ருதுத்வஜனும் தத்தாத்திரேயரும்

தத்தாத்திரேயரின் கருணைக்கு இன்னொரு எடுத்துக் காட்டு அலர்கனின் கதை.  அலர்க்கன் யார்? முன்னொரு காலத்தில் சத்ருஜீத் என்று ஒரு மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் நல்ல பண்புகளும் ஒழுக்கமும் மிக்கவன்.  நல்ல அரசாட்சியை தந்து வந்தவன் . அவனுக்கு ருதுத்வஜன் என்ற மகன் இருந்தான். அப்பாவிற்கு தப்பாமல் பிறந்த பிள்ளை அவன் தனது தந்தையின் அனைத்து நல்ல பண்புகளையும் பெற்று இருந்தான். சாஸ்திர அறிவிலும் குறைவில்லை. ஆனால் அவன் எப்போதும் தனது நண்பர்களுடன் அலைந்து திரிந்து கொண்டு இருந்தவண்ணம் வாழ்கையை ஓட்டிக் கொண்டு இருந்தான். அவனுடைய நண்பர்களில் இருவர் அவனுக்கு எப்போதும் உதவியவாறு அவனுடனேயே இருந்தார்கள்.  அவர்கள் இருவருமே அவனுடைய நெருங்கிய நண்பர்கள்.  ஆனால் அந்த இரண்டு நண்பர்களும் நாக லோகத்தை சேர்ந்த இளைஞ்சர்கள் என்பது ருதுஜ்வஜனுக்கு தெரியாது. அதை அவர்கள் அவனிடம் மறைத்து வைத்து இருந்தார்கள்.

இப்படியாக இருந்து கொண்டு இருக்கையில் ஒரு நாள் சத்ருஜித்தின் அரச சபையில் வந்த ஒரு முனிவர் தனக்கு ஏற்பட்ட ஒரு சங்கடத்தைப் பற்றிக் கூறினார். ‘ அரசே, நான் பல ஆண்டு காலமாக காட்டில் தவம் செய்து வருகிறேன். அங்கு ஒரு அரக்கன் வந்து தொந்தரவு செய்து என் தவத்தைக் கலைக்கின்றான். இத்தனை நாளாக செய்து வரும் தவத்தின் பலனை ஒருவன் அழிக்கின்றானே என வருந்தியபோது ஒரு அசரி கூறியது’ நான் உனக்கு சூரியனின் வாகனங்களுக்கு இணையான சக்தி கொண்ட தேவலோகக் குதிரையை அனுப்புகிறேன். அதை நீ அரசனிடம் கொண்டு சென்று அவன் மகன் ருதுத்வஜனை அதன்மீது ஏறிச் சென்று அந்த அரக்கனை அழிக்கச் செய்’ என்று கூறியது. ஆகவே மன்னா, நீங்கள்தான் எனக்கு அந்த அரக்கனை அழிக்க உதவ வேண்டும்’ என்று கேட்டார். அடுத்தகணம் அவர் கூறியபடி அந்த தேவலோக குதிரை அங்கு வந்து நின்றது. அதை அந்த முனிவர் அரசரிடம் தந்தார்.

அரசன் நல்ல பண்பு மிக்கவன். தனது நாட்டில் உள்ள மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவன். ஆகவே சற்றும் தயங்காமல் தன் மகன் ருதுத்வஜனை அழைத்து முனிவர் கூறிய அனைத்தையும் கூறி விட்டு அவனை அந்த முனிவருடன் சென்று அவருக்கு உதவுமாறு கூறினான். அவருடைய மகனும் சற்றும் தயங்கவில்லை. தன் தந்தையின் கட்டளையை ஏற்றுக் கொண்டு அந்த குதிரையிடம் சென்றான். அதை வணங்கி நிற்க அது உடனேயே கீழே அமர்ந்து கொண்டு தன் முதுகில் அவன் ஏறிக்கொள்ள வழி காட்டியது. அவனும் தன்னுடன் அந்த முனிவரையும் ஏற்றிக் கொண்டு முனிவரின் ஆசரமத்தை அடைந்தான். முனிவர் தவத்தில் இருக்க அவனும் இரவும் பகலும் அந்தக் குடிலை பாதுகாத்தபடி இருந்தான்.

அப்போது ராஜகுமாரன் குடிலுக்கு காவலாக இருப்பதைக் கண்ட அரக்கன் ஒரு காற்றுப் பன்றியின் உருவில் அங்கு வந்து அவர் தவத்தைக் கலைக்க முயன்றான். அதைக் கண்ட ருதுஜ்வஜன் அதன் மீது தனது ஈட்டியை எரிய அது காயம் அடைந்து ஓடத் துவங்கியது. ருதுஜ்வஜனும் அதை விடவில்லை. அந்த குதிரை மீது ஏறிக் கொண்டு அதை துரத்தினான். அந்தப் பன்றியோ ஓடி பூமியை குடைந்து கொண்டே பாதாளத்துக்குள் சென்று மறைய அவனும் அதை துரத்திக் கொண்டு அந்த தேவலோக குதிரை மூலம் பாதாள உலகை அடைந்தான்.

அந்த பாதாள உலகிலோ கண்ணைக் கவரும் கட்டிடங்கள் இருந்தன.சுற்றிலும் பளிங்கு மாளிகைகள். அந்த இடத்தில் அந்தப் பன்றி எங்கே ஓடி விட்டது என எண்ணியவாறு அதை தேடி அலைந்தான். அவன் அப்படி அலைந்து கொண்டு இருக்கையில் வழியில் ஒரு இடத்தில் அழகிய பெண் நின்று கொண்டு இருந்ததைப் பார்த்தான். அவள் உடல் முழுவதும் தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டு இருந்தாள். அவள் அவனை வியப்போடு பார்க்க அவனும் அவளை வியப்போடு பார்த்தான். அந்த மவுனத்தை விலக்கிக் கொண்டவன் அவளிடம் கேட்டான் ‘ அம்மணி, நான் ஒரு காட்டுப் பன்றியை துரத்திக் கொண்டு இங்கு வந்தேன். அது இங்குள்ள கட்டிடம் ஒன்றில்தான் அது ஓடி ஒளிந்து கொண்டு விட்டது. அதைக் கண்டு பிடித்து அழிக்க வேண்டும். இந்த கட்டிடத்துக்குள் யார் வசிக்கின்றார்கள்?’ என்று கேட்டான். அவன் அப்படிக் கேட்டு முடித்ததும் அவள் சடாலென வீட்டின் உள்ளே சென்று மறைந்து விட்டாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘ஒரு பெண்ணைக் கண்டேன். அந்தப் பெண்ணும் மாயமாக மறைந்து விட்டாள். வேறு யாருமே தென்படவில்லை. காட்டுப் பன்றியும் ஓடி ஒளிந்த இடம் தெரியவில்லை’ என எண்ணியவன்  மீண்டும் அந்த குதிரை மீது ஏறி அமர்ந்து கொண்டு அந்த கட்டிடத்தின் மாடி மீது சென்று இறங்கினான். குதிரையை அங்கேயே கட்டி வைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தான். என்ன அதிசயம். அவன் நுழைந்த அந்த அறைக்குள் ஒரு மஞ்சத்தில் அழகிய பெண்  ஒருவள் உட்கார்ந்து இருந்தாள் .

அவள் அழகில் மயங்கி அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். அப்போது அந்தப் பெண்  எதேர்ச்சையாக திரும்பினாள்.  யாரோ ஒரு ஆடவன் நிற்பதைக் கண்டு முதலில் பயந்தாலும், அவளும் அவன் அழகைக் கண்டு மயங்கி நின்றாள். இருவர் கண்களும் ஒருவரை ஒருவர் நோக்கியபடி பேசிக் கொண்டு இருந்தன. சிறிது நேரம்தான் . தன்னை உதாசீனப் படுத்திக் கொண்டவன் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டான் ‘ பெண்ணே  உன் முகத்தில் கவலைக் கோடுகள் தெரிகின்றன. நீ யார்?…உன் கவலை என்ன என்பதை எனக்குக் கூறினால் என்னால் ஆன உதவியை செய்கிறேன்’. அவள் மீண்டும் மவுனமாகவே இருந்தாள். ஆகவே மீண்டும் அவளிடம் நெருங்கி அவன் அதே கேள்வியைக் கேட்டுக் கொண்டு இருந்தபோது அவர்களின் பேச்சுக் குரலைக்   கேட்டு உள்ளே இருந்து ‘ குண்டலினி’ எனக் கூவியவாறு ஒரு ஒரு பெண்மணி உள்ளே வந்தாள். அந்தப் பெண் வேறு யாரும் அல்ல. அந்த ராஜகுமாரன் முதலில் வெளியில் பார்த்த அதே பெண்தான். அவளிடமும் அதையே அவன் கேட்க அவள் கூறினாள்  ‘ ஐயா முதலில் நீங்கள் யார் என்று கூறுவீர்களா? நாங்கள் இங்கு பெரிய ஆபத்தில் சிக்கி உள்ளோம்.  மேலும்  விவரம் கூற முடியாமல் இருப்பதற்கு எங்களை மன்னியுங்கள்’ . அவள் பயந்துகொண்டு மெதுவான குரலில் கூறியதைக் கேட்ட ருதுத்வஜனுக்குப் புரிந்தது அவர்கள் ஏதோ ஆபத்தில் சிக்கி உள்ளார்கள்.

அவன் அவளிடம் கூறினான்,’ மங்கைகளே நான் ஒரு காட்டுப் பன்றியின் உருவில் வந்த அரக்கனை துரத்திக் கொண்டு வந்ததில் இங்கு நுழைந்து விட்டேன். என் மீது நம்பிக்கை இருந்தால் உங்கள் துயரம் என்ன என்பதை என்னிடம் கூறினால் என்னால் ஆன உதவியை செய்வேன்’ என்றான். அதைக் கேட்ட அந்தப் பெண் கூறினாள் ‘ இளவரசரே, இந்த மஞ்சத்தில் அமர்ந்து இருக்கின்றாளே, அவள் பெயர் மதாலசை. அவள் மீது காதல் கொண்ட பாதாள மன்னனின் பிள்ளை ஒருவன் அவளை மணக்க விரும்பி அவளை தூக்கிக் கொண்டு வந்து இங்கு அடைத்து வைத்துள்ளான். பூலோகத்தில் உள்ளவர்களால் பாதாளத்தில் உள்ளவர்களை எப்படி மணந்து கொள்ள முடியும்?. ஆனால் அவன் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இன்னும் இரண்டு நாளில் அவளை மணக்கப்   போவதாகக் கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறான். ஆனால் இவளோ அவனை மணக்க விரும்பவில்லை என்பதினால் தற்கொலை செய்து கொள்ள முயன்றாள். அதைக்  கண்டு விட்ட காமதேனுப் பசு அந்த முயற்சியை தடுத்து விட்டு அவளிடம் மனதை தளர விடாமல் இருக்குமாறும், அவளை விரைவில் ஒருவன் வந்து காப்பாற்றுவான் எனவும் கூறியது. அதற்கேற்ப இன்று பூலோகம் சென்ற அந்த அரக்கன் உடல் முழுவதும் யாரோ எய்த அம்புகளினால் துளைக்கப்பட்டு ஓடி வந்துள்ளான். அவன் அப்படி ஓடி வந்தபோது நீங்கள் அவனை துரத்திக் கொண்டு வந்ததைக் கண்டோம். அதைக் கண்ட நாங்கள் அது நல்ல சகுனம் என்றே நினைத்தோம். உங்களால் முடிந்தால் இவளை பாதாள உலகில் இருந்து காப்பாற்றி பூலோகத்துக்கு அழைத்துச் செல்ல முடியுமா? ‘ என்று கேட்டாள். இளவரசனுக்கு அந்த மங்கையை பிடித்து விட்டது. ஆகவே அவளை தானே மணக்க விரும்பினான். ஆனால் தன்னுடைய குல வழக்கப்படி தன்னுடைய குருவின் ஆசி இன்றி ஹோமம் வளர்க்காமல் அவளை மணந்து கொள்ள விரும்பவில்லை. ஆகவே அவன் அங்கேயே தனது குருவை வேண்டிக் கொண்டதும் சிறிது நேரத்தில் அவர் அங்கேயே பிரசன்னம் ஆனார். அவரிடம் தனது ஆசையை அவன் கூற அவர் தனது சக்தியினால் அங்கேயே ஒரு ஹோம குண்டத்தை எழுப்பி அக்னி சாட்சியாக அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். அதன் பின் அந்தப் பெண்ணை பூலோகத்துக்கு அழைத்துச் செல்லக் கிளம்பியவனை வழி மறைத்தான் பாதாள கேது.  இருவரும் பயங்கரமாகப் போர் புரிய பாதாளகேதுவின்  படையும் அதில் கலந்து கொண்டது. ஆனாலும் ருதுத்வாஜன் அவர்கள் அனைவரையும் அந்த பராக்கிரமக் குதிரையின் உதவியுடன் எளிதில் துவம்சம் செய்து விட்டு அவளை தேவலோக குதிரை மீது அமர்த்திக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான். போகும் முன்னரேயே அவன் ராஜதானியில் தனது பெற்றோர்களுக்கு நடந்தவற்றைக் கூறி அனுப்பி இருந்ததினால் அவர்கள் அவனை பெரும் பெருமையுடன் வரவேற்றனர். அவனுக்கு அந்த ராஜ்யத்தின் மன்னனாக பட்டம் சூட்டினார்கள்.

திரும்பி வந்த இளவரசனிடம் பெரும் மாறுதல்கள் தோன்றி இருந்தன. முன்பு போல இன்றி நண்பர்களுடன் சுற்றித் திரிவதைக் குறைத்த  பின் ராஜ்ய பரிபாலனயத்தில் அதிக கவனம் செலுத்தினார்.அதே நேரம் மனைவியுடனும் மகிழ்ச்சியுடன் காலத்தைக் கழித்தார்.ரிஷி முனிவர்களை அடிக்கடி சென்று பார்த்தபடியும் அவர்களது அறிவுரைகளை பெற்று நடப்பதிலும் நேரத்திக் கழித்தான்.

இப்படியாக  எளிமையான வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருந்தபோது போரிலே மடிந்து போன  பாதாள கேதுவின் சகோதரனான தாளகேது  என்பவன் ருதுத்வஜனை பழி வாங்கத் நேரத்தை எதிர்ப்பார்த்து துடித்துக் கொண்டு இருந்தான். அப்படி அவன் நேரம் பார்த்துக் கொண்டு இருந்த போது அவனுக்கு ஒரு பரிசு கிடைத்தது போல ஒரு நிகழ்ச்சி நடந்தது. இளவரசன் ருதுத்வாஜன் ஒரு நாள் காட்டிற்கு ரிஷி முனிவர்களைக் காணச் சென்றான்.அவன் படையினரை விட்டு பிரிந்து வெகு தூரம் காட்டிற்குள் சென்று விட்டான். திரும்பி வர வழி தெரியவில்லை. வழி தெரியாமல் அப்படி காட்டில் சுற்றி அலைந்தவன் கண்களில் ஒரு அழகான ஆசிரமம் தென்பட்டது. அற்புதமான இடமாக அது அமைந்து இருந்தது. அழகிய சோலைகள், பூங்காக்கள், செடி  கொடிகள் என இருக்க அதில் நுழைந்து அங்குள்ளவர்களை வழி கேட்கலாம் என எண்ணியவன் அதற்குள் நுழைந்தான். அந்த ஆசிரமம் வேறு யாருடையதும் அல்ல. அவனை பழிவாங்க துடித்துக் கொண்டு இருந்த தாளகேதுவினால்  செயற்கையாக உருவாக்கப்பட்ட இடமேதான். அங்கு தாளகேது ஒரு முனிவரின் உருவில் கண்களை மூடியபடி அமர்ந்து இருந்தான். தளகேதுவினால் அவனை நேரடியாக கொள்ள முடியாது என்பதினால் அவனை வஞ்சகமாக இங்கு வரவழைத்து இருந்தான். அங்கு ஒரு யாகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன போன்ற தோற்றத்தை தந்து கொண்டு இருந்தது அந்த இடம் . இளவரசன் நுழைந்த சப்தத்தைக் கேட்டு கண் விழித்தவன்   யாகத்தில் தான் மும்முரமாக இருப்பதைப்போலவும் பாவலா காட்டிக் கொண்டு இருந்தவாறு இளவரசனிடமும் இனிமையாகப் பேசினான். தான் வழிதவறி வந்துவிட்ட விவரத்தை இளவரசன் கூற அந்த வஞ்சகன் .  ‘கவலைப்படாதே உன் இடத்துக்கு பத்திரமாக உன்னை அனுப்பி வைக்கின்றேன்’ என்று கூறி விட்டு தான் அங்கு நடத்த உள்ள யாகத்தில் பங்கேற்கும் வகையில் இளவரசன் கழுத்தில் இருந்த மாலையை தருமாறு கேட்டான். கேட்டது முனிவர்தானே என எண்ணிய இளவரசன் அந்த யாகத்துக்கான பங்காக தனது மாலையைக் கயற்றிக் கொடுத்தான். அந்த மாலை திருமணத்தின்போது மதாலசை தனது அன்புப் பரிசாக தன் கழுத்தில் இருந்து கயற்றிக் கொடுத்து இருந்தாள். அதை பெற்றுக் கொண்ட முனிவர் உருவில் இருந்த தாளகேது இளவரசனை அங்கு இரவு தங்கி ஒய்வு எடுத்துக் கொண்டு மறுநாள் காலை கிளம்பிப் போகுமாறு கூறி அவனுக்கு வழியையும் காட்டினான். இரவு இளவரசன் நன்கு தூங்கிவிட்டான். மறுநாள் விடியற்காலையில் அவன் எழுந்திருக்கும் முன்னரே தாளகேது அந்த இளவரசனின் அரண்மனைக்குச் சென்று ஒரு துயர செய்தியை தான் கொண்டு வந்துள்ளதாக அங்கிருந்தவர்களிடம் கூறினான். அடர்ந்த காட்டில் இளவரசனை அவன் எதிரிகள் சூழ்ந்து கொண்டு கொன்று விட்டு ஓடி விட்டதாகவும், ஏதேற்சையாக  தான் அந்தப் பக்கமாக சென்று கொண்டு இருந்தபோது வலியால் துடித்துக் கொண்டு இருந்த இளவரசனை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவன் தனது கழுத்தில் இருந்த மாலையைக் கயற்றி தன்னிடம் தந்துவிட்டு ‘மதாலசை….மதாலசை’ எனக் கதறி விட்டு இறந்துவிட்டான் என ஒரு கதையைக் கூறினான். வந்திருந்தவன் கொண்டு வந்திருந்த மாலை இலவரசனுடயதுதான் என்பதை புரிந்து கொண்டவர்கள் அதைக் கேட்டு கதறி அழத் துவங்க வந்திருந்தவன் கிளம்பிச் சென்று விட்டான். வந்தவன் யார் என்பதை யாரும் சரியாக கவனிக்கவில்லை. அதே சமயம் அந்த மாலையைக் கண்ட மதாலசையும் இளவரசன் மடிந்துவிட்டான் என எண்ணிக் கொண்டு அதிர்ச்சியால் இறந்து விழுந்தாள் .
ராஜ்யமே துயரத்தில் ஆழ்ந்தது. அவற்றை வெற்றிகரமாக செய்துவிட்டு வெளியேறிய தாளகேது’ ஆஹா….என் சகோதரனைக் கொன்றவனை பழி வாங்கி விட்டேன்’ என ஆடிக் கொண்டு தனது நகருக்கு சென்றான். இதற்கு இடையில் யார் யாரையோ வழி கேட்டு நகருக்குள் திரும்பி வந்த இளவரசன் நகரமே துக்கத்தில் இருந்ததைக் கண்டு துணுக்குற்றான். அவசரம் அவசரமாக அரண்மனைக்குள் நுழைந்தவனைக் கண்டு அனைவரும் அதிர்ந்து போனார்கள். நடந்த அனைத்து கதையையும் அவர்கள் பரிமாறிக் கொள்ள யாரோ நம்மை பழிவாங்கவே இப்படி ஒரு போலி நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் என்ன செய்வது. நடந்தவை நடந்து முடிந்து விட்டனவே. மனைவி இறந்த துக்கத்தை இலவரசனால் மறக்க முடியவில்லை. எத்தனை காலம் அழுது கொண்டே இருப்பது? காலம் அனைத்தையும்  தேற்றும்  என்பது உண்மை.  மெல்ல மெல்ல மீண்டும் அவன் தனது நண்பர்களுடன் ஒன்று சேர்ந்தான். அவனை அவர்கள்தான் தேற்றி ஆறுதல் கூறிக் கொண்டு இருந்தார்கள்.

இதற்கு இடையில் நாகலோகத்தில் இருந்து சென்ற தமது பிள்ளைகள் மனித உருவிலே இன்னமும் பூமியிலே வாழ்ந்து கொண்டு திரும்பி வர மறுக்கின்றார்களே என அவர்களின் தந்தையான நாகதேவன் மனம் வருந்தினான். ஆகவே ஒரு நாள் அவர்களை பாதாளத்துக்கு வரவழைத்து அவர்கள் பூமியிலே என்ன செய்கிறார்கள், யாருடன் பழகிக் கொண்டு இருக்கின்றார்கள். ஏன் பாதாளத்துக்கு வர மறுக்கின்றார்கள் என அனைத்தையும் கேட்டு அறிந்தான். அவர்கள் தாங்கள் ஒரு  நாட்டின்  இளவரசன் ருதுஜ்வஜனிடம் நண்பர்களாக இருப்பதாகவும், ருதுத்வஜனின் நல்ல பண்புகளையும், நல்ல குணங்களையும்  கொண்டவன் என்பதை அவரிடம் எடுத்து உரைக்க அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் அவர்கள் அவனைப் பற்றிக் கூறிய துயரக் கதையைக் கேட்டு மனம் வருந்தினார். அவன் ருதுத்வஜனைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டு இருந்தான். அந்த நாட்டில் நல்ல முறையில் ஆட்சி நடக்கின்றது, யாரும் துன்பப்படுத்தப் படுவதில்லை என்பதை எல்லாம் தெரிந்து வைத்து இருந்தான். ஆகவே தனது மகன்களின் நண்பனின்  துயரத்தைத் தீர்க்க என்ன வழி என யோசிக்கலானான். அவனுக்கு ஒரு வழி புலப்பட்டது.

தனது ராஜ்ய பரிபாலனத்தை அவ்வபோது பூமியில் இருந்து அங்கு வந்து கவனித்துக் கொள்ளுமாறு தமது பிள்ளைகளிடம் கூறி விட்டு இமயமலைக்குச் சென்று சரஸ்வதி தேவியிடம் வரம் கேட்டு தவத்தில் இருந்தான். சரஸ்வதி தேவியை நினைத்து தவம் இருந்தவன் முன் சரஸ்வதி தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டாள். அவன் தன்னுடைய இறந்துவிட்ட சகோதரன் மீண்டும் உயிர் பிழைத்து எழ வேண்டும், தன்னுடைய ஒரு குறிப்பிட்ட வேலை முடியும் வரை அவர் உயிருடன் இருக்க வேண்டும் என்றும் தம் இருவருக்கும் அற்புதமான கான மழை பொழியும் கலையை அருள வேண்டும் என்று கேட்டான். அவர் சகோதரர் ஏற்கனவே இசைக் கலைஞ்சர் . அற்புதமான இனிய பாடல்களை பாடுபவர் . அவர் கேட்ட வரனை சரஸ்வதி தேவி அருள மன்னனின் சகோதரர் உயிர் பெற்று எழுந்தார். உடனே அந்த நாக மன்னன் தனது சகோதரனிடம் நடந்த அனைத்தையும் எடுத்துக் கூறி தாம் இருவரும் சிவ பெருமானை சந்தித்து ருதுத்வஜனின் இறந்து விட்ட மனைவியான மதாலசை தாம் குடும்பத்தில் ஒரு பெண்ணாக பிறக்க வேண்டும், மீண்டும் அவளை ருதுத்வஜனின் மனைவியாக்கி அவனுக்கு மன மகிழ்ச்சியை தர வேண்டும் என வரம் பெற வேண்டும் என்று தம்முடைய எண்ணத்தைக்  கூறினார். நாக மன்னனின் சகோதரரும் உடனே அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். இரண்டு சகோதரர்களும் கயிலாயத்திற்குச்  சென்று சிவபெருமானை துதித்து கான மழை பொழிந்தார்கள். சிவபெருமான் இசைக்கு மயங்குபவர். ஆகவே அவர்களது பக்தியை மெச்சி என்ன வரம் வேண்டும் என்று கேட்க  அவர்களும் இறந்து விட்ட மதாலசை தமது குடும்பத்தில் மகளாகப் பிறந்து உடனேயே பெரியவளாக வேண்டும், அவள் பழைய உருவை எடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள அவரும் அதற்கு அருள் புரிய அவர்கள் குடும்பத்தில் மதாலசை பிறந்து உடனேயே பழைய வயதையும் உருவையும் அடைந்தாள். அந்த சகோதரர்கள் அதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அடுத்து அவளை எவர் கண்ணிலும் படாமல் ரகசியமாக அரண்மனையில் பாதுகாப்பான இடத்தில் கொண்டு வைத்தார்கள். தனது பிள்ளைகளை வரவழித்த நாகதேவன் அவர்களிடம் நடந்த அனைத்தையும் கூறி விட்டு ருதுத்வஜனை எப்படியாவது அங்கு கொண்டு வந்து விட்டால் மீண்டும் அவனுடன் மதாலசையுடன்  சேர்த்து வைக்கலாம் என்று கூறினார்கள். ஆனால் அவன் அங்கு வந்து மெல்ல மெல்ல உண்மையை புரிந்து கொள்ளும்வரை அந்த விஷயம் அவனுக்கு தெரியக் கூடாது என்று கூறினார். காரணம் அவன் அதனால் அதிர்ச்சி அடைந்து பைத்தியம் ஆகி விடக் கூடாது என்பதினால்தான்.

அதற்கேற்ப ருதுத்வஜனை அவன் நாகலோக நண்பர்கள் பல பொய்யான கதைகளையும் கூறி   தம் வீட்டிற்கு ஒரு முறையேனும் வருமாறு அழைத்தார்கள். தமது தந்தை அவனைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்கள். அவனும் தனது நண்பர்களின் தந்தை தனக்கும் தந்தைக்கு சமமானவரே என்பதினால் அவர்களுடன் செல்ல சம்மதித்தான். ஆனால் அவர்கள் அவனிடம் தாம் போக உள்ளது நாக லோகம் என்று கூறவில்லை. அதை அவனிடம் ரகசியமாகவே வைத்து இருந்தார்கள். ஒரு படகில் ஏறி  அந்தக் கரைக்கு செல்வதாக கூறி அழைத்துச் சென்றவர்கள் நடுக் கடலில் தந்திரமாக அவன் மனதையும் கண்ணையும் கட்டிவிட்டு தமது ராஜ்யத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.  பலமணி நேரமாக படகில் பயணம் செய்து கொண்டு இருந்த களைப்பில் தூங்கி விட்டோமோ என எண்ணியபடி கண்களை திறந்த ருதுத்வாஜன் தான் ஒரு விசித்திர உலகில் இருப்பதைக் கண்டான். அவனுக்கு இருபுறமும் நாக முகங்களைக் கொண்ட இருவர் நின்று கொண்டு இருந்தார்கள்.  அவர்கள் அவனிடம் ‘ நண்பா, எங்களை மன்னித்து விடு. உன் அன்பையும் நல்ல பண்புகளையும் கண்ட நாங்கள் உன்னுடன் நட்பாக இருக்க வேண்டும் என்ற ஆசையினால்தான் பூஉலகில் மாறு ரூபத்தில் வந்து உன்னுடன் இருந்தோம். எங்களுடைய தந்தை உன்னைப் பார்க்க விரும்பியதினால்தான் உன்னை இங்கு தந்திரமாக அழைத்து வந்தோம். எங்களை தவறாக நினைக்காதே’ எனக் கூற அவர்களின் குரலில்  இருந்தே அவர்கள் தன்னுடைய நண்பர்களே என்பதை புரிந்து கொண்டவன் அவர்களை தான் மன்னிக்கும் அளவுக்கு உயர்ந்தவன் அல்ல என்றும், யாராக இருந்தாலும் நண்பர்களாகிவிட்ட  பின் நண்பர்களின் தந்தையும் தன்னுடைய தந்தை போன்றவரே என்பதினால் அவர்கள் மனிப்புக் கேட்கக் கூடாது என அவர்களை தடுக்க அவனுடைய உயர்ந்த பண்பைக் கண்டவர்கள் அவன் மீது மேலும் மதிப்பு கொண்டார்கள்.

அவனை தம்முடைய தந்தையிடம் அழைத்துச் சென்றார்கள். நல்ல வயதானவர் அந்த நாக மன்னன். அவரைக் கண்ட உடனேயே ருதுத்வாஜன் அவர் கால்களில் விழுந்து வணங்கினான். அவனை தூக்கி நிறுத்தி மார்போடு கட்டி அணைத்துக் கொண்டார் நாக மன்னன். அவனிடம் அவனது உயர்ந்த பண்புகளை தனது மகன்கள் ஏற்கனவே தம்மிடம் கூறி உள்ளார்கள் எனவும் அதனால்தான் அத்தனை சிறப்பான குணங்களைக் கொண்ட அவனை தான் காண விரும்பியதாகவும் கூறினார்.  அதன்பின் வேண்டும் என்றே இத்தனை நல்ல பண்பு மிக்கவன் விரைவிலேயே நல்ல புத்திர பாக்கியம் அடைவான் எனக் கூறினார். அது மட்டும் அல்லாமல் அவனுக்கு வேறு என்ன உதவி வேண்டும் எனவும்  கேட்டார். அதைக் கேட்ட ருதுத்வாஜன் ‘எனக்கு வாழ்க்கையில் ஒன்றுமே தேவை இல்லை, அனைத்துமே உள்ளது ஐயா …உங்களுக்கு நன்றி’ என பவ்வியமாகக் கூறினான். ஆனால் அவன் மனதில் மதாலசையின் நினைவே ஓடியது. அதை நாக மன்னனான் கவனித்தார். மீண்டும் அடுத்த சில நாட்களில் அவர் அதையே மீண்டும் கூறிவிட்டு ‘உனக்கு என்ன வேண்டும் என்று கூறு மகனே, அதை என் தவ வலிமையால் உனக்கு பெற்றுத் தருகிறேன்’ என்றார். அப்போதும் சற்றே முகம் வாடிய ருதுத்வாஜன் மதாலசயையே நினைத்தான். இதுவே தக்க தருணம் என நினைத்த அவனது நண்பர்கள் இருவரும் நாடகம் ஆடினார்கள் ‘தந்தையே எங்களுடைய நண்பனுக்கு இல்லாதது எதுவும் இல்லை. ஆனால் அவன் மிகவும் நேசித்து வந்த அவனது ஆசை மனைவியை ஒரு வஞ்சகன் நயவஞ்சகமாக அழித்து விட்டான். அவளைக் காண முடியாமல் தவிக்கும் எங்கள் நண்பனுக்கு அவள் உயிரை மீட்டுத் தந்தால் அவன் மகிழ்ச்சியுடன் இருப்பான்’ என்றார்கள்.

அதைக் கேட்டு சிரித்த நாக மன்னன் ‘ குழந்தாய் , உன் மனதில் ஓடும் எண்ண அலைகளை நான் நன்கே அறிவேன். இறந்தவளை திரும்ப அழைத்து வர முடியாது. ஆனால் அவளை என் தவ வலிமையினால் ஒரு முறை உனக்குக் காட்டுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீ அவளை தொடக்கூடாது. சம்மதமா’ என்று கேட்டார். ருதுத்வாஜன் உடனேயே அந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ள மதாலசையை அவன் முன் கொண்டு வந்து நிறுத்தினார். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட மதாலசையும் ருதுத்வஜனும் கண்ணீர் விட்டு அழுதார்கள். ஆனால் அவள்கள் தள்ளித் தள்ளி நின்று கொண்டு இருந்ததினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டின்படி ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளவில்லை.  அப்போது தன்னுடைய தோளை  யாரோ தொடுவதைக் கண்ட ருதுத்வாஜன் திரும்பிப் பார்த்தான். அந்த நாக மன்னரே அங்கு அவன் தோளை  பற்றிக் கொண்டு இருந்தார். அவனிடம் கூறினார்’கவலைப் படாதே என் மகனே, உனக்கு மதாலசையை கொண்டு வந்து தருகிறேன். அதற்கு முன் இந்தக் கதையைக் கேள்’ எனக் கூறி விட்டு ஆரம்பம் முதல் அன்றுவரை நடந்த அனைத்தையும் கூறி விட்டு தானும் தன்னுடைய சகோதரரும் எப்படி சிவபெருமானின் அருளினால் மதாலசையை உயிர் பிழைக்க வைத்து வந்தோம் என்றக் கதையையும் விவரமாகக் கூறினார். ஆனால் சில சாபம் காரணமாகவே அவர்கள் பிரிந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறி அவர்கள் இருவரையும் மீண்டும் நேருக்கு நேர் ஒன்று சேர்த்து மகிழ்ச்சியோடு பூலோகத்துக்கு அனுப்பி வைத்தார்.

மடிந்து போன மனைவி உயிரை திரும்பப் பெற்று பிழைத்து வந்தக் கதையைக் கேட்ட மன்னன்  குடும்பத்தினர் அளவிலா ஆனந்தம் அடைந்தார்கள். ருதுத்வாஜன் ராஜ்ய பரிபாலனத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டான். மனைவியுடன் மீண்டும் மகிழ்ச்சியாக இருந்தவன் தனது தந்தையைப் போலவே நல்லாட்சி நடத்தி வந்தான்.

காலம் உருண்டது. மதாலசை கர்பமுற்று ஒரு அழகிய ஆண் குழந்தைப் பெற்று எடுத்தாள் . குழந்தைப் பிறந்து பெயர் வைக்கும் வைபவம் நடந்தபோது குழந்தைக்கு நல்ல பெயரை ருதுத்வாஜன் சூடினான். அவன் பெயர் வைத்ததும் அதைக் கேட்டு அனைவரும் கை தட்ட மதாலசை மட்டும் கேலியாக சிரித்தாள். அதக் கண்டு அனைவரும் துணுக்குற்றார்கள், ஆனால் ராணி என்பதினால் எதுவும் கூற முடியவில்லை. வேறு யாராவது அதை செய்து இருந்தால் அதை ஒரு அவமானமாக கருதி இருப்பார்கள். அதை கவனித்த ருதுத்வஜனும் அதை பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. சாதாரணமாகவே எடுத்துக் கொண்டான். மதாலசையோ அது சிறு குழந்தையாக இருந்தபோது அதை தூங்க வைத்த நேரங்களில் தத்துவப் பாடல்களையே பாடி தூங்க வைத்தாள். இந்த பாழாய் போன பூமியில் வந்து ஏன் பிறந்தாய், இந்த உலகமே ஒரு மாயை அல்லவா, இதில் நீ பற்றற்று இருக்க வேண்டும் என்றே பாடி வளர்த்தாள். அதற்கு அந்த வயதில் அந்த பாடல்கள் என்ன புரியும் என அனைவரும் வியந்தார்கள். அதையும் கவனித்த மன்னன் அவள் ஏன் இப்படிப்பட்ட பாடல்களை குழந்தைக்கு பாடி தாலாட்டுகிறாள் என எண்ணி வியந்தது உண்டு. ஆனாலும் அதையும் அவன் பொருட்படுத்தவில்லை. அந்தக் குழந்தை நல்ல பண்புகளோடு பெரியவனாகி வளர்ந்து வந்தது. குழந்தை பன்னிரண்டு வயதானபோது திடீரென ஒரு நாள் நாட்டை விட்டு வெளியேறி காட்டிற்குள் சென்று சன்யாசத்தை மேற்கொண்டு விட்டது. மன்னன் அதிர்ந்து போனான்.

இன்னும் காலம் ஓடியது. அடுத்து பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டும்போதும் மதாலசை கேலியாக  சிரித்தாள். அந்தக் குழந்தையையும்  மதாலசை  தத்துவப் பாடல்களைப் பாடியே வளர்த்தாள். அதையும் கவனித்த மன்னன் அவள் ஏன் இப்படிப்பட்ட பாடல்களை இந்தக் குழந்தைக்கும் பாடி தாலாட்டுகிறாள் என எண்ணி வியந்தது உண்டு. ஆனாலும் அதையும் அவன் பொருட்படுத்தவில்லை. இன்னும் சில காலம் பார்க்கலாம் எனப் பொறுத்து இருந்தான். அந்தோ பரிதாபம், அந்தக் குழந்தையும் வளர்ந்து பெரியவன் ஆகியதும் காட்டிற்குள் சென்று சன்யாசி ஆகிவிட்டது. மன்னன் மனம் உடைந்தான். ஆனால் மதாலசை சற்றும் அதைக் குறித்துக் கவலைப்படவில்லை. அதே சமயத்தில் கணவனின் பணிவிடைகளுக்கும் பிற காரியங்களிலும் எந்த குறையும் வைக்கவில்லை. அரசனால் அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மற்றவர்களும் அவள் நடத்தையைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தார்கள். மூன்றாம் முறை அவர்களுக்குப் பிறந்த குழந்தையின் கதியும்- பெயர் சூட்டும் வைபவம் முதல் சன்யாசத்தை ஏற்று காடு செல்லும்வரை- அனைத்து விதங்களிலும் அதே போலவே இருந்தது.

நான்காம் முறையாக மதாலசை கர்ப்பம் அடைந்தாள். குழந்தைப் பிறந்து பெயர் சூட்டும் வைபவம் வந்தது. மன்னன் ஒரு தீர்மானத்தோடு இருந்தான். இந்த முறை அவன் பெயர் சூட்டாமல் அவளை குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கூறினான். அனைத்து முந்தய நிகழ்சிகளையும் தோற்கடிக்கும் விதமாக அந்த நிகழ்ச்சி அமைந்தது. பிறந்த குழந்தைக்கு மதாலசை வெறி நாய் என அர்த்தம் தரும் பெயரான அலர்க்கன் என பெயர் சூட்டினாள். அனைவரும் அதிர்ந்து போனார்கள். மன்னன் அவமானத்தினால் குன்றிப் போனான். முதன் முறையாக அரசன் அவளிடம் கோபமாகக் கேட்டான், நல்ல விழாவில் இந்தக் குழந்தைக்கு அசிங்கத்தனமாக வெறி நாய் என அர்த்தம் தரும் அலர்க்கன் என ஏன் பெயரிட்டாய்?’ எனக் கேட்டான்.  மவுனமாக இருந்த மதாலசை சலனமின்றிக் கேட்டாள் ‘ மன்னா ஒவ்வொரு முறையும் நீங்கள் குழந்தைக்கு பெயர் வைத்தபோதும்  நான் நினைத்துப் பார்த்தேன்…….. நீங்கள் வைத்தப் பெயர் குழந்தையின் உடலுக்கா அல்லது அதனுள் உள்ள ஆத்மாவிற்கா? … இந்தப் பெயருடன் அந்த ஆத்மாவிற்கு என்ன சம்மந்தம்…இந்த உடலோ அழியக் கூடியது, ஆனால் ஆத்மா அழிவது இல்லை….அந்த ஆத்மா உடலை விட்டு வெளியேறிய பின் அது எங்கு போக உள்ளது என்பது அதற்கு தெரியுமா….இல்லை மற்றவர்களுக்காவது தெரியுமா?…..அந்த ஆத்மா இந்தப் பெயரை தன்னுடன் இணைத்துக் கொண்டு செல்லுமா இல்லை வைத்தப் பெயரைப் போல அது நடக்குமா?….இந்திரன் என்று பெயர் வைத்தால் அது இந்திரன் போன்ற குணத்துடன் இருக்குமா?….ஒவ்வொருவரும் சாஸ்ரோத்திரத்துடன் மந்திரம் ஓதி வைக்கும் பெயர் ஒரு அடையாளத்திற்குத்தானே? வைத்தப் பெயருக்கும் வாழும் வாழ்கைக்கும் சம்மந்தம் இல்லாத இதற்கு எதற்கு சடங்குகள் என எண்ணினேன், சிரித்தேன். அதனால்தான் நான்காம் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு கூறியபோது அழைப்பதற்குத்தானே இந்தப் பெயர் என நான் அப்படி பெயர் சூட்டினேன். அதற்கு ஏன் நீங்கள் கோபப்படவேண்டும்?’

அவள் கேட்டுக் கொண்டே இருந்த கேள்விகளுக்கு அவனால் பதில் கூற முடியவில்லை. அவள் கேட்ட கேள்விகள் அனைத்துமே நியாயமாகவே இருந்தன.  சற்று நேரம் சம்பாஷனை தொடர்ந்தது. முடிவாக அரசன் அவளிடம் கூறினான், ‘சரி ஆனது ஆகட்டும். முதல் மூன்று குழந்தைகளுக்கும் தத்துவப் பாடல்களைப் பாடி அவர்களை சன்யாசிகள் ஆக்கிவிட்டாய். இந்தப் பிள்ளைக்காவது உலக பற்றோடு இருக்குமாறு , மக்களுக்கு தான் ஆற்ற வேண்டிய கடமைகளை உணருமாறு பாடல்களை பாடி வளர்க்க வேண்டும் என்பது என் ஆசை. அதை செய்வாயா ‘. அதற்கு மதாலசை எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அது முதல் அவள் நான்காம் குழந்தையை மிகப் பொறுப்புள்ளவனாக இருக்கும் வகையில், உலகப் பற்று மிக்கவனாக இருக்கும் வகையில் வளர்த்து வந்தாள் . அரசியல் அறிவை அந்தப் பிள்ளை பெற்றான். நிர்வாக அறிவை பெற்றுக் கொண்டான். வயதுக்கு வந்ததும் அவனுக்கு மணம்  முடித்துவிட்டு தனது ராஜ்யத்தை அவனிடம் ஒப்படைத்து விட்டு ருதுத்வாஜன் தனது மனைவி மதாலசையுடன் கானகத்துக்கு சென்று விட்டான்.  தனது பெற்றோர்கள் தன்னைவிட்டுப் போவதை அலர்க்கனால்  ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் வேறு வழி இன்றி அதை ஏற்றுக் கொண்டான். போகும் முன் மதாலசை அவனிடம் ஒரு மோதிரத்தைக் கொடுத்து விட்டு கூறினார்’ அலர்க்கா, வாழ்க்கையில் வரும் அனைத்து சோதனைகளையும் தைரியமாக எதிர் கொள்ள வேண்டும். என்றைக்கு உன்னால் பொறுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றதோ அன்றைக்கு இந்த மோதிரத்தை  உற்றுப்பார் . அதில்  உனக்கு ஒரு வரி தெரியும். அதைப் படித்துப் பார். அதுவரை உன் விரலில் இதை அணிந்து கொண்டு இரு. உன்னால் போருக்க  முடியாத நிலைமைக்குப் போனால் ஒழிய அதை எடுத்துப் பார்க்காதே. அதுவரை நான் கூறியதை நினைத்தும் பார்க்காதே ‘.

அதைக் கூறியபின் மதாலசை தன் கணவருடன் கானகத்துக்குப் போய் விட்டாள். அலர்கனும்  அது முதல் அரசு காரியங்களில் முழுமையாக மனதை செலுத்தி சீரிய முறையில் நாட்டை ஆண்டு வந்தான். அப்போது ஒரு நாள் இளம் வயதிலேயே சன்யாசத்தை ஏற்று கானகம் சென்று விட்ட அவனுடைய இரண்டாவது பெரிய சகோதரன் அந்த நாட்டிற்கு வந்தான். தனது சகோதரன் நாட்டை ஆளுவதைக் கண்டான். திடீர் என அவன் மனதில் சன்யாச ஆசை விலகி ராஜாங்க வாழ்கையில் வாழ வேண்டும் என்ற ஆசை உள்ளதைப் போல காட்டிக் கொண்டான் . என்ன இருந்தாலும் அவனும் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவன் அல்லவா.  தன்னிடம் தனது சகோதரன் நாட்டை ஒப்படைக்க மாட்டான் என எண்ணியவன் போல  காசி நாட்டு  மன்னனை சந்தித்தான். காசி நாட்டு  மன்னனும் அலர்கனும் ஒத்துப் போகாதவர்கள். ஆகவே காசி மன்னனிடம் சென்று ராஜ்யத்தை தான்அடைய வேண்டும் என்று கூறி அவன் உதவியை நாடினான். அவனிடம் அலர்கன்  கூறியதாக இல்லாததையும் பொல்லாததையும் கூற காசி மன்னன் கோபம் அடைந்து அலர்கனின் ராஜ்யத்தின் மீது படை எடுத்து வந்து அனைத்து நகரங்களையும் பிடித்துக் கொண்டு அரண்மனையையும் முற்றுகை இட்டான். பல நாட்கள் அரண்மனை முற்றுகை தொடர்ந்தது. அலர்கன் நிலை குலைந்து போனான். அப்போதுதான் அவனுக்கு தனது தாயார் கொடுத்த மோதிரம் நினைவுக்கு வந்தது. அதைக் கயற்றி  உற்றுப் பார்த்தான். அதில் எழுதி இருந்த வாசகங்கள் ‘ பற்றை நீக்க வேண்டும். முடியாவிடில் அதை அடைய சீரியோர் உதவியை நாட வேண்டும்’. அவனுக்கு தனது தாயாரின் நினைவு அதிகம் வந்தது. அவள் அடிக்கடி தனக்கு போதித்த தத்தாத்திரேயர் நினைவு வந்தது. ஒருநாள் யாரிடமும் கூறாமல் ரகசிய சுரங்கப் பாதை வழியே ரகசியமாக வெளியில் சென்று சஞ்சயாத்ரி மலை அடிவாரத்தில் இருந்த தத்தாத்திரேயரிடம் சென்று அவர் காலடியில் விழுந்து நடந்தவற்றைக் கூறிவிட்டுக் கதறினான்.

அவருக்கு வந்தவன் யார் என்பது மதாலசை பற்றியும் நன்கு தெரியும் என்பதினால் அவனை எழுப்பி ஆறுதல் கூறினார்’ மகனே ‘அலர்க்கா நீ ஏன் ஒன்றுமற்ற விஷயத்திற்காக அழுது புலம்புகிறாய். நீ யார்?….நீ யார் என்பது உனக்கத் தெரியுமா?….நீ, நீயே அல்ல…. உயிரற்ற ஜடமான உடலிலே உழன்று  கொண்டு இருக்கும் ஆத்மாவே நீ…. உன் உள்ளே உள்ள அந்த ஆத்மாவின் நிறம் தெரியுமா அல்லது அதன் உருவம்தான் உனக்குத் தெரியுமா?…மரமா, செடியா , காட்றா,   கொடியா? அதன் உருவத்தை நீ  பார்த்து இருக்கின்றாயா? அந்த ஆத்மாவின் உருவத்தை நீ பார்த்தது போல எண்ணுகிறாயே அவை அனைத்துமே மாயையான தோற்றங்களே…நீ உன் உள் மனதில் எதுவாக நினைகின்றாயோ அதையேதான் ஆத்மாவின் உருவமாக காண்கிறாய். உன் உடலில் உள்ள எந்த அங்கமாவது நீ எனும் அந்த ஆத்மாவைக் காட்ட முடியுமா? நான் எனும் அந்த ஆத்மாவுக்கு துயரம் இல்லை, விருப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை. அது சுதந்திரமானது. தனித் தன்மையானது. நீ இப்போது இங்கு இருக்கின்றாயே, துன்பப்படுகிறாயே , அது எதற்காக?   எந்த பந்த பாசங்களுக்கும் கட்டுப்படாத, தனித்தன்மை கொண்ட அந்த ஆத்மாவுக்கா அல்லது இந்த ஜடமான உடலுக்கா? அலர்கா , இந்த உலகம் எத்தனை விஜித்திரமானதோ அது போலத்தான் நம்முள் உள்ள இந்த ஆத்மாவும் விசித்திரமாக இயங்கும். இந்த இதயம் உலகின் மாயை மீது பற்று கொள்ளத் துவங்கியதுமே மமதை நம்மை ஆக்கிரமிக்கத் துவங்கிவிடும். பிறகு ஆசை தோன்றத் தோன்ற இல்லறம், சந்தானம் போன்ற அனைத்தின் மீதும் கட்டுக்கு அடங்காத மோகம் ஏற்படும். அதுவே நம் மனதை அலை பாய வைக்கத் துவங்கும் ஆரம்பத்தின் அத்தியாயம். அப்படிப்பட்ட மமதை கொண்ட மனிதர்களின் சேர்கை இன்னும் அந்த வேட்கையை அதிகரிக்கும். அது துக்கத்தைத் தரும், வேதனையை அதிகப்படுத்தி நம்மை நிம்மதி இழக்கச் செய்யும்….இதோ நீயே அதற்கு ஒரு சான்று. அந்த மாதிரியான நேரத்தில் தீய சேர்க்கைகளை ஒதுக்கி விட்டால் மட்டுமே யோகம் சித்திக்க ஆரம்பிக்கும். அலைபாயும் மனது கட்டுப்படும். மனதை ஸ்திரமாக வைத்துக் கொள்ள பழக்கிக் கொண்டால் வைராக்கியம் வரும். பார்க்கும் பொருட்களில் குறைகள் தோன்றி அதன் மீதான நாட்டம் குறையும். அவை அனைத்துமே ஜடமாக மனதுக்கு தோன்றும். அந்த நிலை தொடரும்போது முக்தி கிடைக்கும். ஒருவன் ஞானி ஆகிறான்’

அலர்கன் மனம் லேசாகிக்  கொண்டு இருப்பதை உணர்ந்தான். கண்களில் வழிந்து கொண்டு இருந்த கண்ணீர் மெல்ல மெல்ல வற்றத் துவங்கியது. தத்தாத்திரேயரின் முகத்தை அமைதியாக நோக்கிக் கொண்டு இருந்தான். அவர் கூறிக் கொண்டு இருந்தார் ‘ அலர்க்கா, ஞானி  என்பவனுக்கு  தான் எங்கு உள்ளானோ அதுவே அவன் வீடு. எங்கு உணவு கிடைக்குமோ அதை உண்பான்…எங்கு உள்ளானோ அதுவே உலகம் என எண்ணுவான். எந்த உலகப் பொருள் மீதும் பற்று இருக்காது. இதை எல்லாம் எளிதில் அடைய முடியாது. அந்த நிலையை அடைய ஒரு குருவின் தீட்சைப் பெற வேண்டும். முதலில் கடினமாகத் தோன்றும் அந்த பயிற்சி போகப் போக எளிதாகிவிடும். குரு தரும் தீட்சை பெற்றுக் கொண்டு மூச்சை அடக்கி  அப்பியாசம் செய்யத் துவங்க சில நாளிலேயே மனதும் கட்டுப்படத் துவங்கும். அந்த தியான மார்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு விட்டால் சமாதி நிலையை அடையலாம். அதற்கு உதாரணமாக எறும்புகளைப் பார். அவற்றுக்கு எத்தனை சிறிய வாய் உள்ளது. ஆனால் அவை வசிக்கும் இடத்தைப் பார்த்தாயா? எத்தனை பெரிய பொந்தைக் கட்டி அவை அவற்றுக்குள் வசிக்கின்றன. மரத்தைப் பார். மரத்தில் இலைகளையும் கைகளையும் பறிக்கப் பறிக்க அவை மீண்டும் மீண்டும் அவற்றை உற்பத்தி செய்து கொண்டேதான் உள்ளன. அப்படித்தான் விடா முயற்சியுடன் யோகாசனத்தை மீண்டும் மீண்டும் செய்து வந்தால் அனைத்து புலன்களும் அடங்கும். நான், எனது என்கின்ற அகங்காரம் நீங்கும். அது நீங்கினாலே மன அமைதி பெறலாம்’.

இப்படியாக பல்வேறு உதாரணங்களைக் காட்டி தத்தாத்திரேயர் உபதேசம் செய்யச் செய்ய அலர்கனின் மனம் அமைதி அடைந்தது. ‘ ஸ்வாமி, இன்றுதான் இருட்டில் இருந்து வெளியில் வந்து வெளிச்சத்தைக் கண்டது போல உள்ளது. என்னுள் இருந்த அறியாமை விலகியது போல உணர்கிறேன். என் மனம் அமைதி  பெற்றது…ஸ்வாமி…அமைதி பெற்றது’ எனக் கூறியவாறு அவரை பல்வேறு விதமாக தோத்திரம் செய்து வழிபட்டப் பின் அவரிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு சென்றான். மீண்டும் ரகசிய சுரங்கப் பாதை வழியே அரண்மனைக்குள் நுழைந்தவன் தனது படையினரிடம் கூறினான். ‘இனி நான் கூறும்வரை ஆயுதங்களை எடுக்காதீர்கள். நான் யுத்தத்தை  ஒரு முடிவுக்கு கொண்டு வர உள்ளேன்’ எனக் கூறிய பின் அரண்மனையை விட்டு நிராயுதபாணியாக   வெளியேறி காசி மன்னன் முன் திடீர் எனப் போய் நின்றான். ‘மன்னா நீ போய் எனது ராஜ்யத்தை எடுத்துக் கொள். நான் கானகம் போகிறேன். இனி இந்த ராஜ்யம் என் சகோதரனுக்கு உரியது ‘ . அதை  காசி மன்னன் எதிர்பார்க்கவில்லை. அவனைப் பார்த்து காசி மன்னன் கேட்டான்’ என்ன பயந்து விட்டாயா? இல்லை நாடகம் ஆடுகிறாயா?…என்னிடம் பயந்து அதனால்தான் உன் ராஜ்யத்தை எனக்கு தந்து விட்டாயா ?’

அலர்கன் கூறினான் ‘ பயமா…இருப்பது ஒரு உயிர், அது போவதும் ஒரே ஒரு முறை என்னும்போது இனி எனக்கு  என்ன பயம் மன்னா…நீ வெளியே முற்றுகை இட்டபோது நான் ரகசியமாக வெளியில் சென்று தத்தாத்திரேயரை சந்தித்தேன். அவர் கொடுத்த உபதேசத்தினால்தான் இந்த முடிவை நான் எடுத்தேன். அதற்கு உனக்குத்தான் நான் நன்றி  கூற வேண்டும். நீ என் மீது படையெடுத்து வந்து என் அரண்மனையை முற்றுகை இடாவிடில் எனக்கு இந்த ஞானோபதேசம் கிடைத்து இருக்குமா என்ன…’

அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருந்த அவனுடைய சகோதரர் குதிரை மீது இருந்து இறங்கி வந்து தனது சகோதரனைக் கட்டித் தழுவினார். ‘ தம்பி எனக்கும் இந்த ராஜ்ஜியம் தேவை இல்லை. இதை காசிராஜனே எடுத்துக் கொள்ளட்டும். நானும் உன்னுடன் கானகம் செல்கிறேன்’.அதைக் கேட்டு காசிராஜன் குழம்பினான். ‘என்ன தம்பி உன்னை நம்பி நான் படையெடுத்து வந்து உனக்கு உதவினால் நீயும் ராஜ்ஜியம் வேண்டாம் என்கிறாயே. இதென்ன கூத்து?’

அதற்கு அலர்கனின் சகோதரன் விடை தந்தார் ‘ மன்னா  நல்ல கேள்வி இது. அதற்கான காரணத்தை இப்போது கேட்டுக் கொள். எங்களுடைய தாயார் சாதாரண பெண்ண அல்ல. அவள் யோகா மாதா…அவளே எங்களுக்கு உலக பற்றி விட்டு விட்டு பரமானந்தத்தை அனுபவிக்கும் விதத்திலான அறிவை புகட்டினாள் . ஆனால் துரதிஷ்டவசமாக எனது தம்பிக்கு ஒரு காரணத்தினால் உலக பற்றோடு கூடிய வாழ்கையில் இருக்க நேரிட்டது. அவனும் இல்லறமே சுகம் என இருந்தான். ஆகவே ஒரு யோகேஸ்வரியின் வயிற்றில் பிறந்த என் சகோதரன் இப்படி காட்டு மிருகம் போல சல்லாபத்தில் மூழ்கி விடக்கூடாது என்பதினால் அவனையும் ஆன்மீக வழிக்கு கொண்டு செல்ல இந்த காரியத்தை நடத்தினேன். அதற்கு உன் துணையை நாடினேன். நீ அவன் மீது நான் கூறியபடி படை எடுத்திருக்காவிடில் இவனால் இந்த யோக வாழ்வைப் பெற முடியுமா? தத்தாத்திரேயரின் அருள் கிட்டி இருக்குமா?. நல்ல வேளையாக நான் நினைத்தபடி அனைத்தும் நல்லபடியே நடந்து முடிந்து அலர்கனும் தத்தாத்திரேயரின்  அருளைப் பெற்று விட்டான். நாங்கள் போகின்றோம். நீ இந்த நாட்டை எடுத்துக் கொள்’.

அவற்றை எல்லாம் கேட்ட காசி ராஜனும் அந்த நாட்டை அலர்கனின் படையினரிடமே தந்துவிட்டு தனது நாட்டிற்குச் சென்று தனது ராஜ்யத்தை தனது பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு கானகம் சென்று தத்தாத்திரேயரின் அருள் கிடைக்க அங்கு தவம் செய்யலானான். இப்படியாக அலர்கனின் கதை மூலம் தத்தாத்திரேயர் மக்களை எப்படி எல்லாம்  நல் வழியில் கொண்டு சென்றார் என்பது நன்கு விளங்கும். இப்படி பல இடங்களிலும் பலருக்கும் தத்தாத்திரேயர் அருள் பாலித்த, மகிமை செய்த கதைகள் ஏராளம் உள்ளன. அவற்றை அடுக்கிக் கொண்டே சென்றால் இடம் போதாது. ஆகவே இதனுடன் தத்தாத்திரேயரின் ஒரு பகுதியை மட்டும் தந்துவிட்டு தத்தாத்திரேயரின் சரித்திரத்தை  நிறைவு செய்கிறேன்.

END