ஹரியும் சிவனும் ஒன்றே
– சங்கரநாராயணன் ஆலயம் –
சாந்திப்பிரியா
=
திருநெல்வேலி மாவட்டத்தில் பல முக்கியமான ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றே சங்கரநாராயணர் ஆலயம். இந்த ஆலயத்தில் சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் ஒன்றாக இணைந்து காட்சி தருகிறார்கள் என்பது மட்டும் அல்ல அந்த ஆலயத்தின் மகிமை, அவர்கள் ஒன்றாக காட்சி தர ஏற்பாடு செய்தவரே சிவபெருமானின் மனைவியும், மகாவிஷ்ணுவின் சகோதரி என கருதப்படும் பார்வதி தேவியும் அங்கு உள்ளார் எனும் போது இன்னும் ஆலயத்தின் மகிமை கூடுகின்றது. இந்த ஆலயத்தையும் உக்ர பாண்டியன் என்ற மன்னனே AC 900 ஆம் ஆண்டில் கட்டி உள்ளதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
 
இந்த ஆலயத்தில் ஏன் சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் ஒன்றாக தோற்றம் தந்தார்கள்? அர்த்தநாரீஸ்வரர் என சிவன்-பார்வதி அவதாரத்தைதான் பார்த்து உள்ளோம் . அதுபோல இங்கு அர்த்தநாராயநீஸ்வரராக  சிவனும் விஷ்ணுவும் அவதரித்தார்கள் .
அதன் கதை இது:-
ஒரு காலத்தில் பார்வதி சிவபெருமானுடன் தானும் ஐக்கியமாக வேண்டும் என்பதற்காக ஊசி முனை மீது நின்றபடி தவம் இருந்தாள். மாங்காட்டில் தவம் இருந்தவள்  ஒரு சாபத்தினால் சிவனிடம் இருந்து பிரிந்து பூமியில் அவதாரம் எடுத்தவள்  சாப விமோசனம் பெற்று மீண்டும் சிவபெருமானுடன் தான்  சேர வேண்டும் என்பதற்காக தவம் இருந்தாள். இங்கோ இந்த உலகிற்கே  சிவனும், ஹரியும் ஒன்றே என்ற உண்மையை உணர்த்த வேண்டும் என்ற காரணத்திற்காக  ஒரு நாடகத்தை ஆடினாள். ஆகவே அவள் திருநெல்வேலியில் இருந்த புங்கவன ஷேத்திரத்தில் சென்று  பார்வதி என அல்லாமல்  பொன் மழைக் கொட்டும் பாத்திரத்தை கொண்ட கோமதி அம்மன் என்ற பெயரில் ஒரு யோகினியின் உருவைக் கொண்டு ஊசி  முனை மீது நின்றபடி கடுமையான தவத்தில் இருந்தாள். அவள் தவத்தில் இருந்த அதே இடத்திலேயே சிவன் மற்றும் விஷ்ணுவின்  சாபத்தின் காரணமாக இரண்டு பாம்புகளாகப் பிறந்து இருந்த சங்கன் மற்றும் பத்மன் என்ற இரண்டு நாக அரசர்களும் தாமும்  சாப விமோசனம் பெற  பூஜைகளை செய்து வந்தார்கள். சங்கன் சிவபெருமானையும், பத்மன் விஷ்ணுவையும் துதித்து பூஜை செய்து வந்தபோது ஒரு நாள் இருவருக்கும் சிவன் சக்தி வாய்ந்தவரா இல்லை விஷ்ணு சக்தி வாய்ந்தவரா என்ற வாக்குவாதம்  ஏற்பட்டு சண்டையாக மாறியது. ஆகவே இருவரும் அங்கு தவம் செய்து கொண்டு யோகினி உருவில் இருந்த பார்வதியிடம் சென்று நியாயம் கேட்டார்கள். அவளும் மறுநாள் அவர்களுக்கு விடை தருவதாகக் கூறி விட்டு சிவன் மற்றும் விஷ்ணுவிடம்  அந்த நாகங்களுக்கு மட்டும் அல்ல, இந்த உலகிற்கே சிவனும் விஷ்ணுவும் ஒருவரேதான் என்ற உண்மையை  உணர்த்த வேண்டும் என தனது தபத்தில் கோரிக்கை விடுத்தாள். ஆகவே  அவர்கள்  மறுநாள் அவள் முன்னால் சிவ-விஷ்ணு அவதாரமாக, சங்கரநாராயணராக நின்றனர்.  ஒரே  உடலில் ஒரு பாதி சிவனாகவும் மறு பாதி விஷ்ணுவாகவும்  காட்சி  தர அதைக் கண்ட இரண்டு நாகங்களும் வெட்கி தலை குனிந்து அவர்களை வணங்கி துதித்து மன்னிப்புக் கேட்டார்கள். அவர்கள் சாப விமோசனம் பெற இன்னும் சிறிது காலம் உள்ளது என்பதினால், அங்கியே தங்கி தமக்கு அந்த உண்மையை உணர்த்திய யோகினியான கோமதி அம்மனுக்கு பணி விடை செய்து  வந்தார்கள்.
அதன் பல காலத்துக்குப் பின்னர் மதுரையை ஆண்டு வந்த உகர பாண்டிய மன்னன் ஒரு நாள் மீனாஷி அம்மன் ஆலயத்துக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில்  அவன் ஏறி வந்த யானை ஒரு பள்ளத்தில்  மாட்டிக் கொண்டது. அதில் இருந்து இறங்கியவனிடம் ஒரு மலைவாசி ஓடி வந்து அருகில் உள்ள வனப் பகுதியில் ஒரு பாம்புப் புற்றுக்கு அருகில் சிவலிங்கம் ஒன்றை பாம்பு சுற்றிக் கொண்டு நடனம் ஆடிக் கொண்டு  உள்ளது எனக் கூறினான். உடனே மன்னனும் தமது சேவகர்களுடன் அங்கு சென்று அந்தக் அருமையான காட்சியைக் கண்டான். அப்போது வானத்தில் இருந்து அசிரீரி வாக்கு கேட்டது. அது  நடந்த உண்மைகளைக் கூறிவிட்டு அந்த சிவலிங்கத்தை சங்கரநாராயணராக கருதி  ஒரு ஆலயத்தை அமைக்குமாறு கூறி விட்டு மறைந்தது .  அதன்படி அந்த மன்னனும் அங்கு ஒரு ஆலயத்தை எழுப்பி சங்கரநாராயணர் மற்றும் கோமதி அம்மனை வழிபாட்டு வந்தான். அதுவே சங்கரநாராயணர் ஆலயம் என ஆயிற்று . பின்னரே அங்கு கிடைத்த சங்கரநாராயணர் மற்றும் கோமதி அம்மன் சிலைகளும்  ஆலயத்துக்குள் வைக்கப்பட்டனவாம் .
ஆமாம் பார்வதி ஏன் கோமதி அம்மனாக உரு எடுக்க வேண்டும் ? கோ + மாதா அதாவது கேட்ட அனைத்தையும் தன்னுள் இருந்து தரும் அந்த காமதேனு பசுவிற்கே  தாயாரான பார்வதி காமதேனுவிற்கும் தாயானவள், கேட்ட அனைத்தையும் தருபவள் என்பதினால் கோமாதா எனக் கருதப்பட்டு  கோமதி என மருவி கூறப்பட்டாள் என்றும் ஒரு கருத்து உள்ளது . அதனால்தானோ என்னவோ கோமதி அம்மனை இங்கு செல்வத்தை தருபவளாக இருக்கின்றாள் என்கின்றனர். ஆலயத்தினுள் சிவன், சங்கரநாராயணர்  மற்றும் கோமதி அம்மனுக்கு தனித் தனி சன்னதிகள் உள்ளன.

இந்த ஆலயத்தின் மகிமை பல உண்டு.

  • இங்கு பாம்பாட்டி சித்தர் வந்து வணங்கிய தலம்  என்பதினால்  இந்த ஆலயத்தின் பின்னால் அவருடைய  சமாதி உள்ளது.
  • இந்த ஆலயத்தில் உள்ள தீர்த்தமான நாக சுனை என்பதை சங்கன் மற்றும் பத்மன் என்ற நாகங்களே கட்டி உள்ளதாகவும் அதில் குளித்தால் உடல் வியாதிகள், முக்கியமாக தோல் சம்மந்தப்பட்ட  வியாதிகள் குணம்  ஆகும் என்று நம்புகிறார்கள்.
  • இங்குள்ள கோமதி அம்மனை வணங்கி துதிப்பத்தின் மூலம் வறுமை விலகும், பணத் தட்டுப்பாடு நீங்கும்
  • நீர், நிலம், பிருதிவி, ஆகாயம் மற்றும் அக்னி போன்ற பஞ்ச பூதங்களை ஒன்றிணைந்து உள்ளது  இந்த ஆலயம். ஆகவே இங்கு வந்து வேண்டுவது நடக்கின்றது என்பது நம்பிக்கை
  • நாக தோஷங்கள் விலகுகின்றன, பாம்புகளின் பயம் விலகும்.
  • இங்கு அம்மனுக்கு மாவிளக்கு போடுவது மிகவும் விசேஷமானது
ஆலயம் திருநெல்வேலியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சங்கரன் கோவில் எனும் ஊரில் உள்ளது. அந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் என்றால்  தென்காசி, ராஜபாளையம், கோவில்பட்டி மற்றும் மதுரை போன்ற  நகர்களுக்குச்  சென்று அங்கிருந்து ஏதாவது வாகனத்தில் செல்லலாம். சங்கரன்கோவிலுக்கு ரயில் மூலம் செல்ல சென்னையில் இருந்து நேரடி ரயில் வசதியும் உள்ளது.
ஆலய விலாசம் மற்றும் தொடர்பு
கொள்ள வேண்டிய முகவரி

The Deputy Commissioner / The Executive Officer,
Sri Sankara Narayana Swamy Temple,
Sankarankovil ( Taluk) – 627 756
Thirunelveli District.
E-mail : sankarankoviltemple@gmail.com
Phone No : 04636 – 222265