இறந்தவர்கள் பிழைப்பதும்,
உயிர் பிச்சை கிடைப்பதும்
நிஜமா ?
 
சாந்திப்பிரியா
ஒருமுறை ஒரு பண்டிதருடன் மரணம் அடைந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று எழுவதும், மரணத்தை தழுவும் நிலையில் உள்ளவர்கள் அதிசயமாக பிழைப்பதும் உண்மையாக இருக்குமா? பிறக்கும்போதே ஒருவனுடைய ஆயுள் நிர்ணயிப்பட்டு விடுகின்றது. விதியை மீறி எதுவும் நடக்க முடியாது. விதியை மதியால் வெல்ல முடியாது, அதை வெல்ல முடியும் என்பது மாயை, மரண நேரம் வந்து விட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது என்பன ஒரு சாரரின் நம்பிக்கை. இந்த பரவலான நம்பிக்கைகளை மீறி யாராலும் விதியை மாற்ற முடியுமா, ஜாதகப்படியும், நாடி ஜோதிடப் படியும் இத்தனைதான் ஆயுள் என கூறப்பட்டவர்கள் இறக்கும் நிலைக்கு சென்றப் பின் மீண்டும் உயிர் பெற இயலுமா, சாதுக்கள், சன்யாசி, தெய்வப் பிறவிகளினால் ஒருவருக்கு உயிர் பிச்சை தர முடியுமா, மரணம் அடைய உள்ளவனுக்கு வாழ்கையை நீடிக்க முடியுமா போன்ற கேள்விகளுக்கு விடை காண பல முறை பலரையும் சந்தித்து விடைக் காண முயன்றுள்ளேன். அந்த கட்டத்தில் சிலவற்றை நான் விவாதித்துக் கொண்டு இருந்தபோது கிடைத்த செய்திகள் விஜித்திரமானவைகளாக இருந்தன.
நான் சாயிபாபா பல முறை இறந்து போனவர்களை பிழைக்க வைத்துள்ளதான செய்திகளை படித்து உள்ளேன். ஏன் அவரே கூட மூன்று நாட்கள் இறந்து விட்டு மீண்டும் எழுந்து வந்துள்ளதாக படித்துள்ளேன். அதே போலவே இந்து புராண/ மாபெரும் சாதுக்கள் சன்யாசிகள் வாழ்கை சரித்திரங்களில் கூட இறந்தவர்கள் பிழைக்க வைக்கபட்டதான செய்திகள் உள்ளன. ஆதி சங்கரர் கூடுவிட்டு கூடு பாய்வது போல தன்  உடலில் இருந்து வெளியேறி விட்டு சில நாட்கள் பின்னர் திரும்பி வந்து உள்ளார் என்ற கதையும் உள்ளது.  பெங்களூரில் இருந்த மகான் ஸ்ரீ சிவபால யோகி, ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபா, ஸ்ரீ மானிக் பிரபு மற்றும் ஸ்ரீ சமர்த்த மகராஜ் போன்றவர்கள் இறந்தவர்களை பிழைக்க வைத்துள்ள சம்பவங்கள் அவர்களின் வரலாற்றில் காணப்படுகின்றது.
அந்த முயற்சியில் ஒருவரது விதி எப்படி மாற்றப்படுகின்றது, மரணம் அடைந்தவர் எப்படி பிழைத்தார், பிழைக்க முடியாமல் கிடப்பவர்கள் திடீர் என எப்படி பிழைக்கின்றார்கள் போன்றவற்றை குறித்து பல நாட்களுக்கு முன்னர் யதேற்சையாக சந்தித்த ஒரு பண்டிதரிடம் விளக்கங்களைக் கேட்டபோது சில செய்திகள் கிடைத்தன. நான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருபதாம் தேதியன்று வெளியிட்டு இருந்த ஒரு கட்டுரையில் கூறி இருந்த (குலதெய்வம் என்ற கட்டுரை) அதே பண்டிதரிடம் இருந்து கிடைத்த செய்திதான் இதுவும். அவர் கூறிய செய்திகளை பற்றி மேலும் விவரங்கள் கிடைக்குமா என்று இத்தனை நாட்களும் தேடி அலைந்து விட்டு இந்தக் கட்டுரையை எழுதி உள்ளேன். அதனால்தான் இந்தக் கட்டுரையை உடனேயே பிரசுரிக்கவில்லை. நாம் செய்யும் மிகப் பெரிய தவறு நகரங்களில் உள்ள பிரபலமான பண்டிதர்களின் கருத்தை மட்டும் கேட்டு அதை கிரகித்துக் கொள்கிறோம். அவர்கள் பாண்டித்தியங்களை படித்து இருந்தாலும், அதற்கு மீறிய புராண இதிகாசங்க செய்திகளை படித்து அறிந்து இருக்கமாட்டார்கள். காரணம் அவர்களுக்கு நேரம் இருப்பது இல்லை.  முன்னர் ஆலயங்களில் உள்ள குளக் கரைகளில் அவர்கள் அமர்ந்து கொண்டு விவாதித்துக் கொண்டு இருப்பார்கள்.  இப்போதோ  அவர்களை நகர வாழ்கை முற்றிலும்  மாற்றி உள்ளது. அது பற்றி அதிகம் கூற விரும்பவில்லை. அது இந்தக் கட்டுரைக்கு தேவையும் இல்லை. நான் பார்த்தவரை உண்மையில் நகரப் புறங்களில் உள்ள பண்டிதர்களை விட கிராமப் புறங்களில் உள்ள பண்டிதர்கள் நிறைய விஷயங்களை அறிந்தவர்களாக இருக்கின்றார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அதுவும் ஆலயங்களில் சில நேரங்களில் மிக்க ஏழ்மை நிலையில் சுற்றித் திரியும் பண்டிதர்கள் வாயைக் கிளறினால் நாம் இதுவரை கேள்விப்படாத பல அபூர்வமான விஷயங்கள் நமக்குக் கிடைக்கின்றன. அதற்குக் காரணம் அவர்கள் பரம்பரைப் பரம்பரையாக கேட்டதையும், படித்ததையும் நமக்குக் கூறுகிறார்கள். அவர்கள் அனுபவத்தில் உயர்ந்தவர்கள். காலம் காலமாக பலவற்றை கேட்டு அறிந்து வைத்துள்ளவர்கள்.  நாமும் அப்படிப்பட்ட கிராமப்புற பண்டிதர்களை அணுகி அவர்களது கருத்துக்களை கேட்க முயலுவது இல்லை.
இறந்தவர்களை பிழைக்க வைக்க முடியும் என்ற கூற்று சரியோ, தவறோ நமக்குத் தெரியாது. காரணம் அவற்றுக்கு எழுதப்பட்ட ஆதாரம் இல்லை. ஆனால் அதே நேரத்தில் மகான்களின் சரித்திரங்களில் இறந்தவர்களை பிழைக்க வைத்துள்ள நிகழ்சிகள் எழுத்து வடிவில் காணப்படுகின்றன எனும்போது அவற்றைக் குறித்து பண்டிதர்கள் சிலவற்றைக் கூறும்போது அதை நம்மால் தள்ளவும் முடியவில்லை, ஏற்கவும் முடியவில்லை.

இந்து தர்மத்தின்படி பிறப்பவர்கள் இறக்கிறார்கள், இறப்பவர்கள் பிறக்கிறார்கள். அது போல ஆத்மாவை அழிக்க முடியாது. அது ஊடுறுவி அமர்ந்து கொள்ளும் அதன் உருவங்கள் மட்டுமே மாறும் போன்றவற்றைப் பற்றி பகவத் கீதை போன்றவற்றில் விளக்கமாகவே கூறப்பட்டு உள்ளது. ஜனன மரணம் மற்றும் ஆத்மாக்களைப் பற்றிய விவரங்கள் கருட புராணம், பத்ம புராணம், பாகவதம் போன்றவற்றிலும்  காணப்படுகின்றது. அவற்றை எல்லாம் படித்தும், நான் கேட்டறிந்தவற்றைக் கொண்டும்  இறந்தவர்களையும், இறக்கும் நிலையில் உள்ளவர்களையும் பிழைக்க வைத்து உயிர் பிச்சை தர முடியுமா என்பது பற்றி சில  தகவலை கூறுகிறேன். படியுங்கள்.

ஒருவர் இறந்தப் பின் உடனேயே அவர் ஆத்மா அங்கிருந்து சென்று விடாது. பத்து மாதத்தில் ஒரு குழந்தை பிறந்து விடுவது போல பத்து நாட்களில் அதை இன்னொரு பிறவி எடுக்க வைக்க வேண்டும் என்பதற்காக இறந்தவர் உடலை விட்டு வெளியேறிய ஆத்மாவை பத்து நாட்கள் அதை அந்த இடத்திலேயே சுற்றித் திரிய யமதர்மராஜர் அனுமதித்து உள்ளார். இதன் காரணம் யமதர்மராஜருக்கும் அந்தக் கணக்குகளைப் பார்த்து முடிக்க பத்து நாட்கள் அவகாசம் வேண்டி உள்ளதாம். (யமனுக்கும் பத்து நாட்கள் வேண்டும் என்பது ஒரு வாய் வார்த்தைக் கணக்கே. பத்து என்ற எண்தான் முக்கியம்) . மேலும் உடலை விட்டு வெளியேறிய அந்த ஆத்மாவை பிரபஞ்சத்தில் சுற்றித் தெரியும் மற்ற தீய கணங்கள் சூழ்ந்து கொண்டு தம்முடன் பிடித்து வைத்துக் கொள்ளும்போது அவற்றின் பிடிகளில் இருந்து அந்த ஆத்மாவை மீட்டு அது நற்கதிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக  பத்து நாட்கள் மந்திரங்களை ஓதி சில சடங்குகளை செய்யும்போது அனைத்து  தீய ஆவிகளும் கணங்களும் அதை விட்டு விலகி விட அந்த ஆத்மா தூய்மையாகி தனது அடுத்த பயணத்திற்கு தயாராகி விடுகின்றது.

படம்-1
 இறந்து போனவர் உடலில் இருந்து வெளியேறும் ஆத்மாவை 
முதல் பத்து நாட்களும் சுற்றித் திரியும் ஆவிகள்/கணங்கள் 

அப்போதுதான் யமதர்மராஜர் அந்த ஆத்மாவை தன்னுடன் அழைத்துச் சென்று அதன் கணக்கு, வழக்குகளைப்  பார்த்து அது செல்ல வேண்டிய இடத்தை நிர்ணயிக்கின்றார். அது மீண்டும் எப்போது பிறப்பு எடுக்கும்? அப்படி பிறப்பவற்றுக்கு அதன் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை மீறி  உயிர் பிச்சை கிடைக்குமா?? இப்போது கீழே உள்ளதை கவனமாகப் படியுங்கள்.

ஆத்மா, பரமாத்மா எனும் ஒவ்வொரு ஜீவனும் 13 ஜென்ம காலங்களைக் கொண்டு பிரும்மனால் படைக்கப்பட்டு உள்ளது. படைப்பின் தத்துவப்படி   ஆத்மாவின் 13 ஜென்ம காலம் எனப்படுவது  சுமார் 781 ஆண்டுகளைக் கொண்டதாம்.  ஒவ்வொரு  ஆத்மாவும்  படைக்கப்பட்டவுடன் அதற்கு 13 ஜென்ம காலங்கள், அதாவது -781- ஆண்டுகள் வாசம் என்ற வாழ்கை நிர்ணயிக்கப்படுகின்றது.  781 ஆண்டுகளைக் கடந்ததும்  யமலோகத்துக்கு செல்லும் அந்த ஆத்மாக்கள் ஆத்மா அழிந்து விடாது. மாறாக சில காலம் எந்த ஜென்மமுமே  கொடுக்கப்படாமல் பிரும்ம லோகத்தில் தங்க வைக்கப்பட்டு  சில காலம் கழிந்ததும் இன்னொரு 13 ஜென்ம காலத்தை எடுக்க அது அனுப்படுகின்றது. அந்த இரண்டு ஜென்ம காலங்களில் உள்ள ஆத்மாக்களுக்கு எந்த சம்மந்தமே இருக்காது. (ஜென்ம காலத்தின் வருடக் கணக்கை படத்தில் காணவும்).

படம்-2

13 ஜென்ம காலத்தினை விளக்கும் உதாரணப் படம். 
இதில் காட்டப்பட்டு உள்ளதைப் போல ஆத்மா வரிசையாக  
ஒரு வருட காலம் முதல் படிப்படியாக 10 , 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 
மற்றும் 120 என பிறப்பு எடுப்பது இல்லை.  அந்த வாழ்கை காலம் 
எப்படி வேண்டுமானாலும் மாறி அமைந்து இருக்கும். 
இது ஒரு உதாரணப் படம்தான்.  ஆனால் ஆத்மாவின் 
மொத்த ஜென்ம காலம் 13 மற்றும் மொத்த வாழ்வு காலம் 781 வருடங்கள்தான்.
ஒவ்வொரு ஆத்மாவும் அந்த பதிமூன்று ஜென்ம காலத்தில் ஒன்று முதல் 120 ஆண்டுகள் வரை வாழும். அதாவது ஒரு வருட காலம் முதல் 120 வருடங்கள் ஆயுளைக் கொண்ட 13 நிலைகளை  781 ஆண்டுகளில் அது எடுக்கும். அப்போது ஒவ்வொரு  பிறப்பிலும்  அது எத்தனை ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற தலைவிதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளதோ அத்தனை ஆண்டுகள் வாழும். ஆனால் எத்தனை ஆண்டுகள் எந்தப் பிறவியில் அது இருந்தாலும், வாழ்ந்தாலும் அந்த ஆத்மாவின் மொத்த ஜென்ம வருடம் 781 தான். மேலும் அவற்றின் வாழ்க்கைக் காலம் வரிசையாக ஒரு வருட காலம் முதல் படிப்படியாக 10 , 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, மற்றும் 120 என்று இருக்காது. அது 30 , 20, 10, 100, 50, 60, 70, 80, 90, 40, 120, மற்றும் 110 என்றும் இருக்கும் அல்லது 120 , 20, 50, 80, 10, 60, 70, 100, 90, 40, 30, மற்றும் 110 என்று அல்லது எப்படி வேண்டுமானாலும்  இருக்கும். அது பிரும்மனைப் பொறுத்து அமையும். கீழே உள்ள படத்தைப் பார்க்கவும் .
படம்-3
 பிரும்மனைப் பொறுத்து அமைவதே 
 ஒவ்வொரு  ஆத்மாவின் ஜென்ம காலமும்  
இந்த நிலையில்  இறந்தவர்களையும், இறக்கும் நிலையில் உள்ளவர்களையும் பிழைக்க வைத்து உயிர் பிச்சை எப்படி தரப்படுகின்றது என்பதைப் பாருங்கள்.   உதாரணமாக 13 ஜென்ம காலத்தை எடுத்து வந்துள்ள ஒரு ஆத்மா அதன்  ஐந்தாம் ஜென்ம காலத்தில் (பிறவியில்) 40 வருட காலம் வாழும் வகையில் அல்லது அதன் பதினோராம் ஜென்ம காலத்தில் 100 வருட காலம் வாழும் வகையில் பிறப்பு எடுத்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்த காலகட்டத்தின் முடிவில் அதாவது 40 அல்லது 100 ஆம் வருட முடிவில் அதன் வாழ்கை முடியும் நிலை வந்து  விட அது வசிக்கும்  உடலின் உறவினர் அந்த ஜீவன்  மரணம் அடையக் கூடாது என வேண்டிக் கொள்ளும்போது  யாகங்களை செய்வதினாலோ ,  யாராவது முனிவர்கள் அல்லது மகான்கள் மூலம் மகிமைக் கிடைத்து  அது உயிர் பிழைத்து விடுமா என்றால், முடியும் என்பதே சரியான பதில்.  ஆனால் அந்த முனிவரோ, மகானோ, செய்யப்படும் யாகங்களோ  அவ்வளவு சக்தி பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும், தேவ சக்திகளுடன் இணைந்து உள்ளவர்களாக   இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் ஜனன-மரணத்தை ‘மறு சரிக் கட்டல்’ செய்ய அதை நிர்ணயிப்பவரிடம் பேசி (அவர் யமதர்மராஜன் என்று கூறினார்) உயிர் பிச்சை தர முடியும் என்றார் . அது எப்படி நடக்கும் ?
படம்-4
மேலே உள்ள உதாரணத்தில் இரண்டாவது  ஜென்ம காலத்தில் 10 வருட வாழ்கையை உயிர் பிச்சைப் பெற்று 15 வருட வாழ்க்கையாக ஆக்கி விட்டால் அந்த நீட்டிக்கப்பட்ட ஐந்து வருட காலத்தை அதற்க்கு அடுத்த ஜென்ம வாழ்கையிலோ அல்லது  மூன்று முதல் பதிமூன்றாவது ஜென்ம காலத்தில் ஏதாவது ஒன்றில் கழிக்கப்பட்டு விடும். அது போல ஆறாம்  பிறவி ஜென்ம காலத்து 50  வருட வாழ்கையை உயிர் பிச்சைப் பெற்று 58 என நீட்டி விட்டால் அந்த எட்டு  வருட நீடிக்கப்பட்ட காலம் அதற்க்கு அடுத்த ஜென்ம வாழ்கையிலோ அல்லது எட்டு  முதல் பதிமூன்றாவது ஜென்ம காலத்தில் ஏதாவது ஒன்றில் கழிக்கப்பட்டு விடும். இதைதான் உயிர் பிச்சைத் தருவது என்கிறார்கள். இது நடந்துள்ளது. நடக்கும் என்பதே உண்மை. (படத்தை வரையாமல் வாயால் அவர் விவரித்ததை அனைவறும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் படமாக தந்துள்ளேன்). ஒரு விஷயத்தை கவனியுங்கள். 781 வருட கால வாழ்க்கையில் அமைந்து உள்ள 13 ஜென்ம காலங்களை வகுத்துப் பார்த்தால் 60 .08 என வரும். (படம்- 2 ஐ  பார்க்கவும் ) அதனால்தான் 60 ஆம் வயதில் ஆயுள் விருத்தி தரும் சாந்தி ஹோமம் செய்து கொள்ள வேண்டும் என்பது தோன்றியதாம். 
 ஆத்மாவிற்கு மறு ஜனனம் தரப்படும்போது அது செய்துள்ள பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவை மனிதர்களாக மட்டும் அல்ல மிருகங்களாக, செடி கொடிகளாகப் பிறக்கின்றன. ஒரு விதத்தில் பார்த்தால் மனித வாழ்கை மூன்றில் ஒரு பங்குகூட இருக்காது. இந்த  பிரபஞ்சத்தில் மனிதர்களை விட செடி கொடிகளும், மிருகங்கள், புழு பூச்சிகளே அதிக ஜீவராசிகளாக உள்ளன. ஒவ்வொரு ஜென்ம காலத்திலும் ஒவ்வொரு மகான்கள் மூலம் அப்படி உயிர் பிச்சைக் கிடைத்துக் கொண்டே இருக்குமா என்றால் அது நடக்காது என்றார் அந்தப் பண்டிதர். கடைசி கட்டமான பதிமூன்றாவது ஜென்ம காலப் பிறவியில் ஆயுளை நீட்டிக்கவே முடியாது. ஆகவே உயிர் பிச்சை என்பது என்பது மனித வாழ்க்கையில் இருக்கும்போதுதான் கிடைக்கும்.  மிருகம் மற்றும் செடி கொடிகளின் ஆயுளில் கிடைக்காது.
படம்-5 
 சிவலோகம் மற்றும் விஷ்ணு லோகம் செல்லும் 
ஆத்மாக்கள் மறு பிறப்பு எடுக்காது
அது சரி. பல ரிஷி முனிவர்கள் மீண்டும் பிறப்பு எடுக்காத நிலைக்கு சென்று விடுகிறார்களே. அப்படி என்றால் அந்த 13 ஜென்ம காலம்  என்ற விதி சரியாக உள்ளதாக தோன்றவில்லையே என்று கேட்டதற்கு அவர் கூறினார் ‘ இந்தக் கேள்வி மிக நியாயமான கேள்விதான். 13 ஜென்ம காலம் எடுத்து அனுப்பப்படும் பிறவியில் சிலர் செய்யும் அபார புண்ணியங்கள், யாகங்கள், ஹோமங்களினால் அவர்களுக்கு சிவலோகப் பிராப்தி, வைகுண்டப் பிராப்தி,  மீண்டும் பிறவா நிலை  போன்றவைக் கிடைக்கின்றன. அப்போது சிவலோகப் பிராப்தி, வைகுண்டப் பிராப்தி, மீண்டும் பிறவா நிலை போன்றவைக் கிடைத்த அந்த ஆத்மாக்கள் யம லோகத்தில் இருந்து அந்தந்த லோகங்களுக்கு சென்று அங்கு சேவை செய்தவண்ணம் இருக்கும். அவை மீண்டும் அங்கிருந்து பிரும்ம லோகத்துக்கு பிறப்பு எடுக்க  வருவதில்லை. ஆனால் இப்படிப்பட்ட ஆத்மாக்கள் மிகக் குறைவானவையே ‘.
படம்-6
இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் மூன்றில் ஒரு பங்குதான்.
மற்றவை-செடிகொடிகள், புழு, பூச்சிகள், மிருகங்கள் போன்றவை
மீதிப் பகுதியாகும். ஆகவே 13 ஜென்ம காலத்தில்  மிகக் குறைவான 
அளவிலேயே மனித ஜென்மத்தை ஒரு ஆத்மா எடுக்கும்
 எத்தனை முறை ஒரு ஆத்மா மனிதப் பிறவி எடுக்கின்றது, எத்தனை முறை பிற பிறவிகள் எடுக்கும் ? சிருஷ்டியின் விதிப்படி ஒரு ஆத்மா படைக்கப்பட்டு 13 ஜென்ம காலத்துக்கு அனுப்பப்படும்போது அதன் ஆரம்பமும், முடிவும் மட்டும் மனிதப் பிறவியாக அமைந்து இருக்க வேண்டும் என்பதே பிரும்மனின் கட்டளையாக இருந்துள்ளது . மற்ற பிறவிகள் அதாவது இரண்டாம் ஜென்ம காலம் முதல் பன்னிரண்டாம் ஜென்ம காலம் வரை அந்த மனிதப் பிறவிகளில் அவரவர்கள் செய்துள்ள பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, பெற்றுக் கொண்டுள்ள சாபங்களுக்கு ஏற்ப அவை மனிதராக இல்லாமல் பிற நிலைகளிலும்- பூச்சியாக, புழுவாக, செடி, கொடியாக, மிருகங்களாக எப்படி வேண்டுமானாலும் பிறக்க இயலும். ஆகவே உயிர் பிச்சை என்பதற்கு கணக்கு இல்லை. மனிதப் பிறவியில் மட்டுமே கிடைக்கும் என்பது மட்டுமே தத்துவார்த்தமான உண்மை.

அது சரி, ஒரு ஆத்மாவின் ஜென்ம காலத்தில் முதல் கட்டத்திலும் முடிவு கட்டத்திலும் அது ஏன் மனிதப் பிறவியாக இருக்க வேண்டும் ? அதற்குக் காரணம் இந்த பிரபஞ்சத்தை பிரும்மா சிருஷ்டி செய்தபோது முதலில் மனித உருவில் இருந்த –அன்கீரசா, அத்ரி, வசிஷ்டர், புக்லச, புலத்தியா, மார்கசி மற்றும் கிராத– போன்ற ஏழு ரிஷி முனிவர்களைப் படைத்தார். அதன் பின்னர்தான் பிற ஜீவராசிகள் தோன்றின. அதனால்தான் முதலும் முடிவும் மனிதப் பிறவிகளாக உள்ளன.
ஆகவே இறந்தவர்கள் உயிர் பெற்று எழுவதும், ஜோதிட ரீதியாக இறந்து போக வேண்டியவர்கள் மரணம் அடையும் தருவாயில் ஜோதிடத்தை மீறிய செயலாக உயிர் பெற்று எழுவதும் நடக்கக் கூடிய சம்பவங்களே. இதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை என்பதே அந்த பண்டிதர் கூறிய கருத்து .
உங்கள் கருத்து என்னவோ? 

கீழே தரப்பட்டு உள்ள படங்கள் மேலே  உள்ள  கட்டுரையின் 
  தத்துவத்தை விளக்கும் படங்கள்
 
 
படம்-7
நமக்கு மேலே ஏழு  தேவ லோகங்களும், 
கீழே ஏழு பாதாள லோகங்களும் உள்ளன.
 படம்-8
ஒரு படைக்கப்பட்ட ஆத்மா 13 வருட ஜென்ம காலத்தில் வாழ 
பிறப்பு எடுப்பது பிரும்ம லோகத்தில் இருந்துதான். 
முதலில் அது மனிதப் பிறவியையே எடுக்கின்றது 
படம்-9
ஒவ்வொரு  கால வாழ்வு முடிந்ததும் அது 
முதலில் செல்வது யமலோகத்துக்குத்தான்
படம்-10
யமலோகம் செல்லும் ஆத்மா அதன் பாவ 
புண்ணியத்துக்கு ஏற்ப அடுத்தப் பிறவி எடுக்கும்வரை  
தங்குவதற்கு  நரகம் அல்லது சொர்கத்துக்கு செல்லும்
படம்-11
யமலோகம் செல்லும் ஆத்மா அதன் பாவ 
புண்ணியத்துக்கு ஏற்ப அடுத்தப் பிறவி எடுக்கும்வரை  
தங்குவதற்கு  நரகம் அல்லது சொர்கத்துக்கு செல்லும். 
அங்கு தண்டனை அனுபவித்தப் பின் மீண்டும் பிறவி 
எடுக்க  பிரும்ம லோகத்துக்கு செல்லும். 

படம்-12

  தனது அடுத்த பிறவியை எடுக்க பிரும்ம லோகத்துக்கு  
செல்லும் ஆத்மாக்கள்  அதன் பாவ புண்ணியங்களுக்கு 
ஏற்ப  மீண்டும் மனிதப் பிறவியையோ அல்லது 
வேறு- பூச்சி,புழு, மிருகம், ஊர்வன, செடி கொடிகள் என – 
அந்தந்தப் பிறவி எடுக்க அது  அனுப்பப்படும்.

 

படம்-13
ஒரு முக்கியமான விஷயம் என்ன என்றால் பாதாள லோகத்தில் இருந்து எடுத்தப் பிறவிகளில் உள்ளவை பிறவி முடிந்ததும் யமலோகம் சென்றாலும் அவை சொர்க்கம்-நரகங்களுக்கு அனுப்பப்படுவது இல்லை. காரணம் மனித வாழ்வில் செய்த பாவத்திற்கு பரிகாரமாகவே – பூச்சி,புழு, மிருகம், ஊர்வன, செடி கொடிகள் என – பிறவி எடுத்து பாதாள லோகத்திற்கு செல்வதினால் பாதாள லோகத்தின்  பிறவி முடிந்தது  திரும்பும்  ஆத்மாக்களுக்கு தண்டனைகள் வழங்காமல் அந்தப் பிறவிகளின் கணக்குகளை எடுத்துக் கொண்டு அவற்றை பிரும்ம லோகத்துக்கு பாவ புண்ணிய வழக்குகளுடன்  அடுத்தப் பிறவி என்ன எடுக்க வேண்டும் என்பதைக் கூறி  யமராஜர் அனுப்பி விடுவார். அதற்கேற்ப பிரும்மா அந்த ஆத்மாக்களை மீண்டும் பிறவி எடுக்க அனுப்புவார். அந்தந்தப் பிறவி முடிந்ததும் அந்த ஆத்மா மீண்டும் மீண்டும் 13 ஜென்ம கால பிறவி  முடியும்வரை யமலோகம், பிரும்ம லோகம் எனச் சென்று விட்டு 781 ஆண்டுகள் பிறவி எடுத்தபடி இருக்கும். அத்துடன் அதன் 13 ஜென்ம காலமும்  முடிந்து விடும்.