பாராயணம்

ஐந்தாம் நாள் பாராயணம்

ஓம்  தத்தாத்ரேயாய வித்மஹே

யோகீஸ்வராய  தீமஹி

தன்னோ தத்த ப்ரசோதயாத்

 

ஸ்ரீ தத்தோத்பவாவும்  ஸ்ரீ தத்தாத்திரேயரும்

தத்தோத்பவா என்பவர் இளமைக் காலம் முதலே ஸ்ரீ தத்தாத்திரேயரின் பக்தர். அவருடைய ஆசிகளைப் பெற்று சன்யாச வாழ்வை மேற் கொண்டவர். தத்தோபந்தின் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது. அவர் பன்னிரண்டு  வயதான பொழுது அரசனிடம் வேலை செய்து கொண்டிருந்த அவருடைய தந்தை மன்னனிடம் கடன்பட்டு விட்டார். அதைத் திருப்பித் தர முடியாமல் போய்விட அந்த மன்னன் தத்தோத்பாவை பணய கைதியாக வைத்துக் கொண்டு பணத்தைப் முழுவதும் கொடுத்த பின்   அவனை அழைத்துக் கொண்டு போகுமாறு கூறி விட்டான். அவருடைய குடும்பத்தினர் ஸ்ரீ  தத்தாத்திரேயரின் பக்தர்கள் என்பதினால் ஸ்ரீ  தத்தரிடம் மனமுருகிப்  பிரார்த்தனைபிரார்தனை செய்யலாயினர். தங்களுடைய மகன் தத்தோத்பா மன்னனிடம் எப்படி எல்லாம் சித்திரவதைப்பட்டு வேலை செய்கின்றானோ என மனம் கதறி அழுதனர். தன் பக்தனின் மகன் சிறை பிடிக்கப்பட்டு கொடுமைகளை அனுமதிக்க விரும்புவாரா ஸ்ரீ தத்தாத்திரேயர். ஆகவே ஒரு நாள் திடீர் என அந்த நாட்டு மன்னனிடம் ஒரு புதியவர் போலச் சென்று தன்னை தத்தோத்பாவின் தந்தை அனுப்பி உள்ளார் என்றும் கடன் பட்டிருந்த பணத்தை  திருப்பிக் கொடுத்து விட்டு சிறை வைக்கப்பட்டு உள்ள தத்தோத்பாவை திரும்ப அழைத்து வரும்படிக் கூறினார் என்று கூறிய பின்னர் பணத்தை  தந்துவிட்டு தத்தோத்பாவிற்கு விடுதலை வாங்கிக் கொண்டு அங்கிருந்து அவரை அழைத்துச் சென்றார். உண்மையில் நடந்தது எதுவுமே தத்தோத்பாவின் தந்தைக்குத் தெரியாது. விடுதலைப் பெற்று வீடு திரும்பி வந்த மகன் அனைத்து செய்திகளையும் கூறிய பின்னரே அப்படி ஒரு கருணையை செய்து உள்ளவர் ஸ்ரீ தத்தாத்திரேயர் எனத் தெரிந்து கொண்டு ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினர். 

அதன் பின்னர் தத்தோத்பாவும் ஸ்ரீ  தத்தர் பக்தியில் இன்னமும் தீவிரம் அடைந்தார். மனம் எப்பொழுதும் தத்தரையே நினைத்த வண்ணம் ஏங்கியது. இளம் வயது. நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க முடியவில்லை. மனம் முழுவதும் தத்தரைக் காண வேண்டும், தத்தரைக் காண வேண்டும் என்றே துடிக்கலாயிற்று. அந்த வேட்கையின் விளைவாக தத்தரை எங்காவது பார்க்க முடியுமா என மலைப் பகுதிகளில் இருந்த காடுகளின் உள்ளே  சென்று தேடலானார். தியானம் செய்யலானார். உணவு பற்றியோ, உடைகளைப் பற்றியோ கவலைப்படவில்லை. மண் மீதும், வெற்று பூமி மீதும் படுத்து உறங்கினார். கற்கள் மீதும் பாறைகள் மீதும் படுத்து உறங்கினார். காலம் உருண்டது. சுமார் இருபதுக்கும் மேலான ஆண்டுகளை காட்டில் தொடர்ந்தார். இதனால் மிகவும் மனம் மகிழ்வுற்ற ஸ்ரீ தத்தாத்ரேயர் ஒரு நாள் திடீரென  அவர் முன் வந்து நின்று தன்னுடன் சேர்த்து அவரைக் கட்டி அணைத்துக் கொண்டார். அப்படிக் கட்டிப் பிடித்த நேரத்தில் அவரை தெய்வீகப் பிறவியாக மாற்றினார். தத்தோத்பாவின் மன மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அனைத்து உலகையும் மறந்து நின்றார். 

அங்கிருந்து சென்று அம்பாகூரகிரி என்ற இடத்தில் தங்கலானார். காட்டை விட்டு வெளியில் வந்த அந்த நேரத்தில்தான் ஏக்நாத்தையும் எதேச்சையாகச் சந்தித்தார். இரு முனிவர்களும் மனம் விட்டுப் பேசினர். காலம் உருண்டது. ஒரு முறை ஏக்நாத் இருந்த இடத்தில் கிருஷ்ண ஜெயந்தி நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக தத்தோத்பாவும் சென்றிருந்தார். விழா நடக்கும் இடத்திற்குச் சென்ற பொழுது வாசலில் ஸ்ரீ தத்தாத்ரேயர் காவல்காரன் உருவில் நின்றிருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்து ஓடிச் சென்று அவர் கால்களில் விழுந்து வணங்கினார். எதற்காக இப்படி காவல்காரன் உருவில் இங்கு இருக்கின்றீர்கள் எனக் அவரிடம் கேட்ட பொழுது, தான் காவல் காத்துக் கொண்டு இருந்தது ஏக்நாத் என்ற தனி மனிதனுக்கு அல்ல, காவலில் இருப்பது அவர் உருவில் உள்ள பாண்டுரங்க பகவானுக்கே எனவும், ஏக்நாதர் பாண்டுரங்கனே என்ற உண்மையையும் கூறி விட்டு அதனால்தான் அவருக்கு அத்தனை மரியாதைத் தருவதாகவும் கூறினார். 

தத்தரிடம் தன்னை முழுமையாக  சமர்பித்துக் கொள்ளாத ஒரு சன்யாசிக்கு, ஏக்நாத் என்ற ஒரு தனி மனிதருக்கு ஏன் ஸ்ரீ  தத்தர் கருணை காட்டுகின்றார் என்ற  கேள்விக்கு விடை   அளிக்கும் விதத்தில் அவர் பிறந்த பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு பிறந்த தத்தோத்பாவாவின் வாழ்க்கையின் இந்த சம்பவம் உள்ளது. அதன்  பின்னர் தத்தோத்பாவும் கோதாவரி நதிக் கரையில் தத்தரின் பாதுகைகளைப் பெற்றுக் கொண்டு  ஞான உபதேசமும் பெற்றார். ‘அஹம் பிரம்மஸ்மி’ அதாவது நானே பிரும்மம் என்ற உண்மையை உணர்த்தும் மாபெரும் தத்துவம் அவர் பெற்ற ஞான உபதேசம்.

சத்ருஜித்தும் ஸ்ரீ தத்தாத்திரேயரும்

ஸ்ரீ தத்தாத்திரேயருடைய மகிமைக்கு எடுத்துக்காட்டாக இன்னும் ஒரு கதை உண்டு. முன்னொரு காலத்தில் சத்ருஜித் என்ற மன்னன் இருந்தான்.  நல்ல ஒழுக்கங்களும் நேர்மையும் கொண்டு அரசாண்டு வந்தவன். அவனுக்கு ருதுத்வஜன் என்ற மகன் இருந்தான். அப்பாவிற்கு தப்பாமல் பிறந்த பிள்ளை என்று போற்றும் அளவிற்கு  ருதுத்வஜன் திறமைசாலியாகவே இருந்தான். அது மட்டும் அல்ல, நல்ல குணங்களிலும், சாஸ்திர அறிவுகளிலும் குறைவின்றி இருந்தான். அத்தனை இருந்தும், தான் ஒரு இளவரசன் என்பதையும் மறந்துவிட்டு தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்த வண்ணம் உல்லாசமாக இருந்து வந்தான். அவனுக்கு இருந்த பல நண்பர்களில் இருவர் மட்டும் அவனிடம் மிக நட்புடன் பழகிக் கொண்டு இருந்தனர். அவர்கள் நாகலோகத்தைச் சேர்ந்தவர்கள். நாகலோகத்தைச் சேர்ந்த அவர்கள் அந்தணர்களின் வேடத்தில் அங்கு வந்து தங்கி வாழ்ந்து கொண்டு ருதுத்வஜனுடைய நல்ல நண்பர்களாக இருந்ததின் காரணம் ருதுத்வஜனுடைய நல்ல பண்பும் குணமும்தான். அவர்கள் நாகலோகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மை ருதுத்வஜனுக்குத் தெரியாது. 

இப்படியாக அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கையில் ஒருமுறை முனிவர் ஒருவர் சத்ருஜித்தின் அரசவையில் வந்து தனக்கு ஏற்பட்டிருந்த ஒரு சங்கடத்தைப் பற்றிக்  கூறினார்  ‘அரசே,  நான் பல ஆண்டுகளாக காட்டில் தவம் செய்து கொண்டு இருப்பவன். ஆனால் கடந்த சில நாட்களாக ஒரு அரக்கன் அங்கு வந்து என் தவத்தை கலைத்தவாறு இருக்கின்றான். நான் இத்தனை நாட்களாக கஷ்டப்பட்டு செய்த தவத்தின் பலனை துஷ்பிரயோகம்  செய்து   கேவலமான ஒரு அரக்கனை அழிக்க விரும்பாமல், அவனை அழிக்குமாறு   தெய்வத்தை வேண்டிக் கொண்டு நின்றிருந்த பொழுது ஆகாயத்தில் இருந்து ஒரு அசரீரி கூறியது, ‘நான் உனக்கு சூரியனின் வாகனங்களுக்கு இணையான சக்தி கொண்ட ஒரு தேவலோகக் குதிரையை அனுப்புகிறேன். அதைக் கொண்டு போய் அரசன் சத்ருஜித்திடம் தந்து அந்த குதிரையை அவனுடைய மகனிடம் கொடுத்து அதில் ஏறிச் சென்று அரக்கர்களை அழிக்கச் சொல்’ என்று ஆணையிட்டது. அதே சமயத்தில்  என் எதிரில் ஒரு குதிரையும் வந்து நின்றது. அதை எனக்கு அசரீரி கூறிய கட்டளைப்படியே உன்னிடம் கொண்டு வந்து விட்டேன் மன்னா. நீதான் அந்த அரக்கர்களை அழித்து என்னுடைய தவத்தினைத் தொடர உதவ வேண்டும்’ என்று கூறிவிட்டு தன்னுடன் அழைத்து வந்திருந்த குதிரையை அரசனிடம் தந்தார்.  

அரசன் பண்பு மிக்கவன், ரிஷி முனிவர்களைக் காப்பது தன் கடமை என நினைப்பவன். ஆகவே சற்றும் தயங்காமல் தன் மகன் ருதுத்வஜனை அழைத்து முனிவர் கூறிய செய்தியைக் கூறி அவருக்கு துணை சென்று அந்த அரக்கர்களை அழித்து விட்டு வருமாறு ஆணையிட்டான். மகனும் மறு வார்த்தைக் கூறாமல் முனிவருடன் கிளம்பினான். அந்த குதிரையிடம் சென்று கை கூப்பி வணங்கி நின்று தனக்கு துணை புரியுமாறு அவன் வேண்டிக் கொள்ள அந்த குதிரையோ குனிந்து உட்கார்ந்து கொண்டு அவனைத் தன் முதுகில் ஏறிக் கொள்ளுமாறு சைகைக் காட்டியது. தன்னுடன் அந்த முனிவரையும் அமர வைத்துக் கொண்ட இளவரசன் முனிவரின் பர்ணசாலையை அடைந்தான். முனிவர் தவத்தினைத் தொடர, இளவரசனோ இரவு பகலாக அந்தக் குடிலுக்கு காவலாக அங்கு இருந்து வந்தான். 

அப்போது ஒரு நாள் ஒரு அரக்கன் காட்டுப் பன்றியின் உருவில் அங்கு வந்து தவத்திற்கு இடையூறு விளைவிக்கலானான். அதைப் பார்த்த இளவரசன் ருதுத்வஜன் அதை அம்பு எய்தி தாக்கலானான்.  கடுமையாக அம்பு அடிபட்ட அந்த காட்டுப் பன்றி உருவில் இருந்த அரக்கன் ஓடத் துவங்க, அதை விடக் கூடாது என்று எண்ணிய இளவரசன் தேவலோக குதிரை மீது எறி அதைத் துரத்தலானான். தான் தப்பி ஒடாவிடில் தன்னை அவன் கொன்று விடுவான் என்பதை உணர்ந்தான் அந்த அரக்கன். ஆகவே பூமியைக் குடைந்து கொண்டு பாதளத்துக்குள் ஓடலானான். ருதுத்வஜனும் அதை விடாமல் துரத்திய வண்ணம் பாதளத்துக்குள் சென்றான். அவன் அமர்ந்து இருந்தது ஒரு தேவலோக குதிரை என்பதால் அதன் சக்தியால் பாதாளத்திலும் புகுந்து பன்றியைத் துரத்த முடிந்தது. பாதாளத்தில் நுழைந்து கொண்ட அந்த காட்டுப்பன்றி எங்கோ சென்று மறைந்து கொண்டது. அந்தப் பாதாள உலகிலோ கண்களைக் கவரும் வண்ண மயமான கட்டிடங்கள் நிறைந்து இருக்க, இளவரசன் அந்த பளிங்கு மண்டபங்களின் அழகை ரசித்துக் கொண்டு எந்த வீட்டில் சென்று அந்தக் காட்டுப் பன்றி மறைந்து கொண்டது என எண்ணியவாறு அதைத் தேடலானான். 

அப்படி அவன் தேடி அலைகையில் வழியிலே ஒரு அழகிய பெண்மணியைக் கண்டான். நல்ல முகப் பொலிவு, தங்க ஆபரணங்கள் அணிந்து இருந்தாள். ஆனால் கிழிந்திருந்த ஆடைகள், முகத்தில் சோகத்தின் சாயல் என்றபடி காட்சி தந்தாள் அந்தப் பெண். ருதுத்வஜன் அவளை வியப்போடு நோக்க அவளும் அவனை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள். ஆகவே அந்தப் பெண்மணியின் அருகில் சென்ற இளவரசன் அவளைப் பார்த்துக் கேட்டான் ‘அம்மணி  நான் ஒரு காட்டுப் பன்றியைத் துரத்திக் கொண்டு இங்கு வந்தேன். அது இந்த கட்டிடத்தில் நுழைந்து ஓடியது. அதைக் கண்டு பிடித்து அழிக்க வேண்டும். இந்த கட்டிடத்துக்குள் யார் வசிக்கின்றார்கள்’. அவன் அப்படிக் கேட்டதும்  அந்தப் பெண்மணியோ சட்டென உள்ளே ஓடி விட்டாள். அந்த வீட்டில் எந்த வித  சலனமும் தெரியவில்லை. ருதுத்வஜனுக்கு வியப்பாக இருந்தது. இதென்ன மாயமாக இருக்கின்றதே, காட்டுப் பன்றியும் ஓடி மறைந்து விட்டது.  தான் கண்ட பெண்ணையும் காணவில்லை. எங்கே மறைந்து விட்டாள் அவள் என எண்ணியபடி, தைரியமாக மீண்டும் தேவலோகக் குதிரை மீது ஏறி அந்தக் கட்டிடத்தின் மேல் மாடியை அடைந்து குதிரையை அங்கேயே கட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான். 

என்ன அதிசயம் அந்த வீட்டின் ஒரு பெரிய அறையில் கண்களே பூரித்துப் போகும் அளவில் ஒரு கட்டழகி மஞ்சத்தில் படுத்து இருந்தாள். அவன் வந்ததை அவள் கவனித்ததாகத் தெரியவில்லை. படுத்திருந்தவள் அழகில் சொக்கி நின்றிருந்தான் ருதுத்வஜன். அவன்  அப்படி அவளைப் பார்த்தபடி நின்று கொண்டு இருக்கையில் எதேச்சையாக திரும்பிப் படுத்தவள் தன் எதிரில் முன் பின் பார்த்திராத ஒரு மானிடன் வந்து நின்றதைக் கண்டு முதலில் பயந்து போனாலும் அந்த மங்கையும் அவனுடைய அழகைப் பருகலானாள். இருவரும் தம்முடைய நிலையை மறந்துபோய் காதல் மயக்கத்தில் விழத் துவங்க இருந்த நேரத்தில் தன்னை உடனடியாக சுதாகரித்துக் கொண்டான் ருதுத்வஜன். தான் வந்த காரியம் தடைபடலாகாது என எண்ணியபடி அவளிடம் கேட்டான் ‘அழகிய பெண்ணே, உன் முகத்தில் எதோ சோகக்களை தெரிகின்றதைக் காண்கின்றேன். நீ யார், உனக்கு என்ன கவலை என்பதையும், இங்கு என்ன செய்கிறாய் எனவும் நான் தெரிந்து கொள்ளளாமா?’. அவள் பதில் கூறாமல் மௌனம் சாதிக்க இன்னும் இரு முறை அவளிடம் அந்தக் கேள்விக் கணைகளை வீசினான். மெல்ல அவள் வாய் பேசத் துவங்கியது. குண்டலி என எவளையோ நோக்கி அவள் குரல் கொடுக்க, உள்ளே இருந்து இளவரசன் முதலில் வெளியில்பார்த்த பெண்மணி அங்கு வந்தாள். வந்தவள் தலை குனிந்தபடிக் கூறினாள் ‘ஐயா, வெளியில் நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற இயலாத நிலைமை எங்களுக்கு. மன்னித்து விடுங்கள். நாங்கள் ஒரு ஆபத்தில் சிக்கி உள்ளோம். அது பற்றி இப்போது கூற இயலாது. ஆகவே முதலில் நீங்கள் யார் என்பதைக் கூறுவீர்களா?

இளவரசன் புரிந்து கொண்டான். அந்த பெண்கள் எதோ ஆபத்தில் சிக்கி உள்ளனர். அவர்களைக் காக்க வேண்டும். இப்படியாக எண்ணியவாறே அவன் கூறினான் ‘மங்கைகளே, நான் சத்ருஜித் என்ற பூலோக மன்னனின் மகனான ருதுத்வஜன் என்பவன். நான் ஒரு காட்டுப் பன்றியின் உருவில் பூலோகம் வந்து முனிவரின் தவத்தைக் கலைக்க முயன்ற அரக்கனைத் தேடி இங்கு வந்தேன். என் மீது நம்பிக்கை இருந்தால் உங்களுடைய துயரம் என்ன என்று கூறினால் என்னால் முடிந்த  அளவு உங்களுக்கு உதவுகிறேன்’, என்று கூற அவன் மீது நம்பிக்கைக் கொண்டு அவனிடம் முதலில் அவனை வெளியில் கண்ட பெண்மணி கூறினாள். ‘நன்றி இளவரசே, நன்றி. எங்களின் துயரத்தைக் கேளுங்கள். இதோ நிற்கின்றாளே என் தோழி மதாலசை என்பவள், அவள் மீது காதல் கொண்டு அவளை கட்டாயமாக மணந்து கொள்ள நிர்பந்தம் செய்தான் இந்த பாதாள உலகின் அரசனின் புதல்வன். பூவுலகில் உள்ளவள் எப்படி பாதாளத்தில் உள்ளவனை  அதுவும் அரக்கனை மணக்க சம்மதிப்பாள்?  

அதனால் அதற்கு மறுத்த இவளை பிடித்து கொண்டு வந்து இந்த பாதாள உலகில் சிறை வைத்து இருக்கின்றான். இன்னும் இரண்டு நாட்களில் இவளை கட்டாயமாக மணக்கப் போவதாக கூறி விட்டு சென்றதினால் அவள் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாள். ஆனால் இவளை எதேர்ச்சையாக  பார்த்த காமதேனுப் பசு அந்த தற்கொலை முயற்சியைக் கை விடுமாறு அறிவுறுத்தியதுடன் அல்லாமல், இந்த அரக்கனை எவன் கொல்ல முயலுவானோ அவனே மதாலசையான உன்னை மணப்பான் என்று தைரியம் கூறிவிட்டுச் சென்றாள். அதற்கேற்ப இன்று  பூலோகம் சென்று வந்த அந்த அரக்கன் தன் உடல் முழுதும் எவனோ அடித்த அம்புகளினால் துளைக்கப்பட்டு வந்துள்ளான் என்று நாங்கள் நினைத்துக் கொண்டு இருந்த பொழுதுதான் நீங்களும் அவனைத் துரத்திக் கொண்டு வந்து உள்ளீர்கள். இதை நல்ல சகுனம் என்றே நினைக்கின்றோம்’  என்று கூறிய பின் தங்களுக்கு உதவ முடியும் எனில் பாதாளத்தில் இருந்து அவளை மீட்டுக் கொண்டு போக முடியுமா எனக் கேட்டனர். 

இளவரசனுக்கோ அந்த மங்கையை மிகவும் பிடித்து இருந்ததினால் அவளை தான் மணந்து கொண்டு அங்கிருந்து அழைத்துச் செல்ல விரும்பினான். ஆனாலும் தன் குல வழக்கப்படி அவளை தன் குருவின் ஆசி இன்றி, வேத ஹோமம் மூட்டி வளர்க்காமல் மணம் செய்து கொள்ள விரும்பவில்லை. அந்த பெண்களும் அதை அறிந்து கொண்டு அவனுடைய வேத குருவை நினைத்து வேண்டத் துவங்கியதும் அவரும் அங்கே பிரசன்னமாகி, இருவரின் விருப்பத்தையும் அறிந்து கொண்ட பின் அங்கேயே தன் சக்தியினால் ஹோம குண்டம் வளர்த்து அக்னி சாட்சியாக அவர்களுக்கு விவாகம் செய்து வைத்தார். அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு பூலோகம் நோக்கிப் புறப்பட்டவன் மீது போர் தொடுத்தான் பாதாளகேது. ஆனால் இளவரசன் அதிக சக்தி பெற்றவனாக மட்டும் இல்லாமல் பராக்கிரமமான குதிரையையும் வைத்து இருந்ததினால் அனைத்து அசுரர்களையும் கொன்ற பின் அவளை மீட்டுக் கொண்டு தன் ராஜதானியை அடைந்தான். அவன் செல்லும் முன்பே அனைத்து விவரங்களையும் அவனுக்கு விவாகம் செய்து வைத்த அரச குரு மன்னரிடம் கூறி இருந்ததினால் அவர்கள் வரவை ஆவலோடு எதிர் பார்த்துக் காத்திருந்தவர்கள், ஒரு மனைவியுடன் திரும்பிய மகனை மிக ஆடம்பரமாக வரவேற்றனர். 

திரும்பி வந்தது முதல் இளவரசன் பழக்க வழக்கங்களில் பெரிய மாற்றம் தோன்றியது. முன்புபோல் இன்றி நண்பர்களுடன் சுற்றித் திரிவதைக் குறைத்த பின் தன் மனைவியுடனும் ராஜ பரிபாலனத்திலும் அதிக நேரம் செலவு செய்யலானான். அவன் மனதில் மற்றோரு தாகம் எழுந்தது. ரிஷி முனிவர்களை அடிக்கடி சென்று பார்த்தபடியும் அவர்களின் அறிவுரைகளை  கேட்டபடியும் பொழுதைக் கழிக்கலானான். அதே நேரத்தில் மனைவியுடனும் மிகவும் மகிழ்ச்சியாக  வாழ்ந்த வண்ணம் இருந்தான். நாட்கள் கடந்து சென்றன. அரசனும், அரசியும் தங்கள் மகனின் மனப் போக்கை கண்டு வாழ்க்கை  முறையை வெகுவாகப் புகழ்ந்து கொண்டும் மதாலசை மீதும் அன்பு கொண்டு வாழ்ந்தனர். இப்படியாக இனிமையாக கடந்து கொண்டிருந்த வாழ்க்கையைக் கண்டான் போரில் இறந்து போன பாதாளகேதுவின் சகோதரன் தாளகேது. அவன் மனதில் வெறுப்பு துளிர் விட்டு வளர்ந்தபடி, சில நாட்களில் மரமாகி பிரம்மாண்டமாக வளர்ந்தது. ருதுத்வஜனை எப்படி பழி வாங்க வேண்டும் என வழி தேடி அலைந்து கொண்டிருந்த நேரத்தில் அவனுக்கு பரிசு கிடைத்தது போல நடந்தது ஒரு நிகழ்ச்சி. 

காடுகளுக்குள் அடிக்கடிச் சென்று ரிஷி முனிவர்களை சந்தித்து வந்த இளவரசன் ஒரு நாள் வழி தவறி படையினரை விட்டு விலகி காட்டுக்குள் வெகு தூரம் சென்று விட்டான். அப்படி காட்டில் சுற்றிக் கொண்டு அலைந்தவன் கண்களில் பட்டது ஒரு அற்புதமான இடம். பெரிய ஆசிரமம் போன்று தோற்றம் தந்தது அந்த இடம். பழம், பூக்கள், அழகான செடி, கொடிகள் என பூத்துக் குலுங்கிய அற்புதமான இடம் அது. அந்த அடர்ந்த காட்டில் இப்படி ஒரு இடமா என வியந்த வண்ணம், அதற்குள் சென்று வழி தவறி நிற்கும் தனக்கு ஊர்  திரும்பிச் செல்ல வழி காட்டி உதவ எவரும் தென்பட்டால் வேண்டிக் கொள்ளலாம் என உள்ளே சென்றவனை வரவேற்றார் ஓரு துறவி. 

அவர் வேறு யாரும் அல்ல. துறவி உருவில் இருந்து கொண்டு, செயற்கையான அந்த பசும் சோலையைப் படைத்து, இளவரசனை அங்கு வர சூழ்ச்சி செய்திருந்த பாதாளகேதுவின் சகோதரன் தாளகேதுதான். அந்த தேவலோக குதிரை அந்த இளவரசனிடம் இருக்கும் வரையிலும் மற்றும் அவனுக்கு இருந்த பல வரங்களின் பயனினாலும் இளவரசனை தாளகேதுவினால் நேரடியாகக் கொல்ல முடியாது என்பதினால் வேறு ஏற்பாடு செய்து வஞ்சகமாக அவனை அங்கே வரும் நிலைக்கு ஆளாக்கி இருந்தான். அவன் செய்த உபசாரத்தினால் மயங்கி மனம் மகிழ்ந்து போன இளவரசனும் அவருக்கு தன்னிடம் இருந்து என்ன உதவி வேண்டும் என்று கேட்க சற்றும் தயக்கம் இன்றி அந்த மாற்று உருவில் இருந்த தாளகேது தான் ஓரு யாகம் செய்ய இருப்பதால் அதற்கு இளவரசன் உதவியின் சின்னமாக அவன் கழுத்தில் அணிந்து இருந்த ஒரு இரத்தின சாரம் மட்டும் தேவை என்று கேட்டான். கழுத்தில் அணிந்து இருந்த இரத்தின மாலையை அவனுக்குத் திருமணம் நடந்த பொழுது அவன் மனைவி மதாலசை தன்னுடைய அன்புப் பரிசாகத் தந்திருந்தாள். ஆனால் யாசகம் கேட்டு விட்ட முனிவரிடம் எப்படி அதைத் தர மறுக்க முடியும் என யோசித்த பின் வேறு வழி இன்றி அதைக் கயற்றிக் கொடுத்து விட்டான். முனிவரும் அவனை அங்கேயே இரவு தங்கிவிட்டு காலையில் எழுந்து செல்லும்படிக் கூறிய பின்  தனக்கு வேறு ஒரு வேலை இருப்பதாகக கூறிவிட்டு கிளம்பி விட்டார். மறுநாள் காலை அவர் கூறிய இருந்த வழியைப் பின் பற்றிக் கொண்டு தன் ராஜதானிக்குக் கிளம்பினான் இளவரசன். 

இதற்கு இடையில் ராஜதானிக்குக் இளவரசன் போய் சேரும் முன்பே  தாளகேது துறவி உருவிலேயே அரண்மனைக்குப் சென்று மன்னனை சந்தித்து சோகமான ஒரு செய்தியைக் கூறினான். மன்னனிடம் சென்றவன் இளவரசனிடம் இருந்து வஞ்சித்துப் பெற்ற இரத்தின மாலையைக் கொடுத்து விட்டுக் கூறினான் “மன்னனே அடர்ந்த காட்டின் நடுவில் உன் மைந்தனை அவனுடைய விரோதிகள் கொன்று போட்டு விட்டுச் சென்று விட்டனர். அங்கு எதேற்சையாக சென்ற என்னிடம் இறக்கும் தருவாயில் இருந்த அவன் இந்த மாலையைக் கொடுத்து விட்டு ‘மதாலஸை’, ‘மதாலஸை’ என்று கதறியபடி இறந்து விட்டான். என்னால் அவன் உயிரைக் காக்க முடியவில்லை மன்னா”  எனப் பொய் அழுகை அழுது விட்டுக் கிளம்பிச் சென்று விட்டான். அந்த துக்கத்தில் அதிர்ந்து போன அனைவரும் வந்தவர் யார் என்பதைப் பற்றி  கவனிக்க மறந்து விட்டனர். மாலையைக் கண்ட மதாலஸையும் உண்மையில் அவன் இறந்து விட்டான் என எண்ணியவாறு மடிந்து விழுந்தாள். 

அவளுக்கு இறுதிக் கடன்கள் செய்து முடிக்க ராஜ்யமே துயரத்தில் ஆழ்ந்து இருந்தது. அவற்றை எல்லாம் வெற்றிகரமாக செய்து விட்டு வெளி வந்த தாளகேது கொக்கரித்த வண்ணம் ‘அவனைப் பழி வாங்கி விட்டேன்.. எனக்குக் கிடைக்க இருந்த மதாலஸை  அவனுடனும் வாழ முடியாமல் இறந்து விட்டாள், என் விரோதம் ஒழிந்தது’ என மகிழ்சியுடன் கூவியவாறு சென்றான்.  இதற்கு இடையில் அங்கும் இங்கும் அலைந்து திரிந்த பின் நகரத்திலே நுழைந்த இளவரசன் அங்கு நிலவி இருந்த காட்சியைக் கண்டு துணுக்குற்றான். என்ன இது, நகரமே சோகமயத்தில் இருக்கிறதே, என்ன ஆயிற்று என விடை தெரியாமல் அவசரம் அவசரமாக அரண்மனைக்குள் சென்றவனைக் கண்டு அதிர்ச்சி உற்றனர் அனைவரும். சற்று நேர அவகாசத்தில் நடந்து முடிந்த அத்தனை நிகழ்ச்சிகளையும் குறித்து இரு தரப்பினரும் பரிமாறிக் கொள்ள எவனோ ஒருவன் இப்படிப்பட்ட ஒரு சங்கடத்தை வேண்டும் என்றே ஏற்படுத்தி இருப்பதை உணர்ந்தனர். ஆனால் என்ன செய்வது?

நடந்தது நடந்து விட்டது. மனைவி இறந்த சோகம் மனதில் இருந்து மறைய மறுத்தது. குமுறிக் குமுறி எத்தனை நாட்கள்தான் அழுது கொண்டு காலத்தைக் கழிப்பது,  காலம் எதையும் தேற்றும் என்ற நம்பிக்கையில் மெல்ல மெல்ல இளவரசன் தன் பழைய நண்பர்களுடன் மீண்டும் கூடி இருந்தபடி பொழுதைக் கழிக்கலானான். அவன் நண்பர்களும் அவனைத் தேற்றி ஆறுதல் கூறி அவனை காத்து நின்றனர். இன்னமும் காலம் சுழன்றது. முன்பு கூறினேன் அல்லவா. இரண்டு நாகலோக இளைஞர்கள் இளவரசனின் நெருங்கிய நண்பர்கள் இருந்தனர் என. அவர்களும் நாகலோகம் செல்லாமல் மனித உருவிலேயே இருந்து கொண்டு ருதுத்வஜனுடன் பொழுதைக் கழித்துக் கொண்டு பூலோகத்தில் இருக்க, அதைக் கண்ட அவர்களுடைய தந்தை  கவலையுற்றார்.  ஒரு நாள் அவர்களை அழைத்து ‘குழந்தைகளே, இத்தனை நாட்களும் நீங்கள் எங்கு செல்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் எனக் கேட்காமலே இருந்து விட்டேன். எனக்குக் கவலையாக உள்ளது. நீங்கள் ஏன் மனித உருவில் திரிகின்றீர்கள், எங்கு சென்று எவருடன் பழகுகிறீர்கள் என்று கேட்டார். அவர்களும் தங்களுடைய நண்பனான இளவரசன் ருதுத்வஜனைப் பற்றிக் கூறினர். அவர்களுடைய தந்தையோ முதலில் அவர்கள் ஒரு மனிதப் பிறவியுடன் சம்பந்தம் வைத்திருப்பதை விரும்பாமல் கோபமுற்றாலும், அந்த இரண்டு புதல்வர்களும் ருதுத்வஜனின் அற்புதமான குணாதிசயங்களை தந்தைக்கு எடுத்துக் கூறினதும் அவர் மனம் நிம்மதி அடைந்தார். 

ஆயினும் அவர்கள் முகத்தில் சூழ்ந்து கொண்டிருந்த சோகத்தைக் கண்ட அவர் அவர்களின் வருத்தத்திற்கான காரணத்தைப் பற்றி வினவியதும், துக்கத்துடன் இருந்த அந்த இரு புதல்வர்களும் தம்முடைய நண்பனுக்கு ஏற்ப்பட்ட துயரக் கதையை விவரமாக எடுத்து உரைத்தனர். தங்களுக்காக உயிர் தியாகம் புரியும் அளவு குணத்தில் சிறந்தவன் என்றும் எப்படி எல்லாம் அரக்கர்களை அழித்து முனிவர்களின் தவத்தைக் காத்து வந்தவன் எனவும், எப்படிப்பட்ட நேரத்தில் அவன் பழி வாங்கப்பட்டான் என்பதையும் விளக்கமாக எடுத்து உரைத்தனர். அந்த நாகலோக மன்னனும் சத்ருஜித்தின் ராஜ்ய பரிபாலனத்தைப் பற்றிக் ஏற்கனவே கேள்விப்பட்டு இருந்தான். அவன் காலத்தில் நல்ல ஆட்சி நடைபெறுகிறது என்பதையும், அவன் மகன் ருதுத்வஜனும் அவனுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளையாகவே உள்ளான் என்பதையும் அறிந்து கொண்ட பின், மானிடப் பிறவிகளுடன் உறவு கொள்ளக் கூடாது என அவர்களைப் பற்றி தான் தவறாக எண்ணி விட்டதற்கு வருந்தினான்.  

அவனுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என நினைத்தான். அது மட்டும் அல்ல இறந்து போனவளை எப்படி உயிர் பிழைக்க வைக்கலாம் எனவும் மன்னன் யோசிக்கலானான். முடிவாக அதற்கு ஒரு வழி இருந்தது அவனுக்குத் தெரிந்தது. தன்னுடைய ராஜ பரிபாலனத்தை கவனித்துக் கொள்ளும்படி தன் பிள்ளைகளிடம் கூறி விட்டு, தானே இமயமலை அடிவாரத்தில் சென்று சரஸ்வதி தேவியை வேண்டிக் கொண்டு தவம் செய்யலானான். கடுமையான தவத்தில் இருந்த அவன் முன் தோன்றினாள் சரஸ்வதி தேவி. மன்னனோ சற்றும் யோசிக்காமல் வந்த வேலையை மட்டும் நினைத்துக் கொண்டு அவளிடம் வேண்டினான், ‘தேவி பல வருடங்கள் முன்பு மாண்டு போய்விட்ட என் சகோதரனின் நினைவு என் மனதை விட்டு அகல மறுக்கின்றது. அவனை உயிர் பெறச் செய்து எங்கள் இருவருக்கும் பரிபூரணமான   கான வித்தைகளை தந்து அருள வேண்டும்’ என்றான். சரஸ்வதி தேவியும் அவன் தவத்தினால் மனம் மகிழ்ந்து போனதால் அவன் கேட்ட வரங்களைத் தந்து அருளினாள். உயிர் திரும்பப் பெற்ற சகோதரனோ தன் சகோதரனைக் கட்டித் தழுவி கண் கலங்கி நலம் விசாரித்தான். நாக மன்னனும் தான் அங்கு வந்ததிற்கு காரணமாக இருந்த ருதுத்வஜனனின் கதை முழுவதையும் கூறிவிட்டு இருவரும் சிவபெருமானிடம் சென்று அந்த பிரச்சனைக்குத் தீர்வு பெற வரம் கேட்க வேண்டும் என்றான். அவர்கள்  ஒரு முடிவு செய்தனர். இருவரும் கயிலைக்குச் சென்று சிவபெருமானைத் துதித்துப் பாடிவிட்டு அவரிடம் தன் குடும்பத்தில் ஒரு மகளாக மதாலஸை பிறக்க வழி செய்ய வேண்டும் என வேண்டிக் கொள்ளலாம் எனவும், அப்படி பிறக்கும் அவளை மீண்டும் ருதுத்வஜனனுக்கு மணம் செய்து கொடுத்து அவன் துயரைப் போக்கலாம் என முடிவு செய்தனர். 

அதற்கு ஏற்ப கயிலைக்குச் சென்ற நாகலோக சகோதரர்கள் இருவரும் அதுவரை கேட்டிருக்க முடியாத அளவிலான கான மழையை சிவன் சன்னதியில் பொழிந்தனர். அதைக் கேட்டு அப்படியே மயங்கினார் சிவனார். அவர்களுக்கு என்ன வரம் வேண்டுமோ அதைத் தருவதாக வாக்குறுதி தர, அவர்களும் மதாலஸை தங்கள் குடும்பத்தில் பிறக்க வைத்து அவள் இறந்த பொழுது இருந்த அதே உணர்வுடனும், உடலுடனும் மாற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். சிவடிபருமானும் அதை அவர்களுக்கு அருளினார். வரத்தைப் பெற்றுக் கொண்ட சகோதரர்களும் சந்தோஷமாக நாடு திரும்பினர். வரம் கிடைத்தது போலவே மதாலஸை அவனுக்கு மகளாகப் பிறந்து பழைய உருவை அடைந்தாள். ருதுத்வஜனனின் நண்பர்கள் அளவற்ற மகிழ்சி அடைந்தனர். அடடா, நம் நண்பனின் மனைவியே நமக்கு சகோதரியாக வந்து விட்டாளே என இன்பத்தின் உச்சிக்கே சென்றனர். அவர்களின் தந்தை மனசாஸ்திரம் அறிந்தவர். உடனே சென்று ருதுத்வஜனை அழைத்து வந்து அவளைக் காட்டினால் அவனால் அதை ஏற்க முடியாது எனத் தெரிந்ததினால், அரண்மனையிலேயே அவளை எவர் கண்களிலும் படாமல் மறைந்து இருக்கச் செய்த பின் ருதுத்வஜனை வேறு சாக்கில் அங்கு அழைத்து வரும்படி பிள்ளைகளை ருதுத்வஜனிடம் அனுப்பினான்.  அவர்களும் பூலோகம் சென்று அன்று இரவு முழுவதும் ருதுத்வஜனனுடன் கழித்த பின் தங்களுடைய தந்தை அவனைக் காண விரும்புவதாகக் கூறி தம் வீட்டிற்கு வருமாறு அழைத்தனர்.

முதலில் எதை எதையோ கூறிவிட்டு அந்த அழைப்பை ஏற்க மறுத்தவன், இறுதியாக நண்பர்களின் தந்தை என்றால் தனக்கும் தந்தைக்கான சமானம் உள்ளவர் அல்லவா என நினைத்ததினால் அவர்களுடன் சென்றான். நதிக் கரைக்கு அந்த பக்கத்தில் இருந்த வீட்டிற்கு செல்வதாகக் கூறி விட்டு  ஓரு படகில் ஏறி நடுக்கடலில் சென்ற பின் தங்களுடைய தந்திர வித்தையால் அவன் கண்ணளைக் கட்டி விட்ட பின் கடலின் அடியில் இருந்த நாகலோகத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர். பல மணி நேரமாக எங்கேயோ சென்று கொண்டிருந்த படகு நின்றது. முடிக் கொண்ட கண்கள் தாமாகத் திறந்து கொண்டன. விசித்திரமான உலகில் தான் இருப்பதை உணர்ந்தான் ருதுத்வஜன். அவனுக்கு இரு புறமும் இரண்டு  நாக முகம் கொண்டவர்கள் நின்றிருந்தனர். அவர்களில் ஒருவன் கூறினான் ‘நண்பனே, எங்களை மன்னித்து விடு. நாங்கள் நாக லோகத்தைச் சேர்ந்தவர்கள். உன் அன்பையும் நட்பையும் பெற பிராமண உருவில் பூலோகம் வந்திருந்து உன்னுடன் நட்பு கொண்டோம். எங்கள் தந்தை உன்னைப் பார்க்க விரும்பியதால்தான் உன்னை இங்கு அழைத்து வந்தோம். தவறாக நினைக்காதே’. அவர்களுடைய குரலைக் கொண்டு அவர்களை அடையாளம் கண்டு கொண்ட பின் அவர்களுடைய நேர்மையை மதித்த இளவரசனும் அவர்களை மன்னிக்கும் அளவுக்குத் தான் உயர்ந்தவன் அல்ல எனவும், அவர்கள் செய்யாத தப்பிற்கு எதற்காக மன்னிப்புக் கோருவது எனவும், நண்பனின் தந்தையும் தன் தந்தையே என நினைப்பவனே உண்மையான நண்பன் என்றும் பலவாறு  கூற அந்த நாக லோக நண்பர்களுக்கு அவன் மீதான மதிப்பு இன்னமும் உயர்ந்தது. 

அவனைத் தங்களுடைய தந்தையிடம் அழைத்துப் போனார்கள். நல்ல வயதான நாக மன்னன். சாந்தம் கமழும் முகம். அவரைக் கண்ட மாத்திரத்திலேயே அவர் கால்களில் விழுந்து வணங்கியவனை மார்போடு தூக்கிக் கொண்டு அணைத்து பலவாறு அவன் பெருமைகளைப் பற்றி தன்னுடைய மகன்கள் கூறியதை எல்லாம் அவனிடம் விவரமாகக் கூறிய பின், வேண்டும் என்றே ஒன்றும் தெரியாதது போல் அவன் மூலம் நல்ல மகட்பேறு உண்டாகட்டும் என ஆசி கூறினார். திகைத்து நின்ற ருதுத்வஜனிடம் மேலும் அவனுக்கு என்ன உதவி வேண்டும் எனக் அவர் கேட்க, அவனும் ‘பெரியவரே அனைத்துமே நிறைந்து இருக்கும்  எனக்கு என்ன வேண்டும்’ என்று பதில் தந்த பின் அமைதியாக நின்றான். அவன் மனதில் மதாலஸையின் நினைவுகள் மட்டுமே அலையாக ஓடின. அதை தன் தவ வலிமையால் நாக மன்னன் உணர்ந்து கொண்டாலும் வெளிக் காட்டாமல் தன் மகன்களிடம் அவனை அழைத்துப் போய் உணவு  தந்து சற்று நேரம்  களைப்பாறிய பின் அங்கு அழைத்து வருமாறுக் கூறினார். களைப்பாறிய பின் வந்தவனிடம் குசலம் விசாரித்தப் பின் மீண்டும் வேண்டும் என்றே அவனிடம் ‘என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தன் தவ வலிமையால் முடியும்’ எனக் கூற மீண்டும் அவன் மனதில் மதாலஸையின் முகமே தோன்றியது. அவன் ஏக்கத்துடன் தன் நண்பர்களின் முகத்தை நோக்க, அதுவே தருணம் என காத்திருந்தவர்கள் கூறினார்கள், ‘தந்தையே எங்கள் நண்பனுக்கு இல்லாதது எதுவும் இல்லை. ஆனால் அவன் மிகவும் நேசித்து ஆசையுடன் மணந்திருந்த மனைவியை தன்னுடைய வஞ்சத்தின் முலம் அழித்து விட்டான் ஒரு அரக்கன். அவளைக் காண முடியாமல் தவிக்கும் எங்களுடைய நண்பனுக்கு  அவளை மீண்டும் உயிர் பிழைக்க வைத்துக் கொடுக்க முடியுமானால் அதையே மிகவும் மகிழ்சியோடு அவன் ஏற்பான் எனக் கருதுகின்றோம்’ என்றனர்.  

அதைக் கேட்டு சிரித்த அந்த நாகலோக மன்னன் ‘குழந்தாய் உன் மனதில் ஓடும் எண்ண அலைகளை நான் நன்கு உணர்ந்தேன். இறந்தவளைத் திரும்பக் கொண்டு வர இயலாது. ஆனால் என் தவ வலிமையால் அவளை ஒரு முறை உனக்குக் காட்டுகிறேன். அவளை நீ தொடக் கூடாது சம்மதமா? எனறவரிடம் ருதுத்வஜன் அதற்கு தான் மிகவும் ஆவலுடன் தயாராக இருப்பதாகத் தெரிவித்தான். சற்று நேரத்தில் அங்கு மறைத்து வைத்திருந்த மதாலஸையை அவன் முன் கொண்டு வந்து நிறுத்தினார் அவர். இருவரின் கண்களிலும் கண்ணீர் பெருகி ஓழுயது. அழுதனர். ஆனால் தொடக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்ததினால் இருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.  அவள் சிறிது நேரத்தில் மறைந்து போய் விட்டாள். அவள் நினைவோடு வருத்தமாக அமர்ந்து விட்டான் ருதுத்வஜன். சற்று நேரம் அப்படிப்பட்ட நிலையில் இருந்தவன் தன்னுடையத் தோள்களை எவரோ தொடுவதைப் போல் உணர்ந்து திரும்பினான். 

அவனுடைய நண்பர்களின் தந்தை அங்கே நின்றிருந்தவாறு அவன் தோள்பட்டையை வருடியபடிக் கூறினார் ‘குழந்தாய், எதற்கும் கவலைப்படாதே, உனக்கு உன் மனைவி திரும்பக் கிடைப்பாள். அதற்கு முன் இந்தக் கதையைக் கேள் என்று கூறிவிட்டு, தன்னுடைய மகன்கள் இருவரும் அவனுடன் சினேகமான துவக்கத்தில் இருந்து, அவனுக்காக எப்படி அவர்கள் தன்னிடம் வந்து அவன் மனைவி மீண்டும் கிடைக்க வழி கூறுமாறு வேண்டினர் என்பதையும், தான் எப்படி தன் சகோதரனை உயிர் பிழைக்க வைத்து இருவரும் சிவபெருமானிடம் சென்று அவரிடம் இருந்து வரம் பெற்று மதாலஸையை உயிர் பிழைக்க வைத்தனர் என்பதை விவரமாக எடுத்து உரைத்தார். ஆனாலும் சில சாபங்களின் காரணமாகவே அவனை சற்று நேரம் சோகத்தில் ஆழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கூறிய பின் மதாலஸாவை அவனிடம் சேர்த்து வைத்து இருவரையும் மகிழ்ச்சியுடன் இருக்குமாறு ஆசி கூறி விட்டு அவர்களை மீண்டும் பூவுலகிற்கு அனுப்பி வைத்தார்.   ………….ருதுத்வஜன் கதை   தொடர்கிறது                                           

திகம்பரா திகம்பரா, ஸ்ரீ  பாத ஸ்ரீ வல்லப திகம்பரா!

திகம்பரா திகம்பரா, ஸ்ரீ  தத்ததேவா  திகம்பரா

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ

 

ஆறாம் நாள் பாராயணம்……………..தொடரும்