திருப்பூக்குழி
விஜயராகவப் பெருமாள் ஆலயம்
சாந்திப்பிரியா

திவ்ய தேசத்தின் மற்றும் ஒரு முக்கியமான ஆலயம் காஞ்சீபுரத்தில் இருந்து வேலூருக்குச் செல்லும் பாதையில் சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பூக்குழி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் ஆலயம். இந்த ஆலயத்தின் தல வரலாறும் ராவணன் சீதையை தூக்கிக் கொண்டு போனபோது அதனுடன் சண்டைப் போட்டு இறந்த ஜடாயுவிற்கு இறுதிக் காரியத்தை செய்த ராமபிரான் ஜடாயுவை தனது மடியில் வைத்துக் கொண்டு அதற்கு ஈமக்கிரியைகளை செய்ததாக தல வரலாறு கூறுகிறது.
அப்போது அந்த சிதையில் இருந்து வெளிவந்த வெட்பத்தையும் அதன் வாசனையையும் தாங்க முடியாமலும் போன ஸ்ரீ தேவியானவள் ராமரின் வலது புறத்தில் இருந்து இடதுபுறத்துக்கு சென்று நின்று கொண்டதான ஐதீகம் உள்ளது. ஆகவேதான் உலகிலேயே இந்த ஒரு ஆலயத்தில்தான் ராமரின் இடதுபுறத்தில் ஸ்ரீ சீதா தேவியும், வலப் புறத்தில் பூமா தேவியும் காணப்படுவார்கள். அதனால்தான் இந்த தலத்தில் விஜயராகவப் பெருமாளின் சன்னதிக்கு இடது புற சன்னதியில் தாயாரும், வலது புற சன்னதியில் ஆண்டாளும் உள்ளனர். இப்படியாக அமைந்துள்ள சன்னதிகள் இது மற்ற ஆலயங்களில் காணப்படும் சன்னதிக்கு மாறாகவே அமைந்து உள்ளன. இங்குள்ள விஜயராகவாப் பெருமானின் பக்கத்தில் நின்று கொண்டு உள்ள சீதை மற்றும் பூதேவியின் உருவம் கொண்ட சிலை மிக விசேஷமானது. அவற்றில் ராமபிரானின் தொடையில் ஜடாயுவை வைத்துக் கொண்டு உள்ள உருவம் காணப்படுகின்றது .
ஆலய உற்சவமூர்த்தி
இந்த ஆலயத்தின் மூலவர் விஜயராகவப் பெருமான். தாயாரின் பெயர் மங்களவல்லித் தாயார் என்பது. ஆலயத்தில் உள்ள விஜயராகவப் பெருமானை புராணங்களில் சமயப் பூங்கவன் என்றும் அழைக்கின்றார்கள். இந்த ஆலயக் கட்டிடங்களின் கலை வண்ணம் சுந்தரப் பாண்டியன் காலத்து சிற்பங்களை ஒத்து உள்ளதால் இந்த ஆலயம் பதிமூன்றாம் ஆண்டுகளில் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என நம்புகிறார்கள். இந்த ஆலயம் உள்ள இடத்தில்தான் ராமானுஜரின் குருவான யாதவப் பிரகாசர் என்பவர் வாழ்ந்துள்ளதாகவும், அவரிடம் ஸ்ரீ ராமானுஜர் இங்குதான் வேதப் பாடம் பயின்றதாகவும் ஆலயக் குறிப்பு உள்ளது. மேலும் இங்கு ஆலயத்தின் எதிரில் ஜடாயு ஒரு குளத்தை நிறுவியதாகவும் அதில் குளித்து விட்டே  பகவானை பூஜித்து  வந்ததாகவும் வரலாற்றுச் செய்தி உள்ளது. அந்தக் குளத்தின் பெயர் ஜடாயு தீர்த்தம் என்பது.

இந்த ஆலயத்தில் சில குறிப்பிட்ட விசேஷங்கள் உள்ளன.

  • யாருக்கு குழந்தை வரம் வேண்டுமோ அவர்கள் ஒரு பிடி வறுத்தப் பயிரை கொண்டு வந்து ஆலயத்தில் பூஜித்தப் பின் அதை நனைத்த புடவைத் துணியில் சுற்றி வைத்து இருந்தால் மறுநாள் அதில் முளை வருமாம். அப்படி முளைப் பயறு வந்தால் அவர்கள் நிச்சயமாக குழந்தைப் பாக்கியம் பெறுவார்கள் என்கிறார்கள்.
  • அடுத்து தமது மூதையினருக்கு யார் சரியான முறையில் இறுதிக் கடன்களையும், தேதிகளையும் செய்யவில்லையோ அவர்கள் இங்கு வந்து பகவானையோ வேண்டி வணங்கினால் அவற்றினால் ஏற்பட்ட பாவங்கள் விலகும் என்கிறார்கள்.
  • இந்த ஆலயத்தின் இன்னொரு சிறப்பு என்ன என்றால் இங்கு கல்லினால் ஆன குதிரை சிலையை ஒரு சிற்பி செய்து வைத்துள்ளார். அதில் அதிசயம் என்ன என்றால் கல்லினால் செய்யப்பட்டு உள்ள அதன் இரண்டு கால்களும் குதிரையைப் போல ஆடுமாம். இப்படி கல்லில் ஆடும் சிலையை உலகில் வேறு எங்குமே காண முடியாதாம். அந்த சிலையை செய்த சிற்பி அப்படிப்பட்ட அமைப்பைக் கொண்ட இன்னொரு சிலையை செய்யவே முடியாது என மறுத்து விட்டாராம். ஆகவே ஆலய திருவிழாவில் குதிரை வாகன உலா மிகச் சிறப்பான வைபவமாக உள்ளது.

ஆலய விலாசம்
Vijayaraghava Perumal Koil,
Thiruputkuzhi
Via Balu Chetty Chattiram
Kanchipuram District
Tamilnaadu 631 551

—————————————————–
ஒரு முக்கிய பின் குறிப்பு
இறுதியாக ஒரு சிறு செய்தியை இங்கு தெரிவிக்க ஆசைப்படுகிறேன். ஜடாயு மோட்ஷம் பெற்றதாகக் கூறப்படும் இரண்டு ஆலயங்களின் தல வரலாற்றை குறித்து சில சர்ச்சைகள் இணையதளத்தில் உள்ளன.
திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கூறப்படும் திருப்புள்ளபூதங்குடி அல்லது திருப்புல்லபூதங்குடி எனப்படும் ஆலயம் கும்பகோணத்தில் இருந்து ஸ்வாமி மலைக்குச் செல்லும் வழியில் உள்ளது. அது போலவே திவ்ய தேசத்தின் இன்னொரு ஆலயம் காஞ்சீபுரத்தில் உள்ள திருப்பூக்குழி என்பது. இரண்டு ஆலயங்களும் ஒரே தல வரலாறும் இறந்து போன ஜடாயுவிற்கு இந்த ஆலய வளாகத்தில் ராமபிரான் ஈமக் கிரியை செய்து மோட்ஷம் கொடுத்ததாகவே உள்ளது. காஞ்சீபுரத்திற்கும் , கும்பகோணத்திற்கும் இடையே உள்ள தூரம் 150 மைலுக்கும் அதிகமானது அல்லவா. அப்படி என்றால் எந்த ஆலயத்தின் தல வரலாறு உண்மையானது?
இந்தக் கேள்வி தற்காலத்துக்கு நியாயமானது போலத் தோன்றினாலும் அந்தக் கேள்வியே அபத்தமானது . அதற்குக் காரணம் எப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பும் பக்தர்கள் சில உண்மைகளை சரியாக உணந்து கொள்ளவில்லை என்பது மட்டும் அல்ல இப்படிப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதிலை இதுவரை விளக்கிக் கூற வைஷ்ணவப் பெரியவர்கள் ஏன் முன்வரவில்லை என்பது வருத்தமானது. ஆகவே நான் இது பற்றி சில பண்டிதர்களிடம் விவாதித்துக் கேட்டு அறிந்த விஷயத்தை இங்கே அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ராமபிரான் வாழ்ந்த காலம் பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அந்த காலத்தில் வாழ்ந்து கொண்டு இருந்த தேவ மனிதர்களின் உருவம் தற்காலத்தில் உள்ளது போல ஆறு அடி, ஏழு அடி என்பதல்ல. அவர்கள் சாதாரண மனிதர்களும் அல்ல. தேவ மனிதர்கள். ஒவ்வொரு தேவ மனிதரும் அசாதரணமான உருவங்களைக் கொண்டு இருந்து உள்ளார்கள்.
பல கடவுட்கள் நான்கு கைகள், எட்டுக் கைகள் மற்றும் பன்னிரண்டு கைகளைக் கொண்டவர்கள். ராவணனே பத்து தலைகளைக் கொண்டவன் என்றெல்லாம் புராணங்கள் வர்ணிக்கும்போது அவை சாதாரண உருவம் கொண்ட மனிதர்களால் பெற்று இருக்க முடியுமா?
விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்களின்படி பல்லாயிரகணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த டினாசியர்கள் போன்ற விலங்குகள் ஐம்பதுக்கும் அதிகமான நீளத்தைக் கொண்டவை அல்லவா. மகாபாரதத்தில் வரும் விஸ்வரூப தரிசனத்தைக் கேட்டது இல்லையா ? மூன்று முறை விஸ்வரூப தரிசனம் காட்டிய கிருஷ்ணர் எத்தனை உயரமாக இருந்து இருப்பார்? ராமாயணத்தில் சஞ்சீவி மலையை ஹனுமார் தன் ஒரு கையில் தூக்கிக் கொண்டு வந்ததை சாதாரண உருவம் கொன்டவர்களால் செய்ய முடியுமா?. இராமாயண காலத்தை சேர்ந்த ராவணன் தனது கையினால் கைலாய மலையை தூக்கிக் கொண்டு போனக் கதை இல்லையா ?. சாதாரண மனித உருவைக் கொண்டவர்களினால் அத்தனைப் பெரிய மலையை தூக்க முடியுமா?
ஆகவே அந்த தேவ மனிதர்கள் ஒரு காலடி எடுத்து வைத்தால் அதன் அளவு – உதாரணமாக சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்ல வேண்டும் எனில் – அந்த இடைப்பட்ட தூரத்தைக் கடக்க நூறு அல்லது நூற்றி ஐம்பது காலடி எடுத்து வைத்தால் போதுமான அளவில் அவர்களின் உருவம் அமைந்து இருந்திருக்க வேண்டும். ஆகவேதான் ராமபிரானுக்கும் காஞ்சீபுரத்தில் இருந்து கும்பகோணத்துக்கு வந்த தூரத்தை சில காலடி எடுத்து வைத்தால் போதுமான அளவில் இருந்திருக்க வேண்டும். அல்லது அவர்களால் எந்த இடத்திற்கும் பத்து அல்லது பதினைந்து  நிமிடங்களில் செல்லக் கூடிய சக்தி படைத்தவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்று நம்புகிறார்கள் .  ஆகவே 150 மைல் தூரம் என்பது அவர்களுக்கு ஒரு நொடிப் பயணம்.
இரண்டு ஆலயங்கள் உள்ள இடத்திலுமே – அதாவது காஞ்சீபுரம் மற்றும் கும்பகோணம் போன்ற இடங்களில் உள்ள ஆலயத்தில் – ஜடாயுவை ராமபிரான் ஈமக்கிரியை செய்து உள்ளார் என்பதைக் காணும்போது நிச்சயமாக அந்த இடங்கள் வனப் பிரதேசமாக இருந்து இருக்க வேண்டும்.  அந்தக் காலங்களில் இந்த இடங்கலில்  கட்டிடங்கள் ஏது? ஆக ஜடாயுவின் வனப் பிரதேசம் காஞ்சீபுரம் முதல் கும்பகோணம் வரை நிச்சயமாக நீண்டு இருந்திருக்க வேண்டும். ராமன் லங்காவிற்குச் சென்றது ஆதாம் பாலம் எனப்படும் ராமேஸ்வரம் பகுதியில் இருந்துதான் எனும்போது ராமர் அயோத்தியாவில் இருந்து தென் மாநிலம் வழியே வந்து கும்பகோணப் பகுதிகள் வழியேதான் வந்து இருக்க வேண்டும். ஆதாம் பாலம் என்பது 1,750,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் என்பதினால் ராமபிரான் காலமும் அந்தனை ஆண்டுகளுக்கு முன்னர்தான் இருந்துள்ளது.
தேவலோகம் எனப்படும் சந்திர, சூரிய லோகங்களுக்கு செல்ல ஒரு ராக்கெட் பல மாதங்களை எடுத்துக் கொள்ளும்போது அந்த கால வரலாறுகளில் காணப்படும் கதைகளில் சர்வ சாதாரணமாக தேவ மனிதர்கள் அந்த இடங்களுக்கு பயணித்து உள்ளார்கள் என்பது தெரிகின்றது. ஆறு, ஏழு அடி உயர மனிதர்கள் அப்படி செல்ல முடியுமா? பிரும்மாவுக்கும் விஷ்ணுவிற்கும் காட்சி தந்த சிவபெருமானின் தலை தேவலோகத்தில் இருக்க அவர் கால்களோ பாதாளத்தில் இருந்ததாக புராணக் கதை இல்லையா. அப்படி என்றால் தேவ மனிதர்களான அவர்கள் சாதாரண உருவங்களைப் படைத்தவர்களாகவா இருந்திருப்பார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
அது போலவே ஜடாயுவும் சாதாரண உருவம் கொண்ட பறவை அல்ல. அது மிகப் பெரியப் பறவை. அந்த ஜடாயுவின் ஆதிக்கத்தில் இருந்த வனப் பிரதேசத்தில்தான் ராமபிரான் சீதையுடன் வனவாசனம் சென்ற போது லஷ்மணருடன் தங்கி இருந்ததான ஐதீகம் உள்ளது. அந்த வனப் பிரதேசம் என்பது நூறு அடியோ அல்லது ஆயிரம் சதுர அடியோ கொண்ட பூமி அல்ல. பல்லாயிரக்கணக்கான மைல்களைக் கொண்ட பிரதேசம் அது.
ஆகவே ஜடாயுவின் வனம் கும்பகோணத்தில் உள்ள திருப்புல்லபூதங்குடியைத் தாண்டியும், காஞ்சீபுரத்தில் உள்ள திருப்பூக்குழியையும் தாண்டி இருந்திருக்க வேண்டும். இதற்க்கு இன்னொரு காரணம் ஜடாயு நிறுவியதாக கூறப்படும் தீர்த்தக் குளம்  காஞ்சீபுரத்தில் உள்ள திருப்பூக்குழியில் உள்ளது. ஆகவேதான் அந்த விரிந்துக் கிடந்த வனப்பிரதேசத்தில் விழுந்துக் கிடந்த ஜடாயுவை ராமபிரான் தூக்கிக் கொண்டு சென்று இந்த இரண்டு ஆலயங்களும் உள்ள இடங்களில் ஒன்றில் இறுதிக் கடன்களையும், இன்னொன்றில் தகனமும் செய்து உள்ளார் (நகரம் மற்றும் கிராமங்களில் ஒரு இடத்தில் இறுதிக் காரியங்களை செய்து விட்டு இன்னொரு இடத்தில் சென்று தகனம் செய்வது போல) . ஆகவேதான் இரண்டு இடங்களிலும் ஒரே நாளில் இறந்து போன ஜடாயுவின் இறுதிக் காரியங்கள் நடைபெற்று உள்ளன. தற்காலத்தில் மட்டும் என்ன இறந்தவருக்கு வீட்டில் காரியங்களை செய்துவிட்டு, வெகு தொலைவில் உள்ள சுடுகாட்டில் சென்று தகனம் செய்வது இல்லையா என்ன?
அது மட்டும் அல்ல. இந்த இரண்டு ஆலய வரலாற்றையும் ஊன்று படிக்கும் போது இதற்கான விடையும் தன்னால் கிடைக்கின்றது. இரண்டு ஆலயங்களில் திருப்பூக்குழில் ராமபிரான் ஜடாயுவை தன் மடியிலே வைத்துக் கொண்டு இறுதிக் காரியத்தை செய்து செய்தார் என்றும் அப்படி தகனம் செய்தபோது அந்த சிதையின் வெப்பம் மற்றும் வாசனையைத் தாங்க முடியாமல் போன ஸ்ரீதேவி தாயார் ராமபிரானின் வலது பக்கத்தில் இருந்து இடது பக்கத்திற்குச் சென்று நின்று கொண்டாள் என எனத் தலப் புராண கதையில் வருகின்றது. மேலும் ராமபிரானின் கையில் ஜடாயுவின் ஒரு உருவமும் உள்ளது. ஆனால் அப்படி எந்த செய்தியுமே திருப்புள்ளபூதங்குடி தல வரலாற்றில் இல்லை. அந்த தல வரலாற்றில் ஆலயம் உள்ள இடத்தில் ஈமக்கிரியைகளை ஜடாயுவிற்கு செய்து அங்கே மோட்ஷம் கொடுத்ததாகவே உள்ளது. அங்கு தகனம் செய்ததான கதை இல்லை.
ஆகவே ஜடாயுவை தகனம் செய்த இடம் திருப்பூக்குழி என்றும், ஜடாயு விழுந்துக் கிடந்த இடமமான திருப்புள்ளபூதங்குடியில் ஜடாயுவிற்கு மோட்ஷம் தரத் தேவையான பூர்வாங்க இறுதிக்கான கடன்களை செய்து விட்டு ஜடாயுவை தூக்கிக் கொண்டு அதற்க்கு இறுதிக் காரியங்களை செய்ய திருப்பூக்குழிக்கு ராமபிரான் வந்திருக்க வேண்டும் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் கும்பகோணத்துக்கு செல்லும் வழியில் உள்ள மாயவரம் எனும் ஊருக்குச் செல்லும் வழியில் உள்ள  ஒரு பகுதியான பூந்தோட்டம் எனும் ஊரில் உள்ள திலதர்பணப்புரி  எனப்படும் சிவன் ஆலயத்தில் ராமபிரான் தனது இறந்து போன தந்தைக்கும், ஜடாயுவிற்கும் மோட்ஷம் தருவதற்காக தர்ப்பணம் செய்ததான தல வரலாறும் உள்ளது. இவற்றைக் காணும்போது ஜடாயுவிற்கு மோட்ஷம் தர ராமபிரான் பல இடங்களிலும் அவருக்கான காரியங்களை செய்து உள்ளார் என்பது தெளிவாகும்.
ஆகவே இந்த இரண்டு திவ்ய தேச ஆலயங்களுமே ஜடாயு மோட்ஷ சம்மந்தப்பட்டவைதான். அதில் சந்தேகமும் இல்லை, சர்ச்சைக்கும் இடமில்லை. இரண்டுமே ஜடாயுவிற்கு மோட்ஷம் தந்த ஆலயங்களின் இரண்டு பகுதிகளே. ஆகவே இந்த இரண்டு திவ்ய தேசங்களின் வரலாற்றை சந்தேகப்படுவது தேவையற்ற ஒன்று என்பது என் கருத்து.