பாராயணம்

ஆறாவது   நாள் பாராயணம்

ஓம்  தத்தாத்ரேயாய வித்மஹே

யோகீஸ்வராய  தீமஹி

தன்னோ தத்த ப்ரசோதயாத்

 

………………….ருதுத்வஜன் கதை   தொடர்கிறது

மனைவியுடன் நாடு திரும்பிய புதல்வன் கூறிய அனைத்துச் செய்திகளையும் கேட்ட அரச குடும்பத்தினர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். காலம் ஓடியது. சத்ருஜித் மரணம் அடைந்தான். அவன் புதல்வன் ருதுத்வஜன் அரியணை ஏறி ஆட்சி செலுத்தலானான். பொறுப்பு ஏற்ற ருதுத்வஜனும் தன் தந்தைப் போலவே நல்லாட்சி நடத்தி வரலானான். இன்னமும் பல காலம் உருண்டது. மதாலஸை கர்பமுற்று அழகிய ஆண் மகனைப் பெற்று எடுத்தாள். பெயர் வைக்கும் விழாவில் அந்தக் குழந்தைக்கு நல்ல ஒரு பெயரை அரசன் சூட்டினான். ஆனால் அந்த அந்த அரச சபையின் விழாவில் அவன் குழந்தைக்குப் பெயரிட்டதும் உடனேயே மதாலஸை ஒரு கிண்டல் பார்வைப் பார்த்தபடிச் சிரித்தாள். சபையில் மற்ற எவரும் அப்படிச் செய்தால் அது அவமானமாக கருதப்படும். ஆனால் சிரித்ததோ இராணி என்பதால் அனைவரும் அமைதியாக இருந்தனர். மன்னனும் அதை பெரியதாகக் கருதாமல் விட்டுவிட்டது அல்லாமல் அவளிடம் அது குறித்துக் கேட்கவும் இல்லை. அந்தக் குழந்தையும்  நல்ல பண்போடு வளர்ந்தது மட்டும் இன்றி அதி புத்திசாலியாகவும் திகழ்ந்தது.

அந்தக் குழந்தையை வளர்த்த நேரங்களில் மதாலஸை பல தத்துவப் பாடல்களைப் பாடி தூங்க வைப்பாள். அந்தப் பாடல்கள் அனைத்துமே, ‘இந்த பாழாய் போன பூமியில் ஏன் பிறந்தாய் என்றும், உலகமே ஒரு மாயை, அதில் பற்றற்று இருக்க வேண்டும்’ என்ற கருத்துக்களை உள்ளடக்கியே இருந்தன. சில நாட்கள் அதை கவனித்த மன்னன் குழந்தைக்கு  போய் ஏன் அவள் தத்துவப் பாடல்களைப் பாடி உறங்க வைக்கிறாள், அதற்கு அந்த வயதில் என்ன புரியும் என வியந்தது உண்டு. அவள் தனக்குத் தெரிந்ததைதானே பாடுவாள் என்று எண்ணிக் கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்து வந்தான். அது மட்டுமா ‘தூய்மையான ஆத்மாவுடன்தான் நீயும் பிறந்து உள்ளாய் என்பதினால் நான் கூறுவதைக் கேள் மகனே, ஒரு இடத்துத் தண்ணீரும் இன்னொரு இடத்துத் தண்ணீரும் ஒன்றாகக் கலந்தால் இரண்டும் தண்ணீர் ஆகத்தான் இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. ஆனால் அசுத்தமான தண்ணீரும் சுத்தமான தண்ணீரும் கலந்தால் நல்ல நீர் கூட அசுத்தம் ஆகி விடுவது போல,  கூடா நட்பு கேடாய் விளையும் என்பதினால், தூய ஞானிகளுடன் மட்டுமே நீ தொடர்ப்பு கொண்டு அவர்கள் தரும் நல்  போதனைகளை பெற்றுக் கொண்டு உன் மனதை தூயமாக வைத்துக் கொள்ள வேண்டும்.  தூய்மை என்பது வெளித் தெரியும் தோற்றம்  அல்ல, அது உன் உள் மனதில் உள்ள ஆத்மா ஆகும்’ என்றெல்லாம் தத்துவார்த்தமான போதனைகளை செய்தாள். அவள் ஏன் இந்த சிறுவயதிலேயே  உள்ள மகனுக்கு, கூட உள்ள மனிதர்களை தவிர்த்து   ஞானிகளுடன் தொடர்ப்பை வைத்திருக்க வேண்டும் என அறிவுரைக்கு கூறுகின்றாள் என்பது எவருக்கும் விளங்கவில்லை. ஆனால் அந்த போதனைகள் மகனின் மனதில் ஆழமாகப் பதியலாயிற்று. இந்த நிலையில்தான் சிறு சலசலப்பைத் தோற்றுவிக்கும் வண்ணம் அந்தக் குழந்தை பன்னிரண்டு வயதானதும் பெற்றோர்களை விட்டு விலகி காட்டுக்குச் சென்று துறவறத்தில் தன்னை இணைத்துக் கொண்டு விட்டது. அதைக் கண்ட மன்னன் ஆடிப் போனான். மதாலஸையோ ஒன்றுமே நடக்காதது போல கவலை இன்றி இருந்தாள். அவள் எந்தப் பதற்றமும் அடையவில்லை. மன்னனால் இராணியின் போக்கைப் புரிந்து கொள்ள  முடியவில்லை.

இன்னமும் காலம் ஓடிற்று.  மதாலஸை மீண்டும் கர்பம் தரித்து இன்னொரு ஆண் மகனைப் பெற்றாள். அதற்கு பெயர் சூட்டும் தருமணத்திலும் மதாலஸையின் கேலிச் சிரிப்பு தொடர்ந்தது. அந்தக் குழந்தையை வளர்த்த நேரங்களிலும் மதாலஸை பாடிய பாடல்கள் பழையபடியே இந்த பாழாய் போன பூமியில் ஏன் பிறந்தாய் என்றும், உலகமே ஒரு மாயை, அதில் பற்றற்று இருக்க வேண்டும் என்ற கருத்துக்களையே உள்ளடக்கி இருந்தன.  அவனுக்கும் இப்படியான போதனைகளை செய்தாள் ‘இந்த உலகில் உள்ள அனைத்துமே உருவமற்ற ஒன்றான அவன் மட்டுமே.  உருவமற்றவன் அவன் , கானல் நீரைப் போன்று காட்சி அளிக்கும் அவன் இருக்கிறான் என்பதை  எப்படி  நம்புவது என யோஜனை செய்யாதே. உன் உடலே  உருவமற்ற ஒரு ஆத்மாவினால் இயங்குகின்றது எனும்போது, உலகத்தையே தன்னுள் அடக்கி உள்ள உருவமற்ற ஒன்றான இறைவன் உள்ளார் என்பதையும் நீ நம்ப வேண்டும்.   உன் உள்ளுக்குள்ளும் வெளியிலும் இருப்பது யார் தெரியுமா, என் உடலில் இருந்து வெளிவந்த நீயும் அல்ல, உன்னுள் ஓடும் எண்ண அலைகளை தந்த  நானும் அல்ல. அது அந்த பரமாத்மனே. உனக்குள்  தோன்றும் உருவமற்ற இலட்சக் கணக்கான உன் சிந்தனைகள் கூட அவனால்தான் என்பதை உணர்ந்து கொள்’. சில நாட்கள் அதை கவனித்த மன்னன் இந்தக் குழந்தைக்கும் ஏன் தத்துவார்த்தமான போதனைகளையே அவள் ஏன் செய்கின்றாள்? அதற்கும் அந்த வயதில் என்ன புரியும் என  எண்ணினான். அவளிடம் அது குறித்துக் கேட்க எண்ணினான். ஆனாலும் இனம் புரியாத எதோ ஒரு காரணத்தினால் அவளிடம் அது குறித்துக் கேட்பதைத் தவிர்தான். இன்னும் சில நாட்கள் கழியட்டும் என இருந்தான். அந்தக் குழந்தையும்  அதி புத்திசாலியாக வளர்ந்து வயதுக்கு வந்ததும் பெற்றோர்களை விட்டு விலகிக் காட்டிற்கு சென்று துறவறத்தில் தன்னை இணைத்துக் கொண்டு விட்டது.

மன்னன் உடைந்து போனான், மாறாக மதாலஸையோ அப்போதும் கவலையுற்றே இருந்தாள். அந்த நிலையிலும் ஆச்சரியப்படும் வகையில் கணவனை மகிழவிப்பதிலோ, இல்லை அவருக்கு பணிவிடை செய்வதிலோ எந்த குறையும் அவள் வைக்கவில்லை. அவனுடன் இருக்கும் நேரங்களில் மிகவும் மகிழ்சியுடன் கூத்தாடிக் கொண்டுதான் இருப்பாள். ஆனால் அந்த நேரங்களைத் தவிற பிற நேரங்களில் எவருடனும் பேசாமல் கற்சிலைப் போலவே தனியாக அமர்ந்து கொண்டு யோசனை செய்தபடி இருப்பாள். அவளை அரசனால் மட்டும் அல்ல மற்றவர்களினாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. மூன்றாம் முறையாக மதாலஸை கர்பமுற்றாள்.

இப்போதாவது நிலைமை மாறும் என காத்திருந்த மன்னன் முன்பு போலவே பெயர் சூட்டும் தருமணத்தில் மீண்டும் மதாலஸை கேலியாக சிரிப்பதைக் கண்டான். அந்தக் குழந்தைக்கும் முன்பு மற்றக் குழந்தைகளுக்கு பாடியது போலவே தத்துவப் பாடல்களை பாடி வளர்த்தாள். ‘ஒரு யோகி எப்படி இருக்க வேண்டும் தெரியுமா, நேற்றல்ல, இன்றல்ல, நாளை கூட எனக்கு ஒன்றும் இல்லை என எவற்றிலும் பற்றின்றி, எதனுடனும் ஐக்கியம் ஆகாமல் இருக்க வேண்டும்.  தனியாக வாழ  பழகிக் கொள்ள வேண்டும். மனம் அமைதியாக ஆனந்தமாக, நிறைவுடன் இருக்க வேண்டும். ஒரு குடிசையிலோ, நதிக் கரையிலோ, இல்லை மலைப் பகுதியிலோ எங்கிருந்தாலும் ஒரு யோகி பிரம்மனுடன் கலந்தே இருக்க வேண்டும். அவர் இறுதிப் பயணம் வேதங்கள் மீதோ, தோற்றங்கள் மீதோ, எண்ணற்ற செல்வங்கள் மீதோ அல்லது, உலகின் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கியோ இல்லாமல், அவர் இறுதிப் பயணம் பிரம்மனை நோக்கியே அமைய வேண்டும். அதனுடன் இரண்டறக் கலப்பதையே தன் வழிப் பயணமாக இருக்க வேண்டும்’ என்றெல்லாம் அந்த சிறுவனுக்கும் போதனைகளை செய்து வந்தாள் . ஒன்று நன்கே புரிந்தது மன்னனுக்கு. தன் மனைவி மதாலசை கூறும் தத்துவங்கள் அனைத்துமே அவதூதரான ஸ்ரீ தத்தாத்ரேயரின் போதனைகள். அவள் ஏன் மீண்டும் மீண்டும் இல்லற வாழ்வில் தனக்கு பிறந்த தனது குழந்தைகளுக்கு  ஸ்ரீ தத்தாத்ரேயரின் போதனை செய்கின்றாள் ? குழம்பிக் கிடந்தான் மன்னன். காலம் ஓடியது. அதி புத்திசாலியாக வளர்ந்த வண்ணம் இருந்த அந்த குழந்தையும் வயதுக்கு வந்ததும் பெற்றோர்களை விட்டு விலகிக் காட்டிற்கு சென்று துறவறத்தில் தன்னை இணைத்துக் கொண்டு விட்டது என நிகழ்சிகள் தொடர அவன் மனம் வருத்தம் அடைந்தது. எவருக்கும் புரியாதப் புதிராகவே மதாலஸை விளங்கினாள். மன்னன் தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்தான். அவன் எண்ணியபடியே நான்காம் முறையும் மதாலஸை கர்பமுற்று ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றாள்.

பெயர் வைக்கும் விழாவில் இம்முறை ஒரு மாறுதலுக்காக தன் மனைவியை நோக்கி அந்தக் குழந்தைக்கு ஒரு பெயர் வைக்குமாறு கூறினான். அவள் பெயர் வைத்தாவலாவது தன் மகன் உருப்படியாக நாட்டை ஆளுவான் என நம்பியே அப்படி செய்தான். அந்தோ பரிதாபம் முந்தைய எல்லா நிகழ்சிகளையும் தோற்கடிக்கும் விதத்தில்  அனைவரும் கேலி செய்யும் வகையில் அவள் அந்தக் குழந்தைக்கு ‘அலர்கன்’ எனப் பெயர் சூட்டினாள். அலர்கன் என்றால் வெறி நாய் என்று அர்த்தம். மன்னன் அவமானத்தில் புழுங்கினான். அனைவரும் வெறுப்புடன் எழுந்து சென்று விட்டனர்.

முதன் முறையாக அன்றுதான் அரசன் தன் மனைவியிடம் சற்றுக் கோபத்துடன் பேசினான். ‘எதற்காக குழந்தையின் பெயரை வெறி நாய் என்ற பொருள் தரும்படி வைத்தாய், ஏன் ஒவ்ஒரு முறையும் நான் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டிய பொழுது சபை நடுவே சிரித்து என்னை அவமானப்படுத்தினாய், இதனால் உனக்கு என்ன மன மகிழ்ச்சி கிடைத்தது, எனக் கோபமாகக் கேட்டான். அவள் சற்று நேரம் மௌனமாக இருந்தாள். பிறகு மிகவும் சாந்தமாகக் கூறினாள் ‘மன்னா ஒவ்ஒரு முறையும் நீங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைத்த பொழுது உங்களை அவமதிக்க வேண்டும் என்று எண்ணி நான் சிரிக்கவில்லை. ஒரு முறையும் நீங்கள் குழுந்தைகளுக்குப் பெயர் வைத்த பொழுது நான் நினைத்தேன் இது என்ன பெயர், இதன் அர்த்தம் என்ன, பெயர் வைத்தது குழந்தையின் உடலுக்கா, இல்லை அதனுள் உள்ள ஆத்மாவிற்கா?

உடல் அழியக் கூடியது, ஆனால்  ஆத்மாவிற்கோ அழிவில்லை. ஆத்மா உடலை விட்டு வெளியேறிய பின் அது எங்கே போகும் என எவருக்காவதுத் தெரியுமா? இல்லை அது தன்னுடன் தன் பெயரையும் கொண்டு செல்லுமா, வைத்தப் பெயருக்கும் அது வாழும் முறைக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கின்றதா, இந்திரன் எனப் பெயர் வைத்தால், இந்திரனைப் போல குணத்தைக் கொண்டுதான் நடக்கிறதா? ஒவ்ஒருவரும் அத்தனை சாஸ்திரோதயமாக மந்திரம் ஓதி வைக்கும் ழுபயர் ஒரு அடையாளத்துக்குத்தானே. அதற்காக இப்படி கஷ்டப்பட்டு ஒவ் ஒருவரும் தத்தம் குழந்தைகளுக்கு வைக்கும் பெயருக்கும் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்து கொள்ளும் முறைகளுக்கும், வாழும் வாழ்க்கைக்கும் எந்த விதமான சம்பந்தம் இன்றி இருக்கும் பொழுது, இதற்கு எதற்கு வைபவம், இதற்கு ஏன் முக்கியத்துவம?  தங்களுக்கு வைத்தப் பெயருடன் எந்த வித பந்தமும் இன்றி வாழும் உயிர்களுக்கு மிகவும் யோசனை செய்து பொருளற்ற பெயர்களில் பெயரிட்டுக் கொண்டிருந்த சடங்குகள் குறித்து யோசித்தேன். என்ன பைத்தியக்காரத்தனமான சடங்குகள் இவை?, என எண்ணினேன். சிரிப்பு வந்தது, சிரித்தேன். அதனால்தான் நான்காம் குழந்தைக்குப் பெயர் வைக்குமாறு என்னிடம் கோரிய பொழுது, இத்தனை முறையும் பெயர்களுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கும் விதத்தில் வளரப் போகும் குழந்தைகளுக்கு பெயர் வைத்து விட்டு, அது அழைப்பதற்காக வைக்கப்பட்ட பெயர் என்று கூறும் பொழுது, நானும் அழைப்பதற்காக மட்டுமே இருக்கட்டும் என்று பந்தமும் பொருளும் அற்ற அல்ர்கன் என்ற பெயரை வைத்ததை ஏன் உங்கள் மனம் ஏற்க மறுக்கின்றது?

அரசி கேள்விக் கணைகளைத் தொடுக்கத் தொடுக்க அவனால் பதில் எதுவும் கூற முடியவில்லை. மனதிலே என்ன நினைத்து இப்படிக் கூறுகிறாள் எனத் தெரியாத பொழுது என்ன செய்வது, சற்று நேரம் இப்படியாக தொடர்ந்து கொண்டிருந்தன அவர்களுடைய  சம்பாஷணைகள்.

முடிவாக மன்னன் அவளிடம் ஒரு வேண்டுகோள் வைத்தான். ‘ஆனது ஆகட்டும். முதல் மூன்று குழந்தைகளுக்கும் தத்துவப் பொருட்களை உள்ளடக்கிய பாடி, தாலாட்டி அவர்களுக்கு புத்திமதி கூறும் விதத்தில் பாடிய நீயோ அந்த போதனைகளில் எவற்றிலுமே தான் பூமியில் பிறந்ததற்கான கடமைகளை செய்ய வேண்டும் என்ற கருத்தினை உள்ளடக்கிப் போதிக்கவில்லை. மாறாக பற்றற்று வாழ வேண்டிய வாழ்க்கையின் தத்துவங்களையே, அவற்றின் மூலம் குழந்தைகளுக்கு போதித்து இருக்கின்றாய். ஆகவே இந்தக் குழந்தைக்காவது பூமியில் ஒரு அரச குடும்பத்தில் பிறந்து விட்டதினால், மக்களுக்கு தான் ஆற்ற வேண்டிய கடமை என்ன என்ற உண்மையைக் கூறும் பாடல்களை மட்டும் பாடி வளர்க்க வேண்டும்.

அவற்றைக் கேட்ட மதாலஸை எந்த வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. முகத்தில் கோபமோ, வெறுப்போ, மகிழ்ச்சியோ எதையும் காட்டவில்லை. நான்காவதாகப் பிறந்த குழந்தையை பொறுப்புணர்ச்சி கொண்ட, கடமை உணர்வு கொண்டவனாக மாற்றுவதாகக்  கூறினாள். அதற்கேற்ப அடுத்த நாள் முதல் அவனுக்கு உலகப் பற்றோடு வாழத் தேவையான வகைக்கான பாடல்களைப் பாடிய வண்ணம் வளர்த்தாள். தத்தாத்திரேயரின் பல மகிமைகளையும் அவனுக்கு அடிக்கடி கதைகளாக போதனை செய்தாள். நாட்கள் நகர்ந்தன. அல்ர்கன் சாத்திரம் படித்தான், அரசியல் அறிவு பெற்றான், படிப்படியாக இராஜாங்க சாத்திரம் முழுவதையும் தெரிந்து கொள்ளும் வகையில் பாடங்கள் பெற்றான். வளர்ந்து வந்தவன் வயதுக்கு வந்ததும் ருதுத்வஜன் அவனுக்கு திருமணம் செய்து வைத்தான். தன் முழு அரசு பொறுப்பையும் அவனிடம் ஒப்படைத்து விட்டு மனைவியுடன் கானகம் சென்று விட்டான். தன் பெற்றோர்கள் தன்னை விட்டுப் போவதை அலர்கனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அழுதான். ஆனால் அவன் தாயார் அவன் கையில் ஒரு மோதிரத்தை அணிவித்து விட்டுக் கூறினாள் ‘அலர்க்கா, உன் கடமைகளை சரிவர செய்து கொண்டு இரு. பொது வாழ்க்கைக்கு வந்து விட்டவன் அனைத்து சோதனைகளையும் எதிர் கொள்ளத்தான் வேண்டும். என்றைக்கு உன்னால் பொறுத்துக் கொள்ள  முடியாத நிலையை நீ அடைவாயோ, அன்றைக்கு இந்த மோதிரத்தை எடுத்து உற்றுப் பார்த்தால் உனக்கு ஒரு வழி கிடைக்கும். அது வரை இந்த மோதிரத்தை போட்டுக் கொண்டு இரு. உன்னால் சமாளிக்க முடியாத அளவு பிரச்சனை உள்ளவரை நான் கூறியதை நினைத்தும் பார்க்காதே.

அதைக் கூறிய பின் தன் கணவருடன் சேர்ந்து கானகம் சென்று விட்டாள். காலம் ஓடிற்று, அலர்கன் அனைத்தையும் மறந்தான். அரசு காரியங்களை கவனித்தபடியும், தன் மனைவி மக்கள் போன்ற  இன்பங்களிலும் முழ்கியபடிக் கிடந்தான். அப்பொழுது ஒருமுறை இளம் வயதிலேயே இல்லறத்தைத் துறந்துவிட்டு வனவாசம் செய்யச் சென்றிருந்த அலர்கனின்  இரண்டாவது சகோதரன் அந்த நாட்டிற்குள் பிரவேசித்தான். தன்னுடைய இளையவன் அரசணையில் ஏறி உள்ளான் எனத் தெரிந்து கொண்டதும் மனித உணர்வுகள் சற்றே அவனைத் தாக்கின. என்னதான் யோகி என்றாலும் தனக்குப் பிறகுதான் மற்றவனுக்கு என்ற எண்ணம் வந்து விடுவது இயற்கை அல்லவா, தனக்கு பதில் தன் தம்பி சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பதைக் கண்ட பின் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் காசியை அடைந்தான். அவனுக்குத் தெரியும் காசியின் மன்னன் தன் தம்பியின் மீது பொறாமைக் கொண்டவன். அவனிடம் சென்றவன் தான் உயிருடன் இருக்கையிலேயே தன்னுடைய இளைய சகோதரன் நாடாளுவதைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் அதனால் தனக்கு உதவி செய்து தன் தம்பியிடம் இருந்து இராஜ்யத்தைப் பறித்துத் தன்னிடம் தருமாறு வேண்டினான்.

அதி பராக்கிரமசாலி என்றாலும் தர்ம நெறிகளும், சாஸ்திரங்களும், யுத்த நெறி முறைகளையும் நன்கு கடை பிடித்து வந்தவன் காசியை ஆண்டு வந்த மன்னன். தன்னிடம் வந்து அலர்கன் மீது போர் தொடுத்து, அவன் இராஜ்யத்தைப் பறித்து தருமாறு உதவி கேட்டு வந்தவன் அலர்கனின் அண்ணனே என்றாலும், தான் அல்ர்கன் மீது பொறாமைக் கொண்டிருந்தாலும் எந்த காரணத்தைக் கூறி அல்ர்கன் மீது படை எடுப்பது என குழம்பியபடி இருந்தான் காசி மன்னன். மன்னனின் குழப்பத்தை நன்கு பயன் படுத்திக் கொண்டான் அலர்கனின் இரண்டாவது சகோதரன். தினமும் மன்னனிடம் சென்று  இல்லாததையும் பொல்லாததையும் கூறி அவனை உசுப்பி விட கடைசியில்  தன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடிவாக அலர்கன் ஆண்டு வந்த நாட்டின் மீது படையெடுக்க முடிவெடுத்தான்.

பெரும் போர் மூண்டது. ஒவ்வொரு இடமாக தோற்றுக் கொண்டே நாட்டின் பெரும் பகுதியை இழந்த அலர்கன் நிலை குலைந்துப் போய் அரண்மணை இருந்த கோட்டையின் கதவுகளை மூடிவிட்டு உள்ளுக்குள் இருந்தபடி போரிடலானான். கோட்டை முற்றுகைக்கு உட்பட்டது.  நிலை குலைந்துப் போன அலர்கன் மனம் துயரத்தில் ஆழ்ந்தது. ஏதேச்சையாக தன் தாய் தனக்குக் கொடுத்த மோதிரம் நினைவுக்கு வர அதை எடுத்து உற்று நோக்கினான். அதில் எழுதப்பட்டு இருந்த வாசகங்கள் ‘பற்றை நீக்க வேண்டும்,  முடியாவிடில் அதற்கு சீரியோர் உதவியை நாட வேண்டும்’ அது மட்டும் இல்லாமல் அவன் தாயின் நினைவும், அவள் அடிக்கடி கூறும் ஸ்ரீ தத்தாத்ரேயர் மகிமைகளும் நினைவுக்கு வந்தன.

ஒரு நாள் எவரிடமும் கூறாமல் தன் ரகசிய சுரங்கப் பாதை மூலம் கோட்டையை விட்டு வெளியேறி ஸ்ரீ தத்தாத்ரேயர் இருந்த  சஞ்யாத்திரி மலையை அடைந்தான். அங்கு சென்று அவர் காலடியில் விழுந்து அழுதான். ஸ்ரீ தத்தாத்ரேயர் அவனை எழுப்பி தேற்றலானார். அவருக்கு மதாலஸை யார் என்பதும், அவளுடைய மகனே அலர்கன் என்பதும் நன்கு தெரியும். அவர் கூறலானார், ‘குழந்தாய் நீ என் இப்படி ஒன்றும் அற்ற விஷயத்திற்காக அழுது புலம்புகின்றாய்? அலர்கன் தன்னுடைய சங்கடத்தை அவரிடம் எடுத்துக் கூறினான். தனக்கு உதவி செய்யுமாறு வேண்டினான். ஸ்ரீ  தத்தர் அவனுக்கு அறிவுரை கூறினார். ’அலர்கா..நீ ஏன் ஒன்றும் அற்ற விஷயத்திற்காக அழுது புலம்புகின்றாய், ஒரு கணம் நினைத்துப் பார், நீ யார் , நீ …… நீயே அல்ல. உயிரற்ற ஜடமான உடலில் உழன்று கொண்டிருக்கும் ஆத்மாவே நீ என்ற உன் உள்ளே இருப்பது. நான் எனும் அந்த ஆத்மாவின் உருவம் என்ன, மரமா, மண்ணா, விண்ணா, காற்றா, என்ன உருவம் அதற்கு என்று நினைத்துப் பார்த்தாயா?, உன் ஜடமான உடலின் எந்த அங்கமாவது நீ என்ற அந்த ஆத்மாவை யார் என்று கூற முடியுமா அல்லது எண்ணிப் பார்க்கத்தான் முடியுமா,  நான் என்ற அந்த ஆத்மாவிற்கு துன்பம் இல்லை,  துயரம் இல்லை, விருப்போ வெறுப்போ இல்லை. அது சுதந்திரமானது, தனித் தன்மையானது. நீ இப்போது இங்கு இருக்கின்றாயே, துன்பப்படுகிறாயே, எதற்காக? உன்னுள் உள்ள எந்த பந்த பாசங்களும், எவருக்கும் கட்டப்படாமல் உள்ள ஆத்மாவிற்காகவா, இல்லை ஜடமான உடலுக்கா?’

‘அலர்க்கா இந்த உலகம் எத்தனை விசித்திரமானதோ அது போலத்தான் நம்முள் உள்ள இதயமும் விசித்திரமாக நடக்கும். சாதாரணமாக இருந்த இதயம் உலகின் மீது பற்றுக் கொள்ளத் துவங்கியதுமே மமதையால் சூழப்பட துவங்குகின்றது. பிறகு ஆசைத் தோன்றத் தோன்ற இல்லறம், செல்வ   விருத்தி  விரிவடையத் துவங்க அது அப்படியே வளரத் துவங்குகின்றது.  மற்றவர்கள் சேர்க்கையே ஒருவன் மனதை அலைபாய விடுகின்றது. அது துக்கத்தையும் தருகின்றது. ஆகவே அந்த மாதிரியான சேர்க்கைகளை விலக்க வேண்டும். அது மமதையை நீக்கும். அப்போதுதான் யோகம்  சித்திக்கும். யோகம் சித்தித்தால் அலைபாயும் மனது கட்டுப்பட்டு விடும். மனம் ஸ்திரப்படும். மனதை ஸ்திரமாக வைத்துக் கொள்ளப் பழகி விட்டால் சஞ்சல பாபம் விலகி வைராக்கியம் வரும். வைராக்கியம் வந்தால் பார்க்கும் பொருட்களில் குறைகள் தோன்றத் துவங்கும். குறைகள் தோன்றத் தோன்ற அந்தப் பொருட்கள் மீதான நாட்டமும் குறையத் துவங்கும். அந்த நிலைத் தொடரும் பொழுது முக்தி கிடைக்கும். ஒருவன் ஞானியாகத் துவங்குகின்றான்’

அலர்கன் அமைதியாக கேட்டுக் கொண்டு இருக்க, ஸ்ரீ தத்தாத்ரேயர் தொடர்ந்து கூறலானார். ‘ஞானி என்பவனுக்கு  அவர்கள் எங்கு தங்குகின்றார்களோ-மரத்தடி நிழல், ஆற்றுப் படுக்கை, நீர் நிலைகள், குகைகள், பாறை இடுக்குகள், அத்தனை ஏன் வெட்ட வெளியும் கூட அவர்கள் வீடுகள்தான் என்ற நினைப்பே இருக்க வேண்டும். அத்தனை மனப் பக்குவம் அவர்களுக்கு வேண்டும். தாம் தங்கும் இடத்துக்குகேற்ப தம்  மனதை அதனுடன் இணைத்துக் கொண்டு விட வேண்டும். அதை போல தங்கும் இடங்களில் என்ன கிடைக்கிறதோ அதையே உணவாகவும் உண்ண பழக வேண்டும். சில நேரங்களில் ஒன்றுமே கிடைக்காமலும், தண்ணீர் மட்டுமே குடித்துக்  கொண்டும் இருக்கலாம். அவை போதும் என்று நினைவை ஸ்திரமாக்கிக் கொண்டு விட்டால் போதும், ஞான நிலையின் முதல் படியில் காலை வைத்து விட்ட நிலைக்கு சென்று விடலாம். இந்த தன்மைகளில் ஆன மன நிலையில் வாழத் துவங்கினால், தான் உள்ள இடமே தன் உலகம் என்ற பற்றற்ற மன நிலைக்கு சென்று விடலாம். எந்த உலகப் பொருட்களிலும் பற்று இருக்காது.  இதை எல்லாம் எளிதில் அடைய முடியாது. முதலில் கடினமாக தோன்றும் இந்த பாதையில் செல்ல வேண்டும் எனில் இதை ஒரு குருவின் தீட்சைப் பெற்றே துவங்க வேண்டும். மனப்புலன்களை அடக்க முயல வேண்டும். குரு கொடுக்கும் ஞான மார்கத்தைக் கடை பிடிக்க வேண்டும். அவர் எதிரே அமர்ந்து கொண்டு அப்பியாசம் செய்து, மூச்சை அடக்கி, பிராணாயாமம் முதலியன செய்த வண்ணம் தியான மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு அதில் முழுமையாக தன்னை இணைத்துக் கொண்ட பின்னரே சமாதி நிலையை அடைகின்றான்.

அப்போது பல சித்திகளைக் கை கொள்ளும் வாய்ப்புத் தோன்றும்.  அதை முறைகேடாகப் பயன்படுத்தாமல், மனதை நழுவ விட்டுவிடாமல் இருந்தால் யோகம் தானே சித்திக்கும்.  அதற்குத் தேவை விடாமுயற்சி, தொடர்ந்து விடாமுயற்சி செய்ய வேண்டும். அதற்கு உதாரணமான    மரத்தைப் பார், அதில் உள்ள இலைகளையும், பழங்களையும்  பறிக்கப் பறிக்க அவைகள் மீண்டும் மீண்டும் அவற்றை வளர விட்டபடி வளர்ந்துதான் வருகின்றன. இலைகளைப் பறித்து விட்டானே என அவை சோர்ந்து விடவில்லை. மீண்டும், மீண்டும் அதை உற்பத்தி செய்ய மரம் சளைப்பது இல்லை. அப்படித்தான் விடா முயற்சியுடன் யோகப்பியாசம் செய்பவன் யோகி ஆகிறான். அனைத்துப் புலன்களையும் தனக்குள் அடக்கி வைத்துக் கொள்கின்றான். இப்படியாக தன் புலன்களை அடக்கி மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் பொழுதுதான்  நான், எனது என்ற மமதையும் அகங்காரமும் நீங்கும். அது நீங்கினாலே மனம் நிம்மதி பெறும்’

இப்படியாகப் பல்வேறு உதாரணங்களைக் காட்டி ஸ்ரீ தத்தாத்ரேயர் உபதேசிக்கத் துவங்கியதுமே தன் மனம் அமைதி அடையத் துவங்கியதை உணர்ந்தான் அலர்கன். எத்தனை பேதையாக இருந்திருக்கின்றேன் நான்  என எண்ணியவாறே தத்தரின் காலடியில் விழுந்து மீண்டும் வணங்கினான். ‘ஸ்வாமி நான் இன்றுதான் இருட்டில் இருந்து வெளியே வந்து வெளிச்சத்தை நோக்குகின்றேன். என் அஞ்ஞானம் அழிந்தது. உள்ளத்தில் யோகம் என்ற செடியை துளிர் விடச் செய்து இருக்கின்றீர்கள். என் மனம் அமைதி பெற்றது… அமைதி பெற்றது’ என்று கூறிய பின்னர் ஸ்ரீ  தத்தர் மீது பல்வேறு தோத்திரங்கள் பாடி, அவரைத் துதிக்கும் பல பாடல்களைப் பாடிவிட்டு அவரிடம் விடை பெற்றுக் கொண்டு மீண்டும் சுரங்கப் பாதை வழியே தன் அரண்மனைக்குத் திரும்பிச் சென்றான்.

படையினர் அனைவரையும் அழைத்து  அவர்களிடம் கூறினான். ‘இனி இந்த யுத்தத்தை நான் தொடர்ந்து நடத்தப்  போவது இல்லை.   முடிவுக்குக் கொண்டு வந்து விட்டேன். எது நடக்குமோ அது நடக்கும் என்பதை நினைவில் கொண்டு நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருங்கள். இனி நான் மீண்டும் கூறும் வரை ஆயுதங்களைப் பயன்படுத்தாதீர்கள்’  என்று தன் படையினருக்குக் கட்டளை இட்ட பின் அரண்மனையை விட்டு தான் மட்டும் தனியாக வெளியேறினான்.

தன் மீது படையெடுத்து அரண்மனையை முற்றுகை இட்டபடி நின்றிருந்த காசி மன்னன் முன் திடுதிடுப்பெனச் சென்று நின்ற அலர்க்கனைக் கண்ட காசி மன்னன் திடுக்கிட்டான். கைகளில் ஆயுதங்கள் இன்றி நிராயுதபாணியாக அல்லவா வந்துள்ளான். அப்படி என்றால் வேறு எந்த விதத்தில் தன்னை தாக்க வந்திருக்க வேண்டும்  என்ற எண்ணத்தோடு தன்னுடைய வாளை உருவ நினைக்கும் முன்னரே அமைதியாக அலர்க்கன் கூறினான் ‘காசி ராஜனே போ, போய் என் அரசை நீயே எடுத்துக் கொள் இல்லை எனில் என் சகோதரனுக்குக் கொடு.  அது உன் விருப்பம். நான் நாட்டை விட்டு வெளியேறுகிறேன்’.

இத்தனை நாட்கள் ஆகியும் கோட்டையில் இருந்து எந்த வித எதிர்ப்புமே காணப்படவில்லையே, ஒற்றர்களும் அரசன் கோட்டைக்கு உள்ளே இல்லை என்று கூறினார்களே, அப்படிப்பட்ட நிலையில்,  தர்மத்திற்கு விரோதமாக அரசன் இல்லாத பொழுது உள்ளே நுழைவது பாவம் என்று  எண்ணியபடி மனக்குழப்பத்தில்  இருந்த  காசி  ராஜன்  தன் முன்  வந்து நின்ற அலர்கனைப் பார்த்துக்  கேட்டான் ‘திடீர் என உனக்கு என்ன ஆயிற்று , உயிருக்குப் பயந்து சரண் அடைந்து இப்படி நடிக்கின்றாயா, இல்லை வேறு எந்த திட்டத்துடனும் வந்து நிற்கின்றாயா’ என வினவியதுமே கல கல என்று சிரித்தான் அலர்கன். “பயமா, எனக்கு எதற்கு இனி பயம் வேண்டும். என் மனது மிகத் தெளிவாகத்தான் உள்ளது ராஜனே. உள்ளது ஒரே உயிர். அதுவும் தனக்கு விதிக்கப்பட்ட கால வரம்பு முடிந்ததும் எப்பொழுது வேண்டுமானாலும் போகும். நீ வெளியே முற்றுகை இட்டபோது நான் ரகசியமாக வெளியேறி தத்தாத்திரேய ஸ்வாமியை சந்தித்தேன். அவர் எனக்கு கொடுத்த ஞான உபதேசத்தினால்தான் இந்த மனமாற்றமே தவிர எனக்கு உன்னிடமோ, வேறு எவரிடமோ இனி பயம் தேவை இல்லை. என் இந்த மன மாற்றத்திற்கு காரணமே நீயும் என் சகோதரனும்தான். உங்களுக்கு அதற்காக நான் நன்றி கூற வேண்டும். என் மீது தக்க சமயத்தில் படை எடுத்து என் படை பலத்தைக் பலவீனப்படுத்தி இருக்காவிடில் என்னால் ஸ்ரீ தத்தஸ்வாமியை சந்தித்து இருக்க முடியாது என்பதினால் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்’என்று பதில் தந்தான் அலர்கன்.

அதைக் கேட்டுக் கொண்டு இருந்த அலர்கனின் சகோதரன் தன் குதிரையை விட்டு கீழே குதித்த பின் தன் தம்பியை அணைத்துக் கொண்டுக் கூறினான் ‘தம்பி, என் மனம் இன்றுதான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல குருவைக் கண்டு பிடித்து துணையாக்கிக் கொண்டாய். நல் வழியில் சென்று விட்டாய்’ இப்படிக் கூறிய பின் காசிராஜனைப் பார்த்துக் கூறினான் ‘மன்னா நான் நினைத்த காரியம் நடந்து விட்டது. நீ எனக்கு உதவியதற்கு நன்றி மன்னவா, மிக்க நன்றி. இனி எவர் வேண்டுமானாலும் இந்த அரசை ஏற்றுக் கொண்டு நாடாளுங்கள்’ என்று கூறி விட்டு செல்லத் துவங்கியவனை தடுத்து நிறுத்தினான் காசிராஜன். ‘அன்புச் சகோதரனே, இது என்ன கூத்து, உனக்காக ராஜ்யத்தைப் பறித்துத் தர நான் இங்கு படையெடுத்து வந்தால் உன் சகோதரனும் ராஜ்யத்தை வேண்டாம் என்கிறான், நீயும் அதை ஏற்க மறுக்கிறாய். இங்கு என்ன நடக்கிறது இப்போது? என் மூளையைப் போட்டு ஏன் குழப்புகிறிர்கள்? என்று கேட்டான்.

அலர்கனின் சகோதரன் கூறினான் “காசிராஜா நல்ல கேள்வி கேட்டாய் அப்பனே…. நல்ல கேள்விதான் இது. உனக்கு அதன் காரணத்தை விளக்குகிறேன் கேள். எங்களுடைய தாயார் உடலளவில் மட்டுமே எங்களுடைய தந்தை ருதுத்வஜனின் மனைவியே தவிர அவள் ஒரு யோக மாதா ஆவாள். விதிப்படி என் தந்தையின் மனைவியாக மாற வேண்டிய கட்டாயம் இருந்தது அவளுக்கு. அவள் மூலம் நாங்கள் நால்வர் பிறந்தோம். அவள் யோகமாதா என்பதினால் எங்களுக்கு உலக ஆசையைத் துறந்து இல்லறத்தை விட்டு விலகி பரமானந்தத்தை அனுபவிக்கும் வகையில் அறிவு புகட்டினாள். ஆனால் துரதிஷ்டவசமாக என் கடைசி சகோதரனுக்கோ உலகப் பற்றுடன் கூடிய வாழ்வை வாழும்படியான அறிவு புகட்டும்படி கட்டாயம் ஏற்பட்டது. அவனும் இல்லற சுகமே பெரும் சுகமென வாழ்ந்து வந்தான். அந்த சமயத்தில் இங்கு வந்த நான் அதைக் கண்டு கவலையுற்றேன். ஒரு யோகேஸ்வரியின் வயிற்றில் பிறந்த என் சகோதரன் இப்படி காட்டு மிருகம் போல சல்லாபத்தில் முழ்கிக் கிடப்பது அந்த உத்தம யோகேஸ்வரிக்கு அல்லவோ மகாபாபம் என்று எண்ணியே உன் உதவியை நாடி அவனை மீண்டும் யோக வாழ்க்கைக்கு மீட்டுக் கொண்டு வர முயன்றேன். அதற்கு ஒரே வழி அவனை முதலில் துக்கப்படுத்தி, தனிமைப்படுத்தி, மனம் மற்றும் உடல் வலிமையையும் இழக்க வைக்க வேண்டும் என்பதே.  அதை செய்ததும் நான் விரும்பியது நிறைவேறிவிட்டது. என் கடமையும் முடிந்து விட்டது’ என்றான்.

காசிராஜனும் தான் இத்தனை நாட்களும் எப்படி இப்படி ஒரு உன்னத வாழ்க்கையை தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேன் என வருந்தி, அந்த ராஜ்ஜியத்தை அலர்கனின் வம்சமே ஆளட்டும் என்று கூறிவிட்டு தன் இராஜ்யத்திற்குத் திரும்பச் சென்று விட அலர்கனும் தன் ராஜ்ஜியத்தை தன் பிள்ளையிடம் ஒப்படைத்து விட்டு தன் சகோதரனுடன் கானகம் சென்று விட்டான். இப்படியாக அலர்கன் என்பவனின் கதை மூலம் எப்படியான பாக்கியத்தை தன்னை நாடி வரும் பக்தர்களுக்குத் ஸ்ரீ  தத்தர் தந்து கொண்டு அவர்களை நல்வழியில் அழைத்துச் செல்கின்றார் எனத் தெரிய வருகின்றது.

திகம்பரா திகம்பரா, ஸ்ரீ  பாத ஸ்ரீ வல்லப திகம்பரா!

திகம்பரா திகம்பரா, ஸ்ரீ  தத்ததேவா  திகம்பரா

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ

 

ஏழாவது   நாள் பாராயணம்

ஓம்  தத்தாத்ரேயாய வித்மஹே

யோகீஸ்வராய  தீமஹி

தன்னோ தத்த ப்ரசோதயாத்

 

விஷ்ணுதத்தரும் ஸ்ரீ  தத்தாத்திரேயரும்

முன்னொரு காலம்.  விஷ்ணுதத்தன் என்ற ஒரு நல்ல அந்தணன் தன் மனைவியுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருந்தான். வேத ஒழுக்கங்களை கடைபிடித்த வண்ணம் மனதில் கடவுள் பக்தி நிறையவே கொண்டு வாழ்ந்து வந்தான். அவனுடைய நல்ல நடத்தையைக் கண்டு அனைவரும் அவனிடம் பெரிதும் மரியாதை கொண்டு இருந்தனர். அவன் வீட்டுக்கு அருகில் ஒரு புளிய மரம் இருந்தது. புளிய மரங்கள் பேய், பிசாசுகள் வசிக்கும் என்று நம்புவார்கள். அது உண்மை என்பது போல அந்த மரத்திலும் ஒரு பிசாசு வசித்து வந்தது. தினமும் பூஜை புனஸ்காரங்களை முடித்த பின் விஷ்ணுதத்தன் அங்கு வந்து நைவத்தியம் செய்த அன்னத்தில் சிறிது அன்னத்தை எதாவது பிராணிகள் சாப்பிடட்டும் என்று எண்ணி அந்த மரத்தின் அடியில் கொண்டு வந்து வைத்தப் பின்னர் உணவு அருந்துவது வழக்கம். தினமும் நடக்கும் ஒரு நியமம் அது. அந்த மரத்தின் கீழ் அவன் கொண்டு வந்து வைக்கும் அன்னத்தை அவன் சென்ற பின் புளிய மரத்தில் இருந்த அந்த பிசாசு வந்து  சாப்பிட்டு விடும். ஆனால் விஷ்ணுதத்தனுக்கு தான் வைத்து விட்டுப் போகும் உணவை பிசாசுதான் சாப்பிடுகின்றது என்ற விவரம் தெரியாது. விஷ்ணுதத்தன் கொடுத்து வந்த உணவினால் அவனுக்கு அது எந்தக் கெடுதலையும் செய்வது இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு அது நிறைய தொல்லைகளைக் கொடுத்து வந்தது. நாட்கள் செல்லச் செல்ல விஷ்ணுதத்தன் கொடுத்த உணவை அருந்திய அதற்கும் அவனைப் போலவே நல்ல குணங்கள் தோன்றலாயின. தான் பிறருக்கு கொடுக்கும் தொல்லைகள் தவறு எனத் தோன்றியது. தான் செய்து வந்த தீய காரியத்தை விட்டு விட்டது மட்டும் அல்ல தனக்கு உணவு தந்து வரும் விஷ்ணுதத்தனுக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்தது.

தானோ ஒரு பிசாசு, எப்படி செய்வது, பல நாட்கள் அது பற்றி யோசித்த பின் ஒரு நாள் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உணவு கொண்டு வந்து அந்த மரத்தின் கீழ் வைத்துக் கொண்டு இருந்த விஷ்ணுதத்தன் முன் திடீர் என்று சென்று, தன் உருவத்தைக் காட்டியபடி நின்றது. அது மட்டும் அல்ல விஷ்ணுதத்தன் சுதாகரித்துக் கொள்ளும் முன்பே அவனிடம் ‘ஐயா உனக்கு என்ன உதவி வேண்டும், என்னிடம் கேள். செய்கிறேன்’ என்றது. விஷ்ணுதத்தனுக்கு ஒரே வியப்பு. ஒரு பிசாசு வந்து நம்மிடம் வந்து என்ன வேண்டும் கேள் என்று கூறுகின்றதே. ஆச்சரியத்தில் நின்றவனிடம் மீண்டும் கூறியது அது ‘பயப்படாதே அந்தணா, நான் உன் உப்பைத் தின்று வளர்ந்தவன். உன்னை எதுவும் செய்து விடமாட்டேன். இது சத்தியம். உனக்கு என்ன வேண்டும் என்று கேள். என்னால் முடிந்தவரை  அதை நிறைவேற்றித் தருகின்றேன்’

பிசாசு இத்தனைக் கூறுகின்றதே, சத்தியம் வேறு செய்கிறதே. உண்மையாக இருக்குமா, சரி உண்மையோ, பொய்யோ, அதனிடம் என்ன வரம் கேட்பது, இப்படியாக எண்ணியவாறு தன் மனைவியுடன் அது குறித்து கேட்டு ஆலோசித்தப் பின் மறுநாள் தனக்கு என்ன தேவை என்று வந்து கூறுவதாக  சொல்லிவிட்டுச் சென்றான். இரவு முழுவதும் அவனும் அவனுடைய மனைவியும் அது குறித்து ஆலோசித்தனர். அவர்களுக்கு நெடுநாட்களாக மனதில் ஒரு ஆசை இருந்தது. தாங்கள் வசிக்கும் பகுதியின் எங்கேயோ ஒரு இடத்தில்தான் ஸ்ரீ தத்தாத்ரேயர் இருப்பதாகக் கேள்விப்பட்டு இருந்தனர். மாபெரும் யோகியான அவரை சந்தித்து ஆசி பெற பலமுறை முயன்றும், பல்வேறு இடங்கள் சென்றும் இன்று வரை அவரை பார்க்க முடியவில்லை.

ஆகவே அந்த பிசாசின் உதவி பெற்று அவர் இருக்கும் இடத்துக்கு தங்களை அழைத்துச் செல்லும்படிக் கூறலாம் என முடிவு செய்தனர். மறுநாள் தன் எதிரில் மீண்டும் வந்து நின்ற பிசாசிடம் ‘உன்னால் முடிந்தால் எனக்கு தத்தாத்திரேயரின் தரிசனம் கிடைக்க வழி சொல்ல முடியுமா. அந்த உதவி செய்தால் மட்டும் போதும். வேறு எதுவும் தேவை இல்லை’  எனக் கேட்டார். ஸ்ரீ  தத்தர் பெயரைக் கேட்டதுமே பயந்து அலறித் துடித்தது அந்தப் பிசாசு. ‘அந்தணரே, என்னிடம் என்ன உதவி கேட்கிறாய், உன்னை இந்நாள் வரை புத்திசாலி என நான் நினைத்தேனே அதைத் தவறு என்று காட்டுவது போல என்னைப் போய் தத்தாத்திரேயரிடம் அழைத்துப் போவாயா என்று கேட்கின்றாயே, அது நடக்கக் கூடிய காரியமா? என்னைப் போன்றவர்கள் அவர் எதிரில் போய் நிற்க முடியுமா என யோசித்தாயா, அவர் என்னை பொசுக்கி விடமாட்டாரா, போகட்டும் வேறு எதுவும் வேண்டுமானால் கேள் தருகிறேன்’ என்றது. விஷ்ணுதத்தனுக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்றே தோன்றியது. வேதமுறைகளில் தங்களுடைய வாழ்க்கை அமைதியாக ஓடிக் கொண்டு இருக்கையில் லௌகீக வாழ்விற்கு என்ன வேண்டும் என்று எண்ணிய பின் ‘பரவாயில்லை விட்டு விடு. நான் ஏதோ கேட்டு விட்டேன் என்பதால் அதை நிறைவேற்ற முடியவில்லையே என வருந்தாதே. நீ இப்படிக் கேட்டதே கூட எனக்கு ஏதோ உபகாரம் செய்து விட்டதாகவே நினைக்கின்றேன். ஆகவே மனம் வருந்தாமல் திரும்பச் செல். எங்களுக்கு வேறு எந்தத் தேவையுமே இனி இல்லை. ஏதோ தத்தாத்ரேயரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அதனால்தான் கேட்டேன். விட்டு விடு’ என்று கூறி விட்டு வீட்டிற்குத் திரும்பச் செல்லத் துவங்கியவனை தடுத்து மீண்டும் அழைத்தது அந்தப் பேய்.

தனக்கு அத்தனை நாட்களும் உணவு தந்தவனுக்கு வாக்கு கொடுத்த பின் முடியாது என்று திருப்பி அனுப்புவது தவறல்லவா என சங்கடப்பட்டுக் கூறியது ‘அந்தணரே, என்னால் முடியுமோ முடியாதோ பரவாயில்லை. நீ கேட்டு விட்டதினால் உனக்காக ஒரு காரியம் செய்கிறேன். எங்காவது ஸ்ரீ தத்தாத்ரேயர் கண்களில் தென்பட்டால் அவர் இருக்கும் இடத்தைத் உடனே வந்து உனக்கு தெரிவிக்கின்றேன். ஆனால் அங்கு என்னால் வர முடியாது. தூரத்தில் இருந்து அவரை அடையாளம் காட்டுகிறேன். நீதான் அவரிடம் சென்று சரணடைய வேண்டும். ஒன்றை கவனத்தில் பதித்துக் கொள். ஸ்ரீ தத்தாத்ரேயர் லேசில் காட்சி அளிக்க மாட்டார். அவரை அடையாளம் கண்டு கொள்வதும் எளிது அல்ல. அவர் ஒரு மாயாவி. எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் இருப்பார். ஆகவே புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு நீதான் அவரை பிடித்துக் கொள்ள வேண்டும்’ எனக் கூறிய பின் சென்று விட்டது. சரி நீண்ட நாட்களாக நம் மனதில் இருந்த ஆசை அதன் மூலமாவது நிறைவேறுகிறதா பார்க்கலாம் என்று எண்ணியவாறு விஷ்ணுதத்தன் போய் விட்டான்.

சிறிது நாள் சென்றது.  ஒரு நாள் அந்தப் பேய் விஷ்ணுதத்தனிடம் ஓடி வந்து உடனே தன்னுடன் வருமாறு கூப்பிட்டது. அதனுடன் சென்ற விஷ்ணுதத்தனிடம் சற்று தூரத்தில் இருந்த ஒரு இறைச்சிக் கடையைக் காட்டி ‘அதோ அங்கு செல், ஸ்ரீ  தத்தர் புலப்படுவார்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓட்டம் எடுத்தது. விஷ்ணுதத்தனால் அந்த இறைச்சியின் நாற்றத்தை சகித்துக் கொள்ள இயலாமல் போயிற்று. அதனால் சற்று தூரத்தில் இருந்தே அங்கு நோக்கினான். சிலர் வந்து இறைச்சியை வாங்கிக் கொண்டு இருந்தனர். பின் வெகு நேரமாக ஒரு கந்தல் உடை உடுத்தியும் கண்கள் சிவப்பேறி  கள்ளைக் குடித்திருந்த ஒருவன் மட்டும் அங்கேயே நின்று கொண்டிருந்ததைக் கண்ட விஷ்ணுதத்தன் ‘அருவருப்புடன் இருக்கும் அவனா தத்தராக இருப்பார்.. சேச், சே .. நான் அந்த கேடு கெட்டப் பிசாசை நம்பி இப்படிப்பட்ட ஆசாரமற்ற இடங்களில் வந்து நின்றது கூடப் பாவம்’ என மனதில் சந்தேகப்பட்ட வண்ணம் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருக்கயிலேயே, அவர் கண் எதிரிலேயே அந்த கந்தல் உடை உடுத்தி இருந்தவன் மறைந்து விட்டான். அடடா….. எங்கு போய் விட்டான் அந்த கந்தல் உடை உடுத்தி இருந்தவன் என்று நினைத்தவாறே அங்கும் இங்கும் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தவன் முன் வந்து நின்றது அந்தப் பிசாசு. ‘அந்தணா நான் உனக்குக் முன்னரே கூறினேன் அல்லவா, ஸ்ரீ  தத்தர் ஒரு மாதிரியான ஆள், அவர் பக்தர்களைப் பரிட்சிக்க எந்த வேடத்திலும் வருவார் என. நீ இன்று உன் கண் முன் நின்றவரைக் கோட்டை விட்டு விட்டாயே. பரவாயில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தை  எதிர்பார்த்துக் காத்திருக்கலாம்’ என்று சொல்லி விட்டு சென்று விட்டது.  விஷ்ணுதத்தன் மனம் வருந்தி வீடு திரும்பினான்.

இன்னும் சில நாட்கள் கழிந்தன. அந்தப் பேய் திடீரென வந்து உடனே  தன்னுடன் வருமாறு அவரை அழைத்தது. சாலையில் சில நாய்கள் குரைத்தபடி பின் தொடர்ந்து கொண்டிருக்க ஒரு பிச்சைக்காரன் தூரத்தில் சென்று கொண்டு இருந்தான். தூரத்தில் இருந்தவாறே அவனைக் காட்டிய பிசாசு, ‘போ..போய் அவரைப் பிடித்துக் கொள் அவர்தான் ஸ்ரீ தத்தாத்ரேயர்’ என்று கூறி விட்டு ஓடி விட  விஷ்ணுதத்தனும் அந்தப் பிச்சைக்கரானிடம் முன் சென்று அவரை விழுந்து வணங்கினான். தன்னை வந்து வணங்கியவனை தன் கையில் இருந்த ஒரு கம்பியினால் அடித்தார். ‘ஓடிப் போடா பரதேசிப் பயலே…. என்னை வந்து ஏன் தொந்தரவு செய்கின்றாய்’ என்றவாறு கத்திக் கொண்டே பயங்கரமாக அடிக்கலானார் அந்தப் பிச்சைக்காரர் உருவில் இருந்த ஸ்ரீ  தத்தர். ஐயோ என அலறிக் கொண்டு விழுந்த விஷ்ணுதத்தன் வலி பொறுக்க முடியாமல் ‘போதுமடா சாமி அந்தப் பிசாசை நம்பிக் கொண்டு இங்கு வந்தால்  முன் பின் தெரியாத இவன் என்ன ஏது என்று கேட்காமலேயே நம்மை இப்படி அடிக்கிறானே.. இனி வேண்டாம் இந்தப் பைத்தியக்காரத்தனம்’ என்று வலி தாள முடியாமல்  கத்தியபடி வீட்டிற்கு ஓடி வந்து தன் மனைவியிடம் விவரம் கூறிய பின் ‘நமக்கு உள்ள மகிழ்ச்சி போதும் அம்மா, இனி நாமும் முன் போலவே நம்பாடு உண்டு, நாம் உண்டு என்று இருந்து விடலாம். என்னால் இப்படி முன் பின் தெரியாத மூடர்களிடம் சென்று அடிவாங்க முடியாது’  என்று கூறி விட்டு வலி தாங்க முடியாமல் படுத்து உறங்கினார்.

இரவு நல்ல உறக்கம். அப்பொழுது விஷ்ணுதத்தனுக்கு மனதில்  துயரம் எழுந்தது. ‘என்ன பைத்தியக்காரத்தனம் இது……ஒரு வேளை நான்தான் தவறு செய்து விட்டேனோ, இது என்ன பாழாய்ப் போன உடம்பு,  அவன் அடித்ததும் ஏன் அடித்தாய் என்று கூடக் கேட்காமல் பேடிபோல எழுந்து ஓடி வந்து விட்டேனே. ஓருவேளை அந்த நாடகமும் ஸ்ரீ  தத்தர் வேண்டும் என்றே போட்டாரோ , இன்னும் அடி பரவாயில்லை என்று கூறி விட்டு அவரைப் பின் தொடர்ந்து சென்று இருந்தால் ஒருவேளை தத்தரை சந்தித்து இருப்பேனோ?’, என மனம் எண்ணியது.  மறுநாள் காலை உணவு படைக்கும் நேரத்தில் மீண்டும் அந்த பிசாசு வந்தது. ‘அந்தணா என்ன காரியம் செய்து விட்டாய் நீ, தத்தரின் அத்தனை சமீபத்தில் சென்று கூட உன் புத்தியை உபயோகிக்காமல் அவர் அடித்ததும் பேடி போல ஓடி வந்து விட்டாயே. நான் எத்தனை முறைக் கூறினேன். ஸ்ரீ  தத்தர் தன்னிடம் வருபவர்களை நன்கு சோதித்த பின்தான் அவர்களுக்கு காட்சி தருவார் என்று. போகட்டும் நான் வாக்கு தந்தபடி கடைசியாக இன்னும் ஒரே ஒரு முறை அவரை அடையாளம் காட்டுகின்றேன். அதிலும் நீ அவரைப் பிடித்துக் கொள்ளாவிடில் உனக்கு தத்தரின் பாக்கியம் இல்லை என்றுதான் கருத வேண்டும’ எனக் கூறி விட்டுச் சென்று விட்டது.

இன்னும் சில நாட்கள் சென்றது. தினமும் அந்தப் பிசாசு வரும் என எதிர்பார்த்துக் காத்திருந்தார் விஷ்ணுதத்தன். ஒரு நாள் வழக்கம் போல வந்தது அந்தப் பிசாசு. ‘சீக்கிரம் வா, உனக்கு அவரைக் காட்டுகின்றேன்’ எனக் கூறிய பின் தன்னுடன் விஷ்ணுதத்தனை அழைத்துச் சென்றது. தூரத்தில் ஒரு பரதேசி போலத் தோற்றம் தந்து கொண்டிருந்தவன் இறந்து கிடந்த கழுதை ஒன்றின் இறைச்சிகளை எடுத்து பறவைகளுக்குப் போட்டபடியும் அந்த மிருகத்தின் தோலை உறித்துப் பக்குவப் படுத்திக் கொண்டும் இருந்ததைக் கண்டான் விஷ்ணுதத்தன் . அதுவே ஸ்ரீ  தத்தர் என்று கூறி விட்டு ஓடி  விட்டது அந்தப் பிசாசு. மனதில் ‘என்ன வேண்டுமானாலும் வரட்டும் இன்று அவரை விடக் கூடாது’ என்ற தீர்மானத்துடன் அவன் எதிரே சென்று ‘ஸ்வாமி சரணம்’ என இரு முறைக் கூறினான். கூறிவிட்டு அவர் பாதங்களில் விழுந்து அவர் பாதங்களை கெட்டியாகப் பற்றிக் கொண்டான். தன் கால்களைப் பற்றிக் கொண்டு இருந்த அவனை எட்டி உதைத்தார்.  திரும்பத் திரும்ப வந்து தன் கால்களைப் பற்றிக் கொண்டு …தத்தா சரணம், தத்தா சரணம் என கூறிக் கொண்டு இருந்தவனை எத்தனை வேகமாக அடித்தும், …தத்தா தத்தா… எனக் கதறியவாறு அவர் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருந்தபடி வலியைத் தாங்கிக் கொண்டு இருந்தான் விஷ்ணுதத்தன்.   ‘எழுந்திரு மகனே  உனக்கு என்ன வேண்டும்’ என்ற இதமான வார்த்தைகள் மேல் இருந்து வர, வலிகள் மறைந்து போக அண்ணார்ந்து பார்த்த விஷ்ணுதத்தனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. அற்புதமான தோற்றத்தில் காட்சி தந்தபடி நின்று கொண்டு இருந்தார் ஸ்ரீ தத்தாத்ரேயர்.

அவரைச் சுற்றி எந்த மிருகமும், நாய்களும் இல்லை. பன்னீர் பூக்களின் மணம் மூக்கைத் துளைத்தது. எழுந்தான் தேவா சரணம், தேவா சரணம் எனக் கூறியவாறே மனம் திருப்தி தரும் அளவில் அவரை வலம் வந்த பின் அவர் எதிரில் வந்து நின்றான் விஷ்ணுதத்தன். பித்துப் பிடித்தவன் போல் அவரிடம் எதை எதையோ கூறிக் கொண்டு இருந்தவனை சாந்தப்படுத்தினார் ஸ்ரீ  தத்தர். ‘உனக்கு என்ன வேண்டும்’ என மீண்டும் கேட்டார் ஸ்ரீ  தத்தர். சற்று நேரம் யோசித்தவன் வீட்டிற்கு சென்று மனைவியை கேட்டு விட்டு சொல்கிறேன் எனக் கூறுவது மடத்தனம் என நினைத்தான். வந்தது வரட்டும் என முடிவாக அவரிடம் ஒரு வேண்டுகோளை வைத்து விட்டான். ‘ஸ்வாமி நாளைக்கு என் தந்தைக்கு திவசம். நீங்கள் அங்கு வந்து உணவு அருந்த வேண்டும்’. ஸ்வாமி எந்த விதமான உணர்சிகளையும் காட்டாமல் சரி வருகிறேன் என்று கூறி விட்டார்.

பரம சந்தோஷம் விஷ்ணுதத்தனுக்கு. நம் வீட்டில் உணவு அருந்த ஸ்ரீ  தத்தர் வருகிறார் என்ற மகிழ்ச்சி  மேலிட வீட்டிற்கு ஓடிச் சென்று மனைவியிடம் அதைச் சொல்ல அவளும் பைத்தியம் பிடித்தவள் போல் ஆகி, அவருக்கு என்ன சமைக்கலாம், எப்படிப் பறிமாறலாம் என்றெல்லாம் எண்ணியவாறு மனக் கோட்டைகள் கட்டியபடி இரவு முழுவதும் தூங்காமல் கணவருடன் அது குறித்துப் பேசிக் கொண்டு இருந்தப் பின் உறங்கினர். மறுநாள் காலை, திவசம் முடிந்தது. சாப்பிட வருகின்றேன் என்பவர் வந்திருப்பாரா என பார்க்க வெளியே வந்தவன் முன் நின்றார் ஸ்ரீ  தத்தர்.  வந்து விட்டார் தத்த பகவான் என்ற மகிழ்ச்சி மேலிட இலைப் போட்டுப் பறிமாற ஆயத்தம் ஆனவளிடம் ஸ்ரீ தத்தாத்ரேயர் கேட்டார் ‘ஆமாம் திவசத்திற்கு சாப்பிட இரண்டு பிராமணர்கள் வேண்டுமே, இன்னொரு பிராமணண் எங்கே? விஷ்ணுதத்தன் அதிர்ந்து போனான். இன்னொரு பிராமணரை இப்போது போய் எங்கு தேடுவது, எப்படி அழைப்பது, … இதோ மனைவியிடம் அவள் யாரைக் கூப்பிட்டு இருக்கின்றாள் எனக் கேட்டுச் சொல்கின்றேன்’ எனறு உள்ளே சென்று மனைவியிடம் விவரம் கூற அவளும் ஒரு கணம் திகைப்புற்றாலும் வருவது வரட்டும் என எண்ணியவாறு கண்களை மூடியபடி சூரிய பகவானிடம் பிரார்த்தனை செய்தாள். அவரிடம் நீங்கள்தான் பிராமணணாக வந்து எங்கள் சங்கடத்தைத் தீர்க்க வேண்டும் என்று வேண்டினாள். கற்புக்கரசி அழைத்தால் செல்லாமல் இருக்க முடியாது என்பதால் அவள் முன் மற்றொரு பிராமணணாக வந்து நின்றார். அடடா, தத்தருடன் அமர்ந்து சாப்பிட நான் அல்லவா கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என மிகவும் மகிழ்ச்சியோடு கூறியவர் உடனே சென்று  இரண்டாவது பிராமணராக ஸ்ரீ  தத்தர் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.

முதல் பரிட்சையில் தேறி விட்டான் விஷ்ணுதத்தன், அடுத்த சோதனையைத் துவக்க வேண்டும் என எண்ணிய ஸ்ரீ  தத்தர் மீண்டும் கூறினார், ‘கேட்க மறந்து விட்டேனே, விஷ்ணு இலையில் சாப்பிட யார் வருகிறார்கள்?’ மீண்டும் ஒரு குழப்பம். இம்முறையும் அவன் மனைவி சற்றும் தயங்காமல் அக்னி தேவனையே வேண்டிக் கொண்டாள். அவள் சமைத்த அடுப்பில் இருந்தே வெளி வந்த அக்னி பகவானிடம் தங்கள் சங்கடத்தைக் கூறவும் அவர் ‘கரும்பு சாப்பிட கூலியா, தத்தாத்திரேயருடன் அமர்ந்து சாப்பிட வேண்டும் எனில் அதற்கு நான் அல்லவா கொடுத்து வைத்திருக்க வேண்டும், ஓன்றும் யோசிக்காதே நான் வந்து சாப்பிடுகின்றேன் என பிராமணண் உருவில் வந்து இலையில் அமர்ந்தார். ஸ்ரீ  தத்தர் முகத்தில் புன்சிரிப்பு. இப்படிப்பட்ட திவசமே நடந்தது இல்லை என்று கூறும்படி அமைந்தது அது.  சாப்பிட்ட பின் மனம் மகிழ்ந்த ஸ்ரீ  தத்தர் அவனுக்கு ‘நீ நினைத்த காரியம் நிச்சயமாக நடைபெற உனக்கு ஒரு மந்திரோபதேசம் செய்கின்றேன்’ எனக் கூறி விட்டு அவருக்கு ஒரு மந்திரம் சொல்லித் தந்த பின் அனைவரும் சென்று விட்டனர். அவர்கள் சென்ற பின்னரே தங்களுடைய சுயநிலைக்குத் திரும்பிய அந்த தம்பதியினர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இப்படியாக நற்பண்புகளுடன் மட்டுமே  வாழ்ந்து  கொண்டு தன் கர்மங்களை முறைப்படி செய்து கொண்டிருந்து, நல் புத்தியுடனும் தெய்வ நினைவுகளுடன் மட்டும் வாழ்ந்து கொண்டிருந்த அந்தத் தம்பதியினருக்கு தத்தரின் அருள் கிடைத்ததில் வியப்பு ஏது?

காலம் சென்று கொண்டு இருந்தது. தத்தரிடம் அத்தனை வரங்கள் பெற்று இருந்தும் விஷ்ணுதத்தனுக்கு இறுமாப்பில்லை, அந்தத் தம்பதியரின் நடத்தையிலும் எந்த மாற்றமும் இல்லை. அவரிடம் இருந்து கிடைத்த வரத்தினையும் துஷ்பிரயோகம் செய்யவில்லை.  எப்பொழுதும் போலவே வாழ்க்கைத் தொடர்ந்து கொண்டு இருந்தது. அப்பொழுது அவர்கள் இருந்த கிராமத்திற்கு சற்று தள்ளி இருந்த ஓரு கிராமத்தில் மிகவும் துக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தனர் ஒரு அந்தணத் தம்பதிகள். நன்றாக இருந்த அவர்கள் வாழ்க்கையில் சூறாவளி வீசுவது போல அந்த அந்தணன் சொல்ல முடியாத வியாதிகளினால் பீடிக்கப்பட்டு விட்டான்.

ஒரு நாள் திடீர் என அவனுடைய பெற்றோர்கள் இறந்து விட்டமையால் அவனைக் கவனித்துக் கொள்ள ஆள் இல்லை. வயதுக்கு வந்ததும்தான் அங்கு போக வேண்டும் என்ற நியதியை உடைத்து எறிந்தாள். வியாதியினால் பீடிக்கப்பட்டு படுத்திருக்கும் கணவனுக்கு பணிவிடை செய்யவில்லை எனில் எதற்கு மனைவி என்ற பட்டம் வேண்டும். உடல் சுகத்துக்கு மட்டும்தானா கணவன், இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று அந்த இளம் வயதிலும் நிதானமாக சிந்தித்தாள். தன் பெற்றோர்களிடம் நியாயத்தை எடுத்துக் கூறிவிட்டு தானே அவன் வீட்டிற்கு சென்று அந்த இளம் பெண் அவனுக்கு சேவை செய்யத் துவங்கினாள்.      அப்படிப்பட்ட சமயத்தில் எவர் எவரோ அவளுக்கு விஷ்ணுதத்தனின்  பெருமைப் பற்றித் கூறியதால் தன் கணவனை அவரிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்தாள். ஆனால் அவனால் செல்ல முடியாத அளவு  உடல் நிலை கெட்டு இருந்தது அவனுக்கு. ஆகவே அவனுக்குத் துணையாக தன் தந்தையை வீட்டில் வைத்து விட்டு தனியாகவே விஷ்ணுதத்தனிடம் சென்று தங்களுடைய நிலைமையைக் குறித்துக் கூறி அழுதாள்.

வந்தவள் நிலையைக் கண்ட விஷ்ணுதத்தன் தன் ஞான திருஷ்டியால் அவனுக்கு வந்திருந்த வியாதி பற்றி அறிந்து கொண்டார். வந்திருந்த வியாதிக்கான காரணம் அவன் செய்து இருந்த அளவற்ற பாபங்களே காரணம் என்பதினால் ஸ்ரீ  தத்தர் கொடுத்த மந்திரத்தை பயன்படுத்தி உடனே அவனைக் குணப்படுத்தினாலும் மீண்டும் அவன் அந்த பாபங்களினால் வியாதியை திரும்பப் பெறுவான் என்று தெரிந்து கொண்டு வந்தவளிடம் அவற்றை விவரமாக எடுத்துக் கூறினார். அந்தப் பாபங்கள் தொலைக்கப்பட்டால்தான் அவனுடன் இனிய வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும் என்று விவரமாக அவர் எடுத்துரைத்ததும் அந்தப் பதிவிரதை தன்னுடைய கணவன் குணம் அடைய தான் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருப்பதாகக் கூறியதால் முப்பத்தி மூன்று வருடங்கள் சில விரதங்கள் இருக்க வேண்டும் என்றார். முன்னரே கூறியபடி தன் கணவன் குணம் அடைய தான் என்ன வேண்டுமானாலும் செய்வதாகக் அவள் கூறியதால் அவளுக்கு அந்த விரதங்களை எடுத்துச் சொல்லி தீட்சைத் தந்தார். கணவன் வீடு திரும்பிய அவளும் அவற்றை முறைப்படி கடைபிடிக்கத் துவங்க விரதத்தின் ஒவ்வொரு  பகுதியும் அவள் செய்து முடிக்க அவன் வியாதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக விலகின.   33 ஆண்டுகள் விரதம் முடிந்த பிறகு வியாதி முற்றிலும் குணம் அடைந்து அந்த மங்கையுடன் சேர்ந்து இனிய வாழ்வை வாழத்   துவங்கலானான்.

தந்த மந்திரோபாசனையை ஸ்ரீ  தத்தர் கூறியபடியே பயன்படுத்தி தன்னால் முடிந்த அளவில் மக்களுக்கு சேவை செய்து வந்தார் விஷ்ணுதத்தர். அதைக் கண்காணித்துக் கொண்டே இருந்த ஸ்ரீ தத்தாத்ரேயர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அந்த விஷ்ணுதத்தனின் சக்தியை அவருக்கு அறியாமலேயே பெருக்கிக் கொண்டு இருந்தார். அதுவே தத்தரின் பெருமைக்குச் சான்று. ஆக தத்தரிடம் சரணாகதி அடைந்தவர்கள் வாழ்வில் வளம் மட்டுமல்ல நிம்மதியையும் பெறுவார்கள் என்பதில் ஐயம் இருக்க முடியுமா? ஸ்ரீ தத்தரின் புகழை இப்படிக் கூறுவர். ‘ஓ, ஸ்ரீ தத்தாத்ரேயா, பேரானந்தத்தைத் தரும் சிவனும், கிருஷ்ணருமானவனே, நீ நிர்வாண கோலத்தில் இருந்தாலும் நீயே குழந்தையானவர், அமைதிக்கு வழி காட்டுபவர், கடல் போன்ற விவேகத்தைத் தருபவர். எங்களுக்கு நீயே தேவன், கருணாமயி, எங்களைக் காத்து அருள்பவன், உன் நினைவோடு என்றென்றும் நாங்கள் வாழ்வதற்கு நீதான் அருள் புரிய வேண்டும்’.

திகம்பரா திகம்பரா, ஸ்ரீ  பாத ஸ்ரீ வல்லப திகம்பரா!

திகம்பரா திகம்பரா, ஸ்ரீ  தத்ததேவா  திகம்பரா

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ

 

நிறைவு பெற்றது