இசக்கி அம்மன்
சாந்திப்பிரியா 
 
இசக்கி அம்மன் 

இசக்கி அம்மன் என்பவள் ஒரு கிராம தேவதை. சாதாரணமாக கிராம தேவதைகளை கிராமத்தில் உள்ளவர்கள் பெரிய அளவில் போற்றி வணங்குகிறார்கள். அவர்கள் தம்மையும் தமது கிராமத்தையும் காப்பதாக நம்புகிறார்கள். அது போல சில கிராம தேவதைகளை ஆராதிப்பத்தின் மூலம் தாமும் தமது குடும்பமும் நலமாக இருப்பார்கள், வேண்டியது கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள்.

முதலில் கிராம தேவதைகள் தம்மையும்  தமது சக்தியையும்  வெளிக் காட்ட கிராம மக்களை ஏதாவது ஒரு விதத்தில் பயமுறுத்துவார்களாம். பின்னர் அந்த கிராம மக்கள் யாராவது ஒருவரின் கனவில் அவர்கள் தோன்றி தான் இன்ன இடத்தில் புதைந்து உள்ளதாகவும், தன்னை வெளியில் எடுத்து வழிபட்டால் அந்த ஊரைக்  காத்தபடி இருப்பேன் எனவும் கூறுவார்களாம். அதன்படி அந்த கிராம மக்கள்  கனவில் வந்தபடியே அந்த தேவதைகளைக் கண்டறிந்து சிறு ஆலயம் எழுப்பி வழிபடுவார்கள். அந்த தேவதையும் அந்த ஊரைக் காத்தபடி ஊர் எல்லைகளில் அமர்ந்து இருப்பார்களாம். அப்படிப்பட்ட கதையின்படியே மாரியம்மனும் தன்னை  வெளிக்காட்ட  அம்மை நோயை உண்டாக்கி அதை குணப்படுத்த தன்னை வழிபட வைத்ததாக கிராமியக் கதைகள் உண்டு. அதைப் பற்றிய கதைகளை தனியாக  மாரியம்மன் ஆலயங்கள்  என்பதில் விவரித்து உள்ளேன். அப்படிப்பட்ட மாரியம்மன்  அம்சத்தை சேர்ந்தவள் இசக்கி அம்மன் என்றாலும் ஒருவரது குடும்பத்தையும்  குழந்தைகளையும்  காத்தருளும் தெய்வமாக அவதரித்தவளே இசக்கி அம்மன் என்பார்கள். இப்படியாக உருவான கிராம தேவதைகள், தெய்வங்களில்  ஒருவளான  இசக்கி அம்மன் என்ற அம்மன்  பெரும்பாலும் கன்யாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகாசி, சேலம்  மற்றும் நாகர்கோவில் போன்ற தென் பகுதிகளில் அதிகம் ஆராதிக்கப்படுபவள். அவளுக்கு தனி ஆலயங்களும் உள்ளன.

இசக்கி அம்மனை மாரியம்மனின் ஒரு அம்சமாகவே கருதுகிறார்கள். மேலும் அந்த இரண்டு அம்மன்களும் பார்வதியின் ஒரு ரூபமே என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. இசக்கியம்மன் பொதுவாக சிவப்பு உடை உடுத்தி, கையில் ஒரு குழந்தையை ஏந்தியபடியே காட்சி தருகிறாள். அவள் கருணை உள்ளம் கொண்டவள். அவள் ஆலயத்தை சுற்றி உள்ள பால்கள்ளு என்ற பெயரில் உள்ள சில செடிகளைக்  கிள்ளினால் வெள்ளை நிறத்தில் பால் போன்ற திரவம் வடியும். அதுவே அந்த இடங்களில் இசக்கி அம்மன் உள்ளாள் என்பதின் அடையாளம் என்று  கூறுவார்கள்.  காரணம் குழந்தைகளுக்கு பால்  ஊட்டி வளர்க்கும்  ஒரு தாயைப் போன்றவள் இசக்கி  அம்மன் என்பதை அந்த சிறு செடி காட்டுகிறதாம்.

இசக்கி அம்மனை ரத்தத்தைக் குடிக்கும் நீலி என்ற யட்ஷினியின் சகோதரி என்றும் கூறுகிறார்கள். அந்த நீலி என்பவள் காளியின் யுத்த தேவதைகளில் ஒருவள்.  காளியும் பார்வதியின் அவதாரமே என்பதினால் இசக்கியம்மனும் பார்வதியை சேர்ந்த ஒரு தேவதையே எனக் கருதுவதில் தவறில்லை.

 

இசக்கி அம்மன் தோன்றியதற்கான இரண்டு கிராமியக் கதைகள் உள்ளன
முதலாவது கதை

ஒரு கிராமத்தில் அம்பிகா என்ற ஒரு பெண்மணி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு சோம ஷர்மா என்ற கணவரும், இரண்டு குழந்தையும் உண்டு. ஒரு முறை அவர்கள் வீட்டில் இறந்து போன மூதையோர்களுக்காக சடங்கு ஒன்று நடந்தது. சோம ஷர்மா குளித்துவிட்டு வர நதிக் கரைக்கு சென்றார். அம்பிகா அந்த சடங்கிற்காக சமையல் செய்து கொண்டு இருந்தாள். அந்த நேரத்தில் வயதான ஒரு துறவி பசியோடு வந்து பிச்சைக் கேட்டார். கருணை குணம் கொண்ட அம்பிகா தான் சமைத்து வைத்து இருந்த உணவில் இருந்து சிறிது உணவை அவருக்கு தந்து விட்டாள். அதை அவர் பெற்றுக் கொண்டபோது சோம ஷர்மா திரும்ப வந்துவிட்டார். நடந்ததைக் கண்டார். சடங்கு முடிவதற்கு முன்னரே அபசாரம் செய்து விட்டாள் என கோபமுற்று தனது மனைவியையும் குழந்தைகளையும் வீட்டை விட்டு அடித்துத் துரத்தி விட்டார். குழந்தைகளை தூக்கிக் கொண்டு அம்பிகா அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியேறி ஊருக்கு ஒத்துக்குப்புறமாக இருந்த காட்டின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். சிறிது நேரம் ஆனதும் சோம ஷர்மா நடந்ததை எண்ணிப் பார்த்தார். தனது தவறை உணர்ந்தவர் அவளிடம் மன்னிப்புக் கேட்டு அழைத்து வர அவளை தேடிச் சென்றார். தூரத்தில் இருந்து கணவர் வருவதைக் கண்ட அம்பிகா தன்னை கொள்ளவே வருவதாக நினைத்துக் கொண்டு தன உயிரை தானே போக்கிக் கொண்டாள். தற்கொலை செய்து கொண்டவள் அங்கு மரங்கள் மீது வாழ்ந்து கொண்டு இருந்த ரத்தத்தைக் குடிக்கும் யட்ஷிணிகளுடன் சேர்ந்து கொண்டு தானும் யட்ஷிணியாக மாறினாள். யட்ஷிணியாக இருந்தாலும் அவள் மனம் முழுவதும் தனது குழந்தைகளை காப்பாற்றுவதிலேயே இருந்ததினால் சிவபெருமானின் ஆசிகளுடன் மீண்டும் மனித உருவெடுத்து குழந்தைகளை காத்து வந்தாள். ஆனால் அவள் முன்பிறவியில் யட்ஷிணியாக இருந்ததினால் அந்த இடத்திலேயே அவள் குடும்பத்தைக் காக்கும் ஒரு தேவதையாக மாறினாள். முன்பிறவியில் யட்ஷிணியாக இருந்தாலும் அவள் ரத்தத்தைக் குடிப்பவளாக இல்லாமல் குழந்தைகளை காப்பாற்றும் மனம் கொண்டவளாக இருந்ததினால் அவள் குடும்பத்தை இயக்குபவள் என்ற அர்த்தத்தை தரும் இயக்கி என்ற பெயரைக் கொண்டாள். அந்த இயக்கியே காலப் போக்கில் இசக்கியாக மாறியதாக நம்புகிறார்கள்.

இரண்டாவது கதை –  ஒரு ஆலய வரலாறு   
அதன்படி இசக்கி அம்மன் மானிட உருவு எடுத்து பூமிக்கு வந்தபோது அவளை வஞ்சித்து கொன்று விட்ட ஒரு செட்டியாரை பழி வாங்கும் விதத்தில் ஏழு ஜென்மத்திலும் பிறப்பு எடுத்து தானே அவனை அழிக்க வேண்டும் என சிவபெருமானிடம் வரம் கேட்டாள். அவள் கேட்ட வரத்தை தந்தாலும் ஒரு நிபந்தனைப் போட்டார் சிவபெருமான். ஒவ்வொரு ஜென்மத்திலும் அவள் தன்னை சந்தித்து தனது ஆசிகளைப் பெற்றுக் கொண்டப் பின்னர்தான் அவனை அழிக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அதை அவள் ஏற்றுக் கொண்டாள். அடுத்த ஆறு ஜென்மங்களிலும் அவளும் செட்டியாரும் பிறப்பு எடுத்தார்கள். அந்த ஆறு ஜென்மத்திலும் அவளே அவரை பல வழிகளில்  கொன்று பழி தீர்த்தாள். இனி மிஞ்சி இருந்தது கடைசி ஏழாவது ஜென்மம். மீண்டும் இருவரும் பிறப்பு எடுத்தார்கள். இசக்கி அம்மன் சிவபெருமானை தேடியவண்ணம் காட்டில் அலைந்து கொண்டு இருந்தாள். அப்போது ஒருநாள் அவள் காட்டு வழியே சென்று கொண்டு இருந்தபோது அவள் ஒரு சித்தரைக் கண்டாள். அந்த சித்தருக்கு அவள் மனிதப் பிறப்பு எடுத்து வந்துள்ளதின் காரணம் தெரியும் என்பதினால் அவளை சந்தித்தவர் அவளுக்கு சிவபெருமானும் பார்வதியும் இருந்த இடத்தைக் காட்டினார். அதன்படி இசக்கியம்மன்  சிவசக்தியை அவர்கள் உட்கார்ந்து இடத்துக்குச் சென்று பார்த்து தனக்கு வேண்டிய வரத்தைப் பெற்றுக் கொண்டாள். அப்போது பார்வதி அவளுக்கு துணையாக இருக்க ஆவலுடன் நாகராஜரையும் அனுப்பி வைத்தாள்.

நாகராஜரும் இசக்கியம்மனும் காடு வழியே சென்று கொண்டு இருந்தபோது அந்த வழியே ஒருவன் சென்று கொண்டு இருந்ததைக் கண்டார்கள். அவனைப் பார்த்த  நாகராஜர் இசக்கியம்மனிடம் அவன்தான் அந்த செட்டியார் என அடையாளம் காட்டினார். ஆகவே இசக்கியம்மன் அந்த வழிப்போக்கரிடம் சென்று தான் ஒரு வேலை தேடுவதாகவும் அவர் வீட்டு வேலை செய்ய தன்னை  வைத்துக் கொள்ளுமாறும்  கேட்டுக் கொண்டாள்.  அந்த வழிப்போக்கனும் தனது மனைவி நிறைமாத கர்பிணியாக இருப்பதினால் அவளுக்கு உதவி செய்ய ஒரு பெண்  கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணியவாறு அவளை தன வீட்டில் வேலைக்கு அமர்த்திக் கொண்டான். அவன் வீட்டில் வேலை செய்யத் துவங்கினாள் இசக்கியம்மன். ஒரு நாள் அவன் வெளியில் சென்றபோது அவனை நாகராஜரை அனுப்பி கொன்று விட்டாள்.  அந்த செட்டியாரின் மனைவிக்கு வந்துள்ள இசக்கியம்மன் ஒரு பெண்ணாக இருக்காது, எதோ தெய்வமாகவே இருக்க வேண்டும் எனத் தோன்றியது. தன் கணவன் இறந்தப் பின் தானும் உயிர் வாழக் கூடாது என எண்ணியவள் இசக்கியம்மனிடம் தன் வயிற்றில் ஒரு குழந்தை வளர்கின்றது  என்றும் அதை வெளியில் எடுத்துவிட்டு தன் குடலையும் வெளியில் எடுத்து விட்டு தனக்கு மரணம் கிடைக்க அருளுமாறு கேட்டுக் கொண்டப் பின் மயங்கி விழுந்து விட்டாள். அவள் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம் இசக்கியம்மன் அவள் வயிற்றில் இருந்தக் குழந்தையை வெளியில் எடுத்து தன்னிடம் வைத்துக் கொண்டு அவள் குடலை மாலையாக்கி தன் கழுத்தில் அணிந்து கொண்டாள். அவளே ஆள்தாரை  இசக்கியம்மன் என்ற பெயருடன் ஊரின் ஒரு ஆலமரத்தடியில்  எழுந்தருளி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றாள். இந்த ஆலயம்  ஆள்தாரை இசக்கியம்மன் செட்டி தெரு, பறக்கை, நாகர்கோவிலில்  என்ற இடத்தில் உள்ளது.

  இசக்கி அம்மன் ஆலயம்

திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் உள்ள முப்பந்தல் என்ற ஊரில் உள்ள   இசக்கியம்மன் ஆலயத்தின் முன்னால் வாகனங்களில் செல்பவர்கள் தமது வாகனங்களை ஒரு  நிமிடமாவது நிறுத்தி வைத்து விட்டு  எந்த இடையூறும் இன்றி தமது பயணம் தொடர வேண்டும் என வேண்டிக் கொண்டு செல்வார்களாம்.  முப்பந்தல் என்பது வள்ளியூருக்கு அருகில் உள்ளது. அது போல கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள கொளைச்சலில் உள்ள இசக்கியம்மன் ஆலயமும் பிரபலமானது. கிராம தேவதை ஆலயங்களில் இசக்கி அம்மன் சிலைகளும்  பெரும்பாலும் காணப்படும்.