தீய ஆவிகள் , ஏவல்கள்

சாந்திப்பிரியா

பாகம்-4

பில்லி-சூனியங்கள் மற்றும் துர்தேவதைகள், தீய ஆவிகள் போன்றவை எப்படி உருவாகின்றன என்பதையும் அறிந்து கொள்வது அவசியம். அதுவும் முக்கியமாக துர்தேவதைகளைப் பற்றிக் கூறுவதற்கு முன்  சில தகவல்களைக் குறிப்பிட வேண்டி உள்ளது என்பதினால்தான் அவ்வப்போது இந்தக் கட்டுரையில் இதனுடன் சம்மந்தப்பட்ட பல மறைமுக, மற்றும் நேரடித் தொடப்பு தகவல்களைக் கூற வேண்டி உள்ளது.  அதைத் தொடர்ந்தே மூல கட்டுரையின் தகவல்களை எழுத  வேண்டி உள்ளது.
ஒவ்வொரு ஆத்மாவும் பன்னிரண்டு பாதைகளைக் கடந்து  யமலோகத்துக்கு சென்றப் பின்னர்தான் அவற்றின் பாவ புண்ணியங்கள் கணக்கிடப்பட்டு அவற்றுக்கு ஏற்ப தண்டனைகள் கிடைக்கின்றன. ஆனால் அதில் ஒரு துணை பிரிவு உள்ளது.  ஆத்மாவாக மாறி மேலுலகம் சென்று கொண்டிருப்பதின்  இரண்டு ஜென்ம காலத்தின் முந்தையது காலத்தின் குற்றத்திற்காக ஒரு குறிப்பிட்ட தண்டனையை (பூர்வ ஜென்மத்தில்) பெற்றிருந்த சில ஆத்மாக்கள், பதிமூன்றாவது பாதைக்குள் உள்ள யமலோகத்துக்குள் நுழையவே முடியாது. அங்கு செல்வதற்கு முன்னரே அவை தீய ஆவிகளாகி அல்லல்படுகின்றன.  அதற்குக் காரணம் பூர்வ ஜென்ம சாபம் பெற்ற அவற்றுக்கு   ‘பூமியில் மனிதப் பிறவி எடுத்து மரணம் அடைந்து பந்தப் பாதையில் செல்லும்போது தீய ஆவியாக மாறி இத்தனைக் காலம் அவதிப்பட வேண்டும்’ என்ற பூர்வ ஜென்ம தண்டனைக் கிடைத்து இருக்கும். அதற்கேற்பவே அவை நடு வழியிலேயே இப்படி தீய ஆவிகளாகி விடுகின்றன. அந்த துணை பிரிவு எதற்காக உள்ளது? ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் அப்படிப்பட்ட தண்டனையை ஆத்மாக்கள் பெறுகின்றன. அது என்ன பெரிய குற்றம்?

ஒரு ஜென்மத்தில் அவை குலதெய்வத்தை உதாசீனப்படுத்தியக் குற்றமே அது. குலதெய்வ அவமரியாதை அத்தனைப் பெரிய குற்றமா? அதற்காக ஒரு வம்சத்தின் ஆத்மா துர் தேவதைகளாகி விடுமா? ஆமாம்.

அதைப் பற்றி  ”தர்மராஜா கி கஹானியான்” என்ற புத்தகத்தில் உள்ள ஒரு  கதையை  படிக்க வேண்டும்.  அந்தக் கதையில் நடுவில் வரும் பகுதி இது –  “……. மிகவும் பக்தி வாய்ந்த, எப்போதுமே கடவுள் சிந்தனையுடனே இருந்த ஒரு  மன்னனின் மரணத்துக்குப் பிறகு அவன்  ஆத்மா  யமலோகத்துக்கு (ஆறு ஜென்மங்களுக்குப் பிறகு)  சென்றது.   அதற்கு முன்னர் அந்த ஆத்மா ஆறு ஜென்மங்களாக தீய ஆவியாகவும், துர்தேவதையாகவும்  இருந்து எட்டாவது ஜென்மத்தில் மீண்டும் மன்னனாகவே பிறந்து மரணம் அடைந்து இருந்தது.  இப்படியாக எட்டாவது ஜென்மத்தில் யமலோகத்துக்குச் சென்ற அந்த மன்னனின் ஆத்மா மனம் ஒடிந்துப் போய் கண்ணீர் மல்க யமதர்மராஜரிடம் கேட்டது  ‘தர்மராஜா, நான் ஏழு ஜென்மங்களுக்கு முன்னால் பெரும்  தெய்வ பக்தி மிகுந்தவனாக இருந்தும், கொடைகளை தாராளமாக செய்தும், பூஜை புனஸ்காரங்களை செய்தும் எனது வாழ்க்கையைக் கழித்தேன். ஆனாலும்  அந்த ஜென்மத்தில் மரணம் அடைந்து இங்கு வந்து கொண்டு இருந்தபோது வழியில் நான் தீய ஆவியாகிவிட வேண்டி இருந்தது. ஆறு ஜென்மங்கள் நான் துர்தேவதையாக அலைந்து, பல குடும்பங்கள் பாழடையக் காரணமாக இருந்து விட்டேன். நான் துர்தேவதையாக இருந்தபோது செய்த பாவங்களுக்காக என்னுடைய வம்சாவளியினரே  பலவிதமான தொல்லைகளுக்கும் ஆளாகி இருந்தார்கள் .

அத்தனை தானம் செய்தும், தெய்வ பக்தி கொண்டும் இருந்த நான் ஏன் துர்தேவதை ஆக வேண்டி இருந்தது?  நான் வணங்காத தெய்வமே என் ஆட்சியில் இல்லையே!  அப்படி இருந்தும்  எனக்கு ஏன் இப்படிப்பட்ட தண்டனைக் கிடைத்தது? நியாயமாகப் பார்த்தால்  மரணம் அடைந்தவருடைய ஒரு ஆத்மா  உன் தர்பாரில் வந்த பின் அல்லவா தண்டனை பெற  வேண்டும். ஆனால் இங்கு வருவதற்கு முன்னரே பாதி வழியில் எப்படி தண்டனை கொடுத்தாய்? நீ செய்தது முறையா?’

அதைக் கேட்ட யமராஜர் கூறினார்  ”மன்னனே, ஏழு ஜென்மங்களுக்கு முன்னாலும்  நீ ஒரு மன்னனாகவே இருந்தாய். அப்போது நீ அளவற்ற புண்ணியங்கள் மற்றும்  தானங்களும் செய்தாய்.  நீ வேண்டாத தெய்வங்கள் இல்லை. அதுவும் உண்மை. ஆனால் நீ அதே ஜென்மத்தில் நீ செய்த மிகப் பெரிய குற்றம் (இந்த ஜென்மத்துக்கு ஆறு ஜென்மத்தின் முன்னால்)  நீ உன் குல தெய்வத்தைத் தவிர பிற தெய்வங்களை வழிபாட்டு பூஜித்ததே. குல தெய்வத்தை நீ ஒரு இரண்டாம் பட்ச தேவதையாகவே கருதி அதற்கு உரிய மரியாதைக் கொடுக்கவில்லை. நீ செய்த  யாகங்கள், ஹோமங்கள் மற்றும் பூஜைகள்  என அனைத்திலும் நீ இந்த தெய்வம், அந்த தெய்வம் என எந்தெந்த தெய்வங்களை மற்றவர்கள் போற்றிப் புகழ்ந்தார்களோ அவற்றுக்கே பெரும் அளவில் மரியாதைகளைத் தந்தாய். அதற்குக் காரணம் நீ இன்னும் பெரும் செல்வம் மற்றும் பெரும் புகழை அடைய நினைத்தாய்.

ஒன்றை மறந்து விட்டாய் மன்னா ….என்ன யாகம், ஹோமம், பூஜை என இருந்தாலும், முதலில் நியதிப்படி வினாயகரை வழிபட்டப் பின், குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு அதன் அருளைப் பெற்றுக் கொண்டுதான் மற்ற பூஜைகளைத் தொடங்க வேண்டும். நீ யாரை வேண்டுமானாலும் பூஜை செய்து வணங்குவதை உன் குல தெய்வம் தடுப்பது இல்லை. ஆனால், உன் குலத்தைக் காக்க என்று படைக்கப்பட்டு உள்ள குலதெய்வத்தை உதாசீனப்படுத்துவதை அது எப்போதும் ஏற்பதில்லை.
நீயோ வேறு பல தெய்வங்களை வணங்கி இடையே இடையே குல தெய்வத்தை ஒரு சம்பிரதாயத்துக்காக வணங்கினாய். குலதெய்வம் என்பது உனக்கு தாய் மற்றும் தந்தையைப்  போல. ஆகவே ஏழு ஜென்மங்களுக்கு முன்னால் குலதெய்வத்தை நீ இப்படி புறக்கணித்ததினால்  அந்த குல தெய்வம் உன் வம்சத்தில் யாரையுமே தன்னை இனி வணங்க வேண்டாம் என உன் வம்சத்தை விட்டு  விலகிக்  கொண்டு விட்டது.  ஆகவேதான் ஏழாவது ஜென்மத்திலும் குலதெய்வம் இல்லாத வம்சத்தை நீ சென்றடைந்து இங்கு வந்துள்ளாய்.

நானும் உன் குலதெய்வத்தைப் போல சில நியதிகளைக்  கொண்டு படைக்கப்பட்டவரே. நான் வரும்போதே எனக்கு சில சட்ட திட்டங்கள் தரப்பட்டு விட்டன. அந்த  நீதி மற்றும் தர்ம சாஸ்திரப்படி குல தெய்வத்தை அவமதித்தவர்கள்  மரணம் அடைந்தப் பின் என்னிடம் வந்து தண்டனைப் பெற வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் இங்கு வரும் வழியிலேயே ஆறு ஜென்மத்திற்கு  தீய ஆவிகளாகி விடுவார்கள் என்பது விதியாக உள்ளது. அதற்குக் காரணம் குல தெய்வங்கள் என்பவை ஒரு சம்பிரதாய தெய்வங்கள் அல்ல. அவை பரப்பிரும்மனால் படைக்கப்பட்ட மூன்று தெய்வங்களின் அவதாரங்களினால் சில காரியங்களுக்காக படைக்கப்பட்டவை. அவற்றின் கீழ் சில ஆத்மாக்கள் வம்சாவளியாக வாழ்ந்து கொண்டு  இருக்கும். அந்த வம்சங்களை காத்து அவர்களுடைய கணக்கு வழக்குகளை அவை பரப்பிரும்மனிடம் தம்மைப் படைத்தவர்கள் மூலம் அனுப்புகின்றன குல தெய்வங்கள் . அந்தக் கணக்குகளே என்னிடமும் வருகின்றன. அவற்றை நான் தவிர்க்கவோ மாற்றவோ முடியாது.
குலதெய்வம் யார் என்றே தெரியாமல் உள்ளவர்கள் தன்னை வணங்கவில்லை என்பதினால் குல தெய்வம் கோபம் அடைவது இல்லை. அடுத்த 13 வம்சங்களில் அது தன்னை தெரிந்து கொள்ளும் என்று அதற்குத் தெரியும். ஆனால் குல தெய்வம் யார் என்று தெரிந்தும் அந்த தெய்வத்தை இரண்டாம் நிலைக் கடவுளாக வணங்கி  உதாசீனப்படுத்துவதை  ஒரு போதும் குல தெய்வங்கள் மன்னிப்பது இல்லை. அதனால்தான் அந்த செயலை செய்பவர்கள் அடுத்த ஆறு ஜென்மங்கள்  தீய ஆவிகளாக வாழ்ந்து   கொண்டு ஆறு ஜென்மங்களைக் கழிக்க வேண்டும் என்பது நியதி  உள்ளது. இது நான் படைக்கப்பட்டபோதே  எழுதப்பட்டு உள்ள விதி.

உனக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை குலதெய்வத்தை நன்றாக அடையாளம் கண்டு கொண்டும் அவற்றை உதாசீனப்படுத்தியது என்பதற்காக கிடைத்த தண்டனை. அடுத்த ஆறு ஜென்மங்களையும்  நீ இப்படித்தான் கழிக்க வேண்டும்.  வேறு வழி இல்லை. உன் குல தெய்வம் உன்னை விட்டு சென்றுவிட்டது.  அதனால் என்ன வேறு தெய்வங்களை வணங்கினால்  அது நம்மைக் காப்பற்றுமே என்று நினைக்கலாம். அது நடக்காது. அது கானல் நீரைப் போன்றது. குல தெய்வத்தை வணங்காதவர்கள்  பிற தெய்வங்களை வணங்கி அவற்றின் அருளைப் பெற்றாலும் அவை வழிப்போக்கனைப் போன்றதே. மேலுலகம் வந்தாலும்  அதை நான்  ஏற்பது இல்லை.  தீய ஆவியாக இருந்த உன்  ஆறு ஜென்ம பாவக் கணக்கைப் பார்க்கும்போது,  அதற்கான தண்டனையாக மீதி உள்ள  ஆறு  ஜென்மங்கள் பிறப்பு எடுத்து இங்கு வந்து  மீண்டும் துஷ்ட தேவதையாக மாறி  அதில் சில காலம் இருந்து விட்டு மீண்டும் பிறப்பு எடுத்து  தீய ஆவியாகவே இருக்க  வேண்டும் என்றே உள்ளது .  இப்படியாகவேதான் மீதி உள்ள ஆறு ஜென்மங்களையும் நீ கழிக்க வேண்டும்.

அதனால்தான் முதல் ஜென்மத்தில் நீ குலதெய்வத்தை அவமதித்தக் குற்றத்துக்காக என்னிடம் வந்து தண்டனைப் பெரும் முன்னரே விதிப்படியே தீய ஆவியாக  மாறி விட்டாய். ‘அதற்கு மாற்று வழி இல்லையா’ என்று மனமுடைந்து கேட்ட மன்னனின் ஆத்மாவிடம்  தர்மராஜா கூறினார் ‘ அதன் வலிமையைக்  குறைக்க ஒரே வழி,  மீண்டும் பிறப்பு எடுத்ததும் உன்னுடைய குல தெய்வம் யார் என்பதை தெரிந்து கொண்டு முதல் பூஜையை அதற்க்கு செய்து கொண்டு இருந்தவாறு அதை தொடர்ந்து வணங்கிக் கொண்டே இரு. அதை விட்டு விடாதே. அதனால் அது தன் மனதில்  தன்னை அவமதித்ததை எண்ணிக் கொண்டே இருக்காமல் கருணைக் கொண்டு அமைதியாகி விடும். அது உனக்கு ஆசிகளைக் கூறாவிடிலும், உன் வம்சாவளிகளுக்கு பாதிப்பையாவது ஏற்படுத்தாது. ” என்றார்.

குலதெய்வ உதாசீனத்துக்காக இத்தனைப் பெரிய தண்டனையா? குலதெய்வம் என்பது அத்தனை முக்கியத்துவம் கொண்டதா?  அதற்காகவே தனி நியதி உள்ளதா  என்பதையும் கேட்பவர்கள்  அவற்றை உதாசீனப்படுத்துவது எத்தனைப் பெரிய குற்றமாக கருதப்படுகின்றது என்பதையும் புரிந்து கொள்ள கீழே உள்ளதைப் படியுங்கள்.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளவை ஐந்து நிலைக் கடவுட்கள். மூலாதாரமான பரப்பிரும்மனையும் சேர்த்து ஆறு நிலைக் கடவுட்கள் உள்ளனர். குலதெய்வம் என்பது இந்த ஐந்து நிலைகளில் ஒரு நிலையில் உள்ளவை என்பதின் காரணம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வத்தை குல தெய்வமாகக் கொண்டு உள்ளார்கள். (எப்படிப் பார்த்தாலும் குல தெய்வங்கள் மூன்று பிரிவுகளில் மட்டுமே உள்ளன. அவை பிரும்மா-விஷ்ணு மற்றும் சிவன் என்பவர்கள்)  அதாவது இந்த உலகை தன் சக்தி மூலம் படைத்த பரப்பிரும்மம் என்ற சக்தியில் இருந்து முதலில் வெளி வந்தவர்கள் மூன்று கடவுட்களான பிரும்மா , விஷ்ணு மற்றும் சிவபெருமான் என்பவர்களே. மற்ற அனைத்துக் கடவுட்களுமே அவர்களுடைய சக்தியினால் வெளிவந்த அவதாரங்கள்தான். உண்மை என்னவென்றால் அவரவர் மனதுக்கு ஏற்ப அவரவருக்கு கிடைத்தக் காட்சியைக் கொண்டு ஒரு உருவம் பெற்றவர்கள். இப்படியாக ஒரு உருவம் பெற்றவர்களே குல தெய்வங்களும் . உண்மையில் அவர்கள் பல நிலைகளில் உருவான பரப்பிரும்மனின் சக்திகளே. அவருக்கு  தூதுவர்களாக  உள்ளவர்கள். குலதேவங்களுக்கு  என தனிப்பட்ட சக்திகள் எதுவும் இல்லை. அவை வைத்துள்ள அனைத்து சக்திகளுமே பரப்பிரும்மனின் சக்திகளுக்கு உட்பட்டவையே. அவற்றையும் கொடுத்தது அவரே.

படைப்புக்கள் அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்டப் பிரிவு உண்டு. அவை அந்தப் பிரிவில்தான் பிறவி எடுத்தும், மரணம் அடைந்தும் பதிமூன்று ஜென்ம காலத்தைக் கழிக்க வேண்டும்.  அப்போது அந்த பிரிவிற்கான தலைவரையே அவர்கள் வழிபாட்டு வணங்க வேண்டும்.  அந்தப் பிரிவின் தலைவரே குல தெய்வம் என்பது. ஆகவேதான் அந்தப் பிரிவினர் அந்தப் பிரிவின் அதிபதியை ( குலதெய்வம்) வணங்குவது அவசியம்.

முதலில் கூறியிருந்தேனே ஆலயங்களில் அந்தந்த தெய்வங்களின் தேவதைகள் பக்தர்களின் வேண்டுகோளை அந்தந்த தெய்வத்துக்கு எடுத்துச் சென்று கொடுக்கின்றன என்று அதே தத்துவம்தான் இங்கும். குலதெய்வம் என்பது பரப்பிரும்மனின் படைப்பின் குறிப்பிட்ட பகுதியின் தூதுவரே. அவர்களுக்கு சில குறிப்பிட்ட காரியங்கள் தரப்பட்டு உள்ளன. அவற்றை செய்தப் பின் அவர்கள் தாம் செய்ததையும், அவற்றுக்கான காரணங்களையும், முறையான வழிப்பாதை மூலம் (அதாவது Through Proper Channel என்பார்களே அதைப் போல ) அவரவர்களைப் படைத்தவர்கள் மூலம் பரப்பிரும்மனிடம் அனுப்பும். அங்குதான் ஒரு கம்பியூட்டர் போல அனைவரது கணக்குகளும் வைக்கப்பட்டு அடுத்தப் பிறவி நிர்ணயிக்கப்படுகின்றது. ஆகவே குலதெய்வ வழிபாடு என்பதும் இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரபிரும்ம வழிபாடே என்பதினால்தான் குலதெய்வத்தை அவமதிப்பது என்பது பரப்பிரும்மனை அவமதிப்பது என்பதினால் அந்தக் குற்றம் மட்டும் கடுமையானக் குற்றமாக கருதப்பட்டு ஆறு ஜென்மங்களுக்கு இப்படியான தண்டனைக் கிடைக்கின்றது. மனிதர்கள் பெற்றுள்ள ஆறு அறிவும் இந்த ஆறு நிலைக் கடவுள் தத்துவத்தினாலேயே அமைந்து உள்ளது.

இப்படியாக குல தெய்வ நிந்தனையின் விளைவாக சாபத்தைப் பெற்ற மனிதப் பிறவிகளின் மரணம் அடைந்த உடலில் இருந்து வெளியேறும் ஆத்மாக்கள் மேலுலகம் சென்று மீண்டும் பிறப்பு எடுக்க முடியாமல் வழியிலேயே பாதை மாறி விழுந்து ஆறு ஜென்மங்களுக்கு தொடர்ந்து தீய ஆவிகளாகிக் கொண்டு அவதிப்படுவது தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆகவே தன்னை அவமதித்து ஆத்மாக்களாக மாறியவை எந்தப் பிறவியை எடுத்து மரணம் அடைந்து இருந்தாலும் அந்த ஆத்மாக்கள் தீய ஆவிகளாகி அல்லல்பட்டு வம்ச விருத்தி அடையாமல் சுற்றும் என்ற சாபத்தைப் பெறுகின்றன. குல தெய்வத்தை அவமதிப்பது அத்தனை கடுமையானது.

அது மட்டும் அல்ல ஒரு வம்சத்தின் சில ஆத்மாக்கள் இப்படிப்பட்ட பூர்வ ஜென்ம வினை சாபத்தினால் தீய ஆவியாகி விடுவதினால் அந்த ஆத்மாக்களின் வாரிசு வம்சாவளியினால் அதற்கு கொடுக்கப்படும் திதி அவற்றை சென்று அடைவது இல்லை. அதனால் பரிதவிக்கும் அந்த ஆத்மா தீய மனதைப் பெற்று விடுவதினால் தனது வம்சாவளியினருக்கு பல விதங்களில் தொல்லைகளை தரத் துவங்கும். மேலும் அப்படி தீய ஆத்மாக்களாக மாறும் குடும்பங்கள்தான் ஏவல்களுக்கு எளிதாகி விடுகின்றன. அவர்களுடைய குடும்பத்தினர் மூலம் தீய ஆவிகள் எளிதில் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இப்படியாக பூர்வ ஜென்ம வினையினால் இரண்டாவது பாதையில் தள்ளப்படும் நல்ல ஆத்மாக்கள் தீய ஆவிகளினால் சிறைப் பிடிக்கப்பட்டு வளையத்தின் வெளியில் இழுத்து செல்லப்பட்டு எளிதில் வசப்படுத்த முடியும் நிலைக்குச் சென்று விடுகின்றன .

மந்திரவாதிகள் தன் கட்டுப்பாட்டில் உள்ள துர்தேவதைகள் அல்லது தீய ஆவிகள் மூலம் அதிக அளவில் இந்த மாதிரியான சாபத்தைப் பெற்ற ஆவிகளை தம் வசம் பிடித்து வைத்துக் கொண்டு அவற்றை தாம் கூறியபடி செய்யுமாறு ஏவி விடுவார்கள். அவற்றைக் கொண்டே நல்லவற்றையும், கெடுதலையும் செய்கிறார்கள். தீய ஆவிகள் என்றாலும், அதை கட்டுப்படுத்தி வைத்துள்ளவர் கூறியபடித்தான் அவை காரியம் ஆற்ற முடியும். அவர்களை மீறி அதனால் எதுவுமே செய்ய முடியாது. கொடுத்தக் கட்டளைகளை நிறைவேற்றாமலும் இருக்க முடியாது. ஆனால் அதனால் சில தீமைகளும் அந்தந்த மந்திரவாதிகளுக்கு ஏற்படுகின்றன. அந்த தீய ஆவிகளே தமது சக்திக்காக மந்திரவாதிகளின் சக்திகளை உறுஞ்சத் துவங்கி விடும். மந்திரவாதிகளுடைய ஆத்ம சக்தி அதனால்தான் குறைந்து கொண்டே போவதினால் அவர்கள் அதிக வருடங்கள் உயிர் வாழ்வதும் இல்லை. பல நேரங்களில் உடல் நலமின்றிப் போகிறார்கள். இதே தத்துவம்தான் துர்தேவதைகளின் தத்துவமும். அவை புகுந்து விட்ட இடத்தில் உள்ளவர்களின் சக்திகளை உறுஞ்சிக் கொண்டுதான் அவை தொடர்ந்து இயங்க முடிகின்றது.
இனி பில்லி சூனியங்களை யாருக்கு, எப்படி வைக்கின்றார்கள். அதன் விளைவுகள் என்ன என்பதையும், அதைப் போல துர்தேவதையை ஏவுவது யார்? அதன் விளைவுகள் என்ன, இந்த செயல்களுக்கான காரணங்கள் என்ன என்பதையும் விளக்குகிறேன்.

…………..பாகம் – 5 தொடரும்.