங்களின் நியதி. அதையே இந்த துர்தேவதைகளும் பின்பற்றுகின்றன. சரி துர்தேவதைகள் எப்படி ஒருவர் உடலில் புகுந்து கொள்கின்றன. அவை எப்படி தன் வன்மத்தை வெளிப்படுத்துகின்றன?

அந்த துர்தேவதைகள் மூன்று  விதத்தில் மனித ரூபங்களில் வந்து கொண்டு இருக்கும்.  முதலாவது :-  குழந்தைப் பருவம் முதலே அவர்களது உடலுக்குள் புகுந்து கொண்டு விடும்.  அது அவர்கள் உடலில் புகுந்து கொண்டு உள்ளதை உடனடியாக வெளிக் காட்டாமல் மெல்ல மெல்ல வெளிக்காட்டும்.
இரண்டாவது:- மரணம் அடையத் தருவாயில் உள்ளவர்கள் இறுதி மூச்சை விட்டதும், அடுத்த கணம் அவர்கள் உடலில் புகுந்து கொண்டு மீண்டும் அவர்களுக்கு உயிர் கொடுக்கும். இதற்கான இடைவெளி கண் சிமிட்டும் நேரம்தான்.

மூன்றாவது :-  சில வீடுகளை- தனிமையில், அமைதியாக உள்ள வீடுகளை சுற்றிக் கொண்டே இருக்கும். அங்குள்ளவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்கும்.  தருமணம் பார்த்து அங்குள்ளவர்கள் யாரேனும் தனிமையில் இருக்கும்போது அவர்களை பயமுறுத்தும். அவர்கள்  பயந்துவிட்டால் அவர்களை அடித்துப் போட்டு விட்டு (அதாவது ஒலி அலை மூலம்  அவர்கள் மூளையை ஸ்தம்பிக்க வைத்து விட்டு)   அவர்கள் உடலில் புகுந்து கொண்டு விடும்.  இந்த பிரிவை சேர்ந்த துர்தேவதைகளை மந்திரவாதிகள் ஏவுவார்கள்.

துர்தேவதைகள் பிடித்துள்ளவர்களை சுற்றி இருப்பவர்கள் உடல் நலமின்றிப் போவதும், மன நலம் இன்றிப் போவதும், பலவிதமான பிரச்சனைகளுக்கு ஆளாகுவதும் அந்த துர்தேவதை அவர்களை சூழ்ந்து உள்ளவரை தொடர்ந்து கொண்டு இருக்கும். இப்படியாக செய்து கொண்டே அது அவர்களுடைய மனித சக்திகளை உறிஞ்சிக் கொண்டே இருக்கும். அதை முறியடிக்க அதிக சக்தி வாய்ந்த மனிதர்களின் மூலம் பெறப்படும் தாயத்துக்கள், யந்திரங்கள் அல்லது பூஜைகள் மூலம் எந்த நிலையிலாவது அதில் இருந்து சுற்றி உள்ளவர்கள் மீண்டு விட்டாலும், அவர்களுடைய உறிஞ்சப்பட்ட சக்திகளைப் திரும்பப்  பெற முடிவது இல்லை. ஆனது ஆனதுதான். அதற்கு மேல் கெடுதல் வராமல் தடுத்துக் கொள்ளும் வழிமுறைகளை தொடர்ந்து கொள்ள வேண்டியதுதான்.

 எந்த உருவிலும் துர்தேவதைகள் வீடுகளில் நுழைய 
முயலும். பிராணிகள் உருவிலும் கூட நுழையலாம் 

இன்னுமொரு முக்கியமான விஷயம். ஒருவர் வீட்டிற்குள் எந்த விதத்திலாவது நுழைந்து விடும் துர்தேவதைகள் அந்த குடும்பத்தில் உள்ள  அனைவருக்கும் கெடுதலும் செய்யாது. அங்கும்  யாருடைய ஜாதகம் பலவீனமாக உள்ளதோ, யாருடைய  கிரஹ  நிலைமை சரியாக  இல்லையோ,  யாருடைய மன நிலை பலவீனமாக உள்ளதோ அவர்களை எளிதில் அழிக்கத் துவங்கும். சற்று வலிமையான ஜாதக பலனைக் கொண்டவர்கள்,  நல்ல கிரக நிலையைக் கொண்டவர்கள் போன்றவர்களை அதனால் எளிதில் அழிக்க முடியாது என்பதினால் அவ்வப்போது அவர்களை  ஆட்டி வைத்துக் கொண்டு இருக்கும். தனது எஜமான தேவதைகளை  அவர்கள் தன மூலம் ஆராதிக்கும்போது அவர்களை அது தாக்குவது இல்லை.

ஆகவே ஒருவரின் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்றால் பில்லி-சூனியங்கள் வைத்து  மட்டுமே அதை செய்ய முடியும் என்பது அர்த்தம் அல்ல. துர்தேவதைகளை வீடுகளுக்குள் அனுப்பியும் அவர்களது குடும்பத்தை அழிக்க முடியும். பீலி- சூனியம் மூலம் நேரடியாக மட்டுமே ஒருவரைத் தாக்க முடியும். ஆனால் துர்தேவதைகள் மூலம் செய்யப்படும் தீமைகள்  இரண்டு வகைப்படும். அவை நேரிடையாகத் தாக்குதல், மற்றும் மறைமுகமாகத் தாக்குதல் என்பவை.

துர்தேவதைகளைக் கொண்டு நேரடியாகத் தாக்குவது என்பது தனிப்பட்ட நபர்களை பல்வேறு செயல்கள் மூலம் செயல் இழக்க வைப்பது. சம்மந்தப்பட்ட நபர்களை பல விதங்களிலும் தாக்கி நிர்மூலப்படுத்த முடியும். நேரடியாக இல்லாமல் மறைமுகத் தாக்குதல் என்பது குடும்பத்தின் அமைதியைக் குலைப்பது, ஒற்றுமையைக் குலைப்பது, செல்வத்தை இழக்க வைப்பது, திடீர் திடீர் என வியாதிகளைத் தருவது, குடும்பங்களில் ஆகால மரணங்களை வரவழைத்து அழிப்பது போன்றவை ஆகும். அவைகளும் பில்லி- சூனியத்தின் ஒரு பிரிவே. இவற்றை யாராவது, யாருக்காவது செய்ய நினைக்கும்போது அவற்றை மந்திரவாதிகள் மூலமும், ஏவல்களை ஏவுபவர்கள் மூலமும் செய்வார்கள். ஆனால் நேரடியாக தீய ஆவிகள் நம் வீடுகளில் புகுந்து விடும்போது  கடவுளே தக்க சமயத்தில் நம்மைக் காப்பாற்றுவார். இதற்குக் காரணம் பூர்வஜென்ம வினைப் பயனாக நாம் சில கொடுமைகளை அனுபவிக்க வேண்டும் என்று இருக்கும்போது அதை தவிர்க்க முடிவது இல்லை. அப்போதுதான் இவை அனைத்தும் நடைபெறுகின்றன.

இத்தனை பயங்கரங்களை தடுப்பதற்கு என்ன உபாயம் உள்ளது? அவற்றை தடுக்க முடியுமா என்று பயந்து கொண்டு கேட்பவர்கள் சிறிதும் அஞ்சத் தேவை இல்லை.
மந்திரவாதிகள்  என்ன முறையைக் கையாண்டாலும் அல்லது தீமை செய்ததாலும் தொல்லையை ஒரு அளவிற்கு மட்டுமே தர இயலும். காரணம் தெய்வ பக்தி உள்ளவர்கள் மனதார தாம் வணங்கும் தெய்வங்களை ஆராதித்து தமது பிரச்சனைகளைத் தீர்க்குமாறு வேண்டிக் கொண்டு பூஜிக்கும் வீடுகளில்  (ஏன் ஸ்வாமிக்கு ஒரு பூ வைப்பது, ஸ்வாமிப் படங்களின் முன்னால் விளக்கு ஏற்றுவது, குளித்தப் பின் ஒரு நிமிடம் இறைவன் படத்தின் முன்னால் சென்று அவர்களுடையப் படத்தைப் பார்ப்பது போன்றவைக் கூட ஒருவித பூஜைதான். தினமும் அல்லாமல், வருடத்திற்கு ஒருமுறை பூஜை செய்தாலும் அந்தப் பலன் தொடர்ந்து இருக்கும். அதனால்தான் பண்டிகை நாட்களிலாவது பூஜை செய்ய வேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தினார்கள்) தீய ஆவிகளினால் லேசில் நுழையவே முடியாது. அதற்க்குக் காரணம் வீடுகளில் செய்யப்படும் பூஜைகளினால் மகிழ்ச்சி அடையும் தூய தேவதைகள் மற்றும் அவற்றின் அவதார தெய்வங்கள்  அந்தந்த வீடுகளில் உள்ள வெற்றிடங்களை ( தேவ ஜீவ அணுக்கள் வேறு, ஆவிகளின் ஆத்மாக்கள் வேறு. தேவதைகள் வேறு. அணுக்கள் என்பது தேவதைகளின் படையினர் இது பற்றிய விளக்கத்தை கீழே உள்ள படத்தில் பார்க்கவும்) தமது சக்திகளினால் தூய்மைப் படுத்திக் கொண்டே இருக்கின்றன.  அது எப்படி?

ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்களின் குல தெய்வ வழிபாடு அல்லது இஷ்ட தெய்வ வழிபாடு அல்லது ஏதாவது மகான்கள் எடுத்துக் கொடுக்கும் பூஜைகள் போன்றவை நிச்சயமாக நடந்து கொண்டு இருக்கும். குறைந்தபட்ஷம் ஒரு விளக்கையாவது சுவாமிகளின் முன்னாள் ஏற்றி வைப்பார்கள். அவற்றினால் மகிழ்ச்சி அடையும் தெய்வங்களின் ஆஸ்தான தேவதைகளின் அடிமை தேவதைகள் அந்த வீடுகளின் அகண்டத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும்   அவ்வப்போது, முக்கியமாக அங்குள்ளவர்கள் தெய்வத்தை நினைத்து வழிபட்டுக் கொண்டு இருக்கும்போது வீட்டிற்குள் வந்து விட்டுச் செல்லும். இப்படியாக அவரவர் வீடுகளில் அவர்களை அறியாமலேயே தெய்வங்களின் தேவதைகள் அவ்வபோது வந்தும் போய்க் கொண்டும் இருக்கும்போது அந்த அகண்டத்தில் உள்ள தமது படையினரான நல்ல அணுக்களுடன் தமது தொடர்ப்பை உறுதிபடுத்திக் கொண்டே வலிமையாக்கிக் கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் அந்த வீடுகளில் ஏதாவது துர்தேவதைகளின் நடமாட்டம் இருந்தால் அவை ஆஸ்தான தேவதைகளின் அடிமை தேவதைகளைக் கண்டு பயந்து  அங்கிருந்து ஓடி விடும். ஆகவேதான் சாதாரணமாக தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ளவர்கள் வீடுகளுக்குள் துர்தேவதைகள் நுழைய  முடியாது.
அவ்வப்போது வீட்டிற்குள் வந்து விட்டுச் செல்லும் ஆஸ்தான தேவதைகளின் அடிமை தேவதைகள், நம்மை சுற்றி உள்ள வெற்றிடத்தில் சுற்றித் திரியும் போது அங்கு தீய அணுக்கள் எதுவும் பதுங்கி இருந்தால் உடனே அவற்றை அடையாளம் கண்டு கொண்டு அவற்றை அங்குள்ள தமது படைவீரர்களின் உதவியோடு விரட்டி அடிக்கும். (அவ்வப்போது நடந்து கொண்டு இருக்கும் அந்த செய்கையை நம்மால் உணர முடியாது). அந்த தேவதைகளின் படையினராக வீடுகளுக்குள் சுற்றித் திரியும் நல்ல அணுக்களை மட்டுமே அங்கு தங்க அனுமதிக்கும். சாதாரணமாகவே நமது வீடுகளில் திடீரென அசாத்தியமான அமைதி நிலவுவதைக் உணர முடியும். அதுவும் முக்கியமாக ஒரு பூஜை முடிந்ததும் இந்த அமைதியை நிச்சயமாக உணர முடியும். அதற்குக் காரணம் நம் வீடுகளில் புகுந்திருந்த தீய ஆவிகள் அங்குள்ள நல்ல அணுக்கள் மற்றும் தேவதைகளினால் துரத்தி அடிக்கப்பட்டு இருக்கும் என்பதே காரணம்.

அப்படி என்றால் தெய்வ நம்பிக்கைக் கொண்டவர்கள் வீடுகளில் தீய ஆவிகள் நுழைவதே இல்லை என்பது கிடையாது. ஒவ்வொருவர் வீட்டிலும் பலவிதமான ஆவிகள் அதாவது தீய மற்றும் நல்ல ஆவிகள் வந்து கொண்டும் போய் கொண்டும் இருக்கின்றன. அவை நம் கண்களுக்குத் தெரிவது இல்லை. ஏன் என்றால் அவை எப்போதுமே வான் வெளியில் சுற்றிக் கொண்டு இருப்பதினால் காற்று சுழலுவது போல சுழன்று கொண்டே இருக்கும். ஆனால் தீய ஆவிகளை நிரந்தரமாக தங்க விடாமல் தடுப்பவை தேவதைகளின் படை வீரர்களாகிய நல்ல அணுக்களே. அதையும் மீறி தீய ஆவிகள் எப்படி நுழைந்து வீட்டை வசப்படுத்திக் கொள்ளும்?. இதுதான் நாம் ஒவ்வொருவருக்கும் கடவுள் கொடுத்துள்ள பாதுகாப்பு.

ஆனால் ஏமார்ந்து இருக்கும்போது ஒரு முறை துர்தேவதை அங்கு நுழைந்து விட்டால் அந்த வீடுகளுக்குள் அது தன்னுடைய பட்டாளத்தையே கொண்டு வந்து வைத்து விடும். அதற்குப் பிறகு எப்போதும்போல அந்த வீடுகளுக்குள் நுழைய வரும் நல்ல தேவதைகளுடன் யுத்தம் செய்து அவற்றை விரட்டத் துவங்கும் . அந்த வீடுகளில் உள்ள நல்ல அணுக்களை (நல்ல தேவதைகளின் படைகளை) விரட்டி அனுப்பிவிட்டு தமது படையினரை வந்து வைத்து விடும். அதனால்தான் சில வீடுகளில் எத்தனை பூஜைகளை செய்தாலும் அவற்றுக்குப் பலன் இல்லாமல் போய் விடும். காரணம் அந்த பூஜைகளின் மந்திரங்களோ இல்லை வேண்டுகோட்களையோ எடுத்துச் செல்ல தூய தேவதைகள் அங்கு இருப்பது இல்லை. அந்த துர்தேவதையின் ஆதிக்கத்தை அங்கு குறைத்தால்தான், அதை வெளியேற்றினால்தான் அங்கு மீண்டும் நல்லவை நடக்கும்.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் தவறாமல் எந்த முறையிலாவது குலதெய்வ வழிபாட்டுடன் பைரவர் வழிபாடு, ஆஞ்சனேயர் வழிபாடு, முருகன் வழிபாடு போன்ற ஏதாவது ஒன்றை செய்து கொண்டு இருந்தாலும், ஸ்வாமிக்கு முன்னால் சிறு விளக்கை தினமும் ஒரு முறையாவது  ஏற்றி நமக்கு மன பயத்தை விலக்குமாறும், நம்மை காத்தருளுமாறும்  கடவுளை வேண்டிக் கொண்டபடி இருந்தால் அந்த தெய்வங்களின் தேவதைகள் நம் வீடுகளில் சுற்றி அலைந்தபடி இருந்து கொண்டு  இருக்கும்.  அவற்றை செய்தால் தீய ஆவிகளோ, துர்தேவதைகளோ நம் வீட்டில் நுழைவது கடினம்.

-கட்டுரை முடிவுற்றது –