வீரபத்திரர்

சாந்திப்பிரியா

வீரபத்திரஸ்வாமி என்பவர் சிவபெருமானின் முடியில் இருந்து வந்தவர் என்றும் அவர் வேர்வையில் இருந்து வந்தவர் என்றும் கிராமியக் கதைகள் உள்ளன. அவரை புராண இதிகாசங்கள் ஒரு பிரதான தெய்வமாக அல்லது பிரசித்தமான தெய்வமாக காட்டவில்லை என்றாலும் அவரை முக்கியமானக் கடவுளாகக் கருதி அவருக்கு சில இடங்களில் ஆலயங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவரை முக்கியமான ஒரு கடவுளாகவே கருதப்படுவதின் காரணம் அவர் சிவபெருமானினால் படைக்கப்பட்டவர் என்பதுதான். அவரைப் பற்றிக் கூறப்படும் கதை இதுதான்.

தக்ஷ யாகத்தில் அவமானப்பட்ட பார்வதி தன்னை மாய்த்துக் கொண்டதும் அந்த செய்தியைக் கேட்ட சிவபெருமான் கோபம் கொந்தளிக்க தனது தலை முடியில் இருந்து ஒரு முடியை பிடுங்கி எறிந்தார். அதில் இருந்து வீரபத்திரர் வெளிவந்து தாம் என்ன செய்ய வேண்டும் என்று சிவனைக் கேட்க சிவபெருமானோ தக்ஷனின் யாகசாலையை அழித்துத் தள்ளுமாறுக் கூறினார். பயங்கரமான சக்தி கொண்டவராக வெளிவந்த வீரபத்திரர் யாகசாலையை முழுமையாக அழித்தார். கண்களில் கண்ட தக்ஷனின் ஆட்களைக் கொன்று தீர்த்தார். தக்ஷனின் தலையை வெட்டி எறிந்தார். அவருடைய கோபத்தை பிரும்மா முதல், யமதர்மராஜர்வரை அங்கே கூடி இருந்த யாராலும் அடக்க முடியாமல் போக அனைவரும் அங்கிருந்து பயந்து ஓடினார்கள். அனைவரும் ஓடிச் சென்று தம்மைக் காக்குமாறு மகாவிஷ்ணுவை வேண்டிக் கொள்ள மகாவிஷ்ணுவும் உடனே காளி தேவதையை அனுப்பினார். காளி தேவியும் ஒரு அழகியப் பெண்ணான உருவில் சென்று வீரபத்திரர் முன்னால் நிற்க அவர் கோபம் அடங்கியது. இருவரும் கந்தர்வ விவாகம் செய்து கொண்டார்கள். இப்படியாக பத்ரகாளியும், வீரபத்திரரும் கந்தர்வ விவாஹம் செய்து கொண்டதாகக் கூறப்படும் ஆலயம் ஆந்திராவில் உள்ளது.

 பத்திரகாளி அம்மன் சமேத வீரபத்திரர்

அந்த ஆலய மகிமைக் குறித்து மேலும் ஒரு செய்தியைக் கூறுகிறார்கள். ஒரு முறை ஹைதிராபாத் நிஜாமை சேர்ந்த மன்னான் வீரபத்திரரின் பக்தர்கள் இருவரை அவர்கள் தனக்கு சேர வேண்டிய பணத்தைத் தராமல் அதை ஆலயங்களுக்கு செலவு செய்து விட்டதாகக் கூறி சிறை வைத்து விட்டான். அதன் பின் அவர்களை அழைத்து அந்தப் பணத்தைத் திருப்பித் தருமாறும் இல்லை என்றால் சவுக்கடி கொடுப்பேன் எனக் கூறினான். ஆனால் அவர்கள் ஏற்கனவே அந்தப் பணத்தை வீரபத்திரர் ஆலயத்துக்கு செலவு செய்து விட்டதினால் பணத்தைத் தர முடியவில்லை. ஆகவே அவர்களை சவுக்கால் அடிக்குமாறு காவலாளிகளுக்கு நிஜாம் ஆணையிட அவர்கள் அடித்தபோது அந்த அடி அனைத்தும் நிஜாமின் மீது விழ பயந்து போன நிஜாம் அவர்களை விடுதலை செய்தாராம். அதன் பின் அவர் கனவில் வீரபத்திரர் தோன்றி நதியில் மூழ்கிக் கிடந்த தன்னுடைய ஆலயத்தைப் வெளியில் எடுத்து புதுபிக்குமாறு ஆணையிட்டார். ஆகவே நிஜாமின் ஆட்கள் ஆலயத்தின் சிவலிங்கத்தை எடுத்து வந்து வேறு ஒரு இடத்தில் ஆலயம் அமைக்க முயன்றபோது முரமல்லாவைத் தாண்டி அதை எடுத்துச் செல்ல முடியாததினால் அதை அங்கேயே வைத்து ஆலயம் அமைத்தார்கள். இப்படியாக வீரபத்திரர் சமேத பத்திரகாளி ஆலயம் இந்த ஆலயம் ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தின் முரமல்லா எனும் கிராமத்தில் அமைந்தது. முரமல்லா எனும் கிராமம் ஆந்திராவின் காகினாடா நகரில் இருந்து 37 கிலோ தொலைவில் உள்ளது. அதில் பத்திரகாளி அம்மன் சமேத வீரபத்திரர் உள்ளனர். அங்கு தினமும் விடியற்காலை பத்திரகாளி அம்மனுடன் வீரபத்ததிரருக்கு திருமணம் நடைபெறுவதாக ஐதீகம் உள்ளதினால் அதற்கேற்ப பூஜைகள் செய்யப்படுகின்றன. அதை நித்யக் கல்யாண நிகழ்ச்சி என்கிறார்கள்.

இன்னொரு கதையின்படி தக்ஷனின் யாகத்தில் பார்வதி தன்னை மாய்த்துக் கொண்டதும் அந்த செய்தியைக் கேட்ட சிவபெருமான் கோபம் கொந்தளிக்க நின்றபோது அவர் உடலில் இருந்து வியர்வை வெளி வந்து விழ அதில் இருந்து முதலில் வீரபத்திரர் வெளிவர அவரைத் தொடர்ந்து பல வீரபத்திர சேனையினர் வெளி வந்து வீரபத்திரர் கட்டளையை எதிர் நோக்கி நின்றார்கள் . இப்படியாக சிவபெருமானின் வியர்வையில் இருந்து வெளிவந்த வீரபத்திரர் தாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க சிவபெருமானோ தக்ஷனின் யாகசாலையை அழித்துத் தள்ளுமாறுக் கூறினார். பயங்கரமான சக்தி கொண்டவராக வெளிவந்த வீரபத்திரர் யாகசாலையை முழுமையாக அழித்தார். கண்களில் கண்ட தக்ஷனின் ஆட்களைக் கொன்று தீர்த்தார். தக்ஷனின் தலையை வெட்டி எறிந்தார். ஆனால் என்ன இருந்தாலும் பார்வதியின் தந்தை என்பதினால் அதன் பிறகு அங்கிருந்த அனைத்து கடவுட்களும், தேவதைகளும் வேண்டிக் கேட்டுக் கொண்டதை ஏற்று ஒரு ஆட்டின் தலையை வெட்டி தக்ஷனின் உடலுக்கு வீரபத்திரர் உயிர் கொடுத்தார். அது முதல் தக்ஷன் ஆட்டுத் தலையுடன் சிவபெருமானின் பூதகணங்களில் ஒன்றாக வாழ்ந்து வந்தார்.
வீரபத்திரரின் இன்னொரு முக்கியமான ஆலயம் ஆந்திராவின் அனந்தபூர் ஜில்லாவில் உள்ள லிபாக்ஷி எனும் ஆலயமே.

லிபாக்ஷி ஆலயத்தில் வீரபத்திரர் சன்னதி 

அதுவே வீரபத்திரருக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தை அகத்திய முனிவர் கட்டி உள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால் வெகு காலத்துக்குப் பின்னர் அதை பெரிய அளவில் 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களின் அமைச்சராக இருந்த விறுபனா என்பவர் கட்டி உள்ளதாக குறிப்புக்கள் உள்ளது. இது குறித்து கூறப்படும் கதை என்ன என்றால், அரசருக்குக் தெரிவிக்காமல் அவருடைய கஜானாவை கண்காணித்து வந்த விரூபனா என்பவர் அரசாங்க கஜானாவில் இருந்து பணத்தை எடுத்து ஆலயம் கட்ட செலவு செய்து கொண்டே இருந்தார். அதை அவருடைய விரோதிகள் அரசரிடம் சென்று கூறி விட அவர் கோபம் அடைந்து ஆலயத்துக்குச் சென்று விரூபனாவை வரவழைத்து அது குறித்துக் கேட்க விரூபனா அதை மறுக்கவில்லை என்பதினால் அரசன் விரூபனாவின் கண்களை குருடாக்கிவிடுமாறு ஆணையிட்டார். ஆனால் விரூபனாவோ அரசரின் காவலர்கள் தன்னுடையக் கண்களை குருடாக்குவதற்கு முன்னர் தானே தன் இரு கைகளினாலும் கண்களை தோண்டி எடுத்து வீசினார். அந்தக் கண்களில் இருந்து தெறித்த ரத்தச் சுவடுகள் அந்த ஆலயத்தின் கூடத்தின் சுவற்றில் இன்றும் உள்ளதாகக் கூறுகிறார்கள்.

 லிபாக்ஷி ஆலயம் 

வீரபத்திரரின் இன்னொரு ஆலயம் கும்பகோணத்தில் மகாமஹக் குளத்தின்  கரையில் உள்ளது. அதில் உள்ள வீரபத்திரர் அகோர வீரபத்திரர் என அழைக்கப்படுகிறார். இங்கு தட்சிணாமூர்த்தியும்,  ராஜராஜேஸ்வரியும்  உள்ளனர் . ராஜகோபுரத்துடன் அமைந்த இந்த ஆலயத்தில் வீரபத்திரர்  கோரமான பற்களுடன் கைகளில் வில், அம்பு, கத்தி, தண்டம் ஏந்தியபடிக் காணப்படுகிறார் . அருகில் தட்சன் அவரை வணங்கியபடி இருக்கிறான். தலைக்கு மேல் தண்ணீர்க் குடம் உள்ளது . பத்திரகாளி  தனிச் சன்னதியில் இருக்கிறாள். இந்த ஆலயத்தின்  வீரபத்திரருக்கு “கங்கை வீரன்”, “கங்கை வீரேஸ்வரர்” என்ற பெயர்களும் உண்டு. தக்கனை வெற்றிக் கொண்ட வீரபத்திரரின் பெருமையைக் கூறும் ஒட்டகக் கூத்தரின் நூலான தக்கயாகப்பரணி எனும் நூல் இங்குதான் அரங்கேறியதாகக் கூறுகிறார்கள். அதற்கு சான்றாக இந்த ஆலய முன் மண்டபத்தில் சுவாமியை வணங்கிய்ட நிலையில் ஒத்தகக் கூத்தார்  காணப்படுகிறார். மாசிமக விழாவின்போது கும்பேஸ்வரர் எனப்படும் சிவபெருமானுக்கு முதல் பூஜையை வீரபத்திரரே செய்வதாக ஐதீகம் உள்ளது.இப்படிப்பட்ட வீரபத்திரருக்கு கர்நாடகாவில் நிறைய ஆலயங்கள் உள்ளன. சென்னை

 மயிலை வீரபத்திரர் ஆலய முகப்பு  

மயிலாப்பூரில் மாதவபெருமாள் ஆலயத்தின் அருகிலும் மிகப் பழமையான ஆலயம் உள்ளது. சில ஆலயங்கள் ஆந்திரப் பிரதேசத்திலும், சில மகாராஷ்டிரத்திலும் உள்ளன. வீரபத்திரர் சிவபெருமானின் ஒரு அவதார கணமே என்பதினால் அவரை வேண்டி வணங்குவத்தின் மூலம் தடைபடும் திருமணங்கள் நடைபெறும், விரோதிகள் விலகி ஓடுவார்கள், மனப் பயம் விலகும், வீட்டில் தீய ஆவிகள் இருந்தால் அவை விலகி ஓடும், கணவன் மனைவி உறவு பலப்படும் என்கிறார்கள். பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டியும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வீரபத்திரர் சன்னதியில் அரிசி மாவு விளக்கு ஏற்றி வேண்டிக்கொள்கிறார்கள். வீரபத்திரரிடம் வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் விசேஷ அபிஷேகம் செய்து, வஸ்திரம், வெற்றிலை மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.