தீய ஆவிகள் , ஏவல்கள்

சாந்திப்பிரியா
பாகம்-1

முன்னுரை:  இந்தக் கட்டுரையில் எழுதப்பட்டு உள்ள செய்திகளுக்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்கவில்லை. சில விஷயங்களைக் கேட்டு அறிந்தபோது அவற்றை தொகுத்து வெளியிட தோன்றும்போது அவற்றை எழுதுகிறேன். முக்கியமாக இதில் கூறப்பட்டு உள்ள சில விஷயங்களை நான் சில பண்டிதர்களிடம் பேசிக் கொண்டு இருந்தபோது அறிந்து கொண்டவை. அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்த நேரங்களில் விவாதித்த விஷயங்களை ஒன்றுக்கு பல முறை யோசனை செய்து, மீண்டும் எழுந்த சந்தேகங்களை விவாதித்து அனைத்தையும் ஒன்றிணைத்து எழுதியதே இந்தக் கட்டுரை. இதில் கூறப்பட்டு உள்ள சில செய்திகளைத் தவிர பல செய்திகளுக்கு எழுத்துப் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் என்னிடம் இல்லை. இறந்தவர்கள் வீடுகளில் பண்டிதர்களினால் கூறப்படும் சில கதைகள் மூலம் இவற்றில் உள்ள சில செய்திகள் கிடைத்தன. ஆகவே இவற்றில் கூறப்பட்டு உள்ளவற்றை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் சொந்த விருப்பம். இந்த கட்டுரையின் செய்தியின் சாரத்தில் இருந்த சில விஷயங்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவையாக இருந்ததினால் இதை எழுதினேன். யாருடைய மனதையும் புண்படுத்தவோ இல்லை மந்திர தந்திரங்களை குறைக் கூறவோ அல்ல- சாந்திப்பிரியா )

 தீய ஆவிகள் 

தீய ஆவிகள், பில்லி, சூனியம், காற்று என அழைக்கப்படும் மாந்த்ரீக ஏவல்கள் மிகப் பழமையானது. அவற்றைத் தவிர நமக்கு தீமையை விளைவிக்கும் பல்வேறு பிரயோகங்கள் உள்ளன. அவற்றில் பலவும் வெளியில் தெரியாது செய்யப்படும் நிகழ்வுகள். நம்முடன் நம்மை  அறியாமல் இருந்து கொண்டு  நம்மை அழிக்கும்  ‘தீய ஆவிகளின்’ செயல்கள்தான்  கொடுமையானது. அதை எளிதில் கண்டு பிடிக்கவும் முடியாது.

இந்த உலகில் மந்திரவாதிகள், தந்திரவாதிகள் என பலர் பல இடங்களிலும் இருந்தாலும், அவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொண்டு விட முடியும். ஆனால் தீய ஆவிகளை ஏவும் மனிதர்களையும், அந்த தீய ஆவிகளையும் நாம்  எளிதில் அடையாளம் காண முடியாது. தீய ஆவியின் ஏவலை நான் நேரடியாக பார்த்த மூன்று சம்பவங்களைக் (ஒன்று பெங்களூரில் நடந்தது, மற்றொன்று மகராஷ்டிர மானிலத்தில் நடந்தது, மூன்றாவது மத்தியப் பிரதேசத்தில் நடந்தது ) குறித்து பல வருடங்களுக்கு முன்னரே எழுதி உள்ளேன். தீய அவைகளைப் பற்றி எனக்கு அப்போது அதிகம் தெரியாது.
இந்தக் கட்டுரை  எங்கோ கிளம்பி எங்கோ செல்வது போன்ற பிரமையைத் தரலாம். ஆனால் இதனுடன் தூரமாகவும், மறைமுகமாகவும் சம்மந்தப்பட்ட சில விஷயங்களை நாம் முதலில் அறிந்து கொண்டால்தான் இந்த விஷயத்தை  புரிந்து கொள்ள முடியும் என்பதினால் இதை மூன்று அல்லது நான்கு பாகங்களாக பல விஷயங்களை உள்ளடக்கி வெளியிடுகிறேன். ஆகவே இதில் கூறப்பட்டு உள்ள அனைத்தையும் ஒரே கட்டுரைப் போல படிக்க வேண்டும்.
தீய ஆவிகள், பில்லி, சூனியம், காற்று போன்றவற்றைக் குறித்து பல்வேறுபட்டக் கருத்துக்கள் உள்ளன. தீய ஆவிகள், பில்லி, சூனியம், கருப்பு, காற்று என அழைக்கப்படும் மாந்த்ரீக ஏவல்கள் பற்றி விவரிக்கும் முன் அவற்றை பிரயோகிக்க தேவையான மூலாதாரமான சக்தியைத் அவற்றுக்குத் தருவது எது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சக்தியைத் தரும் மந்திரங்களின் மூலமே நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வ வேதமே என்பதே உண்மை .
வேதங்கள் படைக்கப்பட்டதின் காரணம் மனித குல மேம்பாட்டிற்கும் அவர்களை நல் வழிப்படுத்தவுமே என்பது நம்பிக்கை. வேதங்களைப் படைத்தது பிரும்மா என்றும், இல்லை அதைப் படைத்தது பரப்பிரும்மமாக இருந்த சிவபெருமானே என்றும் இரண்டு விதக் கருத்துக்கள் உள்ளன. ‘பிருஹடரன்யகோபனிஷத்’ எனும் நூலின்படி வேதங்கள் பரபிரும்மனின் மூச்சுக் காற்றே என்றும் அவை தனியாக படைக்கப்பட்டது அல்ல என்றும் கூறுகிறது. வேதங்கள் மிக மிகப் பழமையானது. அதன் காலம் தெரியவில்லை. 1000-500 BCE காலத்தை சேர்ந்ததாக கூறப்படும் வேதங்களை முதலில் பிரும்மாவின் மகனாக கருதப்படும் வேத வியாசரே சீரமைத்து அர்த்தங்களைத் தந்தாராம். அதன் பின் அதற்கு மந்திர உச்சாடனைகளைத் தந்து அந்த வேத மஹா நூல்களை சப்த ரிஷிகள் எனக் கருதப்பட்ட ஏழு ரிஷி முனிவர்கள் இயற்றியதாக கூறுகிறார்கள்.
அதர்வ வேதத்தை விளக்கும் ஒரு புத்தகம்  
 
அந்த வேதங்களில் நான்காவதான அதர்வ வேதத்தை பிரும்மாவின் உடலில் இருந்து வெளி வந்தவர்களான அதர்வன் என்ற ரிஷியும், அக்னியையே பெரும்பாலும் வணங்கி வந்த அங்கீரஸ் என்ற முனிவரும் சேர்ந்து இயற்றி உள்ளதாகவும், அந்த வேதத்தில்தான் இயற்கையைக் கட்டுப்படுத்தி ஒருவர் நினைக்கும் விதத்தில் அதை சற்று நேரம் மாற்றி வைத்து இருக்கக் கூடிய மந்திர சித்திகளைக் தரக் கூடிய விஷயங்கள் உள்ளன என்று கூறுகிறார்கள். அதே வேதத்தில் மந்திர தந்திரங்களினால் ஏற்படும் தீமைகளை விலக்கிக் கொள்ளவும் மந்திரங்கள் உள்ளனவாம்.  ஆயுர்வேத சிக்கிச்சைக்கான வழி முறைகளும் உள்ளனவாம்.  ஆனால் இந்த வேதத்தை அனைவராலும் எளிதில் சித்தி கொள்ள முடியாது. அதைக் கற்றுக் கொள்ள முறையான ஒரு குரு தேவை. குருவிடம் இருந்து விசேஷமான காயத்ரி மந்ரோபதேசம் (இந்த காயத்ரி, அனைவரும் உச்சரிக்கும் காயத்ரி மந்திரம் அல்ல) பெற்றுக் கொண்டப் பின்னரே இந்த வேதத்தைப் பயில முடியுமாம். ஆகவே இந்த வேதத்தைப் பயின்றவர்களிடம் இருந்து மந்திர தந்திரங்களை பிரயோகிக்கும் முறைகளைக் கற்று அறிய முடியும். ஆனால் மஹா வேதமான அதர்வனாவை கற்றறிந்து அவற்றின் மூலம் மந்திர உச்சாடனைகளை முறையாகப் பயன்படுத்தினால் அதன் மூலம் மனித மேம்பாட்டுக்கு பல விதங்களிலும் உதவிட முடியும்.
சித்திகளைத் தரும் மந்திரங்கள் என்பது என்ன? சித்திகளை அடைய அதர்வன் வேதம் மட்டும் போதுமா? இல்லை பல்வேறு சக்தி தேவதைகள் மற்றும் துர்தேவதைகளை உபாசனம் செய்து சக்தியைக் அடைய முடியுமா?

நமது சாஸ்திரங்களில் பல்வேறு ஆராதனை முறைகள், பூஜை முறைகள் போன்றவை கூறப்பட்டு உள்ளன. அவற்றில் காணப்படும் மந்திரங்களை உச்சரித்து நமது தெய்வங்களை வழிபடும்போது நமக்கு பல சித்திகள் கிடைக்கின்றன. அப்படி என்றால் பல புத்தகங்களில் காணப்படும் மந்திரங்களை தினமும் படித்து, அவற்றைக் ஓதி தெய்வத்தை பூசித்து மந்திர சித்தியை அடைய முடியுமா? ஆலயங்களிலும், வீடுகளில் செய்யப்படும் பூஜைகளில் ஓதப்படும் மந்திரங்கள் மூலம் நாம் சித்திகளைப் பெற முடியுமா?
அது முடியாது. காரணம் மந்திரங்களின் தன்மை  மாறுபட்டவை.

  • சில மந்திரங்கள் ஆலயங்களில் ஓதப்படவே அமைக்கப்பட்டு உள்ளன
  • சில மந்திரங்கள் ஹோமங்கள், பூஜைகள் போன்றவற்றுக்கு ஏற்படுத்தப்பட்டவை
  • சில மந்திரங்கள் வசிய தேவதைகளை வசியம் செய்ய ஏற்படுத்தப்பட்டவை
  • சில மந்திரங்கள் வசிய தேவதைகளை வசியம் செய்தப்பின் அவற்றை ஆட்டு விக்க ஏற்படுத்தப்பட்டவை
  • சீல மந்திரங்கள் வீடுகளில் நடைபெறும் சுப மற்றும் அசுப காரியங்களுக்காக ஏற்பட்டவை
  • சில மந்திரங்கள் ஒருவருக்கு தனித் தன்மையில் சித்தி கிடைக்க மற்றும் அனுகூலங்களைப் பெற  உதவும்
  • சில மந்திரங்கள் மனித குல மேம்பாட்டிற்கு உதவிடும் வகையில் உள்ளன.

இப்படியாக உள்ள மந்திரங்களில் ஆலயங்களில் ஓதப்படும் மந்திர ஒலிகள் அந்தந்த ஆலயத்தில் உள்ள சிலைகளுக்கு மட்டுமே கூடுதல் சக்தியைத் தரும். அவற்றை மெருகேற்றும். அந்த மந்திரங்களை ஓதும் பண்டிதர்களுக்குக் கூட மந்திர சித்தி கிடைக்காது.  காரணம் அந்த மந்திரங்கள் குறிப்பிட்ட சில காரியங்களை மட்டுமே செய்யக் கூடியவை.

ஒவ்வொரு மந்திரத்துக்கும் ஒவ்வொரு  ஆவாஹன  தேவதை  உண்டு. அந்த தேவதைகளிடம் லட்சக்கணக்கான  அடிமை தேவதைகள் உண்டு. அந்த அடிமை தேவதைகளிடம் அடிமை அணுக்கள், அதாவது படைவீரர்கள் உண்டு. அந்த அடிமை தேவதைகள் மற்றும் அணுக்கள்  ஒரு குறிப்பிட்ட  தெய்வத்திற்கு பணி புரியுமாறு அமைக்கப்பட்டு உள்ளவை. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தேவதைப் பட்டாளங்களும் உயிர் அணுக்களும் உண்டு.  அவை அந்த தெய்வத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவை. ஒரு தெய்வத்துக்கு பல அவதாரம் இருந்தால் ஒவ்வொரு அவதாரத்துக்கும்  குறிப்பிட்ட தேவதைப் பட்டாளம் உண்டு.

அந்த பட்டாள தேவதைகள் ஒரு  குறிப்பிட்ட தெய்வ  ஆலயத்தில் சுற்றித் திரியும் என்பது மட்டும் அல்ல எங்கெங்கே அந்த தெய்வம் ஆராதிக்கப்படுகின்றதோ, எங்கெல்லாம் அந்த தெய்வத்தை முன் நிறுத்தி, ஹோமங்கள் போன்றவை நடைபெறுமோ அங்கெல்லாம் லட்சக் கணக்கில் குறிப்பிட்ட தெய்வத்தின் ஆவாஹன தேவதையிடம் உள்ள அந்த தேவதைப் பட்டாளம் பகுதி பகுதியாகப் பிரிந்து சென்று அந்த குறிப்பிட்ட தெய்வத்தை சுற்றித் திரியும்.  உதாரணமாக ஒரு ஆலயத்திற்குள் அந்த குறிப்பிட்ட தெய்வத்தின் சிலை இருந்தால் அது வைக்கப்பட்டு உள்ள அந்த கருவறைக்குள்ளேயே அவை சுற்றிக் கொண்டு இருக்கும்.  அவை நம் கண்களுக்குத் தெரியாது.  உயிரணுக்களைப் போல சிறிய அளவிலேயே இருக்கும். அந்த தேவதைகளின் பணி என்ன ?

ஆலயங்களுக்குள்ளும், குறிப்பிட்ட கடவுளையும் 
எப்போதுமே சுற்றிக் கொண்டு இருக்கும் 
அந்தக் கடவுட்களின் அடிமை தேவதைகள்  

ஒவ்வொரு ஆலயத்திலும், ஹோமங்களிலும் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் கல்லாக உள்ள சிலைக்கு உள்ளே எடுத்துச் செல்லப் படுகின்றன.   கல்லுக்குள் எப்படி ஒரு உயிர்  நுழைய முடியும்?  கடவுளுக்கும் இருப்பது ஒரு ஜீவன் அல்லது ஆத்மாதானே,  அது ஒரு ஆலயத்தில் இருந்து விட்டால் அந்தக் கடவுள் வேறு எங்குமே இருக்க முடியாதா?  எப்படியும் நாம் நினைக்கலாம். இதுவும் நல்ல கேள்வியே !

தெய்வம் என்பது ஒரு ஆத்மாவைக் கொண்டு ஒரு உயிராக பிறந்தது அல்ல. அவற்றுக்கு உருவம் இல்லை. பிரவாஹம் மட்டுமே உண்டு. அதாவது கண்களில் படாத பல லட்சக்கணக்கான  உயிர் அணுக்களை தன் வட்டத்தில் வைத்துக் கொண்டு உள்ள  பந்து போன்ற ஒரு நிலை. ஆனால் அந்த நிலை தனித்தன்மை வாய்ந்தது. நாம் எப்படி அதை கற்பனை செய்து பார்க்கின்றோமோ அப்படிப்பட்ட உருவில் நமக்கு முன் தோன்றும்.

அந்த நிலையில் உள்ள  ஒவ்வொரு தெய்வமும் தன்னிடம் உள்ள  பல லட்சக்கணக்கான அணுக்களில் தனது சக்தியை செலுத்தி எங்கெங்கு தன்னை ஆராதித்து பூஜைகள் செய்யப்படுகின்றனவோ அங்கெல்லாம் அவற்றில் சிலவற்றை அனுப்பி வைக்கும். தோண்டத் தோண்ட தங்கம் என்பார்களே, அப்படி அதனிடம் உள்ள உயிர் அணுக்கள் முடிவில்லாதவை.

எங்கெல்லாம் தாம் சிலையாக ஆராதிக்கப்படுகிறோமோ அங்கெல்லாம் அவருடைய அந்த சக்தி அணுக்கள் சென்று அந்த சிலைக்குள் ஜடமாக அமர்ந்து கொள்ளும். அப்போது என்ன நடக்கின்றது?

 வேண்டுகோட்களுக்காக ஓதப்படும் மந்திரங்கள் வெற்றிடத்தில் 
சுற்றித் தெரியும் அடிமை தேவதைகளினால் சிலைக்குள் உள்ள 
தெய்வங்களின் அனுக்களிடம்  கொடுக்க அவை அவற்றை மேலே  உள்ள 
ஆண்டவரிடம் கொண்டு சென்று கொடுக்க,  அவர்  அவற்றில் 
நியாயமான கோரிக்கைகளை நிறைவேற  அருள் புரிவார். 
 அந்த  அருளாசிகள் மீண்டும்  அந்த சிலை வழியே  வேண்டுபவர்களை 

வந்தடையும் என்பதை விளக்கும் படம்.

சிலைக்கு வெளியில் ஓதப்படும் மந்திரங்களை அந்த சிலைக்குள் உள்ள தெய்வத்தின் அணுக்கள் எப்படி கிரகித்துக் கொள்கின்றன? அந்த ஆலயத்திலும், ஹோமங்கள், பிற பூஜைகள் போன்றவை நடைபெறும் இடங்களில் அந்த குறிப்பிட்ட தெய்வத்தின் சிலையை நமது கண்களுக்குப் புலப்படாமல் சுற்றிக் கொண்டு இருக்கும் அடிமை தேவதைகள் ( உயிர் அணுக்கள் அங்கு காவலுக்கு சுற்றிக் கொண்டு இருக்கும் பணியை மட்டுமே செய்கின்றன)   அங்கு  ஓதப்படும் மந்திரங்களை கிரகித்துக் கொண்டு அவற்றை எடுத்துக் கொண்டு அந்த தெய்வத்தின் உடலுக்குள் புகுந்து அங்கு உள்ள தெய்வ அணுக்களிடம் வைத்து விட்டு வெளியில் வரும். மீண்டும் மீண்டும் மந்திரங்கள்  ஓதி முடியும் வரை அதையே செய்யும்.
சிலையில் அமர்ந்து கொண்டு உள்ள உயிர் அணுக்கள் அவற்றை உடனடியாக தமது தெய்வத்திடம் அனுப்பி வைக்க, அவர் அந்த மந்திர ஒலியின் தன்மைக்கேற்ப அந்த உயிர் அணுக்களின் சக்தியை மேன் மேலும் பெருக்குவார். அது மட்டும் அல்ல, அவற்றுக்கு தன் சார்பில் செய்ய வேண்டிய சில விசேஷ சக்திகளையும் அளிப்பார். இப்படியாக சிலைக்குள் உள்ள தெய்வத்தின் உயிர் அணுக்கள் சக்திகளைப் பெற்றுக் கொள்ளும். அந்த உயிர் அணுக்கள் பக்தர்களின் தேவைக்கு ஏற்ப முடிவு எடுத்து தமது தெய்வத்திடம் வேண்டப்படும் அந்த வேண்டுகோளை அவர் சார்பில் நிறைவேற்றியப் பின் அவரிடம் உடனடியாக தாம் செய்ததை அவரிடம் தெரிவிக்கும். இதை ஒரு விதத்தில் பார்த்தால் நாம் கூறுகிறோமே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லும் மின் ஒலி மற்றும் ஒளி அலைகள் என்று, அதே தத்துவம்தான். ஆகவேதான் ஒரு சிலையை ஆவாஹிக்க, ஆவாஹிக்க அந்த சிலையின் சக்தி கூடுகிறது என்கிறோம்.
நாம் வேடிக்கையாகக் கூறுவது உண்டு. ‘ நீ உரத்துக் குரலில் வேண்டினால்  அது சிலையின் காதில் சென்று விழவா போகின்றது’. அது தவறான கருத்து . நாம் குரல் கொடுத்துக் கூறுவதை நமது கண்களுக்குத் தெரியாத தேவதைகள் அந்தந்த தெய்வத்திடம் மேலே கூறியபடி எடுத்துச் சென்று வைக்கும்போது, மேலுலகில் உள்ள தெய்வம் அதை உணரும். அதற்கேற்ப அந்த தெய்வம் நமக்குத் தேவையான நல்லதை செய்யும்.
இது  எதற்காக கூறப்படுகிறது என்றால் மந்திரங்களில் சக்தி எப்படிப்பட்டது, அது எப்படி கல்லுக்குள்ளேயும் ஊடுருவ முடிகின்றது என்பதை எடுத்துக் காட்டவே.  கல்லுக்குள்ளேயே ஊடுறுவ முடிந்த மந்திர சக்திகள் மனிதர்களுக்குள் ஊடுறுவ முடியாதா?  இதுவே  பில்லி -சூனிய- தீய ஆவிகளின் பின்னணி !
……………..பாகம்-II தொடரும்