தீய ஆவிகள் , ஏவல்கள்

சாந்திப்பிரியா

பாகம்-2

மந்திரங்களின்  இப்படிப்பட்ட  ஊடுருவும்  சக்தியையே அதாவது மந்திர ஒலிகளுக்கு கட்டுப்பட்டு அதனால் மகிழ்வுற்று  அருள் புரியும் தெய்வங்களைப் போலவே, பல்வேறு தேவதைகளைப் தம்மிடம் பிடித்து வைத்துக் கொண்டே மந்திர சக்தியைப் ஒருவர் பெறுவார். அப்படி மந்திர சக்திகளைப் பெறுபவர் எதற்காக அவற்றை பெற நினைக்கின்றார்?

 • சிலர் தாம் சித்தி அடைய வேண்டும் என்பதற்காக தெய்வங்களை ஆராதிக்கின்றார்கள்
 • சிலர் தனக்கு தனிப்பட்ட  முறையில் ஆன்மீக  சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக சக்தி தேவதைகளை   ஆராதிக்கின்றார்கள்
 • சிலர் சில ஆன்மீகவாதிகள் மனித குல மேம்பாட்டிற்கான வழி முறைகளுக்குப் பயன்படுத்த அந்த தேவதைகளை ஆராதிக்கின்றார்கள்
 • சிலர் தீய வழிகளில்  பயன்படுத்த (வியாபார நோக்கம்) தேவதைகளை வசியம் செய்கிறார்கள்

ஆமாம் ஒருவருக்கு சக்தியைத் தருவது தெய்வமா இல்லை அவரது ஆவாஹன – அடிமை தேவதைகள்- அணுக்கள் போன்ற தேவதையா? எந்த ஒரு தெய்வமும் எவருக்குமே நேரடியாக தானே வந்து அவர்களுக்குள் அமர்ந்து கொண்டு சக்தியை தருவது இல்லை. அப்படி நடக்கும் என்றால் அவரவர் நேரடியாக தெய்வங்களின் சக்தியைப் பெற்று விடுவார்கள். அப்படி என்றால் ஒருவர் சக்தியை எப்படிப் பெறுகிறார்கள்?  அதற்கு  சில விதி முறைகள் உள்ளன. முதலில் இதைப் படியுங்கள்.

இந்த பிரபஞ்சத்தில் விண்வெளியில் அநேக ஆவிகள் சுற்றித் திரிகின்றன. அவற்றில் நல்ல ஆவிகள் மற்றும் தீய ஆவிகள் என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. அவை அனைத்துமே மரணம் அடைந்தவர்களின் ஆவிகள். ஒருவர் மரணம் அடைந்து விட்டப் பின் அவர்கள் உடலில் இருந்து வெளியேறும் ஜீவன்கள் உடனேயே இன்னொரு பிறவி எடுக்க முடியாது. அதற்கு சாதாரணமாக ஒரு வருட காலம் ஆகும். அதாவது அதற்கு முதலாம் ஆண்டில் திதி கொடுத்தப் பின்னர்தான் அது மறு பிறப்பு எடுக்கும் என்று கூறுகிறார்கள். அதுவரை அவை ஆவிகள் எனும் ஆத்மாக்களாக சுற்றித் திரியும். இப்படி சுற்றித் திரியும் ஆத்மாக்களையும் கட்டுப்படுத்தி வைக்க லட்சக்கணக்கான காவல் தேவதைகள் படைக்கப்பட்டு உள்ளன. அவற்றுக்கு அடிமை தேவதைகள் மற்றும் படை அணுக்கள் உண்டு. ஒவ்வொரு தேவதையும் ஒரு குறிப்பிட்ட அளவிலான  ( இது பத்து இருபது போன்ற கணக்கில் அல்ல, பல லட்சக் கணக்கில் வரும்) ஆத்மாக்களை தன் வசத்தில் வைத்து  இருக்கும். அந்த தேவதைகள் யார் தெரியுமா? பல்வேறு தெய்வங்களின் வசம் உள்ள அதே தேவதைகள்தான்!!

உதாரணமாக  சிவபெருமானை ஆராதித்து மரணம் அடைந்தவர்களின் ஆத்மாக்கள் அனைத்தும் சிவபெருமானை சேர்ந்த குழு தேவதைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்.  இது ஒரு உதாரணத்துக்காக கூறப்பட்டது. அது போல பிற தெய்வங்கள், தேவதைகளை ஆராதித்தவர்களின் ஆத்மாக்கள் அந்தந்த தெய்வங்களின் தேவதைகளின் கட்டுப்பாட்டில் இருந்தவாறே மேலுலகம் நோக்கிப் பயணிக்கும்.

மரணம் அடைந்தவர்களின் ஆத்மா குறித்து  இரண்டு விதமான  கருத்துக்கள் உள்ளன. ஒரு சிலர் மரணம் அடைந்தவர்களின் ஆவிகளாக உள்ள ஆத்மாக்கள் அதற்கான பன்னிரண்டு நாட்கள் காரியம் முடிந்ததும், பதிமூன்றாம் நாள்-சுபஸ்வீகாரம் என்று கூறுகிறார்களே அன்றைக்கு மேல் உலகில் சென்று மறு பிறப்பு எடுத்து விடும் என்பார்கள். ஆனால் அது சரியான கூற்று அல்ல என்று சிலர் கூறுகிறார்கள். அவை மேலுலகம் செல்லும் என்பது வரை மட்டுமே சரியான கருத்து. அதற்கு முன்னர் அவை பன்னிரண்டு பந்த நிலைகளைக் கடக்க வேண்டும். அதற்குப் பின்னரே அது மேல் உலகிற்குச் சென்றப் பின் அதன் கணக்கு வழக்குகள் பார்க்கப்பட்டு  அதற்கு உரிய அடுத்த ஜென்மம் முடிவு செய்யப்படும். அதற்கு ஒரு வருட காலம் ஆகும். அந்த காலத்தில்தான்  அதாவது ஒரு வருடகாலத்துக்கு அவை பல நிலைகளைக் கடந்து செல்ல வேண்டிய பயணத்தில் இருக்கும்.  ஒரு வருட காலமா?  பல நிலைகள் என்றால் என்ன?  அது ஏன் தேவை ?

மேலுலகத்துக்குச் செல்லும் ஆத்மாக்கள் பதினோரு நிலைகளை கடந்து பன்னிரண்டாவது நிலையை கடந்தப் பின்னரே அவற்றின் அடுத்த ஜீவனைப் பற்றிய முடிவு எடுக்கப்படுகின்றது.  அப்போது (ஒரு வருடத்துக்குப் பின்) அந்த ஆவிகளின் சொந்தக்காரர்கள் அதற்கு வருடாந்திர திதி கொடுத்தப் பின்னரே அது மனித பந்தங்களின் நினைவுகளில் இருந்து முற்றிலுமாக விடுபடுகின்றது. அது என்ன பன்னிரண்டு பந்தங்கள் எனும் படிகள் ?

 1. முதலாவது பந்தம் அந்த ஜீவன் மரணம் அடைந்த வீடு.
 2. இரண்டாவது பந்தம், அதை மனிதப் பிறவி எடுக்கக் காரணமானவளை {தாயார்  (சக்தி என்பவள் பெண்ணினம் என்பதினால் முதலில் பெண்ணினத்தையே ஏற்கின்றார்கள்)} உருவாக்கியவரின் (தாயாரின்  தந்தை- தாத்தா) பந்தம்
 3. மூன்றாவது பந்தம், அதை மனிதப் பிறவி எடுக்கக் காரணமானவளை  (தாயார்) உருவாக்கியவரின்  (தாயாரின்  தாயார்- பாட்டி) பந்தம்
 4. நான்காம் பந்தம், அதை மனிதப் பிறவி எடுக்கக் காரணமானவரை (தந்தை) உருவாக்கியவரின் (தந்தையின்  தந்தை- தாத்தா) பந்தம்
 5. ஐந்தாம் பந்தம் அதை மனிதப் பிறவி எடுக்கக் காரணமானவளை (தந்தை) உருவாக்கியவளின் (தந்தையின் தாயார்- பாட்டி) பந்தம்
 6. ஆறாம் பந்தம், அந்த ஜீவனை பெற்றேடுத்தவளின்  பந்தம் (தாயார் )
 7. ஏழாவது பந்தம் அந்த ஜீவனை பெற்றேடுத்தவரின் பந்தம் (தந்தை ).
 8. எட்டாவாது பந்தம் அந்த ஜீவனின் சகோதரிகள். சொந்த சகோதரி இல்லை என்றாலும் அவருடைய உடன் பிறவா சகோதரிகளும் -சித்தப்பா, பெரியப்பா மகள்கள், மாமனின் மகள்கள் போன்றவர்கள்- இந்தக் கணக்கில் வருவார்கள்.
 9. ஒன்பதாவது பந்தம், அந்த ஜீவனின் சகோதரர்கள். சொந்த சகோதரர்கள் இல்லை என்றாலும், அவருடைய உடன் பிறவா சகோதரர்களும் -சித்தப்பா, பெரியப்பா மகன்கள் , மாமனின் மகன்கள் போன்றவர்கள்- இந்தக் கணக்கில் வருவார்கள்.
 10. பத்தாவது பந்தம், அந்த ஜீவனின் மனைவி அல்லது கணவர். ஒரு வேளை அந்த ஜீவன் திருமணம் ஆகாதவர்கள் என்றால் அந்த ஜீவனின் மனைவி அல்லது கணவராக பூர்வ ஜென்மத்தில் இருந்த உயிரற்ற ஆத்மாவை கணக்கில் கொள்வார்கள்.
 11. பதினொன்றாவது பந்தம், அந்த ஜீவனின் மகள்கள். அவளுடையக் குழந்தைகள் . அந்த ஜீவனுக்கு மகள் இல்லை என்றாலும் அவருடைய நேரடியான மற்றும் ஒன்று விட்ட சகோதரர்களின் மகள்கள்- இந்தக் கணக்கில் வருவார்கள்.
 12. பன்னிரண்டாம் பந்தம், அந்த ஜீவனின் மகன்கள் மற்றும் அவரது குழந்தைகள். அந்த ஜீவனுக்கு மகன்கள் இல்லை என்றாலும் அவருடைய நேரடியான மற்றும் ஒன்று விட்ட சகோதரர்களின் மகன்கள் – இந்தக் கணக்கில் வருவார்கள்.

இப்படியாக அந்த ஜீவன் பன்னிரண்டு பந்தங்களைக் கடந்து விட்டு பதிமூன்றாம் நிலையை எட்டும்போது அவருக்கு வருடாந்திர திதி கொடுக்கப்படும்போது அவருடைய ஜீவன் முக்தியை அடையும். ஆகவே எந்த ஒரு ஜீவனும் ஒரு வருடத்திற்கு வேறு ஜென்மம் எடுப்பது இல்லை. அந்த ஜீவன்கள் அந்த பன்னிரண்டு பந்த வளைவுகளையும் கடந்து மேலுலகை அடைய வேண்டும். ஒவ்வொரு பந்த எல்லைக்குள் நுழையும் போதும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வாயில் வழியாகத்தான் அது அடுத்த பந்தத்திற்குள் நுழைய இயலும். ஏன் எனில் அந்த குறிப்பிட்ட இடத்தில்தான் அதை சார்ந்த உறவினர்களுக்கு பாத்யை இருக்கும். ஆகவே மேலுலகை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கும் ஜீவன்கள் அவரவர் பந்த வாயில் வழியேதான் செல்ல முடியும்.

ஒவ்வொரு படியிலும் அந்த நுழை வாயிலை கண்டுபிடிக்க அந்த ஜீவனுக்கு 28 முதல் 30 நாட்கள் ஆகும். தோராயமாக ஒவ்வொரு மாதமும் அந்த ஆத்மாவின் திதி வரும் நாள் அன்று அதை அவை கண்டு பிடித்து அடுத்த பந்தத்தின் படியில் நுழையும். ஆகவே ஒரு  ஜீவன் முப்பது நாட்கள் அந்த பந்த வளைவுக்குள் சுற்றித் திறந்தவாறு இருந்தபடியேதான் அந்த வாயிலை அடையும்.

இதற்கும் தீய ஆவிகளுக்கும் என்ன சம்மந்தம் என்கின்றீர்களா? அதுதான் முக்கியமான கேள்வி.

……………பாகம் -III  தொடரும்