பாராயணம்

நான்காம்  நாள் பாராயணம்

ஓம்  தத்தாத்ரேயாய வித்மஹே

யோகீஸ்வராய  தீமஹி

தன்னோ தத்த ப்ரசோதயாத்

 

ஸ்ரீ தத்தாத்ரேயரும் பரசுராமரும்

பரசுராமர் பிறப்பு பற்றி அறியும் முன் அவருடைய தந்தை எப்படி அவதரித்தார் எனத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அம்வசு வம்சத்தினரான குசும்பா என்ற நாட்டைச் சேர்ந்த புருரவன் என்ற மன்னனின் பிள்ளை காதி என்பவர். குசும்பாவிற்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு. அவர்களில் சிலர் மட்டுமே ரிஷி, முனிவர்களாக இருந்தனர். காதி ஒரு முனிவர் என்பதால் காட்டில் வசித்து வந்தார்.  அவருக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் சத்தியவதி. நல்ல அழகும், நற்பண்புகளும் நிறைந்தவள். அந்தக் காட்டில் பிருகு முனிவரும் இருந்து வந்தார். அவருடைய மகன் ரீக்கா என்பவர் சத்யவதியின் மீது ஆசைக் கொண்டு அவளை மணக்க விரும்பினார். பெண் வீட்டினர்தான் பிள்ளை  வீட்டிற்கு வரதட்சணைத் தருவதுண்டு. ஆனால் அதற்கு மாறாக ரீக்காவோ ஒரு பக்கம் காது கறுப்பாக இருந்த ஆயிரம் குதிரைகளை காதிக்குக் கொடுத்து அவருடைய மகளான சத்யவதியை மணந்து கொண்டார். காதியின் மனைவிக்கு ஒரு விபரீத ஆசை தோன்றியது. தன் பெண் சத்யவதி கருதரித்து குழந்தைப் பெற்று எடுக்கும் பொழுது தானும் ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும். தன்னுடைய ஆசையை சத்தியவதி இடமும்   கூறி இருந்தாள்.

சத்தியவதிக்கு  திருமணமாகி சில காலம் சென்றது. பிருகு முனிவர் ஏதோ வேலையாக அங்கு வந்திருந்தார். வந்தவரிடம் சத்யவதி தனக்கும் தன்னுடைய தாயாருக்கும்  ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது என்றும் அதற்கு அவர் அருள் புரிய வேண்டும் எனவும் அவரிடம் வேண்டினாள். அவரும் மிகவும் மனம் மகிழ்ந்து இரண்டு பாத்திரங்களில் சில உணவுப் பொருட்களை  வைத்துக்  அவளிடம் கொடுத்த  பின்  அவற்றில்  ஒன்றை  சுட்டிக்  காட்டிக் கூறினார் ‘சத்யவதி இது உனக்கு, மற்றொன்று உன் தாயாருக்கு என மந்திரம் ஓதி இந்த பிரசாதத்தைப் படைத்துள்ளேன். நாளை காலை எழுந்து குளித்த பின் நீயும் உன் தாயாரும் இதை சாப்பிட்டால் உன் வேண்டுகோள் பலிக்கும். ஆனால் ஒன்றை மிகக் கவனமாகக் கேட்டுக் கொள். பாத்திரத்தில் உனக்கு உள்ளதை உன் தாயாரோ, உன் தாயாருக்கு கொடுத்ததை நீயோ சாப்பிட்டு விடாதீர்கள்’ என அறிவுறுத்தி சென்றார்.

மறு நாள் காலை  தன் பெண் எழுந்திருக்கும் முன்பே அவளுடைய  தாயார் எழுந்து குளித்து விட்டு அந்த பிரசாதத்தை  புசிக்கச்  சென்றாள். அந்த பிரசாதத்தைப் நோக்கிய அவளுக்கு மனதில் ஒரு ஆசை எழுந்தது. ஒரு வேளை தன் மருமகள் சத்யவதிக்கு நல்ல லட்சணமான குழந்தை  பிறக்க வேண்டும் என்று எண்ணி ஏதாவது விசேஷ  பூஜை செய்த பிரசாதத்தை அவளுக்கு வைத்து இருப்பாரோ என எண்ணியவள்,  தன்னுடைய மகளுக்கு வைத்திருந்த பிரசாதத்தை தான் உண்டு விட்டு தனக்கு வைத்திருந்ததை தன் மகளுக்கு மாற்றி வைத்து விட்டாள். எழுந்து குளித்து விட்டு வந்த தன் மகளிடம் தான் தவறுதலாக அவளுக்கு வைத்திருந்தப் பாத்திரத்தில் இருந்ததை சாப்பிட்டு விட்டதாகப் பொய் கூறி விட்டாள். மகள் பாவம் என்ன செய்ய முடியும்,  நடக்கக் கூடாதது நடந்து விட்டது. வேறு வழி தெரியாமல் பிரசாதத்தை வேண்டாம் எனக் கூறி முனிவரை அவமானப்படுத்தக் கூடாது என்று எண்ணிய மகளும் மாற்றி வைத்திருந்த பிரசாதத்தை உண்டு விட்டாள்.

இருவரையும் நலம் விசாரிக்க வந்த பிருகு முனிவரிடம் நடந்து விட்ட  தவறை சத்தியவதி கூறினாள். நடந்ததை தன் ஞானக் கண் மூலம் தெரிந்து கொண்டார். நடந்தது நடந்ததுதான் என்பதால் சத்யவதிக்கு பிறக்க இருந்த குழந்தைக்கு இருக்க வேண்டிய குணங்களை அவளுக்குப் பிறக்க இருக்கும் பேரன் எடுத்துக் கொள்ளட்டும் என ஆசி கூறி விட்டுச் சென்று விட்டார். காலா காலத்தில் இருவருக்கும் பிள்ளைகள் பிறந்தனர். சத்யவதிக்கு ஜமதக்னி பிறக்க, அவளுடைய தாயாருக்கோ விஸ்வாமித்திரர் பிறந்தார். அதனால்தான் சத்யவதியின் அடக்க சுபாவத்தைப் போலவே சாத்வீகக் குணம் கொண்டு பிறந்து இருந்த ஜமதக்கினி முனிவருக்கு தன்னிடம் இருந்து பசுவைப் பறித்துச் சென்ற கார்த்தவீர்யனுடன் சண்டைப் போடத் தெரியவில்லை.

ஜமதக்னி முனிவருக்கு திருமணம் ஆயிற்று. அவர் மனைவி ரேணுகா தேவி கணவருக்குப் பணிவிடை செய்வதில் மாசற்று இருந்தாள். அவர்களுக்கு பரசுராமரையும் சேர்த்து சில பிள்ளைகள் பிறந்தன. இருவரும் மன மகிழ்வோடு வாழ்ந்து வந்தனர். ஆனாலும் விதி சில சம்பவங்களை நடக்கச் செய்ய வேண்டும் என நினைப்பதினால் தன் பங்கிற்கு அது விளையாடிற்று. ஒரு நாள் ரேணுகா குளிப்பதற்கு நதிக் கரைக்குச் சென்றாள். எதேச்சையாக சற்று தொலைவில் மற்றோரு நாட்டின் மன்னன் தன் மனைவியுடன் அதே நதியில் குளிப்பதைக் கண்டாள். அவர்களோ ஜலக்கிரீடை செய்து கொண்டு ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி விரசமான லீலைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அதைக் கண்ட ரேணுகாவின் மனதில் ஒரு நிமிடம் காம உணர்வு எழுந்தது. எத்தனை இன்பமாக உல்லாசம் அனுபவித்தபடி இருக்கின்றனர் என நினைத்தவள், அடுத்த கணமே தன் கணவன் நினைவு வர அவசரம் அவசரமாகக் குளித்து விட்டுக் வீட்டிற்குக் கிளம்பினாள். வீடு வந்து சேர்ந்த மனைவியின் முகத்தில் தோன்றி மறைந்திருந்த காமம் அவர் கண்களில் பட்டுவிட்டது. நடந்ததை தன் மனக் கண்களால் பார்த்தார். என்ன இருந்தாலும் தபஸ்வி அல்லவா, அவள் புனிதம் கெட்டு விட்டதை அறிந்தவர் தன் பிள்ளைகளை அழைத்தார். ‘தர்ம நெறி கெட்டு விட்ட இவள் தலையை வெட்டி வீசி எறியுங்கள்’ என்று ஆணையிட்டார்.

தந்தையே கூறினாலும் எந்தப் பிள்ளைக்குத் தன் தாயாரின் தலையை வெட்டத் தோன்றும்? அந்தக் காரியத்தைச் செய்ய எவரும் முன் வரவில்லை. வந்தது கோபம் ஜமதக்கினிக்கு ‘என் சொல்லை மீறிய நீங்கள் அனைவரும் காட்டு விலங்குகள் போல அலைவீர்கள்’ என சாபமிட்டார். ரேணுகா தலை குனிந்தபடி நின்று கொண்டு இருந்தாள். கடைசியாக வெளியே போய் இருந்த பிள்ளை பரசுராமர் வந்தார். நிலைமை சரியாக இல்லை. தந்தை கண்களில் கோபம் கொந்தளித்தபடி நிற்கின்றார். சகோதரர்களும் தாயும் தலை குனிந்தபடி உள்ளனர். என்ன நடந்து இருக்கும், யோசனை செய்யத் துவங்கியவரிடம் அதே உத்தரவைப் பிறப்பித்தார் அவர் தந்தை ஜமதக்கினி. ‘தர்ம நெறி கெட்டு விட்ட இவள் தலையை வெட்டி எறி’ என்று கூறி விட்டுத் திரும்பிய ஜமதக்னியின் முன் வந்து விழுந்தது  ரேணுகாவின் தலை.  பெரும் ஆச்சரியம் அடைந்தார் ஜமதக்கினி ‘உண்மையான பிள்ளை அவனே என மகிழ்ச்சி அடைந்துக் கேட்டார் ‘மகனே நீதான் என் உண்மையான மகன். கேள்……உனக்கு என்ன வரம் வேண்டும்…. கேள்…… நான் செய்த புண்ணியங்களால் அது உடனே நிறைவேறும்’ என்றார். அதையே எதிர்பார்த்து நின்றவர் கூறினார் ‘தந்தையே அறியாமல் என் தாய் செய்த பிழையை மன்னித்து விட்டு அவள் உயிர் பெற்று எழ உதவுங்கள். அது போலவே தாய் மீது பாசம் கொண்டு அவளைக் கொல்ல முடியாமல் தவித்து நின்று உங்களிடம் சாபம் பெற்ற என் சகோதரர்களுக்கும் சாப விமோசனம் வேண்டும்’.

முனிவர் கண்களில் நீர் நிறைந்தது. ‘எத்தனை தத்துவார்த்தமான பிள்ளை இவன், என் சொல்லை புறக்கணிக்கவில்லை. தாய் மீதும் தன் குடும்பத்தின் மீதும் எத்தனை பாசம் வைத்து உள்ளான் இவன்’ என மனம்  மகிழ்ந்து அவர் கேட்ட வரங்களைத் …ததாஸ்து… என்று கூறி சாப விமோசனம் கொடுக்க, இறந்து கிடந்த ரேணுகா உயிர் பெற்று எழுந்தாள். கணவர் கால்களில் விழுந்து வணங்கினாள். மற்ற பிள்ளைகளும் அவ்விதமே செய்தனர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக பல ஆயிரம் வருடங்கள் வாழ்ந்து வரலாயினர்.இப்படி இனிமையான வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. அதற்குப் பின்னர்தான் காத்தவீர்யன் வந்து பசுவைக் கவர்ந்து சென்றதும், அதை மீட்க அவனை பரசுராமர் துரத்திச் சென்று அவனை அழித்த சூறாவளிக் காட்சிகளும் நடைபெற்று முடிந்திருந்தன. அதனால் கோபத்தின் உச்சியில் இருந்த காத்தவீர்யனுடைய ஆட்களோ தம் மன்னனைக் கொன்று விட்ட பரசுராமரின் தந்தையைக் கொன்று அதன் மூலம் பரசுராமரை அவமதிக்க எண்ணி தருணம் பார்த்து காத்திருந்தனர். ஏன் எனில் பரசுராமரை அவர்களால் நேரடியாகப் போரிட்டு ஜெயிக்க இயலாது. அவர்களை அவர் அழித்து விடுவார். அதற்கு ஒரே வழி பேடித்தனமாக பரசுராமர் இல்லாத பொழுது அவர் தந்தையைக் கொல்ல வேண்டும் என நினைத்தனர்.

அவர்கள் எண்ணம் நிறைவேறும் வகையில் ஒரு நாள் பரசுராமர் வீட்டில் இல்லாத சமயத்தில் ஒரு பெரிய சேனையுடன் காத்தவீர்யனுடைய ஆட்கள் ஜமதக்கினியின் ஆசிரமத்தில் நுழைந்தனர். அனைத்துப் பொருட்களையும் நாசம் செய்தனர். அவரை இழுத்துப் போட்டு அடித்துப் போட்டு சித்திரவதை செய்து கொன்றனர். கூட இருந்தவர்களையும் கொன்றனர். ரேணுகா அலறினாள். அவரை விட்டு விடும்படிக் கெஞ்சினாள். மசியவில்லை முரடர்கள். கெஞ்சிய அவளையும் அவமானப்படுத்தினர். அனைத்து அக்கிரமங்களையும் செய்து விட்டு பரசுராமர் வரும் முன் ஓடி விட்டனர்.ரேணுகா …பரசுராமா…….. …பரசுராமா… என இருபத்தி ஏழு முறை மார்பில் அடித்துக் கொண்டபடி கத்தினாள், தொண்டைக் கிழியும் வகையில் அலறினாள். அவளுடைய கதறலின் ஒலி காட்டில் எங்கோ ஒரு மூலையில் இருந்த பரசுராமர் காதில் ஒலித்ததும் என்ன ஆயிற்றோ என அலறியபடி ஓடி வந்தவர் கண்களில் பட்டது அந்த அலங்கோலமான  காட்சிகள். …தந்தையே என்னால்தானே உங்களுக்கு இந்த கதி வந்தது… எனப் புலம்பியவர் இடிந்து போய் சிதைந்து கிடந்த வீட்டில் இருந்து தன் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வெறி பிடித்தவர் போல் அந்த ஷத்ரியக் கூட்டத்தைத் தேடிப் போனார்.

வெற்றி மிதப்பில் ஆடிக் கொண்டு இருந்த  ஷத்ரிய கும்பலில் இருந்த அனைவரையும் துண்டு துண்டாக வெட்டி எறிந்தார். அவருடைய தாக்குதலைப் தாங்க முடியாமல் போன ஷத்ரியர்கள் நகருக்குள் ஓடி ஒளியலாயினர். அப்படி ஓடிப் போய் ஒளிந்து கொண்ட அனைத்து ஷத்ரியர்களையும் தேடித் தேடி வெளியில் இழுத்துப் போட்டு அவர்களையும் வெட்டிக் கொன்றார். இனி அங்கு ஒரு ஷத்ரியர் கூட இல்லை எனத் தெரிந்தவுடன் வெறி தீர்ந்த வேங்கைப் போல வீடு திரும்பினார்.

இரத்த வெள்ளத்தில் தந்தை இறந்து கிடந்த உடலைக் கட்டிப் பிடித்தபடி விக்கி விக்கி அழுது கொண்டிருந்த தாயைக் கண்ட பரசுராமனும் குழுந்தைப் போல உரத்த குரலில் அழத் துவங்கினார்.  “தந்தையே, இத்தனை பராக்கிரமசாலி நான் இருந்தும் உங்களை காப்பாற்ற முடியாமல் போய் விட்டேனே….எனக்கு வாழ்க்கையில் இனி என்ன இருக்கிறது” என அழுது புலம்பிக் கொண்டு இருந்த மகனை, ரேணுகா வந்து சமாதானம் செய்தாள். “ஆனது ஆகி விட்டது மகனே, உன் தந்தைக்கு இறுதிக் காரியங்களையாவது  உடனே செய்…….. இந்த பூமி இப்போது களங்கப்பட்டு விட்டது . இங்கு இறுதிக் காரியங்கள் செய்யக் கூடாது. எழுந்திரு. எழுந்து போய் ஒரு காவடி கொண்டு வா.. ஒரு புறம் உன் தந்தையின் உடலை வை. மறுபுறம் என்னை வைத்துக் கொண்டு அதை எடுத்துச் செல். எந்த இடத்தில் அசரீரி நில் என்று கூறுகின்றதோ, அங்கே உன் தந்தைக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்து விடு. நானும் அவர் சிதையில் விழுந்து உயிர் துறக்கிறேன். அதன் பின்  இருவருக்கும் சேர்த்தே ஈமச் சடங்குகளை அங்கே நடத்து’. கூடி இருந்த மற்ற பெரியவர்களும் அதுவே சரி என்று அவள் கூறியதை ஆமோதிக்க தாயின் சொற்படி ஒரு காவடியைக் கொண்டு வந்த பரசுராமன் அதில் ஒரு புறம் தந்தையையும், மறுபுறம் தாயையும் வைத்துக் கொண்டு  மேற்கு திசை நோக்கி நடக்கலானார்.

காடுகள், செடிகள், கொடிகள் என பல்வேறு பகுதிகளையும் கடந்து சென்று கொண்டே இருந்தார். வெகு தொலைவு நடந்து சென்றும் அவரை நிற்குமாறு கூறும் சப்தம் எங்கிருந்தும் வரவில்லை. அதனால் நிற்காது நடந்து கொண்டு இருந்தார். நடந்து கொண்டிருந்தவர், ஸ்ரீ தத்தாத்ரேயர் வசித்து வந்த மலைப் பகுதியின் அருகில் சென்று கொண்டிருந்த பொழுது ‘நில், மேலும் போகாதே’ என்ற குரல் ஒலித்தது. ஆனால் எவரும் தென்படவில்லை. யாராக இருக்கும் என யோசித்தவாறு தன்னுடையத் தாயாரைக்  கேட்கலாம் என்று திரும்பினார். தவத்தில் அமர்ந்து இருந்தவள் போன்று காணப்பட்ட தாயின் வாயில் இருந்து மெல்லிய சப்தம் மட்டும் வந்து கொண்டிருந்தது. ‘என் அன்புப் புதல்வனே உனக்கு அடிக்கடி உன் தந்தை போதிப்பாரே தத்தரைப் போய் பார், தத்தரிடம் செல் என, அவருடைய ஆசிரமம்தான் அங்கே உள்ளது. போ, அங்கே போய் அவரிடம் சென்று எங்களுக்கு எப்படி இறுதி காரியங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டு விட்டு அவர் எப்படி அதை செய்யுமாறு கூறுகின்றாரோ அது போலச் செய்…… அவரைக்  காண முடியவில்லை என்றால் அவருடைய ஆசிரமத்தில் உள்ள நெல்லி மரத்தின் அடியில் சென்று அமர்ந்து கொண்டு அவரைப் நினைத்தபடி தியானம் செய். உடனே அவர் எங்கு இருந்தாலும் உன்னைத் தேடி வருவார்’. தாயின் சொல்லைக் கேட்ட பரசுராமர் ஆசிரமத்தில் நுழைந்து தத்தாத்திரேயரைத் தேடினார். ஆனால் அவர் காணவில்லை.

தாய் கூறியதற்கு மாறாக அங்கு அலங்கோலமான நிலையில் ஒருவர் கெட்ட நடத்தை கொண்ட பெண் போல் இருந்தவளிடம் சல்லாபம் செய்து கொண்டு இருந்தார். உள்ளே கருவாட்டு வாசனை, கூடவே சாராய நெடியும் மூக்கைத் துளைத்தது.  ஏற்கனவே தன் தந்தை தத்தரின் லீலைகளைப் பற்றிக் கூறி இருந்ததினால் எதிரே உள்ளவர் தத்தரே எனவும் தன்னை சோதிக்கவே அப்படி நாடகம் ஆடுகின்றார் என்பதையும் பரசுராமர் புரிந்து கொண்டார்.  அவரிடம் சென்று அவரை சேவித்த பின் தன் தந்தைக்கு இறுதிக் கடன் செலுத்த தான் வந்திருப்பதாகவும் அதற்கு அவர்தான் தனக்கு ஒரு வழி காட்ட வேண்டும் என்றும் வேண்டினார். ‘இறுதிக் கடன் பற்றி எனக்கென்னடா தெரியும்.. வேண்டுமானால் நீயும் இங்கு அமர்ந்து கொண்டு இந்த சாராயத்தை என்னுடன் சேர்ந்தே குடி. அதை விடுத்து இறுதிக் கடன் செய்ய என்னுடைய உதவி கேட்டு இங்கு வந்து என்னை ஏன் கேலி செய்கிறாய்?’ என்றார் தத்தர். பரசுராமருக்கு வைராக்கியம் அதிகம். அசைந்து கொடுக்கவில்லை. ‘ஸ்வாமி தயவு செய்து நாடகத்தைத் தொடராதீர்கள். நீங்கள் கூறும்படித்தான் என் தந்தைக்கும் தனக்கும் இறுதிக் கடன் செய்ய வேண்டும் என என் தாய் விரும்பியுள்ளதால் என்னையும் அவள்தான் இங்கு அழைத்து வந்திருக்கிறாள்’.

‘என்ன சொன்னாய், நான் சொல்லியபடித்தான் இறுதிக் கடன் செய்ய வேண்டும் என கூறியவள் உன் தாயாரா?, அவளும் வந்திருக்கிறாளா, யாரடா அவள்?  என்று ஆச்சர்யத்துடன் கேட்ட அந்த அகோர மனிதன் முன்பு பெரிய ஒளி வெள்ளம்  தோன்றியது. அனைத்து நாடகக் காட்சிகளும் மறைந்து விட்டிருந்தன. பரசுராமர் எதிரில் ஜ்யோதி ஸ்வரூபமாக ஸ்ரீ தத்தர் நின்று கொண்டிருந்தார். ‘வா, உன் தாயார் யார் என நான் பார்க்க வேண்டும்’ என்று கூறிவிட்டு அவருடன் சென்றவர் ரேணுகாவைப் பார்த்தார். அவ்வளவுதான், ‘என் தாயே’ என பய பக்தியுடன் அவளை வணங்கிய பின் அவளைக் குறித்து தோத்திரம் செய்து ஆராதிக்கலானார். ‘தேவி, ஏக வீரா, அனைத்துலகத்துக்கும் தாயானவளே, நீயே அனைவருக்கும் தாயானவள், நீயே இந்த உலகை இயக்குபவள், நீயே அனைத்து ஜீவன்களையும் காத்து அருள்பவள். உன்னை நான் வணங்குகிறேன்’ என்று பலவிதமாக புகழும் தோத்திரங்களைக் கூறிக் கொண்டே  அவளைத் துதித்தபடி அவள் முன்பாக அவர் நின்று கொண்டு இருந்த பொழுதும் சலனமற்று கம்பீரமாக ஜெகத் ஜோதி  போல ஒளி தரும்  பின்னணியில் அமர்ந்து இருந்தாள் ரேணுகா தேவி.

நடந்து கொண்டிருந்த அனைத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு நின்ற பரசுராமரை தன் அருகில் அழைத்த ஸ்ரீ தத்தாத்ரேயர் பரசுராமரை அனைத்து புண்ணிய நதிகளிலும் குளித்து விட்டு வரும்படிக் கூறி விட்டு இறுதிக் கடன்களை செய்ய வேண்டிய முறைகளைச் சொல்லிக் கொடுத்தார். பரசுராமரும் தத்தர் கூறியபடி இறுதி ஸம்ஸ்காரங்களை செய்து முடித்தார். ரேணுகா தேவியும் தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு ஜமதக்னியின் சிதைக்கு மூட்டிய தீயில் தானும் விழுந்து அவருடன் பயணித்து விட்டாள்.  அனைத்து காரியங்களும் நடந்து முடித்த பின் பரசுராமரும் அவருடன் கூட வந்தவர்களும் ஸ்ரீ  தத்தாத்ரேயரை வணங்கி துதித்தப் பின் அவருடைய ஆசிகளைப் பெற்றுக் கொண்டு திரும்பினர். தன்னுடைய தாயார் ஜமதக்கினியை காத்தவீர்யனின் ஆட்கள் கொன்ற பொழுது தன்னை கூப்பிட அவலக் குரல் எழுப்பி தன் மார்பில் இருபத்தி ஒன்று முறை அடித்துக் கொண்ட தன் தாயாரின் நினைவாக இருபத்தி ஒரு முறை பூமியின் பல பகுதிகளுக்கும் சென்று ஷத்திரியர்களை அழித்தார். எத்தனை மனிதர்களைத்தான் கொன்று தீர்ப்பது, மனம் வெறுப்பு அடைய தன் தாயாரும் தந்தையும் கூறி இருந்தபடி மீண்டும் தத்தரிடமே சென்று அவரிடம் சரணடையலாம் என எண்ணியவாறு தத்தரைக் காணச் சென்றார். அவர் போகும் வழியில் ரேணுகா தேவியும் தந்தை ஜமதக்கினியும் அவர் முன் தோன்றி அவருக்குக்  காட்சி தந்த பின் அவர் அத்தனை கொலைகள் செய்ததினால் ஏற்பட்டு உள்ள பாவத்தை தொலைக்க ஒரு யாகம் செய்யும்படிக் கூறி விட்டு மறைந்தனர்.

என்ன யாகம் செய்வது, அதை எப்படிச் செய்வது எனத் தெரியாமல் மனம்  குழம்பிய வண்ணம்  ஸ்ரீ தத்தாத்ரேயரிடமே மீண்டும் போய்  சேர்ந்தார். வழியில் தனக்குக் காட்சி தந்த பெற்றோர்கள் கூறிய அறிவுரையை ஸ்ரீ தத்தாத்திரேயரிடம் தெரிவித்த பின் திருமணம் ஆகாத தன்னால் எப்படி யாகம் செய்ய முடியும் எனத் தான் தவிப்பதாகவும் அதுவே மனதில் வேதனை தருவதாகவும் கூறினார். ஸ்ரீ தத்தாத்ரேயர் ஆறுதல் சொன்னார் ‘கவலைப் படாதே ராமா, எந்த ஒரு செயலுக்கும் ஒரு மாற்று வழி உண்டு. உன்னை அவர்கள் செய்யச் சொன்ன யாகத்திற்கு ரேணுகா யாகம் எனப் பெயர் அளிக்கின்றேன். அதை செய்து முடிக்கும் வரை நானே உனக்கு வழி காட்டிக் கொண்டிருந்து  அதில் பங்கு பெறுவேன்’ என்று கூறினார். யாகத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்த பின், பரசுராமரின் பிரும்மச்சரியத்தை முடிவிற்குக் கொண்டு வந்து யாகம் செய்யும் வகையில் ஒரு தங்கப் பதுமையிலான பெண் உருவைப் படைத்து அதை அவருடைய பக்கத்தில் வைத்துக் கொண்டு  மனைவி ஸ்தானமாக  அதை மனதில் கருதிக் கொண்டு யாகத்தைத் துவக்கும்படிக் கூறினார்.

தத்தர் கூறியது போல் யாகம் நடந்தது. ஒரு பக்கம் ஸ்ரீ தத்தரே ஒரு ருத்வியாக அமர்ந்து கொள்ள மறுபுறம் காஷ்யப முனிவர் அமர்ந்தபடி காரியங்கள் நடந்தேற அதை அங்கு கூடி இருந்த அனைத்து ரிஷி முனிவர்களும் பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது அவர்கள் மனதில் எழுந்து நின்ற கேள்வி ‘ஸ்ரீ தத்தர் இந்த யாகத்திற்கு ஏன் ரேணுகா யாகம் என்று பெயரிட்டார், அது மட்டும் அல்ல இப்பொழுதெல்லாம் ஸ்வாமி ……ரேணுகா… , …ரேணுகா… என்று அடிக்கடி உச்சரித்துக் கொண்டு இருக்கின்றார். அந்த ரேணுகாவிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு இருக்கும்?  அவள் உண்மையிலேயே பரசுராமனின் தாயார்தானா இல்லை எனில் வேறு ஒரு பெண்மணியா? மனதில் எழுந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் அதைப் பற்றி தத்தாத்திரேயரிடம் சென்று கேட்கவும் எவருக்கும் துணிவும் இல்லை. யாகத்தின் இடையிடையே அவர் ‘இதை செய் அதை செய்’ என பரசுராமனை வழி நடத்திக் கொண்டு இருக்கிறார். திடீரென பரசுராமர் மீது அவருக்கு என்ன அக்கறை ?  கேள்விகள் அவர்கள் மனதைக் குடைந்தவண்ணம் இருந்தன. அது போலவே பரசுராமரும் இடையிடையே யோசித்த வண்ணம் இருந்தார். யாகம் நன்கு நடந்து முடிந்தது. ருக்விக்களாக வந்த முனிவர்களுக்கு எந்த மனக் குறையும் இன்றி நிறைய தானங்கள் கிடைத்தன. அனைவரும் ஸ்வாமிகளை சேவித்துக் கொண்டு இருக்கையில் அத்தனை நேரமாக தன் மனதில் அடக்கி வைத்திருந்த சந்தேகத்தை பரசுராமர் கேட்டு விட்டார்.

“ஸ்வாமி என் பெற்றோர்கள் சொர்கத்திற்கு செல்லும் முன் என்னை வழியிலே சந்தித்தனர். அவர்கள் என்னிடம், ஸ்ரீ தத்தாத்ரேயர் கூறும்படி இறுதி ஸமஸ்காரங்களை செய்து முடித்த பின் தத்தரிடமே தீட்சைப் பெற்றுக் கொண்டு ஸ்ரீ தத்தரிடமே சிஷ்யனாகும்படியும் கூறினர். உங்களிடம் வந்த  நான் என் தாயாரின் பெயரைக் கூறிய உடனேயே என்னுடன் வந்து அவளை வணங்கினீர்கள். அப்பொழுதே நினைத்தேன் இத்தனைப் பெரிய யோக குருவும் மூம்மூர்த்தியின் அவதாரமுமான நீங்கள் எப்படி என் தாயாரை வணங்கினீர்கள்? என் தாயார் ரேணுகாவை முன்பே உங்களுக்குத் தெரியுமா, அதற்கும் மீறி இந்த யாகத்திற்கு ரேணுகா யாகம் எனப் பெயர் வைத்தீர்கள். அதன் காரணம் என்ன என்று அடியேனுக்கு விளக்கினால் மனம் தெளிவாகும்” என்று வேண்டினார். அவர் கூறியதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்த ஸ்ரீ  தத்தர் முகத்தில் எந்த விதமான சலனமும் இல்லை.

‘எனக்கும் உன் தாயாருக்கும் என்ன பந்தம் என்று கேட்டாய் அல்லவா சொல்கிறேன் கேள். உன் தாயார் சாகாரம் என்ற தூல சரீரமும், நிராகாரம் என்ற ஜேஷ்ம சரீரமும் கொண்ட இரு வடிவங்களைக் கொண்டவள்.  அந்த இரு வடிவங்களில்  சாகரம் எனும் ஆகாயம், வாயு, அக்கினி, நீர், பூமி எனும் பஞ்சபூதங்களால் ஆன தூல உடலையும்,  கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐந்து ஞானேந்திரியங்கள், வாய், கை, கால், குதம், குறி ஆகிய ஐந்து கர்மேந்திரியங்கள் மற்றும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் ஆகிய பஞ்ச பிராணன்கள் கொண்ட சூட்சும சரீரத்தையும்  கொண்டவள். இவை அனைத்துக்கும் அப்பால்,  உலகெங்கும் வியாபித்துள்ள ஜொலிக்கும் ஒளியில்,  ஒரு பிரளய காலம் முதல் இன்னொரு பிரளய காலம்வரை  ஏகாந்தமாக பரவி நிற்கும் அவளது ஆன்மா  அழிவற்ற நிலையிலானது.  பிரம்மத்தில் மட்டுமே  ஐக்கியம் ஆகி நிற்கும்  தன்மையிலானது. அவளே உலகு அனைத்தையும் காக்கும் லோக மாதா.

உன்னுடையத் தாயார் இந்தப் பிறவியில் ஜமதக்னி முனிவரின் மனைவியாகப் பிறந்ததின் காரணம் லோகத்தின் நன்மையைக் கருதி என் மூலம் அனைவருக்கும் நல்வழிப் போதனைத் தர வேண்டும் என்பதினால்தான். ரேணுகாவாகப் பிறந்த அவள் தன் ஸ்தூல உருவத்தை விட்டு விட்டு தன் இடத்திற்கு சென்று விட்டாள். கார்த்தவீர்யன் முன் பிறவியில் வி;ஷ்ணுவிடம் பெற்ற சாபத்திற்கு அவருடைய ஒரு அம்சமான உன் மூலம் விமோசனம் பெற வேண்டும் என்பதற்காகவே உன்னையும் தன்னுடைய பிள்ளையாக அவதரிக்க வைத்தார்.  உன் அன்னை ஒரு ஏக மாதா, அவளே சந்தியா தேவி, அனைத்து உலகின் தாயாக, காயத்திரியாக  நிற்பவள். காலமற்ற காலத்தில் வாழ்பவளான அவளை வணங்குவதற்கு காலமோ நேரமோ இல்லை என்றாலும் அவளை மூன்று முக்கியமான வேளைகளிலும் வணங்குபவர்கள் எண்ணற்ற ஆனந்தத்தைப் பெறுவார்கள். எல்லா காலத்திலும் நிறைந்து இருக்கும் அவளுக்கு எந்த இடத்தில் இருந்தாலும், எப்படி இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் சந்தி என்பதின் மூலம் வந்தனம் செய்யலாம். சந்தி என்றால் காலம். ஆனால் அதற்காக அவளை அந்த மூன்று வேளைகளில் மட்டும் வணங்க வேண்டும் என்பதல்ல இதன் சாரம். அதனால்தான் என்னைப் போன்ற யோகிகளும் கூட அவளை வணங்குகின்றோம். இதோ இங்கு தெரிகின்றதே ஒரு குளம், அதில்தான் உன் தாயாரும் நீராடுவாள். அதனால்தான் அதை ரேணுகா தீர்த்தம் என்று கூறுகிறோம்.

இதோ உள்ளதே நெல்லி மரம், அதன் அடியில்தான் உன் தாயார் அமர்ந்து இருப்பாள். எவர் அங்கு சென்று ஓய்வு எடுத்தாலும் அந்த மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டாலும் அவர்களின் மனதில் அமைதி கிட்டும். உனக்கு நினைவிருக்கின்றதா?  உன் தாயார் உன்னிடம் கூறியது, யாகம் முடிந்ததும் அந்த நெல்லி மரத்தடியில் சென்று ஓய்வு எடுத்துக் கொள் என்று கூறினாளே, அது இதனால்தான்’ இப்படி எல்லாம் பலவாறாக ரேணுகா தேவி குறித்து  ஸ்ரீ தத்தாத்ரேயர் வர்ணித்துக் கொண்டு இருக்கையிலேயே ரேணுகா தேவி அங்கிருந்த நெல்லி மரத்தின் அடியில் தோன்றினாள்.  அவளைக் கண்ட ஸ்ரீ தத்தாத்ரேயர் ‘…ஹே தேவி, ஹே ஜகன்மாதா ஹே அம்பா தேவி…’ எனப் பலவாறு அவளைப் புகழ்ந்தவாறு அங்கேயே அவளை பூஜிக்கத் துவங்கினார். அதற்குப் பிறகுதான் முனிவர்களுக்கும் பரசுராமருக்கும் புரிந்தது ரேணுகா யார் என.

யாகம் முடிந்தது. அனைவரும் சென்று விட்டனர். பரசுராமரும் அங்கேயே சில நாட்கள் தங்கி ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கிக் கொண்டும், தன்னுடைய தாயாரைத் துதித்தபடியும் நெல்லி மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டும், ஓய்வு எடுத்துக் கொண்டும் பல நாட்கள் இருந்தார். அவர் மனதில் துக்கம் இல்லை, மனதில் கோபம் இல்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல பரசுராமர் மனம் மீண்டும் மீண்டும் அமைதி இன்றி இருந்தது. என்ன செய்வது எனப் புரியாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தவர் கடைசியாக  தசரதனின் மைந்தனான ராமனிடம் சண்டையிட்டுத் தோற்றுப் போய் மனம் ஒடிந்து காட்டிற்குத் திரும்பி வந்தபின் ஒன்றும் செய்வதறியாது அலைந்துத் திரியலானார். அங்கு நிர்வாணமாகவே திரிந்து கொண்டு, வெகு அபூர்வமாகவே மற்றவர்கள் முன் காணப்படும் சம்வார்த்தா என்ற ஒரு மாமுனிவரை சந்தித்தார். அவரிடம் சென்று ‘ஐயா, என் மனதில் அமைதி இல்லை……என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறுகிறேன். எனக்கு மனதில் அமைதி கிடைக்க ஒரு வழி கூறுவீர்களா’ என்று கேட்டார்.

அவர் கூறிய அறிவுரை பரசுராமர் கண்களைத் திறந்தது. ‘விளக்கைக் கையில் வைத்துக் கொண்டே வெளிச்சத்தைத் தேடுகின்றாயே’ என அவர் ஸ்ரீ தத்தாத்ரேயரின் மகிமைகளைக் கூற தவறு செய்து விட்டு எங்கெங்கோ அலைகின்றோமே என வருத்தம் அடைந்தார். சம்வார்த்தா மாமுனிவர் கொடுத்த அறிவுரைப்படியே தத்தாத்திரேயரின் பாதங்களில் சென்று விழுந்தார். ‘ஸ்வாமி எத்தனை பெரிய பைத்தியக்காரன் நான் என இப்போதுதான் புரிந்தது.  என் மனதில் அமைதி இல்லை, உள்ளத்தில் நிம்மதியும் இல்லை. நீங்கள்தான் அமைதியுடன் நான் வாழ்ந்து கொண்டு இருக்க எனக்கு ஒரு வழி காட்ட வேண்டும்’ என சிறு குழந்தைப் போல அவர் கால்களைப் பற்றிக் கொண்டு அழலானார். ‘கவலைப்படாதே குழந்தாய்’ என ஆறுதல் கூறியவர் அவருக்குப் பல பாடங்களைச் சொல்லித் தந்து அங்கேயே ஒரு இடத்தில் குடில் அமைத்துக் கொண்டு அதில் வசித்து வந்து தினமும் தியானம் செய்யுமாறு அறிவுரைக் கூறினார். பரசுராமரும் மகேந்திர மலை அடிவாரத்தில் தங்கியபடி தவம் செய்யலானார். அந்த சமயத்தில் அவருக்கு ஸ்ரீ தத்தாத்ரேயர் செய்த உபதேசமே திரிபுரா இரகசியம் என்பது.  பல கதைகளை உதாரணமாகக் கொண்டு கூறப்பட்டதே திரிபுரா ரகசியம் என்பது. திரிபுரசுந்தரியான திரிபுராவை மையமாகக் கொண்டு பரசுராமருக்கு உபதேசித்தார். சக்கர வழிபாடு, யந்திர வழிபாடு, தேவியை எப்படி வழிபட வேண்டும் என்ற அனைத்தையும் ஸ்ரீ  தத்தர் அவருக்கு விரிவாகக் கூறினார்.

ஏக்நாத்தும் ஸ்ரீ  தத்தாத்திரேயரும்

ஸ்ரீ தத்தாத்ரரேயருடைய வரலாற்றில்  மராட்டிய மாநிலத்தில் அவருக்கு பெரும் அளவிலான பக்கர்கள் உண்டு என்பது தெரிய வருகின்றது. ஸ்ரீ தத்தாத்ரேயர் எதற்காக, எப்படி எல்லாம் ஒருவருக்கு உதவி செய்வார் என்பது தெரிவது இல்லை. தத்தத்திரரேயருடைய பெருமைகளை விவரிக்கும் பல கதைகளில் இதுவும் ஒன்று.  மராட்டிய மாநிலத்தில் ஸ்வாமி ஞானதேவா வழியைச் சார்ந்தவரும், வராகாரி குலத்தைச் சேர்ந்தவரும், 17-18 ஆம் நுரற்றாண்டில் இருந்தவருமான முனிவர் ஏக்நாத் மற்றொரு முனிவர் தத்தோபந்த் என்பவருடன் வசித்து வந்தார். இருவருமே மராட்டிய மாநிலத்தில் பிறந்த அந்தணர்கள்தான்.

அந்த காலங்களில் ஒவ்வொருவரும் ஒரு குருவை ஏற்றுக் கொண்டுதான் சன்யாசப் பாதைக்கு செல்வது உண்டு. அந்த வழியைப் பின்பற்றியே ஏக்நாதரும் ஸ்வாமி ஜனார்தனா என்பவரை பத்தாவது வயதிலேயே தன் குருவாக ஏற்றுக் கொண்டு இருந்தார்.  ஏக்நாதர் பாண்டுரங்க விட்டலாவின்  தீவிரமான பக்தர். ஸ்வாமி ஜனார்தனா இன்று மகாராஷ்டிராவில் உள்ள சத்தாரா என்ற மாநிலத்தில் தௌதாபாத் என்ற இடத்தில் உள்ள தேவகிரி எனறும் தேவகட் என்றும் கூறப்படும் ஒரு மலைப் பகுதியில் இருந்த நெல்லி மரத்தின் அடியில் ஆத்ம ஞானம் பெற்றவர். அடிக்கடி ஸ்ரீ தத்தாத்ரேயரை  நேரிலே சந்தித்தவர் என்றும் கூறுவார்கள். தத்தாத்திரேய பக்தரான ஸ்வாமி ஜனார்தனா பிறப்பால் ஒரு அந்தணர் என்ற பொழுதிலும் ஜாதி பேதமற்றவர். அதனால்தான் அவர் தேவகட் என்ற நகரில் இருந்த ஒரு முகமதிய மன்னனின் கோட்டையை பாதுகாக்கும் பணியில் இருந்து கொண்டே தியானத்தையும் தொடர்ந்து கொண்டு இருந்தவர்.  அவர் தியானத்தில் இருக்கும் பொழுது அவரை எவரும் தொந்தரவு செய்யக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவு உண்டு. அவர் தியானத்தில் இருக்கும் பொழுதெல்லாம் ஏக்நாத் அவருக்கு காவல் இருப்பார்.

இப்படிக் காலம் சுழன்று கொண்டு இருந்தது. ஒரு முறை ஒரு முகலாய மன்னன் அந்த நகரின் மீதுப் படை எடுத்து வந்து விட்டான். ஸ்வாமி ஜனார்தனா தியானத்தில் இருந்தார். எதிரிப் படைகளோ வேகமாக முன்னேறி வந்த வண்ணம் இருந்தனர். என்ன செய்வது, தியானத்தில் இருக்கும் ஸ்வாமி ஜனார்தனாவை எழுப்புவது குரு துரோகம் ஆகி விடுமே என்று கவலைப்பட்ட ஏக்நாத், குருவை மனதில் தியானித்தார். அவருடைய யுத்த உடைகளை அணிந்து கொண்டு யுத்த  பூமிக்குச் சென்று விட்டார்.

யுத்தம் நடந்து கொண்டு இருக்கையில் தன் பக்கத்தில் ஒரு குதிரை மீது அமர்ந்தபடி சிவந்த கண்களும் ஆக்கிரோஷ முகத்துடன் ஒரு முஸ்லிம் படை வீரன் எதிரிகளுடன் போரிட்டபடி யுத்தத்தில் ஈடுபட்டிருந்ததைக் கண்டார். வெற்றி பெற்ற பின் அது பற்றி தன் குருவிடம் கூறிய பொழுது யுத்தகளத்தில் அப்படி படைவீரன் உருவில் வந்து தங்களுக்கு உதவியவர் வேறு யாரும் அல்ல. ஸ்ரீ தத்தாத்ரேயரே யுத்த வீரன் உருவில் வந்து காப்பாற்றினார் என்ற உண்மையைத் தன் குருவின் மூலம் உணர்ந்து கொண்டார்.

இன்னொரு முறை ஏக்நாத்திற்கு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஸ்ரீ  தத்தர் தன்னுடன் சில நாய்களையும், ஒரு வயதான பெண்மணியையும் அழைத்துக் கொண்டு பகீர் போன்ற உருவில் அவரிடம் வந்து தன்னுடன் உணவு அருந்துமாறு அழைத்தார். ஆனால் ஏக்நாத் தான் ஒரு ஆசார பிராமணர் என்பதால் ஒரு முகமதியருடன் அமர்ந்து கொண்டு எப்படி உணவு அருந்துவது எனச் சங்கடப்பட்டுக் கொண்டு இருக்கையில் அங்கு வந்த அவருடைய குருநாதர்  வந்துள்ளது தனது குருதேவனான ஸ்ரீ தத்தாத்ரேயரே என்று அவருக்கு எடுத்துக் கூறி அவர் கொடுத்த உணவை அருந்துமாறு கூறினார். அதற்குள் வந்தவர் மாயமாக மறைந்து விட்டார். ஏன் இப்படி ஏக்நாத் என்ற ஒரு தனி மனிதருக்கு, ஸ்ரீ தத்தாத்ரேயரிடம் தன்னை முழுமையாக  சமர்பித்துக் கொள்ளாத ஒரு சன்யாசிக்கு ஸ்ரீ  தத்தர் கருணை காட்டுகின்றார் என்கிற சந்தேகம் எழுந்தால் அது நியாயம். ஏன் என்றால் அதற்கு  ஒரு காரணம் இருந்தது என்பது அவர் பிறந்த பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு பிறந்த தத்தோத்பாவாவின் வாழ்க்கையின்  ஒரு அத்தியாயம் மூலம் விளங்கும்.

திகம்பரா திகம்பரா, ஸ்ரீ  பாத ஸ்ரீ வல்லப திகம்பரா!

திகம்பரா திகம்பரா, ஸ்ரீ  தத்ததேவா  திகம்பரா

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ

ஐந்தாம் நாள் பாராயணம்……………..தொடரும்

Please send your comments to the author on this article