அக்கல்கோட் ஸமர்த்த

மகராஜ் ஸ்வாமிகள் 

-வரலாறும் அவர் மகிமைகளும்-
 
சாந்திப்பிரியா

   
பாகம்-2 

மகாதவம்
வனவாசம் முடிந்து, வெளிநாடுகளுக்கு சென்று விட்டுத் திரும்பிய ஸ்வாமிகள் இமய மலைக்கு அடிவாரத்தில் வந்து அங்கு இருந்த ஆதிவாசிகளுடன் தங்கி இருந்தார். அவருக்கு தவத்தின் தாகம் குறையவில்லை. ஆடைகளை துறந்தார். கோவணத்துடன் சுற்றித் திரிந்தார். மக்களின் நல் வாழ்க்கைக்காக தாம் இன்னும் பல காரியங்களை செய்ய வேண்டும். தான் ஒரு அவதாரப் புருடர் என்பதை உலகம் உணர வேண்டும். தனக்கு தவ வலிமை அதிகரிக்க வேண்டும். இதை எல்லாம் எண்ணிய அவர் மீண்டும் இமய மலை அடிவாரத்திலேயே சென்று அமர்ந்து தவம் இருக்க முடிவு செய்தார். ‘பைன்’ (Pine) எனும் மர வகையை சேர்ந்த ‘டியோடனர்’ என்ற ஒரு மரத்தின் அடியில் சென்று அமர்ந்தார். அப்படியே தவத்தில் ஆழ்ந்துவிட்டார்.
250 ஆண்டுகளுக்கு மேல் ஆயின. அமர்ந்த இடத்தை விட்டு நகரவில்லை. அவரை சுற்றி கரையான் புற்று எழுந்து அவரை முற்றிலுமாக மூடிவிட்டது. ஆனாலும் அவரை காப்பாற்றவோ அல்லது கரையான் புற்றைக் கலைக்கவோ எவருக்கும் தைரியம் வரவில்லை. காரணம் அவர் மாபெரும் மகான். அவரால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்றே நம்பினார்கள். அதே நேரத்தில் ஸ்வாமிகளும் தனது தவத்தைக் கலைத்துக் கொள்ளவில்லை.
காலம் ஓடியது. அவர் தவம் கலைக்கப்பட வேண்டிய காலம் வந்தது. ஆகவேதான் அனைத்து முன் ஏற்பாடுகளும் முன்னரே செய்து வைத்து இருந்தது போல ஒரு நாள் ஒரு மரம் கொத்திப் பறவை அந்த புற்றின் மீது வந்து அமர்ந்தது. அந்த புற்றை மோதி கலைத்து விட்டு பறந்து விட்டது. புற்று கலைந்ததும் அதை எதிர்பார்த்து அமர்ந்தது போல இருந்த ஸ்வாமிகள் கண் விழித்தார். புற்றை விட்டு எதுவுமே நடக்காதது போல வெளியில் வந்தார். அனைவருக்கும் ஆச்சர்யம் என்ன என்றால் 250 வருடங்களுக்கும் மேலாக அந்த இடத்தில் புற்றில் தவம் இருக்க வெயிலும் மழையும் சூறாவளியும் கூட அந்த கரையான் புற்றை கலைக்கவில்லையே!?!?. அங்கிருந்த ஒவ்வொரு குடும்பத்தினரின் வம்சாவளியினருக்கும் அந்த புற்றில் உள்ளது என்ன என்பதை அவரவர் குடும்பத்தினர் தொடர்ந்து கூறி வந்து கொண்டே இருந்ததினால் ஸ்வாமிகள் வெளி வந்ததும் அங்கிருந்த வனவாசிகள் அவரை அடையாளம் கண்டு கொண்டு அவரை வணங்கித் துதித்தார்கள். ஸ்வாமிகள் புற்றை விட்டு வெளி வந்தபோதும் அவர் தினமும் குளித்துவிட்டு எப்படி சுத்தமாக இருப்பாரோ அப்படியே ஜொலித்தார்.
நெடிய பயணம்

புற்றில் இருந்து வெளியே வந்தவர் மீண்டும் ஒரு யாத்திரையை மேற்கொண்டார். நெற்றியில் நாமம். கழுத்தில் ஒரு மாலை. இடுப்புக்கு கீழே கோமணம். சில நேரங்களில் அதுவும் கிடையாது. நிர்வாணம் என்பது நமக்குத்தானே ஒழிய மகான்களுக்கு அல்ல. அவர்கள் மனம் நிர்வாணம் ஆகி விட்டால் அவர்கள் சுமக்கும் உடலுக்கு ஏது மரியாதை? அவரை அனைவருமே திகம்பர சாமியார் என அழைக்கத் துவங்கினார்கள். சிலர் அவரை சன்ச்சல் பாரதி எனவும் அழைத்தார்கள். சுவாமிகளின் புகழ் திக்கெட்டும் பரவியது. அவரை சுற்றி கூட்டம் அலை மோதத் துவங்கியது. சென்ற இடங்கள் எல்லாம் அவர் செய்து காட்டிய அற்புதங்களை மக்கள் பேசத் துவங்கினார்கள். அவரது தெய்வீக லீலை அனைவரையும் பரவசத்துக்கு உள்ளாக்கியது.
ஸ்வாமிகளின் பயணம் தொடர்ந்தது. பாதையும் நீண்டு கொண்டே போயிற்று. இந்த நெடிய பயணத்தின் போது ஸ்வாமிகள் மும்பை நகரை அடைந்தார். அங்கு பன்னிரண்டு வருட காலம் தங்கி இருந்தவாறு தன்னிடம் வந்து ஆசி கேட்ட மக்களுக்கு அருள் மழை பொழிந்தார். மும்பையில் இருந்து ரஜோரி , மகிரி, மகோல் மற்றும் ஷோலாபூர் போன்ற இடங்களுக்கும் சென்றார்.

ஸ்வாமிகள் தந்த தத்தாத்ரேய தரிசனம்

பெரும்பாலும் தனியாகவே அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த ஸ்வாமிகள் ஷோலாபூரை வந்து அடைந்ததும் அங்கு இருந்த ஒரு தத்தாத்ரேயர் ஆலயத்துக்கு சென்றார். அங்கு சென்றவர் ஒரு மூலையில் சென்று அமர்ந்து கொண்டார். அப்போது பூஜை முடிந்து மகா பிரசாத விநியோகம் நடந்து கொண்டு இருந்தது. கோவணத்துடன் முன் வரிசையில் சென்று அமர்ந்த சுவாமிகளை அங்கு அமர்ந்து இருந்த பக்தர்கள் கேவலமாக பார்த்தார்கள். முணுமுணுத்தார்கள். அதை அங்கிருந்த ஆலய பூசாரி பார்த்தார். ஒரு கோவணாண்டி அசிங்கமாக இங்கு வந்து அமர்ந்து கொண்டு உள்ளாரே என கோபமாக அவரிடம் சென்று அவரை அங்கிருந்து எழுந்து போய் கடைசியில் அமருமாறு கடிந்து கொண்டார்.

அந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்வாமிகள் அங்கிருந்து எழுந்தார், அந்த ஆலயத்துக்கு பக்கத்தில் இருந்த மடத்தில் சென்று அங்கிருந்த ஒரு தூணின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு அங்கேயே விளையாடத் துவங்கினார். அப்போது அங்கு ஒரு பெண்மணி வந்தாள். தூணின் அருகில் விளையாடிக்கொண்டு இருந்த சுவாமிகளைப் பார்த்தால். திக்கிட்டு நின்றாள். சாத்ஷாத் தத்தாத்ரேய ஸ்வாமிகள் அங்கே காட்சி தந்தவண்ணம் நின்று கொண்டு இருந்தார். தத்தாத்ரேய சுவாமிகளைக் கண்ட அந்தப் பெண்மணி ”தத்தாத்ரேயா…….தத்த பகவானே………ஆனந்த தரிசனம் தந்தாயே………..எனக்கு இதை விட என்ன பேறு வேண்டும்……..ஓ ……….தத்தாத்ரேயா..” எனக் கத்தியவாறு அங்கேயே சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து வணங்கினாள். ஆவலுடன் ஓடிச் சென்று பக்கத்தில் இருந்த ஆலயத்தில் அனைவரிடமும் தான் கண்ட தெய்வீக காட்சியைக் கூறி குதூகலித்தாள். அதைக் கேட்ட அனைவரும் அங்கு ஓடோடி வந்தார்கள். அங்கிருந்த ஸ்வாமிகளின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்கள். பண்டிதரும் தான் அவரிடம் நடந்து கொண்ட முறைகேட்டிற்கு மன்னிப்புக் கேட்டார். புன்முறுவலித்த ஸ்வாமிகள் அனைவரையும் ஆசிர்வதித்தார்.

பாகம்-3…..தொடரும்