அக்கல்கோட் ஸமர்த்த
மகராஜ் ஸ்வாமிகள் 
-வரலாறும் அவர் மகிமைகளும்-
 
சாந்திப்பிரியா

பாகம்-3

முழுகிய படகு மிதந்து வந்தது 

‘அனந்த பாரதி’ என்பவர் மீன் பிடிக்கும் தொழிலாளி. மகாராஷ்டிராவின் சாஷ்டி என்ற பகுதியில் இருந்தவர். ஸ்வாமிகளின் பரம பக்தர். தினமும் அவர் கடலில் சென்று மீன் பிடித்து வருவார். ஒரு நாள் மழைக் காலம். கடல் கொந்தளித்துக் கொண்டு இருந்தது. ஆனாலும் கடலில் சென்று மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு வந்தார்கள். அதுவே அவர்களின் ஜீவனம். ‘அனந்த பாரதியும்’ அவர்களில் ஒருவன். மீன் பிடித்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டு இருந்தவனின் படகு திடீரென கடல் கொந்தளிப்பினால் கடலில் கவிழ்ந்தது. ”ஸ்வாமி என்னைக் காப்பாற்று” என அலறினான். 

அந்த நேரத்தில் அக்கல்கோட்டில் ஸ்வாமிகள் ஆலயத்தில் பக்தர்கள்களுக்கு அருள் உரை ஆற்றிக் கொண்டு இருந்தார். திடீரென அவர் தன்னுடைய இரண்டு கைகளையும் மேலே தூக்கி  எதோ ஒரு கனத்த பொருளை கையில் வைத்துக் கொண்டு இருந்தது போல முனகிக் கொண்டே இருந்தவாறு காட்சி அளித்தார். அவர் உடல் முழுவதும் நனைந்து இருந்தன. அவர் அருகில் இருந்தவர்கள் காரணம் புரியாமல் திகைத்தார்கள். ஸ்வாமிகளுக்கு என்ன ஆயிற்று ? ஏன் அவர் உடல் முழுவதும் நீரில் முழுகி எழுந்தது போல உள்ளது?? ஸ்வாமிகள் மெல்ல மெல்ல அமைதியானார். தன் உடலை துடைத்துக் கொண்டவரின் ஆன்மீக உரை தொடர்ந்தது.
அதே நேரத்தில் முழுகிக் கொண்டு இருந்த படகை பிடித்தவாறு கத்திக் கொண்டு இருந்த ‘அனந்த பாரதி’ ஷணப் பொழுதில் தன்னை ஸ்வாமிகள் வந்து படகுடன் தூக்கி நின்று உள்ளதைக்  கண்டான். கடல் கொந்தளிப்பு நிற்கும் வரை ஸ்வாமிகள் படகுடன் அவனை தன்  கையால் கடலுக்கு மேலே தூக்கிப் பிடித்தபடி கடல் மீது நின்று கொண்டு இருந்தார். கடல் கொந்தளிப்பு நின்றதும் ஸ்வாமிகள் மறைந்து விட்டார். படகை கரைக்கு ஓட்டி வந்தவன் நேராக ஸ்வாமிகளிடம்  ஓடினான். அவர் கால்களில் விழுந்து வணங்கி ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதான். அங்கு கூடி இருந்த ஜனங்களிடம் ஸ்வாமிகளின் அற்புதம் குறித்துக் கூறியபோதுதான் அவர்கள் முதல் நாள் ஆன்மீக உரையின் போது நடந்ததை உணர்ந்தார்கள்.
வற்றாத உணவு…. வந்தவர் அனைவரும் வயிறார உணவு அருந்தினார்கள்

ராம்பூரை சேர்ந்தவர் ‘ராவாஜி’ என்பவர். அவரும் ஸ்வாமிகளின் பக்தர்தான். ஒரு முறை ஸ்வாமிகள் தனது ஊருக்கு வருவதை கொண்டாட சுமார் ஐம்பது பேர் உணவருந்தும் வகையில் உணவு படைத்து வைத்து அவரை வரவேற்றார். ஸ்வாமிகள் அங்கு வருகை தர இருப்பதைக் கேள்விப்பட்ட அந்த கிராமத்தினர் அனைவரும் ‘ராவாஜி’ வீட்டிற்கு  அவர் அழைக்காமலேயே வந்து விட்டார்கள் . அங்கு வந்தவர்கள் ஸ்வாமிகளை தரிசித்தார்கள். வந்தவர்கள் அனைவரையும் ஸ்வாமிகள் மதியம் உணவு அருந்திவிட்டுப் போகுமாறு கூறிவிட்டார். ‘ராவாஜி’ கதி கலங்கி நின்றார். ஆயிரக்கணக்கானவர்கள் வந்து விட்டார்கள். உள்ள உணவோ அதிகபட்சமாக அறுபது பேர்களுக்கு மேல் போதாது…….. . என்ன செய்வது….நிலைமையை எப்படி சமாளிப்பது ?
தயங்கியபடியே சுவாமிகளிடம் சென்று விஷயத்தைக் கூறி அனைவருக்கும் உணவு தர இயலாத நிலைமையைக் கூறி அதற்காக தன்னை மன்னிக்குமாறு கேட்டார். ஸ்வாமிகள் சிரித்தபடிக் கூறினார்  ‘கவலைப்படாதே. ஒரு பெரிய காலி அண்டாவைக் கொண்டு வா’ என்றார். அவரும் ஒரு பெரிய காலி அண்டாவைக் கொண்டு வந்ததும் அண்டாவிற்குள் அன்னபூரணி, கண்டோபா (சிவன் ) போன்றவர்களின் சிறு விக்கிரங்களைப் போட்டு அதற்கு மேல் சிறிது ரொட்டி மற்றும் அன்னைத்தையும் போட்டு மூடி அதை ‘ராவாஜி’யிடம் தந்தார். ‘இதை எடுத்துக் கொண்டு போய்  அதோ தெரிகின்றதே அந்த  துளசி மாடத்தை மூன்று முறை சுற்றி விட்டு அங்கேயே அண்டாவை  வைத்துக் கொண்டு வந்திருக்கும் அனைவரையும் வரிசையாக உட்கார  வைத்து அதில் இருந்து உணவை எடுத்து வழங்கு’ எனக்  கூறினார்.

‘ராவாஜிக்கு’ ஒன்றுமே தோன்றவில்லை. அந்த  அண்டாவில் அதிகபட்சமாக இருபது பேருக்கே அன்னம் சமைக்க முடியும். ரொட்டியை எதில்  சுடுவது?  சரி  நடப்பது நடக்கட்டும். ஸ்வாமிகள்தான் இங்கு இருக்கின்றாரே என்ற தைரியத்தில் அந்த அண்டாவை தனது தலை மீது வைத்துக் கொண்டு துளசி மாடத்தை மூன்று முறை சுற்றி வந்ததும் அதைக் கீழே வைத்தார். பாத்திரம் கனத்தது. அதற்குள் வந்திருந்த அனைவரும் வரிசையாக உட்கார்ந்து   கொண்டார்கள்.  ஒருவர் பின் ஒருவருக்காக அன்னத்தை போடப் போட அந்த அண்டாவிற்குள் இருந்து ரொட்டியும் வந்தது, அன்னமும் வந்தது. அந்த அண்டாவில் இருந்த உணவோ வற்றவே இல்லை. கண்களில் ஆனந்தக் கண்ணீர் ஓட, ஓட அனைவருக்கும் தொடர்ந்து உணவை அவர்கள் போதும் போதும் என்ற அளவிற்குப் போட்டார்.  கொடுத்தார். ஆயிரக்கணக்கானவர்கள் உணவை அருந்தி விட்டுச் சென்றார்கள்.  ஐம்பது பேர்களுக்கு மட்டுமே செய்யப்பட்ட உணவை ஆயிரம் பேர்களுக்கு மேல் சாப்பிட்டார்கள் என்றால் அந்த அதிசயத்தை எப்படி சொல்வது ? ஸ்வாமிகளின் மகிமையை எப்படி விவரிப்பது?  ‘ ராவாஜி’ தம்பதியினர் ஸ்வாமிகளை வணங்கி ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள்.

வெற்றிலை மாலை சம்பவம்

1872 ஆம் ஆண்டு. பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சிம்ஹஸ்தா என்ற கும்ப மேளா விழாவிற்காக ஸ்வாமிகளின் பக்தரும், அந்த ஊரில் பிரபலமானவருமான 

 

‘வாமன் புவா படேகர்’ என்பவர் நாசிக்கின் த்ரியம்பகேஸ்வரரில் இருந்த ஜகதாம்பா தேவியின் ஆலயத்திற்கு சென்று பூஜை புனஸ்காரங்களை செய்தார். அவர் தன்னுடன் பாண்டுரங்க பகவானின் சிலையையும்  பூஜைக்காக எடுத்துச் சென்றார். அந்த ஆலய பண்டிதருக்கு எப்போதுமே அக்கல்கோட் ஸமர்த்த சுவாமிகளை காரணம் இல்லாமல் ஏளனம் செய்வதில் அலாதி இன்பம் உண்டு.  பூஜை முடிந்ததும் ‘வாமன் புவா படேகர்’ அந்த பூசாரியிடம் ஜகதாம்பா தேவியின் மீது இருந்த வெற்றிலை மாலையை தனக்கு பிரசாதமாக தர முடியுமா எனக் கேட்டார். அதுதானே நல்ல சந்தர்ப்பம் என்பதை கண்டு கொண்ட பூசாரி ஒரு ஏளனப் புன்னகை புரிந்தவாறு அவரிடம் கூறினார் ‘ ஐயா, நீங்கள் போற்றித் துதிக்கின்றீர்களே, அந்த அக்கல்கோட் ஸ்வாமிகள், அவர் உண்மையில் தெய்வப் பிறவி என்றால் இந்த ஜகதாம்பா தனது கழுத்தில் உள்ள வெற்றிலை மாலையை உங்களிடம் தூக்கி எறியட்டுமே” என்றார். கூடி இருந்த அனைவரும் கொல் என சிரித்தார்கள். பண்டிதரும் ஒ…ஓஹோ என அட்டகாசமாக சிரித்தார்.

அதைக் கண்ட ‘ வாமன் புவா படேகருடன்’ வந்து இருந்த அவர் நண்பர் அக்கல்கோட் ஸ்வாமிகளை தியானித்தபடியே ஜகதாம்பாளை துதித்து அவள் மீதான ஸ்லோகத்தைக் கூறுமாறு அவரிடம் கூறினார்.   ‘வாமன் புவா படேகரும் ‘தயங்காமல் அதை செய்ய என்ன அதிசயம், அனைவரும் திடுக்கிடும் வகையில் ஜகதாம்பாள் கழுத்தில் இருந்த வெற்றிலை மாலை பறந்து வந்து ‘வாமன் புவா படேகர்’ கழுத்தில் விழுந்தது. அவரை ஏளனம் செய்த அனைவரும் தலை குனிந்து நின்றனர். பூசாரி அவரிடம் தன்னை மன்னித்து விடுமாறு கேட்டார். 

பரவாய் இல்லை எனக் கூறிய ‘வாமன் புவா படேகர்’  அந்த வெற்றிலை மாலையை எடுத்துக் கொண்டு பண்டார்பூருக்கு திரும்பிச் சென்றார். அங்கு நதிக்கரையில் சென்று குளித்தப் பின் பையில் இருந்த பாண்டுரங்கனின் சிலையை பூஜை செய்வதற்காக எடுத்தவர் பயந்து விட்டார். அதில் இருந்தது அக்கல்கோட் ஸ்வாமிகளின் சிலை! சரி , இதுவும் ஸ்வாமிகள் தந்ததுதானே என அதற்கு பூஜை செய்துவிட்டு, ஸ்வாமிகளை தரிசனம் செய்யச் சென்றார். அவர் உள்ளே நுழைந்ததுமே அக்கல்கோட் ஸ்வாமிகள் அவரிடம் கேட்டார் ‘ என்ன வாமன், இன்று நீ சென்ற இடங்களில் எல்லாம்  பிரச்சனை  செய்து விட்டாய்.  ஜகதாம்பா ஆலயத்தில் வெற்றிலைக் கேட்டு அவமானப்பட இருந்தாய். நான் அங்கு வந்து உனக்கு அதை தர வேண்டியதாயிற்று.  இப்போது நதியில் குளித்துவிட்டு என்னுடைய  சிலைக்கு பூஜை செய்துவிட்டு வந்துள்ளாய்.  நான் உனக்குக் கொடுத்த பாண்டுரங்கனின் சிலை ஏங்கே? ‘
அடடா….., நடந்தது அனைத்தும் ஸ்வாமிகளுக்கு எப்படித் தெரியும் என பிரமித்து நின்ற ‘வாமன்’ பையில் கையை விட்டு சிலையை எடுத்தார்….அவர் கையில் கிடைத்தது பாண்டுரங்கனின் சிலை !!!!!  இதென்ன அதிசயம், நான் நதியில் பூஜித்தது அக்கல்கோட் ஸ்வாமிகளின் சிலை ஆயிற்றே, இப்போது அது எப்படி பாண்டுரங்கனில் சிலையாக மாறி உள்ளது என வியந்தார். அவருக்கு பின்னால்தான் புரிந்தது, அன்று அவரை ஸ்வாமிகள் பின் தொடர்ந்து சென்று அவமானப்படாமல் காப்பற்றி , தனக்கு அவர் மகிமையை மேலும் புரிய வைத்து உள்ளார் என்பது. 
பாகம்-4  ………தொடரும்