பெரிய பாளையத்தம்மன் ஆலயம்
சாந்திப்பிரியா
சென்னை ராயபேட்டை பீட்டர்ஸ் ரோடு பகுதியில் உள்ள ஒரு சிறிய ஆனால் மிகப் பழைய ஆலயம் உள்ளது பலருக்கு தெரிந்து இருக்க முடியாது. பரசுராமரின் தாயார் ஆன ரேணுகா தேவிக்கு கட்டப்பட்டு உள்ள அந்த ஆலயம் 600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். இந்த ஆலயத்தின் வரலாறு இதுதான்.
1764 ஆம் ஆண்டு நல்ல தம்பி என்பவர் மூலம் ஒரு காணி நிலம் ஆங்கிலேயர் காலத்தில் ஒரு நிலம் பெறப்பட்டு அங்கு ரேணுகா தேவியின் ஆலயம் அமைக்கப்பட்டதாம். அந்த ஆலயத்தில் ரேணுகா தேவியின் சிலைக்கு அடியில் இரண்டு உருவங்கள் உள்ளன. மேலே உள்ள ரேணுகாதேவி சுயம்புவாக அங்கு வந்து அமர்ந்து உள்ளதான நம்பிக்கை உள்ளது. முதலில் அந்த பீடத்தின் கீழே காணப்படும் மூல விக்ரகங்கள் மட்டுமே இருந்துள்ளது என்றும் பின்னர் ரேணுகா தேவி தானே வந்து இங்கு அமர்ந்ததாகவும் நம்புகிறார்கள். புராண நம்பிக்கையின்படி இந்த ஆலயத்தில் உள்ள அம்மனின் தலையை பரசுராமர் வெட்டி எரிந்து விட்டதினால் உடம்பு முழுவதும் பூமியில் புதைந்து உள்ளதாகவும், தலைப் பகுதி மட்டும் வெளியில் உள்ளதாகவும் கூறுகிறார்கள். பரசுராமர் சரித்திரத்தில், அவருடைய தாயார் ரேணுகா தேவியின் தலையை வெட்டி எறிந்து விடுமாறு பரசுராமரின் தந்தை ஆணையிட்ட கதை உள்ளது. அதன் பிரதிபலிப்பாகவே இங்குள்ள சிலையின் தலைப் பகுதி மட்டும் பூமிக்கு மேலே உள்ளதாம். அதனால்தான் இந்த ஆலயத்தையே உண்மையான பெரியபாளைய அம்மன் ஆலயமாக கருதுகிறார்கள். அதனால்தான் ஆலய உத்சவ காலத்தில் பரசுராமர் மற்றும் போத்திராஜா எனும் ஊர் காவல் தெய்வம் போன்றவர்களை ஆலயத்தின் ஊர்வலத்தில் முன்னால் எடுத்து வருவார்களாம்.
ஆலயத்தின் வாயில் மிகச் சிறியதாக உள்ளது. அதன் காரணம் அதற்குள் உள்ள ரேணுகாதேவியின் உருவம் தானாகவே பெரியதாகி விட்டதினால் அதை சேதப்படுத்தாமல் இருக்க அந்த வாயிலை பெரியதாக்க முடியவில்லையாம்.
அந்த ஆலயத்தில் பலி பீடம் உள்ளது. முன் காலத்தில் இங்கு பலியிடும் பழக்கம் இருந்து வந்ததாகவும், அதற்காகவே இது நிறுவப்பட்டதாகவும், ஆனால் அரசின் கட்டளைப்படி அந்த பலியிடும் பழக்கம் இங்கு நிறுத்தப்பட்டு விட்டதாகவும் கூறுகிறார்கள். அதற்கு மாறாக . ஆலயத்துக்கு இன்றும் ஆடு மாடுகள, கோழிகளை தானமாகத் தந்து விடுகிறார்கள்.
1941 ஆம் ஆண்டு துவாரகாபாலகரின் முன்னால் உள்ள கோபுரம் மாசிலாமணி முத்தளியார் என்பவரால் செய்து தரப்பட்டு உள்ளது. ஆலயத்தில் ஒரு முனீஸ்வரர் சன்னதியும் உள்ளது.
இந்த ஆலயம் 400 அல்லது 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான ஆலயம் என்றும் அங்கு வழிபாடுகள் நடந்துள்ளன என்பதற்கு ஆதாரமாக பத்து நாட்கள் தெப்பத் திருவிழா அங்கு நடைபெற்றுள்ள, அங்கு ஒரு குளம் இருந்துள்ள செய்தியை அந்த ஆலயத்தின் பத்து நாள் உற்சவத் திருவிழாவிற்கு 1899 ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ள துண்டு அறிக்கை (Notice) மூலம் அறிய முடிகின்றது. 1822 முதல் 1856 வரை இந்த ஆலயத்தின் பரம்பரை தர்மகர்த்தாவாக திரு சின்னத் தம்பி நாயக்கர் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அதைத் தவிர 1914 ஆம் ஆண்டு இந்த ஆலயத்தில் 10 நாட்களுக்கு பிரும்ம உற்சவம் நடைபெற்று உள்ளது. 1973 ஆம் ஆண்டில் ஆலய நிர்வாகத்திற்காக ஒரு தலைமை அதிகாரியும் (Executive Officer) நியமனம் செய்யப்பட்டு இருந்தார். இன்றைக்கும் ஆலய நிர்வாகம் ஒரு அறக்கட்டளையின் நிர்வாகத்தில்தான் உள்ளது.
 
பண்டிகை நாட்களில் அம்மனின்  காட்சிகள்  
  • ஒன்பது நாட்கள் நடைபெறும்  ஆடி பிரும்மா உற்சவ பண்டிகையில் வெளியூரில் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை வணங்குகிறார்கள். ஒன்பது நாட்களும் அம்மனின் ஊர்வலம் நடைபெறும். பக்தர்கள் வீடுகளில் வாயிலில் விளக்கேற்றி ஊர்வலம் வரும்போது வீட்டு முன்னால் அம்மனுக்கு தேங்காய் உடைப்பார்கள். தெருக்கள் முழுவதும் தேங்காய் சிதறுகளாக கிடக்கும்..
  • அக்னி நட்சத்திர தினத்தன்று, இந்த அம்மனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து குளிர வைக்கின்றார்கள்.
  • ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தினத்தன்று திருவிளக்கு பூஜை நடைபெறும்.
  • மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளி எழுச்சி நடைபெறும்.
  • பத்து நாட்கள் நடைபெறும் நவராத்தரி திருவிழாவின் அனைத்து நாட்களிலும் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறாள்.
  • சித்ரா பௌர்ணமி  தினத்தன்று 108 பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வருகிறார்கள்
 
சித்ரா பௌர்ணமி விழாக் காட்சிகள் 
  • ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை குங்குமக்காப்பு மற்றும் மஞ்சள் காப்பு சாத்தப்பட்டு எழுமிச்சைப் பழங்கள் பக்தர்களுக்கு இலவசமாக தரப்படும். அதைப் பெற்றுக் கொண்டால் குறைகள் தேறும் என்பது ஐதீகம். அந்த குங்குமக்காப்பு மற்றும் மஞ்சள் காப்பு செலுத்த முன் பதிவு செய்து கொள்ள வேண்டுமாம். காரணம் சாதாரணமாக ஒரு வருடத்துக்கு முன்னரே வெள்ளிக்கிழமைகள் காப்பிற்கு பதிவு ஆகி விடுகிறதாம்.
  • இங்கு வந்து அம்மனை வேண்டுவதின் மூலம் அவரவர் குறைகள் தீர்கின்றது என்ற நம்பிக்கை உள்ளது.