ஒரு  வினோத அனுபவம் 
குலதெய்வ தேவியை  கண்டேன்
சாந்திப்பிரியா 

நான் இன்று (04-01-2012)  பெங்களுர் வசந்தபுராவைத் தாண்டி ஒரு இடத்துக்கு சென்று கொண்டு இருந்தபோது எப்போதும் போல சுப்பிரமணியபுரா அருகில் வரும் ஒரு ஆலயம் வழியே சென்றேன். அந்த பக்கமாகவே பல ஆண்டுகளாகச் சென்று இருந்தும், அந்த ஆலயத்தை பார்த்ததே  இல்லை. காரணம் நான் போகும் வேளையில் அது மூடப்பட்டே இருக்கும் . நானும் அந்த ஆலயத்தில் அக்கறைக் காட்டாததினால் அந்த ஆலயம் என்ன ஆலயம் என்பது கூடத் தெரியாது. ஆனால் இன்று ஒரு அதிசய நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வழியே செல்லும்போது அந்த ஆலயம் திறந்தே இருந்தது. சரி வரும்போது என்னதான் உள்ளது என்று பார்க்கலாம் என நினைத்துக் கொண்டே என் வேலையை முடிக்கச்  சென்று விட்டு இரண்டு மணி நேரம் பொறுத்து அதே வழியாக வந்தேன். அப்போதும் ஆலயம் திறந்தே இருந்தது. ஆகவே சரி, இது என்ன ஆலயம் எனப் பார்க்கலாம் என எண்ணியவாறு ஒரு நிமிடம் அங்கு நின்று அது என்ன ஆலயம் என்று கேட்டேன். அங்கிருந்தவர் அது ”வள்ளி சுப்பிரமணிய தேவஸ்தானா”  என்றதும் என் மனம் ஒரு நிமிடம் மகிழ்ச்சியால் துள்ளியது.  நேற்றுதான் எனக்கு என் குலதெய்வ ஆலயத்தில் இருந்து பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள விழா பற்றிய பத்திரிகையும் பிரசாதமும் வந்தது. இந்த ஆண்டு குல தெய்வத்தைக் காண முடியுமா என்ற கேள்விக் குறியுடன் இருந்த எனக்கு அடடா, இந்தப் புத்தாண்டில் என் குல தெய்வ தேவியான வள்ளி  அவளே என்னை அழைத்தது போல  அவளை தரிசிக்க சந்தர்ப்பம் வந்ததே என்று மனம் மகிழ்ந்து உள்ளே சென்றேன். வள்ளி – சுப்பிரமணிய தேவஸ்தானா ஒரு அற்புதமான ஆலயம்.

ஆலயம் 60 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்டது. செய்வாய் கிழமைகளில்  அங்கு  சென்று  தரிசனம்  செய்வது  விசேஷம்  என்று  அர்ச்சகர்  கூறினார் . பெரும்பாலும் ஆலயத்தின் சாலையில் இருந்து ஆலயத்துக்கு செல்லும்  நுழை வாயில்  சாத்தப்பட்டே உள்ளது என்றாலும் அந்த கேட்டின்  பக்கத்திலேயே உள்ள சிறிய கதவு வழியே நுழைந்து ஆலயத்துக்குள் செல்லாலாம்.  மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பார்களே அப்படி இருந்தது அந்த ஆலயம். ஆலயம் மிகப் பெரியது அல்ல என்றாலும் நல்ல விசாலமான பிராகாரம்,  நுழைவு மண்டபம், பலிபீடம், துஜஸ்தம்பம் என அனைத்தும் இருந்தன. ஆலயத்தில் வரிசையாக மூன்று சன்னதிகள். முதல் சன்னதியில் விநாயகர் அமர்ந்த நிலையில் இருந்தார். அடுத்த சன்னதியில் நின்று இருந்த கோலத்தில் வள்ளி-முருகன்-தெய்வானை மூவரும் இருந்த சன்னதி. அடுத்த சன்னதி ராமர் – சீதை–லஷ்மணர் நின்று கொண்டு இருக்க ஹனுமார் காலை மடித்து முட்டி போட்டு அமர்ந்த நிலையில் அவர்களை வணங்கிக் கொண்டு இருக்கின்றார். பிராகாரத்து மூலையில் ஒரு நவகிரக சன்னதி. பிராகாரத்தின் பின்புறம் தக்ஷிணா மூர்த்தியும் ஒரு சன்னதியில் அமர்ந்து உள்ளார். ஹனுமார் கண்களை விட்டு மறைய மறுக்கும் அற்புதமான கோலம். வள்ளி-முருகன்-தெய்வானையோ அத்தனை அழகு சொட்ட நின்று இருந்தார்கள். ஆகா…என் குலதெய்வத்தை- வள்ளியை- மனமார தரிசித்த திருப்தியான மனதுடன் ஆலயத்தை விட்டு வெளியில் வந்து  வீடு திரும்பினேன்.   இப்படி ஒரு நிகழ்ச்சி நம்மை அறியாமலேயே நடப்பதைத்தான்  பிராப்தம் என்பார்களோ?
ஆலயம்  வசந்தபுரா சாயிபாபாவின் ஆலயத்தில் இருந்து நேராகவே அதே சாலையில் உத்தரஹல்லியை நோக்கிச் சென்று கொண்டே இருந்தால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அதே சாலையில் இடது புறம் வரும் சுப்ரமணிபுரத்தின் அருகில் தென்படும். ஆலயம் வசந்தபுரா-உத்தரஹல்லி சாலையிலேயே உள்ளது. எங்கும் திரும்பத் தேவை இல்லை.
ஆலயத்தின் அமைப்பு
ஆலயம் செல்லும் வழி