அனகாபள்ளி நூக்கலம்மா 
சாந்திப்பிரியா 
ஆந்திரப்பிரதேச மானிலத்தின் விசாகப்பட்டினத்தின் அருகில் உள்ள ஒரு கிராமமே அனகாபள்ளி என்பது. அனகாபள்ளி வெல்லம் மிகவும் சுவையானது, அகில உலக அளவில் பெருமை வாய்ந்தது. காரணம் அங்கிருந்து பெருமளவில் வெல்லம் ஏற்றுமதி ஆகின்றது.
அப்படிப்பட்ட அனகாபள்ளி கிராமத்தில் உள்ள ஒரு மிகப் பழமையான ஆலயமே பைடிதள்ளி   நூக்கலம்மா அம்மாவாறு ஆலயம் என்பது . ஆலயம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையது.
நூக்கலம்மா யார் ? நூக்கலம்மா தேவி என்பவள் ஒன்பது சக்தி தேவிகளில் ஒருவராம். பண்டைய காலத்தில் அவளை அனகா தேவி என்றும் அழைத்து இருந்தார்கள். பொதுவாகவே அவளை கிராம தேவதை என்று பலர் கூறினாலும் இன்று நகரில் உள்ள அவள் ஆலயம் மிக அதிகமான மக்களை ஈர்க்கின்றது. அவளது அவதாரம் பற்றிய இரண்டு கிராமியக் கதைகள் உள்ளன.
முதலாம் கதையின்படி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கோதாவரி நதிக் கரையில் இருபுறமும் இருந்த இரண்டு நகரங்களை இரண்டு மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்களில் தர்ம கேது என்ற மன்னன் மிகவும் நேர்மையானவன். அவனது படையினர் பலம் மிக்கவர்கள். அவனை எளிதில் எவராலும் தோற்கடிக்க முடியாது. நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். தெய்வ நம்பிக்கை மிக்கவன். அவனது ராஜ்யத்தில் இருந்த மக்கள் அமைதியான வாழ்கையை கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.
அதைக் கண்ட மறு கரையில் இருந்த நகரை ஆண்டு வந்த துஷ்ட கேது என்ற மன்னன் அவன் மீது பொறாமைக் கொண்டான். நேரடி யுத்தத்தினால் தோற்கடிக்க முடியாத தர்மகேதுவை எப்படியாவது  தொலைத்துக் கட்ட வேண்டும் என்ற வெறி கொண்டு மந்திரவாதிகளின் துணையோடு தந்திர  மந்திரங்களை பயன்படுத்தி துஷ்ட தேவதைகளின் துணையுடம் தர்ம கேதுவின் மீது படையெடுத்து அவனை முறியடித்து நாட்டை விட்டுத் துரத்திவிட்டு அந்த நகரையும் பிடித்துக் கொண்டான்.
ஆனால் நாட்டை விட்டு ஓடிப்போன தர்ம கேது காட்டிற்குள் தனது படையினருடன் சென்று பதுங்கினான். அவனது ஆசான்கள் கூறியபடி காட்டிற்குள் இருந்தாலும் ஆதி பராசக்தியை வேண்டி யாகம் செய்தான். அவனது பக்தியை மெச்சி அவன் முன் காட்சி அளித்த ஆதி பராசக்தி அவனது கதையைக் கேட்டு இரக்கம் கொண்டு தானே நூக்கலாம்மா என்ற பெயரில் பூமிக்கு வந்து அவனுக்குத் துணையாக  இருந்து மீண்டும் துஷ்ட கேது மீது படையெடுக்க வைத்து அதில் தர்மகேதுவை வெற்றி பெற வைத்து வைத்து  மன்னனாக்கினாள். தர்ம கேது வேண்டிக் கொண்டதின் பேரில் அவனது நகரின் நதிக் கரையிலேயே அவள் ஒரு காவல் தெய்வமாக ஒரு ஆலயத்தில் அமர அவளது பெயர் நூக்கலாம்மா என ஆயிற்று. நூக்கலா என்றால் விடிவுகாலம் என்ற பொருளில் விடிவு காலத்தைத் தந்த அம்மா  என்ற பெயரைக் கொண்ட  நூக்கலாம்மா என்ற பெயரைப் பெற்றாள் என்கின்றது ஒரு கதை .
இன்னொரு கதையின்படி ஒரு காலத்தில் தற்பொழுதைய விசாகப்பட்டினம் என்பதை விஜயநகரம் என்று அழைத்தார்கள்.  அந்த ஊரை விஜய ராம ராஜு என்பவர் ஆண்டு வந்தார். 1750 ஆம் ஆண்டு வாக்கில் ஹைதிராபாத்திற்கு  வந்து இருந்த பிரான்ஸ் நாட்டு படைத் தலைவருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் இருவரும் சேர்ந்து பொப்பிலி கோட்டையை தாக்கி அதைப் பிடிக்க முயன்றனர்.
எப்போதுமே போப்பில்லி மன்னர்களுக்கும் விஜய ராம ராஜுவிற்கும் பகை இருந்தது. பயங்கரமாக நடந்த சண்டையில் போப்பில்லிக் கோட்டை தீப்பிடித்து எரிய சண்டை நிற்காமல் தொடர்ந்தது. அதில் இருந்த படைவீரர்கள் மற்றும் கோட்டைக்கு உள்ளே  இருந்த மக்கள் தீயினால் மரணம் அடையத் துவங்கினார்கள்.
யுத்தத்தில் விஜய ராம ராஜுவிற்கு பெருமளவு உதவியாக இருந்து அந்த யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு அவருடைய சகோதரியே காரணமாக இருந்தாள். அவள் இல்லை என்றால் அந்த யுத்தத்தின் திசை மாறி இருக்கும். தீயினால் எரிந்துக் கொண்டு இருந்த கோட்டைக்குள் அனாவசியமாக அப்பாவி மக்கள் மரணம் அடைவதைக் கேள்விப்பட்டு மன வருத்தம் கொண்ட மனிதாபிமானம் மிக்க விஜய ராம ராஜுவும் யுத்தத்தை நிறுத்தச் சென்றார். அவர் உடனே திரும்பி வராததினால் தவறாக யாரோ விஜய ராம ராஜுவின் சகோதரியிடம் அவர் யுத்தத்தில் இறந்து விட்டார் என்று செய்தியைக் கூற அவளும் மயக்கம் அடைந்து விழுந்தாள்.
அந்த யுத்தத்தில் ஆற்காடு நவாப்பின் துணையினால் அனகாவல்லி என்ற இடத்தை ஆண்டு வந்தவாறும் அவர்களுக்கு யுத்தத்தில் துணையாக வந்தவருமான அப்பல ராஜு என்ற மன்னர் அவளை தேற்றி கண் விழித்து எழச் செய்தாலும் விழித்து எழுந்த அவளும் தானே துர்கையின் அவதாரம் எனவும், தனக்கு காலம் முடிந்து விட்டதினால் இனி மேலுலகம் செல்வதாகவும் ஆனால் ஒரு சிலையாக அங்கு இருந்தபடி அந்த நகரைக் காப்பேன்  என வாக்குறுதி தந்து விட்டு மரணம் அடைந்தாள்.
யுத்தம் முடிந்ததும் அதற்கு அடுத்த ஏழாவது நாளான செய்வாய் கிழமை விஜயதசமி தினத்தன்று விஜயநகரின் ‘பெட்டசருவு’ என்ற இடத்தில் இந்த ஆலய அம்மனின் சிலை கிடைத்தது.  ஆகவே அவளை எடுத்து அவளுக்கு அதன் எதிரிலேயே ஆலயம் அமைத்து வழிபட்டார்கள். அவளே அந்த கிராம தேவதையாக ஆனாளாம்.
இன்னொரு கதையின்படி 1450  யில் ஆற்காட்டு மன்னனின் துணையுடன் ஆட்சியில் ஏறிய  அப்பல ராஜு  அனகாபள்ளியை தனது கோட்டையாக மாற்றிக் கொண்டு அதன் உள்ளே ஒரு ஆலயத்தை அமைத்து ஒரு அம்மனை  பிரதிஷ்டை செய்து  அந்த தேவியை கடகாம்பிகா என்ற பெயரில் வணங்கி வந்தாராம். அவர் மறைந்தப் பின்னர் பதவி ஏற்ற விஜய நகர மன்னர்கள் அந்த தேவியின் பெயரை நூக்கலாம்மா  என மாற்றினார்கள் என்று கூறுகிறார்கள்.
அந்த ஆலய தேவியின் மகிமையையும் அதற்கு வரும் மக்களின் கூட்டத்தையும் கண்டு அதை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்    1937 ஆம் ஆண்டு அந்த ஆலய நிர்வாகத்தை அரசாங்கத்தினரே ஏற்றுக் கொண்டார்களாம்.  உகாடி பண்டிகை அன்று ஆந்திராவின் பல பாகங்களில் இருந்தும் , சத்தீஸ்கர் மற்றும் ஒரிஸ்ஸாவில் இருந்தும் பெருமளவில் மக்கள் வந்து வணங்குகிறார்கள். உகாடி பண்டிகைக்குப் பிறகே வருடாந்தர  ஆலய விழாக்கள் நடைபெறத் துவங்குகின்றன. கோதம்யாசவா அன்று அதாவது தெலுங்கு புது வருடப் பண்டிகையின்போது ஒரு நாள் முன்னால் வரும் அம்மாவாசை அன்று  விழா துவங்கி ஒரு மாத காலம் அது நடைபெறும். இந்த அம்மனை வழிபடுபவர்களில் பெரும்பான்மையினர் சிங்கபூர் மற்றும் மலேசியாவில் உள்ளார்கள் என்பதே வியப்பாக உள்ளது.  மகர சந்க்கராந்தி, தீபாவளி மற்றும் நவராத்ரிகளில் இந்த ஆலயத்தில் பெரும் அளவிலான பூஜைகள் நடைபெறும்.  யாத்திரைகள் செய்கிறார்கள். அந்த வருடாந்திர விழாவின்போது  விஜய  நகரமே விழாக்கோலம் பூண்டு இருக்கும்.
ஞாயிறு, செய்வாய் மற்றும் வியாழர் கிழமைகளில் இந்த அம்மாறு எனும் அம்மனை வழிபடுவது மிகவும் விஷேமானதாம். இந்த அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவதை விசேஷமாக கருதுகிறார்கள். இந்த அம்மனின் கண் பார்வை பட்டாலே நமக்கு உள்ள பல சங்கடங்கள் தீரும் என்றும், ஆபத்தில் அவளைப் போல உதவும் தேவி வேறு யாருமே இருக்க முடியாது என்றும் கூறுகிறார்கள்.
ஆலய விலாசம்
Sri Nookambica Ammavari Temple,
Anakapalli – 531 001,
Visakhapatnam (dist),
Andhra Pradesh(state),
INDIA.
Ph:91-8924-226823