பாராயணம்

 

 

மூன்றாம்  நாள் பாராயணம்

ஓம்  தத்தாத்ரேயாய வித்மஹே

யோகீஸ்வராய  தீமஹி

தன்னோ தத்த ப்ரசோதயாத்

 

ஸ்ரீ தத்தாத்ரேயர் ஆசி பெற்ற காத்தவீர்யன் கதை

மார்கண்டேய புராணத்தில் ஸ்ரீ தத்தாத்ரேயர் எப்படி எல்லாம் தன்னை பூஜிப்பவர்களுக்கு உதவி செய்து உள்ளார் என விரிவாக கூறப்பட்டு உள்ளது. ஆனாலும் பிரகிருதியில் (பூமி) நடந்த ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. அதனால் வரங்களைப் பெற்று அழிந்தவர்களும் உண்டு, பிறர் அழியக் காரணமான சம்பவங்களும் உண்டு. ஸ்ரீ தத்தாத்ரேயர் சரித்திரத்தில் அவர் வாழ்க்கையில் முக்கியமாக பங்கு பெற்ற கார்த்தவீர்யன், பரசுராமர், மற்றும்  ரேணுகாதேவி போன்றவர்களின் கதையைக் கூறாமல் இருந்தால் அது நிறைவான தத்த சரித்திரமாக இருக்க முடியாது. கார்த்தவீர்யன் கதையின் மூலமாக ஒரு பகுதியில், பரசுராமர் மற்றும் ரேணுகாதேவியின் மகிமைகளையும் ஸ்ரீ தத்தாத்ரேயர் கூறுகின்றார்.

முதலில் கார்த்தவீர்யன் என்பவன் யார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் சூர்ய குலத்தில் உதித்தவன் அவன். கிருதவீர்யன் என்ற மன்னனுக்கும், அவன் மனைவி சுகந்தை என்பவளுக்கும் பிறந்தவன் கார்த்தவீர்யன். சூர்ய நாட்டை ஆண்டு வந்தவர்கள் ஷத்திரிய வம்சாவளியினர். அவர்களின் பிற்கால சந்ததியினரே வடநாட்டில் உள்ள ஜெயஸ்வால் என்பவர்கள் என்றும் கூறுகின்றனர். அவர்களுடைய குருக்கள் பார்கவா என்ற பிராம்மண வம்சத்தினர். அவர்களை பிருகு என்றும் கூறுவர்.  உண்மையில் ஷத்ரியர்களும் வேதங்களை நன்கு கற்று  அறிந்தவர்களே. அவர்கள் பண்டிதத்தில் பிராமணர்களுக்கு இணையானவர்கள் என்பதில் ஐயம் இல்லை. அவர்கள் கொண்டிருந்த உடல் அமைப்புக்களினால் யுத்தங்களில் சண்டை போட தகுதியானவர்களாக இருந்தனர், ஆட்சிப் பொறுப்புக்களையும் ஏற்று இருந்தனர். பண்டிதர்கள் என்ற பிராமணர்களோ அவர்களின் வழிகாட்டிகளாக இருந்தனர். சூர்ய மன்னர்கள் கொடையாளிகள். அவர்களில் முக்கியமானவர் கார்த்தவீர்யனின் தந்தையான கிருதவீர்யன் என்பவர். வீர்யன் என்பது அவர்களின் வம்சப் பெயராகவே விளங்கியது. கிருதவீர்யன் பூர்வ ஜென்மத்தில் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த சம்பன் என்பவன். அந்த ஜென்மத்தில் அவன் செய்த சில பாவங்களினால் அடுத்த ஜென்மத்தில் ஒரு புத்திரன் மூலம் அவனுக்கு சோகம் ஏற்படும் என்ற சாபத்தை ச்யவன முனிவரின் மூலம் பெற்று இருந்தார்.

அப்படி ஒரு சாபம் பெற்றவர் தன்னுடைய அடுத்த ஜென்மத்தில் மகா பலசாலியாகவும் வித்வானாகவும் பிறந்தார். பெரிய நாட்டை தன் கீழ் கொண்டு வந்து ஆண்டு வந்தார். பல்வேறு யாகங்களை வெகு சிறப்பாகச் செய்து முடித்திருந்தார். சோமவேதா என்ற யாகத்தை செய்து பிருகு போன்ற முனிவர்களுக்கு நிறைய தானம் செய்தார். யமராஜனின் சபையை அலங்கரித்தவர்களில் அவரும் ஒருவர்.  ஆனால் அவருக்கு இருந்த ஒரே குறை, முந்தைய ஜென்மத்தில் கிடைத்து இருந்த முனிவரின் சாபத்தின் பலனாக கிருதவீர்யனுக்குப் பிறந்த எந்தக் குழந்தைகளுமே உயிருடன் இருக்கவில்லை. கிருதவீர்யனுக்கு வயதும் ஏறிக் கொண்டே இருந்தது. தனக்குப் பிறகு இத்தனைப் பெரிய நாட்டை எவரிடம் ஒப்படைப்பது என்ற கவலைப் பிறந்தது.  அந்த நிலையில் அரச சபைப் பண்டிதர்களாக இருந்தவர்கள் சிலர், கிருதவீர்யன் யக்கியவால்யரிடமும் பிரகஸ்பதியிடமும் சென்று அவர்களுடைய ஆலோசனையைப் பெற வேண்டும என்று கூறினர். ஆனால் யக்கியவால்யரிடம் நேரடியாகச் சென்று அது குறித்துக் கேட்க மன தைரியம் இல்லாத அரசன் அதற்காக முதலில் தன்னுடைய மனைவியை யக்கியவால்யரின் மனைவியிடம் அனுப்பி அவளிடம் உதவி கோருமாறு அனுப்பினார்.

யக்கியவால்யருக்கோ கல்யாணி மற்றும் மைத்திரேயி என்ற இரு மனைவிகள் இருந்தனர். அவர்களில் மைத்திரேயி மகா பண்டிதம் பெற்றவள். என்ன இருந்தாலும் ஒரு மாபெரும் முனிவரின் மனைவி அல்லவா. மைத்திரேயியை சந்தித்த கிருதவீர்யனின் மனைவி அவளை வணங்கிவிட்டு அவளிடம் வந்ததிற்கான காரணத்தைக் கூறி அழுதாள். முந்தைய ஜென்மத்தில் ச்யவன முனிவரின் மூலம் பெற்ற சாபத்தினால் இந்த ஜென்மத்தில் கிருதவீர்யனுக்குப் பிறந்த எந்தக் குழந்தைகளுமே உயிருடன் இல்லை, உயிருடன் இருக்கவும் மாட்டார்கள் என்பதினால் தனக்கு பிறக்கும் ஒரு குழந்தையாவது உயிருடன் இருக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறுமாறு அவளிடம் வேண்டினாள். மைத்திரேயியும் கிருதவீர்யனின் மனைவிக்கு சில கடுமையான விரதங்களைக் அனுஷ்டிக்குமாறு அறிவுறை கூறினாள்.

அவற்றை அவள் நியமபூர்வமாக அனுஷ்டித்தால் மட்டுமே பாவ விமோசனம் பெற முடியும் என்றும் கூறினாள். அதே சமயத்தில் கிருதவீர்யனும் மாமுனிவரான பிரகஸ்பதியிடம் சென்று தான் அவரிடம் வந்ததிற்கான காரணத்தைக் கூறினார். பிரகஸ்பதியும் ஸ்ரீ தத்தாத்ரேயர் தனக்கு உபதேசித்த சூர்ய மந்திரத்தைப் பற்றி கூறி அதை உபாசனை செய்து ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டால் விமோசனம் நிச்சயம் கிடைக்கும் என்றார். கிருதவீர்யனும் அவன் மனைவியும் சற்றும் தயங்காமல், பிரகஸ்பதி கூறிய சூர்ய உபாசனையையும், மைத்திரேயியும் கூறிய விரதத்தையும் விதிப்பூர்வமாக செய்து முடித்தனர். அடுத்த சில மாதங்களிலேயே கிருதவீர்யனின் மனைவி கர்ப்பமுற்று ஒரு ஆண் மகனைப் பெற்று எடுத்தாள்.

ஆனால் அப்படி பிறந்த அழகான குழந்தையோ முடமாகிய கைகளுடன் பிறந்தது. இருந்தாலும் ஸ்ரீ தத்தாத்ரேயரின் அருளினால் ஒரு குழந்தையாவது உயிரோடு பிறந்ததே என ஆறுதல்பட்டு அதை மகிழ்ச்சியோடு ஏற்றனர் கிருதவீரன் தம்பதியினர். குழந்தை முடமாகப் பிறந்ததற்கும் ஒரு பின்ணணிக் காரணம் இருந்தது. பூர்வ ஜென்மத்தில் அது பெற்றிருந்த ஒரு சாபமே அதற்கான காரணம். அந்தக் கதை என்ன?

முன் ஒருகாலத்தில் சுதர்சன் என்பவன் மகாவிஷ்ணுவின் சேனையில் முக்கியமான ஒரு வீரனாக இருந்தான். அந்த கால கட்டத்தில் பல்வேறு நிலைகளில் திருமால் பல அரக்கர்களை அழிக்க வேண்டி வந்தது. அந்த சமயங்களில் எல்லாம் திருமாலிற்கு பெரும் துணையாக ஆயுதங்களை ஏந்திய வண்ணம் சுதர்சனே நின்றிருந்தான். யுத்தங்களில் விஷ்ணு வெற்றி பெற்ற பொழுதெல்லாம் தன்னால்தான் அந்த வெற்றி கிடைத்தது போல பிறர் எதிரில் காட்டிக் கொண்டிருந்தான். அதை விஷ்ணுவும்  மறைமுகமாக கவனித்துக் கொண்டேதான் இருந்தார். அவன் அப்படி செய்து வந்த பைத்தியக்காரத்தனமான எண்ணத்தை என்றாவது ஒரு நாள்  மாற்றிக் கொள்வான் என எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தார். ஆனால் அவன் கர்வத்தைக் குறைத்துக் கொள்ளவும் இல்லை, தான் செய்து வந்த முட்டாள்தனத்தை மாற்றிக் கொள்ளவும் இல்லை. ஒரு நாள் திருமாலுக்கு கோபம் வந்தது. அவனைக் கூப்பிட்டு அனுப்பினார். ‘என் வெற்றிக்குக் காரணம் நீதான் என்று அனைவரிடமும் தொடர்ந்து பொய்  கூறி வரும் உனக்கு இனி என் எதிரில் நிற்கக் கூடத் தகுதி இல்லை. ஓடிப் போ…… நீ செய்த காரியத்திற்கு அடுத்த பிறவியில் கையில்லா முடமாகப் பிறந்து மீண்டும் என்னையே சரணடைந்து என் கையாலேயே மடிவாய்’ என சாபமிட்டார். அந்த சாபத்தினால்தான் இப்போது அவனே கிருதவீர்யன் தம்பதியினருக்கு  குழந்தையாகப் பிறந்திருந்தான்.

குழந்தை வளர்ந்து பெரியவனாயிற்று. வம்சாவளிப் பெயரையும் சேர்த்து அவனுக்கு கார்த்தவீர்யன் என்று பெயர் சூட்டினார்கள். அதோடு கூட அவனுக்கு அர்ஜூனன் என்ற பெயரையும் வைத்தனர். அங்கஹீனத்தைத் தவிற வேறு எந்த குறையும் இல்லை கார்த்தவீர்யனுக்கு. மிகவும் புத்திசாலியாகவே வளர்ந்து வந்தான். காலப்போக்கில் முடமாக இருந்து வந்த காத்தவீர்யனின் கவலையில் உழன்றே தந்தை கிருதவீர்யனும் இறந்து போனான். கிருதவீர்யன் பதவிக்கு வரும் முன்பு கிருதவீர்யனின் முன்னோர்கள் அந்தணர் வம்சத்தினரருக்குப் பெரும் உதவிகள் செய்து இருந்தனர். அவர்கள் கொடுத்த செல்வத்தையும், உதவிகளையும் பெற்ற அந்தணர்கள் மெல்ல மெல்ல நல்ல நிலைக்கு உயர்ந்து ஷத்திரியர்களுக்கு இணையான செல்வந்தர்களாக ஆயினர். காலம் ஓடியது. கிருதவீர்யன் இறந்து சில காலம் கழிந்த பொழுது அந்தணர்  வம்சத்தினர் செல்வம் பெருகி அவர்கள் செழிப்புடன் இருக்க, பல்வேறு காரணங்களினால் ஷத்திரியர்களின் வாழ்க்கை நலிவுற்றது. செல்வத்தை இழந்த ஷத்திரிய வம்சாவளியினர் அந்தணர்  வம்சத்தினரிடம் சென்று தங்களுக்கு உதவுமாறு கேட்டனர். அந்தணர்களோ உதவி செய்ய மனமில்லாது அதற்கு மறுத்து விட்டனர். அதுவே மெல்ல மெல்ல  ஷத்திரியர்கள்-அந்தணர்களின் பகை துவங்கக் காரணமாயிற்று.

ஷத்திரியர்கள் அந்தணர்களைப் பழி வாங்கத் துவங்கினர். அவர்கள் பதுக்கி வைத்து இருந்த செல்வத்தையும் பறித்துக் கொள்ளத் துவங்கினர். ஷத்திரியர்களின் கொடுமையைத் தாங்க முடியாமல் பல அந்தணர்  அங்கிருந்து தப்பி ஓடிச் சென்று இமயமலை அடிவாரங்களில் வசிக்கலாயினர். அந்த நேரத்தில்தான் பிருகு வம்சத்தில் (அந்தணர்களின் இன்னொரு பெயர்) அத்ரி ரிஷியும், ஷத்திரிய வம்சத்தில் கார்த்தவீர்யனும் பிறந்திருந்தனர். ஷத்திரியர்கள்-அந்தணர்களின் இடையில்  ஆரம்பம் ஆன பகை அப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

கிருதவீர்யன் இறந்த பிறகு முடமாகி பிறந்து இருந்தவனை கிருதவீர்யனின் அமைச்சர்கள் வம்சாவளியின் பெருமையைக் காக்க இராஜ்ய பரிபாலனத்தை ஏற்கும்படி காத்தவீர்யனிடம் வற்புறுத்தத் துவங்க, முடமான தன்னால் ராஜ்ய பரிபாலனத்தை சிறப்பாக நடத்த முடியாது என்ற காரணத்தைக் கூறி அதனால் இராஜ்ய பரிபாலனத்தை ஏற்க அவன் மறுத்தான். ஆனால் அவர்களின் வாதங்களைக் கேட்ட பின் அவர்களின் கோரிக்கையைத் தட்ட முடியாமல் காத்தவீர்யன் முடமான நிலையிலும் இராஜ்ய பரிபாலனத்தை ஏற்றான். அவன் ராஜ்ய பரிபாலனத்தை ஏற்கும் முன் கிருதவீர்யனின் அமைச்சரவையில் இருந்த கர்கா என்ற முனிவர் அவனிடம் உடல் அங்கஹீனங்களினால் கவலைப்படாமல் இராஜ்ய பரிபாலனத்தை ஏற்ற பின் ஸ்ரீ தத்தாத்ரேயரை சென்று சந்தித்து அவருடைய ஆசிகளினால் விளங்காமல் இருந்த கைகளுக்கு விடி மோட்சம் பெறலாம் என அறிவுறுத்தினார். அவர் கூறிய அந்த அறிவுரைப்படி காத்தவீர்யனும் இராஜ்ய பரிபாலனத்தை ஏற்றப் பின்  ஸ்ரீ தத்தாத்ரேயரை தரிசிக்க நினைத்தான்.

அப்பொழுது ஸ்ரீ தத்தாத்ரேயர் மிகவும் பிரபலமான ஒரு யோகப் புருஷராக ரிஷி முனிவர்களால் போற்றப்பட்டு வந்தவர். அதனால் உடனே சென்று அவரை தரிசிக்க விரும்பினான் கைகள் விளங்காத கார்த்தவீர்யன். கர்கா முனிவரிடம் சென்று தன் ஆசையைக் அவரிடம் கூறினான். அவரும் ஸ்ரீ தத்தாத்ரேயர் விஷ்ணுவின் ஒரு அம்சமே என்றும், நர்மதை நதியில் குளிக்க அவர் வருவது உண்டு எனவும், அப்போது அவரிடம் சென்று வணங்கிய பின் தூய மனதுடன் அவரை ஆராதித்தால் நிச்சயமாக அருள் புரிவார் என்று ஆசி கூறி அவனை அனுப்பினார். அது போலவே அவரை சந்திக்க வந்த நாரத முனிவரும் நர்மதை நதியில் பத்திரதீப பிரதிஷ்டா என்ற யாகம் செய்யும்படி கார்த்தவீர்யனுக்கு நர்மதை நதியில் பத்திரதீப பிரதிஷ்டா என்ற யாகம் செய்யும்படி கார்த்தவீர்யனுக்கு அறிவுரைக் கூறினார். ஸ்ரீ தத்தாத்ரேயர் விசித்திரமானவர் என்பதால் வந்தவர் அனைவருக்கும் உடனேயே தரிசனம் தந்து ஆசி கூறியதில்லை. வேண்டும் என்றே வந்தவர்களை சோதிக்க எண்ணி அவர்கள் வரும் பொழுது பலமுறை ஆடைகள் கலைந்த நிலையிலும், இறைச்சியை கழுத்தபடி, கள்ளும் குடித்த வண்ணம், பல பெண்களுடன் சல்லாபம் செய்தபடியும் தோன்றுவார். ஸ்வாமி ஆடுவது நாடகமே, நம்மை சோதிக்கின்றார் என விடாப் பிடியாக நின்றால் ஒழிய அவருடைய ஆசிகளைப் பெற முடியாது என கர்கா முனிவரும் மற்றவர்களும் கார்த்தவீர்யனுக்கு  தத்தாத்ரேயரைப் பற்றி கூறி இருந்தனர்.

கார்த்தவீர்யனுக்கு சுமார் பன்னிரண்டு வயது ஆனபொழுது அந்த முனிவர்களின் அறிவுரைப்படியே நர்மதை நதிக்குச் சென்று குளித்து விட்டு ஹோமம் செய்து முடித்த பின்  நர்மதை நதியின் கரையில் ஸ்ரீ தத்தாத்ரேயர் இருந்த இடத்தைத் தேடி அலைந்தான். ஒரு வழியாக மலையின் அடிவாரத்தில் இருந்த ஸ்ரீ தத்தாத்ரேயர் ஆசிரமத்தை அடைந்தான். அவனுக்கு மற்றவர்கள் கூறி அனுப்பியபடியே தத்தரும் அலங்கோலமான நிலையில் இருந்தாலும் அவரை சென்று சரணடைந்து அவருக்கு சேவைப் புரிய தன் மனம் விரும்புவதாகவும் அவருடைய அருள் தனக்குத் தேவை எனவும் பலவாறு அவரை துதித்தான். அவன் வந்த காரணம் தத்தருக்குப் புரியாதா என்ன, ஆனாலும் அவனை சோதிக்க வேண்டும் என அவர் விரும்பினார். அப்பொழுதுதான் அவரிடம் வரும் மற்றவர்களுக்கும் தன்னிடம் வருபவர்கள் தீவிரமான பக்தி கொண்டு வந்தால்தான் அவர்களை தான் ஏற்றுக் கொள்வேன் என்பதைப் புரிய வைக்க முடியும் என்பதை மனதில் கொண்டு நாடகத்தைத் துவக்கினார்.

பாவம், வந்துள்ளவன் கை கால்கள் விளங்காமல் உள்ளவன். அவன் கஷ்டப்படுகின்றானே எனவும் யோசிக்கவில்லை. இதை செய், அதை செய் என ஓயாமல் பல வேலைகளைச் செய்யுமாறு கூறினார். கார்த்தவீர்யனும் லேசுப்பட்டவன் அல்ல. தன்னால் முடிந்த அளவிற்கு அவர் இட்ட அத்தனை வேலைகளையும் அவருக்குச் செய்யலானான். கால்களைப் பிடித்து விடுவது, மலர்கள் பறித்து வருவது, காய் கனிகளை கொண்டு வருவது என அத்தனை வேலைகளையும் முகம் சுழிக்காமல் செய்தான். நடு நடுவில் ஸ்ரீ தத்தாத்ரேயர் அவனை வாய்க்கு வந்தபடி  கண்டபடி திட்டுவார். அனைத்து உணவையும் தானே அருந்தி விடுவார். மிச்சம் இருந்தால் மட்டுமே அவன் உணவு அருந்துவான். இப்படியாக சில காலம் நாடகமாடிக் கொண்டு இருந்த வண்ணம் அவன் மனதை சோதித்துக் கொண்டிருந்தவர், அவனை எத்தனைக் கொடுமைப்படுத்தினாலும் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையையோ பக்தியையோ சற்றும் குறைத்துக் கொள்ளாமல் தனக்கு பணி விடைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்ததைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவனுடைய அங்கஹீனத்தைக் கண்டு மனமும் வருந்தினார்.

அவனிடம் இருந்த பவ்யமான குணத்தையும், அவனுடைய தந்தையின் பிறவி பற்றியும் புரிந்து கொண்டிருந்த  தத்த ஸ்வாமிகள் ஒரு நாள் அவன் முன் சென்று தன் சுய உருவைக் காட்டி அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதை எதிர்பார்த்துக் காத்திருந்தவன்போல தன் இரு கைகளையும் கூப்பிக் கொண்டு அவர் பாதங்களில் விழுந்து வணங்கியபடிக் கேட்டான் ‘ஸ்வாமி, இன்றுதான் என் வாழ்வில் வசந்தம் வீசுகின்ற நாள் என நினைக்கின்றேன். எனக்கு என் குடி மக்களை காப்பாற்றுவது முதல் கடமை. ஆனால் அதை செய்ய முடியாமல் இந்த அங்கஹீனமான கைகள் என்னைத் தடுக்கின்றன. அதனால் அங்கஹீனமானவனாக உள்ள எனக்கு ஆயிரம் கைகளையும், திடமான கால்களும் கொடுக்க வேண்டும். என்னை எதிர்ப்பவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் தோற்று ஓட வேண்டும். என் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே தீமைகள் செய்வோரும், ஏன் அந்த தீமைகளுமே கூட ஓடி ஒளிய வேண்டும். செல்வத்துக்குக் குறை வரக் கூடாது. என்னை நல் வழியில் நடத்திச் செல்ல நற்குணங்கள் கொண்டவர்களின் துணை என்றும் எனக்கு இருக்க வேண்டும். நான் என்றும் இளமையுடனும் இருக்க வேண்டும். நான் தர்ம வழியில் இருந்து தவறி செல்லும் கால கட்டத்தில் என்னை விட பலசாலியும் பெருமை மிக்கவனால்  மட்டுமே என் உயிரை பறிக்க முடியும் என்பதான வரங்கள் வேண்டும்’ என்றான். அப்படிப்பட்ட வரங்களைத் தந்து தன்னைக் காத்து அருளும்படி அவரிடம் வேண்டி நின்றான்.

ஸ்ரீ தத்தாத்ரேயரும் அவன் கேட்ட அனைத்து வரங்களையும் தயங்காமல் தந்தார். கூடவே அவன் மானிடப் பிறவியில் இருந்தாலும் எங்கும் சென்று வர ஒரு விசேஷமான தேர் ஒன்றையும் அவனுக்குத் தந்தார். கை, காலில்லாமல் பிறந்த கார்த்தவீர்யன் இப்படியாக தத்தாத்திரேயரிடம் வரமும் உபதேசமும் பெற்றான். அவற்றைப் பெற்றுக் கொண்டு மனம் மகிழ்ந்து திரும்பி வரும் பொழுது வழியில் ஒரு அசரீரி கூறியது  ‘அதிகம் இறுமாப்புக் கொள்ளாதே மூடனே, நீ பெற்ற வரங்களுக்குக் காரணம் அந்தணர்களே  என்பதை மறந்து விடாதே. அவர்கள் துணை இன்றி ஷத்திரியன் நீ நாட்டை ஆள முடியாது என்பதைப் புரிந்து கொள்’. இது என்ன அபசகுனமாக இருக்கின்றதே என ஒரு கணம் கலங்கினான் கார்த்தவீர்யன். சற்று யோசனை செய்தவனுக்கு தோன்றியது. தன் மீது உள்ள பொறாமையினால் வாயு பகவான்தான் அந்த செய்தியை  கூறி இருக்கின்றார். எனவே அதை மனதில் இருந்து ஒதுக்கி விட்டு நடந்தார்.

அதன் பின் கார்த்தவீர்யன் அடிக்கடி ஸ்ரீ தத்தாத்ரேயரை சென்று வணங்கி அவருடைய ஆலோசனைகளைக் கேட்டறிந்தபடி மிக உயர்வான நிலையில் ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருந்தான். கார்த்தவீர்யன் ஆட்சி செய்த நாட்டின் பெயர் மகிஷ்மதி என்பது. கார்த்தவீர்யன் 85000 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நாட்டை ஆண்டவன் என்பார்கள். இவனுக்கு அர்ஜூனன் என்றும் பெயர் உண்டு. அதனால்தான் ஸ்ரீ தத்தாத்ரேயர் சரித்திரத்தில் ஸ்ரீ தத்தர் அவனை அர்ஜூனா என அழைப்பதைக் காணலாம். அவன் ஆட்சியில் குறைகள் ஒன்றுமின்றி ஜனங்கள் வாழ்ந்து வந்தனர். தேவ முனிவர்கள் அவனிடம் மிகவும் அன்பும் மரியாதையும் வைத்து இருந்தனர். தான தர்மங்களை தம் மூதாதையோர் செய்ததை விட அதிகம் செய்தான்.  அநீதி நடந்த இடங்களுக்குத் தானே சென்று அவற்றை அடக்கினான். எளியவர்களை வலியோர் கொடுமை படுத்துவதைத் தடுத்தான். அப்படிப்பட்ட நிலைமை அவன் ஆண்ட பூமி முழுவதும் இருந்து கொண்டு இருக்க மக்களோ கடவுள் என்றாலே கார்த்தவீர்யன் என்று சொல்லும் அளவுக்குச் சென்று விட்டனர். இப்படியாக நல்ல ஆட்சி நடத்தி வந்தவன் மீது பொறாமைக் கொண்ட இராவணனன் திக்விஜய யாத்திரை என்ற பெயரில் பல இராஜ்ஜியங்களை வென்றபடி காத்தவீர்யன் இருந்த இராஜ்யத்திற்கும் வந்து அவனுடன் போரிட ஆயத்தமானான். மகா பலசாலி என கருதப்பட்ட இராவணணின் அகங்காரத்தை அடக்க வேண்டும் என்று எண்ணி அவனுடன் கார்த்தவீர்யனும் போரிடச் சென்றான்.

ஆனால் இராவணன் அப்போது நாட்டில் இல்லை. சிவ பூஜை செய்ய ஆற்றங்கரைக்குச் சென்று இருந்தான். அதே நதியில் கார்த்தவீர்யனும் குளிக்கச் சென்றான். வேண்டும் என்றே சிவ பூஜை செய்து கொண்டிருந்த இராவணன் அமர்ந்து இருந்த பக்கமாக தன்னுடைய ஆயிரம் கைகளால் ஒரு அணைக்கட்டைப் போன்று தேக்கி வைத்திருந்த தண்ணீரை விடுவித்தான். அவ்வளவுதான். இராவணனின் சிவ லிங்கம் அந்த தண்ணீரில் மூழ்கியது. பூஜை நின்றது. இதனால் கடும் கோபமுற்ற இராவணனும் கார்த்தவீர்யன் மீது போர் தொடுத்தான்.  கடுமையாக நடந்த போரில் ஸ்ரீ தத்தாத்ரேயர் ஆசி பெற்று சிவ பெருமானின் பக்தரான இராவணனை வென்று சிறை பிடித்தான். அதன் பின் புலத்தியர் என்ற முனிவரின் வேண்டுகோளை ஏற்று சிறை பிடித்த இராவணனை விடுவித்தான்.

இன்னும் காலம் ஓடியது. கார்த்தவீர்யன் மனம் தளராமல் தன் கடமைகளை செய்தவண்ணம் மக்களின் நலனையே மனதில் வைத்துக் கொண்டு இராஜ்யத்தை ஆண்டு வந்தான்.  தத்தாத்ரேயரின் அனகாஷ்டமி விரதத்தை நாடு முழுவதும் அனுசரிக்கும்படி கட்டளை இட்டான்.  நேரம் கிடைத்த பொழுதெல்லாம் ஸ்ரீ தத்தரின் ஆசிரமத்துக்குச் சென்று பல மணி நேரம் அமர்ந்து கொண்டு அவரை பூஜைப்பான். ஆனாலும் மெல்ல மெல்ல மனதுக்குள் இனம் புரியாத வகையில் ஒரு துயரம் தோன்றலாயிற்று. நமக்கு இல்லாதது இல்லை, இனி என்ன இருக்கின்றது இந்த வாழ்வில் என்று எண்ணத் தொடங்கினான். வாழ்க்கையின் தத்துவம் என்ன என்ற பெரும் கேள்வி மீண்டும் மீண்டும் மனதில் தோன்றியது.  விடை கிடைக்கவில்லை. வயது ஏற ஏற வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டது. துறவறத்தை ஏற்று அனைத்தையும் துறந்து விட்டு ஸ்ரீ தத்தரிடமே சென்று விடலாம் என மனதில் ஆசை எழும்பியது. உடனே சென்று ஸ்ரீ தத்தரை பார்க்க வேண்டும் என மனம் விரும்பியது. கிளம்பி விட்டான்.

ஸ்ரீ தத்தாத்ரேயர் ஆசிரமத்தை அடைந்தவன் முதல் முறையாக அவர் தன்னுடைய கண்களை மூடியபடி தியானத்தில் அமர்ந்து இருப்பதைக் கண்டான். தியானத்தில் இருக்கிறாரா, இல்லை ஏதும் யோசித்தபடி அமர்ந்து இருக்கிறாரா?,  என்று புரியாமல் குழம்பினான். யாரைக் கேட்பது? அந்த நேரத்தில் எவருமே அங்கு இல்லை. போகட்டும், ஸ்வாமிகள் கண் விழிக்கும்வரை இருந்து அவரை மனதார கண்டு களிக்கலாம், அவரையும் அதுவரை அவரை தொழுது கொண்டு இருக்கலாம் என்று எண்ணியவன் அவர் எதிரே அமர்ந்தபடி தியானித்தபடியும், பூஜை செய்தும், ஆராதித்தும், நமஸ்காரம் செய்தும் பொழுதைக் கழித்தான்.  அன்று முழுதும் தத்தர் கண்  விழித்துப் பார்க்கவே இல்லை. அதனால் மனதில் பெரும் துயருற்றவன் அவரைத் தோத்திரம் செய்யலானான்.

‘தேவா உனக்கு என் வணக்கம், ஞானத்தைத் தந்து அகங்காரத்தை அழித்தவரே உமக்கு என் வணக்கம். நீர் சச்சிதானந்த ஸ்வரூபம்,…….முனிவர்களாலும், ரிஷிகளாலும் கூட புரிந்து கொள்ள முடியாத  உம்மை மாயையான உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கும் நான் எப்படிப் புரிந்து கொள்ள இயலும் என்பதை அறிந்து கொள்ளாத ஜடம் அல்லவா?  நான் …….அதனால்தான் உன் பாதங்களில் இப்போது சரணடைந்து விட்ட என் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் பரப்பிரும்மனே……சம்சார வாழ்வில் இருந்து விடுதலைக் கோரி உன்னிடம் வந்துள்ள இந்த அபலைக்குக் கை கொடுத்து கரை ஏற்று பிரபுவே…….கேட்ட அனைத்தையும் அள்ளித் தந்தாய்  ……. நான் கேட்டேன், ……. நீ கொடுத்தாய் …….ஆனால் பிரபு எல்லாமே உள்ள இந்த வாழ்வு ஒரு மாயை என்பதைப் புரிந்து கொண்டு உன்னிடம் சரணடைய வந்துள்ள என்னை ஆசிர்வதித்து இந்த சம்சாரம் என்கிற கடலில் இருந்துக் கரை ஏற்றுவாயா?…….தயாநிதியே……. தாமரைக் கண்ணா,……. யோகிகளுக்கெல்லாம் மகா யோகியாக உள்ளவரே, நீங்கள் இன்றி நாங்கள் இல்லை……. உம்மிடம் அடைக்கலமாகி வந்திருக்கும் இந்த எளிய பக்தனை கண் திறந்து பார்த்து ஆசிர்வாதம் செய்வீர்களா? இறைவனுக்கும் இறைவனாவனே’ என்றெல்லாம் பலவாறு பிரார்த்தித்துக் கொண்டு இருந்தும் ஸ்ரீ தத்தர் கண்களைத் திறக்கவே இல்லை.

மறுநாள் எங்கிருந்தெல்லாமோ முனிவர்கள், ரிஷிகள் என்ற பலர் அங்கு வந்து தத்தரை வணங்கி விட்டுச் சென்றனர். வந்தவர்கள் மாபெரும் முனிவர்கள், ரிஷிகள். அவர்கள் காத்தவீர்யனை ஒரு பொருட்டாக  கருதவும் இல்லை, அவனிடம் எதுவும் கேட்கவும் இல்லை. ஆனாலும் கார்த்தவீர்யன் மனம் தளராமல் அங்கேயே ஒரு மூலையில் தனியாக நின்றிருந்தபடி இருந்தான். திடீர் எனக் கண் விழித்த தத்தரோ அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் வேறு இடத்தில் சென்று அமர்ந்தார். எங்கிருந்தெல்லாமோ வந்திருந்த முனிவர்கள், ரிஷிகளுடன் சேர்ந்து கொண்டு நதிக் கரைக்குச் சென்றார். அங்கு ஸ்நானம் செய்த பின் தினசரி செய்யும் பூஜைகளை முடித்த பின் மீண்டும் தன் இருக்கையில் வந்து அமர்ந்தார்.  கார்த்தவீர்யன் இன்னமும் ஒரு மூலையில் கண்களில் நீர் வழிய நின்று கொண்டுதான் இருந்தான். எதேச்சையாக அவன் பக்கம் திரும்பிய ஸ்ரீ தத்தர் அவனை தன் அருகில் அழைத்தார். என்ன வேண்டும், என செய்கையிலேயே  கேட்டதுதான் தாமதம் பொல பொல என்று கண்களில் ஆறு போல கண்ணீர் வழிய அவர் காலடியில் விழுந்தான் காத்தவீர்யன்.

அவனை தன் கரம் கொடுத்து எழுப்பினார். எழுந்தவனை ‘ஊம்………..ம்……..கூறு……  இன்னும் என்ன வேண்டும், என்ன கேட்க வந்துள்ளாய்’ என்று கேட்டதும் எழுந்த கார்த்தவீர்யனும் கூறத் துவங்கினான் ‘ஸ்வாமி, இந்த எளியவனுக்கு இன்னும் என்ன வேண்டும், என்ன கொடுக்காமல் விட்டு இருந்திருக்கின்றீர்கள்?…… கேட்ட அனைத்தையுமே தந்து விட்டீர்கள்……இனி மேலும் கேட்டால், நான் மகா பாவி ஆகி விடுவேன். இந்த உலகில் உங்கள் கருணையினால், உங்கள் அருளினால் எத்தனை அனுபவிக்க வேண்டுமோ அத்தனையும்  அனுபவித்து விட்டேன், செல்வத்துக்கு குறையில்லை, என் பலத்துக்கும் குறை இல்லை. ஆனாலும் மனதில் ஒரு சலனம்……ஆசாரம், நியமனம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சாஸ்திரங்களை கோடிட்டுக் காட்டி அதை செய், இதை செய் என்று கூறுகின்றனரே. அப்படி என்றால் எந்த ஆசாரங்களைத்தான் நாங்கள் கடை பிடிப்பது? ஒருபுறத்தில்  உங்களையே பரப்பிரம்மம்  என்றும் கூறுகின்றனர். ஆனால் நீங்களோ ஆசாரங்களை மீறியவாறு காட்சி தருகின்றீர்கள்.  நான் வந்த பொழுது கூட நீங்கள் தியானத்தில் இருந்தீர்கள். அப்படி என்றால் பரப்பிரம்மம் எனப்படும் நீங்கள் யாரைக் குறித்து தியானத்தில் இருந்தீர்கள்?  உங்களையும் விட மேலானவர் இந்த உலகில் வேறு எவர் இருக்க முடியும், மோட்சத்தை அடைய என்னதான் வழி உள்ளது? இவற்றை எனக்கு விளக்கி விட்டால் போதும் ஸ்வாமி, நான் அனைத்தையும் துறந்து விட்டு எங்காவது சென்று உம்மை பிரார்த்தித்தபடி தியானம் செய்தபடி அமர்ந்து கொள்வேன்’ என்றான் .

ஸ்ரீ தத்தாத்ரேயர் முகத்தில் ஒரு பெரிய ஒளி தோன்றியது. சுற்றி நின்ற முனிவர்கள், ரிஷிகள் அனைவரும் ஸ்ரீ தத்தாத்ரேயர் என்ன கூறப் போகின்றார் என ஆவலுடன் அவரை நோக்கி கைகளை கூப்பிய வண்ணம் நின்றிருந்தனர். ஸ்ரீ தத்தாத்ரேயர் மெல்ல கூறலானார்  ‘அர்ஜூனா, நீ இன்றுதான் உண்மையிலேயே என் மனதில் அதிக இடத்தைப் பெற்று நிற்கின்றாய். நீ வந்தது முதல் உன்னை நான் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். உன் வாயில் இருந்து வெளிவந்த அத்தனை தோத்திரங்களையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். நான் யாரைக் குறித்து தியானத்தில் இருந்தேன்? என்னையும் விட மேலானவர் யார் இருக்கின்றார்?, என்பதையோ ஒரு சரியான தருணத்தில் கூறுவேன். அதற்கான காலம் இன்னமும் வரவில்லை. அது ஒரு தனிக் கதை. இப்போதைக்கு நான் கூற விரும்புவது இதுவே. நான் தியானித்தது என்னுள் இருக்கும் ஆத்மாவையே. உன்னுடைய மற்ற கேள்விகளுக்கு எல்லாம்  பதில் வேண்டுமாயின் அதற்கு சில கதைகளை  நீ தெரிந்து கொள்ள வேண்டும்’  என்றார்.  ஒருவன் எப்படி வாழ்ந்து கொண்டு இருந்தாலும், எதிலும் மயங்கிவிடாமல் அவனவன் காரியங்களை அவனவன்  மனச் சாட்சிக்கு நியாயமாகப்படும் வகையில் நீதி நியதி பிறழாமல், செய்யும் காரியங்கள் ஒவ்வொன்றையும்  ஆத்மார்த்தமாக செய்து வந்தால், அவை அனைத்தும் ஒருவனைத் தானாகவே மோட்சத்திற்கு செல்லும் வழியில் கொண்டு சென்று விடும்’ எனக் கூறியவர் அவற்றினை விளக்கும் சில உதாரணக் கதைகளையும் அவனுக்குக் கூறினார்.

‘மேலும் கூறினார் ‘அர்ஜூனா நான் கூறியவற்றை நன்கு கிரகித்துக் கொண்டாயா , சந்தேகங்கள் தோன்றுவது இயற்கை. அதுவும் நீ கேட்ட விளக்கங்களுக்கு நான் உனக்காகக் கூறும் கதைகள் வெறும் கதைகள் அல்ல. நாம் உடல் அல்ல, ஆன்மா என்பதை புரிந்து கொள்வதற்காகவும், ஆன்ம நலத்தை பாதுகாக்க, சொல்லப்பட்ட விளக்கங்கள். இந்த பூமியில் உள்ள அனைத்துமே ஒரு மாயை. இருட்டில் அமர்ந்து கொண்டு வெளிச்சத்தை தேடி அலையக் கூடாது. நாம் எதை நினைத்துப் பார்கின்றோமோ அது அதுவாகவே தெரியும் மனப்பக்குவத்திற்கு போக நன்கு பழகிக் கொள்ள வேண்டும். ஒரு குரு நமக்கு உபதேசித்ததை, வேத வாக்கியங்களை முழு மனதுடன் கேட்டும், அதை ஆராய்ந்தும், குரு உபதேசித்ததை எல்லாம் தியானம் செய்த வண்ணமும் இருந்தபடி, மனதை தூய்மையாக வைத்திருக்கக் கற்றுக் கொண்டு, பற்றற்ற நிலையில் வாழ்ந்து பார்.  ஆத்மா மட்டுமே தெரியும். ஆத்மாவை உணரும் பொழுது அனைத்து விளக்கங்களையும் உணர முடியும்.

ஸ்ரீ தத்தாத்ரேயர் கூறிய அனைத்தையும் கேட்ட கார்த்தவீர்யன்  ‘ஸ்வாமி இன்று நீங்கள் கூறிக் கொண்டே இருந்த பொழுது எனக்குக் கிடைத்த ஆனந்தத்தை என்ன என்று சொல்வது, எப்படி விவரிப்பது?,  என்றே தெரியவில்லை. ஆனாலும் குருதேவா, நீங்கள் எனக்கு முன்னர் உபதேசித்ததை முழுமையாக புரிந்து ஆயுளுக்கும் ஆனந்தத்தை அடைய முடியாமல் என் உள்ளம் தவிக்கின்றதே என்ன செய்யட்டும்?, மகா பிரபுவே’ என கண்களில் நீர்மல்க கேட்டான் கார்த்தவீர்யன்.

ஸ்ரீ தத்தாத்ரேயர் கூறினார் ‘அர்ஜூனா, காதில் கேட்டவை, மனதில் பதியாததின் காரணம், அலை பாயும் மனமே…… முதலில் மனதை அடக்க வேண்டும். அதற்கான வழி என்ன எனில் பிராணாயாமத்தை  முழுவதும் கற்க வேண்டும். பிராணன் என்பது நம் உயிர். அதைக் கட்டுப்படுத்தி விட்டு நாம் விரும்பும்படி மட்டும் அதை செல்ல விட்டால் நம் மனதும் அடங்கும். ஒரு வண்டி சக்கரத்துக்கு அச்சாணி  போல ஒருவன் மனதுக்கும் பிராணன் உள்ளது. அதைக் கட்டுப்படுத்தி விட்டால் மனது தானாகவே கட்டுப்பட்டு விடும். பிராணனை எப்படி அடக்குவது? அதற்கு பிராணாயாமம் செய்ய வேண்டும்.  பிராணாயாமம்  என்பது நம் உடலுக்குள் செல்லும் காற்றை அடக்கி ஆள்வது. அதை வெற்றிகரமாகச் செய்தால் முதல் படியை கடந்து விடுவோம். அதற்குப் பிறகு தன்னுடைய குரு உபதேசித்ததை எல்லாம் மீண்டும் மீண்டும் மனதில் நிலைப் படுத்திக் கொள்ளும் பொழுது தியான நிலையை எட்டுகின்றோம். அந்த தியான நிலையை அடைந்த பின், நான் ஆத்மா நான் பிரம்மம்  என்ற பிரவாகத்தை மனதுக்குள்ளே ஏற்படுத்திக் கொண்டே இருந்தால் அத்தனை சித்திகளும் தாமாகவே உன்னை வந்து அடையும். சலனமற்ற நிலையில் நீயும் இருப்பாய். சில நாட்களிலேயே ஜீவன் முக்தி அடைவாய். இப்பொழுது நீ பற்றற்ற வாழ்க்கையில்  இருந்து கொண்டு இருப்பதாகக் கூறுகின்றாய். உனக்குள் உள்ள அலை பாயும் மனதிற்கு நிம்மதி வேண்டும் என்கின்றாய். இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு அல்லவா உள்ளது. உனக்கு மன நிம்மதி வேண்டும் எனில் அதற்கு நீ ஒன்று செய்ய வேண்டும். புனிதமான இந்த மலையில் தனிமையாக உள்ள குகைக்குள் சென்று நான் உபதேசித்தவற்றை மனதிலே கொண்டு ஏகாந்தமாக இருந்த வண்ணம் தவமிரு. அதன் பின் நீ சமாதி நிலையை அடைவாய்’ என்று கூறி விட்டு அவன் தலை மீது தன் கையை வைத்து ஆசி கூறினார். அவருடைய ஆசியை பெற்றுக் கொண்டு எழுந்தவன் எதிரிலே தெரிந்த மலை குகைக்குள் சென்று தவமிருக்கலானான்.

பல மாதங்கள் கடந்தன. தியானம் சற்றே கலைந்தது. மீண்டும் ஸ்ரீ தத்தாத்ரேயரிடம் சென்று அவரை வணங்கினான். இப்பொழுது எப்படி இருக்கின்றது? எனக் கேட்ட தத்தரிடம் ’பேரானந்த உலகில் இருந்தேன், ஆனால் மீண்டும் தடங்கல் ஏற்பட்டு விட்டது ஸ்வாமி. அதனால் மீண்டும் உங்கள் ஆணையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் ஸ்வாமி’ என்றவனை மீண்டும் அதே குகைக்குச் சென்று  இன்னமும் சிறிது காலம் தவத்தில் இருக்குமாறு கூறி அனுப்பினார் ஸ்ரீ தத்தர்.  சிறிது காலம் சென்றது. மீண்டும், மீண்டும் இடையிடையே பலமுறை வெளி வந்தான் கார்த்தவீர்யன். ஒவ்வொரு முறையும் அவன் வந்த பொழுது அவனை மீண்டும் சென்று தவத்தைத் தொடருமாறுக் கூறி அனுப்பினார் தத்தர். இப்படியாகப் பல காலம் கடந்த பின் ஒரு முறை  தவம் கலைந்து இடையே வந்தவனை மீண்டும் சென்று தவத்தைத் தொடர  அறிவுறுத்தாமல் நாடு திரும்பி தர்ம வழிப்படி   இராஜ்ய பரிபாலனம் செய்யுமாறு கட்டளை இட்டார். தான் செய்த தவத்தினால் இன்னமும் அதிக மனபலம் பெற்ற கார்த்தவீர்யன் நாடு திரும்பினான், நல்லாட்சி செலுத்தி வரலானான்.

எவ்வளவு சிறந்த மனிதனாக ஒருவன் இருந்தாலும், ஞானம் பெற்றாலும் காலப் போக்கில் தான் என்ற அகங்காரம் மெல்லத் தோன்றத் துவங்கும் என்பதே உலக நியதி. கார்த்தவீர்யன்  மட்டும் இதில் எப்படி மாறுபட்டு இருக்க முடியும்? எது வேண்டாம் என நினைக்கின்றோமோ அதுதான் நம்மை ஆக்ரமிக்கும். கர்வம் கூடாது என அவன் நினைக்க நினைக்க அந்த கர்வமே அவன் மண்டையில் நிற்கலாயிற்று. அரச சபை நடவடிக்கைகளில் பண்டிதர்களின் தர்க்கங்களை உன்னிப்பாகக் கேட்டான். அந்தணர்களின் கேள்விகள், மற்றும் அவர்களுடைய வாதங்களை கவனித்தான். அவன் மனம் எண்ணலாயிற்று. இவர்கள் கூறுவது அனைத்தும் எனக்கே புரிகின்றது. வேதங்களை வைத்துக் கொண்டு அவரவர்களுக்கு தோன்றிய எண்ணங்கள்படி தர்க்கமும் வாதமும் செய்து கொண்டிருப்பதால், வேதமே ஒரு குழப்பமான ஒன்றாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அந்த வேதங்களை நான் ஏன் படிக்க வேண்டும், அந்தணர்கள் காலையில் எழுந்து அதை செய், இதை செய் என ஆயிரம் கர்ம  அனுஷ்டானங்களை  கூறுகிறார்களே.

மகா ஸ்நானம் அது இது என பல்வேறு புண்ணிய நதிகளில் சென்று நிஷ்டா நியமங்களுடன் குளித்துவிட்டு வருகின்றார்களே, அப்படி எல்லாம் செய்யும் அவர்கள் என்ன பெரிய சுகமான வாழ்வை பெற்று விட்டார்கள்? எத்தனை வேத பண்டிதர்கள் யாசகம் செய்த வண்ணம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் நான் என்ன பெரிய கர்ம நிஷ்டங்களை  அனுசரித்தா ஸ்ரீ தத்தரிடம் இருந்து இத்தனை சக்திகளையும் பெற்றேன்? இத்தனை விரதங்கள், நியமனங்களை அனுஷ்டிக்கும் அந்த அந்தணர்களும், எந்த விதமான விரதங்களையும், நியமனங்களையும் அனுஷ்டிக்காத என்னிடம் அல்லவா யாசித்தபடி இருக்கிறார்கள். அவர்களை விட நான் என்ன தாழ்ந்து விட்டேன்?’ என்றெல்லாம் எண்ணத் துவங்கியவன் மனதில் அந்தணர்கள் பற்றி இருந்த  நல்ல அபிப்பிராயம் களங்கப்படத் துவங்கியது.

ஒரு முறை ஸ்ரீ தத்தாத்ரேய ஸ்வாமிகளின் தரிசனத்திற்குச் சென்றவன் தன் மனதில் எழுந்த அந்த சந்தேகங்களைக் குறித்து அவரிடமே கேட்டு விட்டான். “மகா பிரபோ…… அந்தணர்கள் அனைவரும் மகா ஸ்நானம், மகா ஸ்நானம், என்று இந்த நதியில் குளி, அந்த நதியில் குளி என்று எல்லாம் கூறுகின்றார்களே, உண்மையில் நதிகளுக்கு அத்தனை சக்தி உள்ளதா?’. சிரித்தபடியே ஸ்ரீ தத்தஸ்வாமி அவனுக்கு நதிகளின் பெருமைகளையும், அதில் குளிப்பதால் ஏற்படும் பலன்களையும் விவரமாக எடுத்துக் கூறிய பின், பல கதைகளையும் அதற்கு ஆதாரமாகக் கூறி அவன் மனதில் எழுந்த சந்தேகங்களுக்கு விடை கூறினார். ஆனால் அவற்றை அவனுடைய உள் மனம் ஏற்கவில்லை. ஸ்வாமிகள் கூறி விட்டதால் அவைகளை மீறவும் முடியவில்லை. ஸ்வாமிகளின் அருள் தனக்கு இருப்பதால் வேறு எதுவுமே வேண்டாம் என்றே மனது எண்ணியது.

வீடு திரும்பிய அவன் சுய அறிவோடு ஒருவன் சிந்தித்தால் தக்க விடை கிடைக்கின்றதே என நினைக்கத் துவங்கினான். அந்த மாதிரி நினைக்கத் துவங்கியதுமே  அந்தணர்கள் அனுஷ்டிக்கும் அனைத்துமே ஒரு மாயைப் போலத் தோன்றலாயிற்று. அதே நேரத்தில் அவனை சுற்றி இருந்த மற்றவர்களுக்கோ அவன் உயர்ந்த நிலையில் இருந்ததினால் அவன் மீது பொறாமை ஏற்பட்டது. அவனைக் கவிழ்க்க தக்க தருணம் பார்த்துக் காத்துக் கிடந்தனர்.

இப்படி ஒரு மன மாற்றம் கொண்டு வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கையில் ஒருநாள் அவனுடைய அரச சபையில் அந்தணர்களைப் பற்றி வேண்டாத விவாதம் துவங்கியது. என்றும் இல்லாமல் அன்று பெரும் கோபம் கொண்ட மன்னன் கார்த்தவீர்யன் ஒன்றுமற்ற விவாதத்தில் எதை எதையோ அந்தணர்களுக்கு எதிராகப் பேசினான். அதற்கு முன் அவன் அந்தணர்களை அப்படி அவமானப் படுத்தும் வகையில் பேசியதே இல்லை.

நடுச் சபையில் தங்களை அவமதிக்கும் முறையில் அவன் பேசுகின்றானே என அந்தணர்கள் மனம் வருந்தினர். மற்றவர்கள் அந்தணர்களை எக்காளத்துடன் பார்க்க, தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருக்கும் நிலைமை அந்தணர்களுக்கு ஏற்பட்டது. அதுவே தக்க தருணம் என்று காத்திருந்தது போல வாயு பகவான்  எவர் கண்களிலும் புலப்படாத தோற்றத்தில் அவன் முன் தோன்றி அவன் நடந்து கொண்ட விதத்தை  கடுமையாகக் குறை  கூறினார். ‘ஒன்றும் இன்றி சரீரப் பிண்டமாக இருந்த உனக்கு வஷிஷ்டர், பிருகு, காஷ்யபர், அத்ரி என பல முனிவர்களுக்கு இணையாக இத்தனைப் பெரிய வாழ்வு தந்தாரே ஸ்ரீ தத்தாத்ரேயர் அது மறந்து விட்டதா?  அது மட்டும் அல்ல, ஸ்ரீ தத்தாத்ரேயர் உனக்குக் கொடுத்த அத்தனை புத்திமதிகளையும் மீறி, இன்று அவையில் அந்தணர்களை அவமானப் படுத்தும் முறையில் நீ பேசியது இத்தனை நாளும் காத்து வந்த அனைத்து நற்பண்புகளையும் காற்றோடு பறந்து   விட்டது. நீ அப்படி நடந்து கொள்வாய் எனத் தெரியாமல் உன்னை வளர்த்து விட்டும், உன் உண்மையான மன நிலையைத் தெரிந்து கொள்ளாமல் உன்னை அந்தணர்களுக்கு இணையாக இத்தனைப் பெரிய நிலையில் ஏற்றியும் விட்டுள்ள அந்த ஸ்ரீ தத்தாத்ரேயர்தான் உன் இந்த மாறுதலைக் கண்டு அவமானப்பட வேண்டும்’ என அவனை உசுப்பி விட்டார்.

ஸ்ரீ தத்தாத்ரேயர் பெயரைக் கேட்ட உடனேயே கார்த்திவீர்யன் மனம் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தது. தான் செய்த பிழைக்கு தன் குருநாதர் எப்படி பொறுப்பேற்பார் என நினைத்தவன் சற்றும் தயங்காமல் எழுந்தான். அனைவர் முன்னிலையிலும் சற்றும் கவலைப்படாமல் தான் கூறிய அனைத்து கருத்துக்களுக்கும் தானே பொறுப்பு ஏற்பதாகக் கூறி விட்டு, அப்படி ஒரு தவறான கருத்துக்களைக் கூறி விட்டதற்கு தான் மிகவும் வருந்துவதாகவும் கூறி மன்னிப்புக் கேட்டான்.  எந்த ஒருவன் தன் குற்றங்களை பகிரங்கமாக தவறு எனக் கூறி விட்டு மன்னிப்புக் கேட்கின்றானோ அந்த நிமிடத்திலேயே அவன் மற்றவர்களை விட உயர்ந்து விடுகின்றான் என்பது ஒரு தத்துவம். அதுவே இவன் விஷயத்திலும் நடந்தது. வாயுதேவன் நினைத்ததிற்கு மாறாக நல்லதே நடந்தது. மன்னன் கார்த்தவீர்யன் அனைவர் மனதிலும் முன்பை விட அதிகம் உயர்ந்தான். வாயு பகவான் போட்ட திட்டம் தோல்வி அடைந்து விட, கார்த்தவீர்யன் அழிய விரைவில் வேறு வழி ஏதாவது கிடைக்காதா என தவித்தவாறு அடுத்து என்ன செய்து எப்படி அவனை கவிழ்க்கலாம் என தேவர்களுடன் கலந்து யோசிக்கலானார்.

பல தேவ முனிவர்கள் கார்த்தவீர்யன்மீது மிகவும் அன்பும் மரியாதையும் வைத்து இருந்தனர் என்றாலும் சிலருக்கு அவன் மீது பொறாமையும்  உண்டு. அதனால் அவன் புகழைக் கெடுக்க விரும்பிய அக்னி பகவான்  ஒரு  அந்தணர் உருவில் சென்று கார்த்தவீர்யனிடம் பிச்சைக் கேட்டார். எத்தனை கொடுத்தும் அவை எதுவுமே தனக்குப் போதவில்லை என்று கூற வேறு வழித் தெரியாமல் வந்தவர் கேட்ட பிட்சையாக செடிகள், கொடிகள், மரங்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்ளுமாறு கூறி விட்டான். கூடவே அங்கு வந்து பிட்சைக் கேட்டு வந்தவர் அக்னி தேவன் என்பதையும் தன்னை களங்கப்படுத்தவே அவர் ஒரு திட்டத்துடன் வந்துள்ளார் என்பதையும் நொடிப் பொழுதில் புரிந்து கொண்டான். போகட்டும் எத்தனை ஆட்டம் போட்டால் என்ன, என்னை அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது என மமதைக் கொண்டான். அந்த தைரியத்தில் தாராளமாகச் சென்று மனம் திருப்தி அடையும் அளவு சாப்பிட்டு விட்டுப் போங்கள் எனக் கூறி விட்டான்.  தருகிறேன் என்று கூறி விட்டால் அதில் இருந்து பின் வாங்க முடியாது. அவனுக்குத் தெரியும் அக்னி பகவான் என்ன செய்தாலும் அதனால் பாதிக்கப்பட இருப்பது காட்டில் உள்ள முனிவர்களும் ரிஷிகளும்தான். அவர்கள் சாபமிட்டால் அக்னி மட்டுமே அதற்கு பலியாவான் என்று நினைத்தான்.

ஆனால் பாவம் அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. பிறந்து  விட்ட எவனுக்கும் மரணம் உண்டு. மரணத்தைத் தள்ளிப் போட முடியுமே தவிர தடுத்து நிறுத்த முடியாது. ஸ்ரீ தத்தரின் கருணையினால் சில விதி விலக்கோடு சாகா வரங்களைப் பெற்று உள்ளவனுக்கு  முடிவு காலம் துவக்கப்பட வேண்டும் என்ற நியதிக்கு உட்பட்டு இயற்கை தன் வேலையைத் துவக்கி விட்டது என்பது அவனுக்கு அப்போது புரிந்திருக்கவில்லை. மன்னனின் சம்மதம் கிடைத்ததும் அக்னி பகவான் மனம் மகிழ்ந்தது.  சாப்பிட்டு விட்டுப் போங்கள் என அவர் கூறியதை எதிர்பார்த்து நின்று இருந்த அக்னியும் காட்டில், மலைகளில் என தான் சென்று கொண்டிருந்த வழிகளில் இருந்த அனைத்து மரங்களையும் செடி கொடிகளையும் எரித்த வண்ணமே சென்றார்.  அதில்  ஊர்வ முனிவரின்  ஆசிரமமும் எரிந்து போயிற்று. மக்கள் மட்டும் அல்ல முனிவர்களும், ரிஷிகளும் அலறினர். அவர்களின்  அலறல் காடுகள் முழுதும் எதிரொலித்தது.

அந்த அலறல் தவத்தில் இருந்த வஷிஷ்டர் காதுகளிலும்  விழுந்தது. அவர் தவம் கலைந்தது. என்ன நடந்தது என்று வஷிஷ்டர் யோசிக்கவில்லை. மன்னன் தானம் கொடுத்ததினால்தானே இந்த நிலைமை ஏற்பட்டது என மனதில் கோபம் கொந்தளித்தது.  மனதில் எழுந்த கோபத் தீயில் இத்தனைக்கும் காரணமானவர் யார் என்றும் யோசிக்கவில்லை. பொறாமையினால் அக்னி பகவான் செய்த சதியில் சிக்கிய மன்னன் தெரியாத்தனத்தினால்தான் தானம் செய்தான் என்றும் புரிந்து கொள்ளவில்லை. ஆத்திரம் அறிவை மறைத்தது. கடும் கோபமுற்ற  வசிஷ்ட முனிவர் நடந்த உண்மைகளைத் தெரிந்து கொள்ளாமல் கார்த்தவீர்யனுக்கு சாபமிட்டார் ‘நீ தானே  அக்னியை காட்டில் சென்று அங்கு உள்ள செடி, கொடிகளை உணவாக உட்கொள்ளுமாறு கூறினாய். அதனால் அந்தணர்களின் ஆசிரமங்களும் எரிந்து விட்டன. ஆகவே உனக்கு ஒரு அந்தணர் கைகளினால் விரைவில் மரணம் சம்பவிக்கட்டும்’. பின்னாளில் அதுவே நடந்தது.

காலம் ஒடியது. கார்த்தவீர்யனின் இராஜ்ய பரிபாலனம் நல்லபடியே நடந்து வந்தது.  ஆனால் அவன் அழிவு காலம் நெருங்கத் துவங்க கார்த்தவீர்யன் தன்னையும் அறியாமல் தவறான வழிகளைக் கடை பிடித்தபடி அரசாண்டான். ஸ்ரீ தத்தாத்ரேயர் தந்திருந்த விசேஷமான தங்கத் தேரில் ஏறி தன் மனதிற்குத் தோன்றியபடி மூவுலகமும் செல்லத் துவங்கினான். செல்லக் கூடாத இடங்களிலும் நுழையத் துவங்கினான்.  அப்படிப்பட்ட ஒரு நேரத்தில் ஒரு முறை இந்திரன் தன் மனைவியுடன் உல்லாசமாக இருந்த பொழுது அங்கு சென்று அவனை நையாண்டி செய்தான். தன்னை எவராலும் அழிக்க முடியாது என தத்தர் வரம் அளித்துள்ளதாக நினைத்தான். இதை எல்லாம் கண்டு மனம் வெதும்பிய தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று காத்தவீர்யன் செய்து வந்த அக்கிரமங்களை பற்றி விவரமாகக் கூறினார்.  விஷ்ணு அவர்களை அமைதிப் படுத்திக் கூறினார் ‘அஞ்ச வேண்டாம் அவன் அழிவு காலம் தொடங்கி விட்டது’.   இன்னும் சில காலம் கழிந்தது.

வேறு ஒரு நாட்டுடன் அவன் தொடுத்திருந்த யுத்தத்தில் வெற்றிப் பெற்ற பின் ஒரு  பெரும் சேனையுடன் தன் நாட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த கார்த்தவீர்யன் வழியில் இருந்த காட்டில் மாபெரும் தபஸ்வியான ஜமதக்கினி முனிவரைக் கண்டு அவருக்குத்  தன்  வணக்கத்தைத் தெரிவிக்கச் சென்றான். வந்திருந்த சேனைகளுக்கும் களைப்பும் பசியும் எடுக்கத் துவங்க சாப்பிட உணவு எங்கு கிடைக்கும் எனத் தேடலாயினர். தன்னைக் கண்டு ஆசி பெற்றுச் செல்ல வந்தவனை  அமரச் சொல்லிய ஜமதக்கினி முனிவரும் ‘களைப்புத் தீர உணவு அருந்தி விட்டுப் போ’ என்று கூற, கார்த்தவீர்யன் தயங்கினான் ‘இல்லை ஸ்வாமி, நான் கிளம்புகின்றேன், என்னுடன் பெரும் படையே வந்துள்ளது. அவர்களுக்கும் சாப்பிட நான் ஏதாவது செய்தாக வேண்டும். அவர்கள் பட்டினியுடன் இருக்கையில் நான் மட்டும் உணவு அருந்துவது தர்மம் அல்ல’ என்றான். முனிவர் சர்வசாதாரணமாக நகைத்தபடிக் கூறினார் ‘மன்னா நீ என்னைப் பார்க்க வந்த பின் உணவு அருந்தாமல் போகலாமா , கூடாது அப்பனே…. கூடாது…… நீ ஏன் கவலைப்படுகிறாய், நான் உணவு அருந்த உன்னை மட்டும் அல்ல உன் படைகளையும் சேர்த்துத்தான் அழைத்தேன். அனைவரும் உணவு அருந்திவிட்டுச் செல்லட்டும். அவர்களையும் கூப்பிடு’ என்று கூறி விட்டு ‘அம்மா வந்துள்ள விருந்தாளிகளுக்கு வயிறாற உணவு தந்து அனுப்பம்மா’ என்று உள்ளே எவரையோ பார்த்துக் கூறினார். மன்னன் அதிர்ந்து நின்றிருந்தான். இத்தனை பெரிய படைக்கு இவர் எப்படி உணவு தரப் போகின்றார்?

முனிவரின் வீட்டின் உள்ளிருந்தது வெளி வந்தது ஒரு வெண்மை நிறப் பசு. சற்று நேரம்தான். போடப் போட எங்கிருந்து வந்தது உணவு, எங்கிருந்து வந்தது உணவு என பிரமித்து நின்ற பொழுதுதான் தெரிந்தது அத்தனை உணவையும் தந்தது அந்தத் தெய்வப் பசுதான் என்று. அனைவரும் வயிறார உணவு அருந்தினர். வந்திருந்த அனைவருமே முனிவரின் பெருந்தன்மையை பெரிதாகக் போற்றிப் புகழத் துவங்க மன்னன் மனதில் தோன்றிய பொறாமை வெறுப்பாக மாறியது. விதி தன் வேலையை வேகமாகச் செய்யத் துவங்கியது. ‘இத்தனை பெரிய சாம்ராஜ்யம் இருந்தும் நான் செய்ய முடியாத ஒரு வேலையை கேவலம் காட்டில் உள்ள ஒரு முனிவன் செய்து விட்டாரே. இந்த பசு மட்டும் நம்மிடம் இருந்தால் நாட்டில் பஞ்சமும் பட்டினியும் உருக் குலைந்துப் போய் விடுமே’ என எண்ணியவன் மனதில் பொறாமை எழுந்தது. முனிவரோ அவன் மீண்டும் எதையோ கூறத்  தயங்குகின்றானே என்பதைப் பார்த்து விட்டுக் கேட்டார் ‘என்ன மன்னா என்ன யோசனை செய்கிறாய், சாப்பிட இன்னமும் எதுவும் வேண்டுமா?’ மன்னன் பார்த்தான், இதுவே தக்கத் தருணம் என நினைத்து துணிந்து கேட்டு விட்டான்  ‘உங்களுக்கு எத்தனைப் பணமும் பொருளும் வேண்டுமோ அத்தனையையும் தந்து விடுகின்றேன். ஸ்வாமி எனக்கு இந்தப் பசுவை  விற்று விட வேண்டும்’. தீயை மிதித்தவர் போல அதிர்ந்து நின்றார் முனிவர். ‘இந்தப் பசுவையா, நான் விற்க வேண்டுமா, என்ன மன்னா கேலி செய்கிறாயா ? அந்தணர்களுக்கு  நீங்கள்தான் யாசகம் தர வேண்டும். ஆனால் நீங்கள் ஒரு அந்தணரிடமே பொருளை யாசகம் கேட்கலாமா?’ என்றார்.

அவர் மிக அதிகமான பணத்தையும், பொருளையும் எதிர்பார்த்துக் கொண்டு அதனால் பசுவைத் தர மறுப்பதாக எண்ணினான் மன்னன். இன்னமும் இது தருகிறேன், அது தருகிறேன் என பல பொருட்களைத் தருவதாக ஆசை காட்டினான். முனிவரோ பசுவை இழக்க எந்த நிலையிலும் தயாரில்லை. அந்தப் பசு தன் தாயைப் போன்றது என மன்றாடிக் கூறினார். மன்னனும் விடுவதாக இல்லை. அந்தப் பசு எனக்கு வேண்டும் என கோபத்துடன் கூறலானான். அவன் என்ன கூறியும் அந்தப் பசுவைத் தர அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்பதினால் தன் சேனையினரை அழைத்து அதை கட்டாயமாக ஓட்டிச் செல்லும்படி கட்டளை இட்டு விட்டான்.  முனிவர் அத்தனை பெரிய படையுடன்  எப்படி சண்டையிட முடியும்?. வந்து உள்ளவன்ராட்சசனாக இன்று காட்சி தருகிறான். தத்தருடைய அனுக்கிரகம் இருப்பதால் அவனை லேசில் வெல்ல இயலாது. இடிந்து போய் அமர்ந்தார். பேச முடிவில்லை. கண்களில் நீர் கடல் போலக் கொட்டியது. பேச்சு மூச்சே நின்று விட்டது போல அமர்ந்த இடத்திலேயே எழுந்திருக்க முடியாமல் கிடந்தார். அந்த தெய்வீகப் பசுவும் தன் தந்தையை விட்டுப் போகின்றோமே எனக் கதறியவாறு அந்த படை வீரர்கள் இழுத்துச் செல்ல கண்ணீர் விட்டபடி நடை பிணமாக நடந்து செல்லலாயிற்று.

இதெல்லாம் நடந்த பொழுது முனிவரின் மகன் பரசுராமன் அங்கு இல்லை.  காட்டிற்கு சென்று இருந்தவர் திரும்பி வந்தார். தன் தந்தை பேச முடியாமல் அமர்ந்து இருந்ததைக் கண்டார். என்ன ஆயிற்று, என்ன ஆயிற்று எனப் பல முறை கேட்டும் பதில் கூற முடியாமல் பிரமை பிடித்தபடி அமர்ந்து இருந்தவரைக் கேட்டுப் பிரயோசனம் இல்லை என்பதால் இடிந்து போய் அமர்ந்து இருந்த மற்றவர்களையும் உலுக்கி, உலுக்கிக் கேட்டதில் நடந்த விவரத்தைக் கூறினார்கள் அவர்கள். இரத்தம் கொதித்தது பரசுராமனுக்கு. ஒரு ஷத்ரியன் தன் தந்தையை அவமானப்படுத்தி விட்டுச் சென்று விட்டானா? அவன் திமிரை அடக்காமல் இருப்பது தவறு என நினைத்தவர் தன் கோடாலியை எடுத்துத் தோள் மேல் வைத்துக் கொண்டார், பிற அம்பு, ஆயதங்களையும் எடுத்துக் கொண்டு காத்தவீர்யனைத் தேடிப் போகத் துவங்கினார். தூரத்தில் சென்று கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கத்தினார். ‘ஏ, அயோக்கியனே, நில்……  எதற்காக என் தந்தை ஜமதக்கினியிடம் இருந்து பசுவைப் பிடுங்கிச் சென்றாய்?’.  இப்படி பயம் இல்லாமல் என்னை அழைக்கும் அவன் யார், எங்கிருந்தோ வந்து என்னையே மிரட்டும் அளவு துணிவு கொண்டவன் என் நாட்டிலும் இருக்கின்றானா என கார்த்தவீர்யன் நினைத்துக் கொண்டிருந்தபோதே மீண்டும் இடி முழக்கம் போல ‘பசுவை விடுகின்றாயா இல்லையா’ என கர்ஜித்தார் பரசுராமர்.

‘ஷத்திரியனான நான் இதற்கெல்லாம் பயந்து பணிந்து விட்டால் இராஜ்யத்தை எப்படி ஆளுவது? வந்து உள்ளவன் தனியாகத்தான் வந்து உள்ளான். அவனுடன் படைகள்  இல்லை. தனியாக வந்தவனை சேனை மூலம் அடக்குவது கோழைத்தனம் என நினைத்தவன் வந்திருப்பவனின் பலம் தெரியாமல் ‘பசுவை விட முடியாது’ என்று கூறிவிட்டு ‘உனக்கு உயிர் மீது ஆசை இருந்தால் ஓடிப் போ’ என திமிருடன் கூறினான். போர் வீரர்களோ ஓகோ……. ஓகோ எனச் சிரித்தவாறும்  எள்ளி நகைத்தபடியும் குதித்தாட நெருப்புப் போல ஆனார் பரசுராமர். ‘அற்பப் பதரே என்னையா எள்ளி நகையாடுகின்றாய்……. வா, வந்து மோதிப் பார்’ என யுத்த கோஷம் போட்டார் பரசுராமர். யுத்தம் துவங்கியது. நொடிப் பொழுதில் பாதி சேனை அழிந்தது. திடுக்கிட்டான் கார்த்தவீர்யன். என்ன நடக்கின்றது, இத்தனை நாட்களும் எனக்கு நிகர் எவனும் இல்லை என நினைத்து இருந்தேன். இவன் யார், எங்கிருந்து வந்து என்னிடம் இத்தனை பராக்கிரமமாக யுத்தம் செய்கிறான், என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் எனக்கு தத்தர் துணை இருக்கையில் கவலை எதற்கு என எண்ணியவாறு உக்கிரமாகப் போரிடத் துவங்கினான். அம்பு மழை பொழிந்தபடி இருவரும் போரிட்டனர். பரசுராமன் அவன் கைகளை வெட்ட வெட்ட புதிது புதிதாக கைகள் முளைத்துக் கொண்டே இருந்தன.  அந்த நேரத்தில் காத்தவீர்யன் தான் செய்த பிழையை நினைக்கலானான். ‘தவறுதான், ஒரு அந்தணனின் பசுவை அநியாயமாக பிடுங்கிக் கொண்டு வந்து தவறு செய்து விட்டேன். ஓரு எளியவனின் சொத்தை பறிப்பதை தத்தர் கூட அனுமதிக்க மாட்டார். மேலும் எனக்கு நிகரானவன் பிறக்கவில்லை என்றுதான் நினைத்தேன். இறுமாப்புடன் இருந்திருக்கின்றேன்’. ஸ்ரீ தத்தர் வரம் கொடுத்தபோது அவர் கூறியது நினைவுக்கு வந்தது. ‘உன்னை விட வலியவன் மட்டுமே உன்னைக் கொல்ல முடியும்’. ‘அப்படி என்றால் எவனோ ஒரு பலசாலி பிறக்க இருந்தது அவருக்குத் தெரியும், இல்லை நான் செய்த பாவத்திற்கு தண்டனை அளிக்க அவரேதான் யாரையோ அனுப்பி உள்ளார்.’ இப்படி நினைத்துக் கொண்டு இருக்கையில் அடுத்து வஷிஷ்டர் கொடுத்த சாபம் மனதில் தோன்றியது. ‘…உன்னை ஒரு அந்தணனே அழிப்பான்’

தவறு செய்தாகி விட்டது. இனி யோசனை செய்து என்ன பயன். வந்துள்ளவன் பராக்கிரமசாலிதான். இல்லை எனில் என் முன் இத்தனை நேரம் தாக்கு பிடிக்க முடியுமா, ஆயுதங்கள் தீர்ந்து போன நிலையில் மல்யுத்தம் செய்தபடி இருவரும் கடும் யுத்தம் புரிந்தனர். யுத்த வித்தைகளைக் கண்ட இருவரும் எதிரியின் யுத்தக் கலையைக் கண்டு மனதுக்குள் வியந்தனர்.  தனக்கு எதிராகப் போர் செய்பவனுக்கு எந்த தெய்வத்தின் அருள் இருந்தது என்று புரியவில்லை. முடிவாக பரசுராமர் பரமேஸ்வரனைத் துதித்துக் கொண்டே பிரம்மாஸ்திரத்தை ஏவினார். வெட்டப்பட்ட கைகள் முளைக்கவில்லை.  வந்தவன் விஷ்ணுவின் அம்சம். விஷ்ணுவோ ஸ்ரீ தத்தரின் ஒரு பகுதி. பரசுராமரோ சிவனை நினைத்தபடி பிரும்தாஸ்திரத்தை ஏவினார். ஸ்ரீ தத்தரின் மற்றோரு பகுதி சிவனல்லவா. ஆக பரசுராமரின் வேண்டுகோளும்  மறைமுகமாக தத்தரைத்தான் போய்ச் சேர்ந்தது. அதே நேரத்தில் காத்தவீர்யனை அழிக்க வேண்டியது ஸ்ரீ தத்தரின் கடமை. இல்லை எனில் பூர்வ ஜென்மப் பாவத்தைப் போக்குவது எப்படி? வசிஷ்டரின் சாபத்துக்கும் ஒரு நல்ல முடிவு வேண்டும், ஏன் எனில் அவர் மாபெரும் முனிவர். ஆகவே அனைத்தும் ஒன்று சேர்ந்து கொள்ள  கார்தவீர்யனின் ஆயுள் முடிவிற்கு வந்தது. அவன் செய்த நற்குணங்களினால்  ஸ்ரீ தத்தாத்ரேயரின் அருள் பெற்ற, அவருடைய முக்கியமான சிஷ்யன் என்பதால் சொர்க்கத்தை அடைந்தான். யுத்தம் முடிந்ததும் பசு ஓடி வந்து பரசுராமர் பக்கத்தில் நின்று கண்ணீர் விட அதைத் தேற்றியவாறே தன் தந்தையிடம் அழைத்துச் சென்றார் பரசுராமர்.

திகம்பரா திகம்பரா, ஸ்ரீ  பாத ஸ்ரீ வல்லப திகம்பரா!

திகம்பரா திகம்பரா, ஸ்ரீ  தத்ததேவா  திகம்பரா

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ

 

நான்காம்  நாள் பாராயணம்..……………தொடரும்