அக்கல்கோட் ஸமர்த்த
மகராஜ் ஸ்வாமிகள் 
-வரலாறும் அவர் மகிமைகளும்-
 
சாந்திப்பிரியா

பாகம்-4

மரணம் மாறியது

பாபா சாஹேப் ஜாதவ் என்ற குயவன் ஸ்வாமிகளின் பெரிய பக்தன். அவன் அடிக்கடி ஸ்வாமிகளை வந்து தரிசனம் செய்து விட்டுப் போவது பழக்கம். ஒரு முறை அவன் ஸ்வாமிகளை பார்க்க வந்து இருந்தான். அப்போது ஸ்வாமிகள் அவனைப் பார்த்து ‘ உனக்கு ஓலை வந்து விட்டதா ?’ என்று கேட்டார். ஸ்வாமிகளை நன்கு அறிந்திருந்த  குயவன் அவர் கூறியதற்கான அர்த்தத்தை உடனேயே  புரிந்து கொண்டான். அவர் காலடியில் விழுந்து தான் தனது குடும்பத்திற்கு தேவையானவற்றை சேர்த்து தரும் வரை தனக்கு சில நாட்கள் உயிர் பிச்சை தருமாறு அவரை கெஞ்சினான்.  அவனது குடும்ப நிலையை ஸ்வாமிகள் நன்கே அறிந்து வைத்து இருந்தார். ஆகவே கருணை உள்ளம் படைத்த ஸ்வாமிகள்  ஆகாயத்தை நோக்கி எவருடனோ உரத்த குரலில் சண்டைப் போடத் துவங்கினார்.  அந்தக் குயவனை தன்னுடைய ஒரு கையால் பிடித்துக் கொண்டு இருந்தவாறு கைகளையும் கால்களையும் ஆட்டிக் கொண்டு யாரையோ தடுத்து நிறுத்துவது போல அவர் செயல் அமைந்து இருந்தது. அப்போது அங்கு ஒரு மாடு வந்து நின்றது. ஆகாயத்தில் யாரிடமோ  அந்த மாட்டைக் காட்டி எதோ கூற  அந்த மாடு அடுத்த கணம் இறந்து விழுந்தது.

  அழுத குடியானவன் உயிரைக் காத்து அவனுக்கு பதில் 
ஒரு மாட்டின் உயிரை யமனிடம் தந்தார் ஸ்வாமிகள்

ஸ்வாமிகள் அமைதியானார். பின்னர் அந்தக் குடியானவரிடம் கூறினார் ‘ சரி இந்த  முறை உனக்காக யமனிடம் பேசி உனக்கு பதிலாக அந்த மாட்டின் உயிரைத் தந்து விட்டேன். அடுத்த முறை உனக்கு ஓலை வந்தால் என்னிடம் வராதே’  என அவனிடமும் கடிந்து கொள்ள அங்கு  கூடி  இருந்தவர் அனைவரும் வியந்து நின்றார்கள்.  அதன் பின் வெகு காலம் அந்துக் குயவன் சுவாமிகளுக்கு பணிவிடை செய்வதிலேயே தமது வாழ்நாளைப் போக்கி வந்தான். அதற்குள் அவனுடைய குடும்பமும் ஸ்திர நிலைக்கு வந்துவிட்டது. இப்படியாக ஒரு மரணத்தையும் மாற்றி அமைத்தவர் ஸ்வாமிகள்.

குருடனுக்கு பார்வை கிடைத்தது
 ஒரு நாள் ஸ்வாமிஜி ஒரு ஆலயத்தின் கூடத்தில் தனது சிஷ்யர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அவரிடம் வந்த ஏழை  பிராமணத் தம்பதியினர் ஸ்வாமிகளை நமஸ்கரித்து விட்டு தாம் மிகவும் ஏழை எனவும், தமக்கு உள்ளது ஒரே ஒரு வாரிசான குருட்டு மகன்தான் என்பதினால் தமக்கு பிற்காலத்தில் தங்களுக்கு ஆறுதலாக இருக்க எப்படியாவது தமது மகனுக்கு பார்வை கிடைக்க அவர் அருள் புரிய வேண்டும் என அழுதவாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளைக் கேட்ட ஸ்வாமிகள் அவர்களை அமைதிப்படுத்தி அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து இருக்குமாறு கூறினார்.
அப்போது அந்த ஊரை சேர்ந்த சில பிராமண பண்டிதர்கள் அங்கு வந்தார்கள். எப்போது சுவாமிகளை அவமதிக்கலாம் என தினமும் நேரம் பார்த்துக் கொண்டு திரிந்தவர்களுக்கு அங்கு ஸ்வாமிகளைக் கண்டதும் குஷி பிறந்தது. அவர்கள் தாம் மெத்த பாண்டித்தியம் படித்தவர்கள் என்றும் தம்மை எந்த வாதத்திலும் ஸ்வாமிகளின் சிஷ்யர்களினால் தோற்க அடிக்க முடியாது என்பதையும் கூறிக் கொண்டு கேலி செய்தவாறு இருந்தார்கள். அவர்கள் வேண்டும் என்றேதான் தாம் பேசும் ஏளனப் பேச்சுக்கள் ஸ்வாமிகளின் காதில் விழும்படி கூறிக் கொண்டு அமர்ந்து இருந்தார்கள்.
அதைக் கேட்ட ஸ்வாமிகள் தன் எதிரில் அமர்ந்து இருந்த குருட்டுப் பையனை அருகில் அழைத்தார். அவனைக் கட்டி அணைத்துக்  கொண்டு அவன் காதில் எதோ ஓதினார் .  தனது கழுத்தில் இருந்த மாலையை எடுத்து அவன் கழுத்தில் போட்டு விட்டுக் கூறினார் ‘போ…அந்த பண்டிதர்கள் முன்னால் போய் அமர்ந்து கொண்டு அவர்களுடன் வாதம் செய்’ என்றார். அந்தப் பண்டிதர்களுக்கோ இன்னும் குஷியாகி விட்டது. கண் பார்வை அற்றவன், ஏழை, அவன்  என்ன படித்து இருக்க முடியும். நம்முடன் வாதம் செய்ய சிறுவனை அனுப்பி உள்ளாரா,வரட்டும்  ஒரு கை பார்க்கலாம்  என அகங்காரமாக அமர்ந்து இருந்தார்கள்.
கண் பார்வை அற்றவனின் பெற்றோர்கள்  ஸ்வாமிகள் ஏன் அதை செய்தார் எனப் புரியாமல் திக்கிட்டு அமர்ந்து இருந்தபோதே, அந்த சிறுவன் எழுந்து அந்த பண்டிதர்களிடம் சென்றான். அனைவரும் ஆச்சர்யமாக அவனைப் பார்த்தார்கள்.  கண் பார்வை இல்லாதவன் எப்படி அட்டகாசமாக நடந்து செல்கிறான் என அவன் அருகில் சென்று பார்த்தால் அவன் பார்வை பெற்று இருந்ததைப்  பார்த்தார்கள்.  அந்த அதிசயம் அடங்கும் முன்னரே, அந்த பண்டிதர்கள் எதிரில் சென்று அமர்ந்தவன், ஊம் ….உங்கள் வாதத்தை எடுத்து வையுங்கள் எனக் கூறி   அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் காட்டாற்று வெள்ளம் போல பகவத் கீதை, மகாபாரதம், ராமாயணம், வேதங்கள்,  இதிகாசம் என அனைத்தில் இருந்தும் உதாரணங்களை எடுத்துக் காட்டி  சமஸ்கிருத வார்த்தைகளின் பாடல்களையும், செய்யுள்களையும் ஒப்பித்துக் காட்டி  அவர்களின் வாயை அடக்கினான்.  அனைவரும் வியந்து  வாயடைத்து  நின்றார்கள். என்ன நடக்கின்றது என்றே அவர்களுக்கு விளங்கவில்லை.

இவன் எங்கிருந்து பார்வை பெற்றான்?  இவனுக்கு எங்கிருந்து இத்தனை ஞானம் கிடைத்தது.  தவறை உணர்ந்த ஏளனம் பேச வந்த பண்டிதர்கள் ஓடிச்  சென்று  ஸ்வாமிகளின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்கள்.  பார்வை அற்றவன் பார்வை பெற்று பெற்றோருடன் ஆனந்தமாக திரும்பிச் சென்றான். ஸ்வாமிகளின் தெய்வீகத்திற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

பயந்து ஓடியது பேய் 
அக்கல்கோட்டில் ஒரு பண்டிதர் வாழ்ந்து வந்தார். அவர் சுவாமிகளின் சிஷ்யர். ஒருமுறை அவரை ஒரு பேய் பிடித்துக் கொண்டது. நன்றாக இருந்தவர் பித்துப் போல ஆனார். தன்னையே மறந்து பைத்தியம் போலத் அங்கும் இங்கும் சுற்றித் திரிய பாண்டிததில் வந்து கொண்டு இருந்த வருமானமும் நின்றது.  பிச்சை எடுத்தே வாழ்கையை ஓட்ட வேண்டிய நிலைமை அவர் மனைவிக்கு ஏற்பட்டது.

நாளாக நாளாக அந்த பித்து பிடித்த பண்டிதரை தெருவில் சென்றவர்கள் கல்லால் அடித்துத் துன்புறுத்தியும் அடித்து விரட்டியும் இருக்க அதைக் கண்டு மனம் உடைந்து போன அவர் மனைவி ஒரு நாள் அவரை இழுத்துக் கொண்டு அந்த ஊருக்கு விஜயம் செய்து இருந்த ஸ்மர்த்த ஸ்வாமிகளிடம் சென்று தனது கணவனின் நிலை மற்றும் தமது குடும்ப நிலையைக் கூறி அழுதாள். அவர் அந்த பண்டிதரை தனது அருகில் அழைத்தார்.  ஆனால் அந்த பண்டிதரின் உடம்புக்குள் இருந்த  பேயோ முதலில்  அந்தப் பண்டிதரை ஸ்வாமிகள் இருந்த இடத்திற்கே செல்ல மறுக்க வைத்தது.  ஆனாலும் ஸ்வாமிகள் மகிமை வாய்ந்தவர் அல்லவா. அவர் அந்தப் பேய் அவனை பிடித்து இருந்ததின் காரணத்தை அறிந்து இருந்தாலும் மற்றவர்களும் அவன் பித்து பிடித்து உள்ளதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அந்தப் பண்டிதரை தாம் தங்கி இருந்த இடத்திலேயே கட்டி வைக்குமாறு கூறினார்.
சில நாட்கள் கழிந்தது. அந்தப்  பண்டிதனை தனது அருகில் அழைத்து வரச் சொல்லி அவனை ஒரு தடியினால் ஓங்கி அடித்தார்.
அவன் கத்தினான்….என்னை விட்டு விடுங்கள், என்னை விட்டு விடுங்கள்…..
ஸ்வாமிகள் கோபமாக அவனைப் பார்த்துக் கூறினார் ‘ சரி இவனை விட்டு விட்டு நீ ஓடிப்  போ….
பண்டிதரின் உடலில் இருந்தப் பேய் கத்தியது…நான் போக மாட்டேன்…போன ஜென்மத்தில் இவன் என்னிடம் பணத்தை வாங்கிக் கொண்டு  எமாற்றி விட்டான்……..அதனால் மனம் உடைந்து போன நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டியதாயிற்று.. என் குடும்பம்  நடுத் தெருவில் நின்றது……
சரி……போனது போகட்டும்…….அவன் இப்போது தண்டனைப் பெற்று விட்டான் ……..இப்போது இவனை விட்டு ஓடிப் போ…..
…மாட்டேன்……..மாட்டேன் எனப் பேய்க் கத்தத் துவங்க (அந்தப் பண்டிதன்தான் அனைத்தையும் பேசினான்  ஆனால் தன நிலையை மறந்து  அப்படியெல்லாம் அவனை கூற வைத்தது அவனுக்குள் இருந்தப் பேயேதான் ) ஸ்வாமிகள் எழுந்து வந்தார். அந்த  பண்டிதனின் கையில் ஒரு துணியை கட்டினார் . அந்த துணியின் மற்றொரு முனையை ஒரு குழலுக்குள் நுழைத்து இழுக்கத் துவங்க அவன் கத்தினான்……….என்னை விட்டு விடுங்கள்…..என்னை  விட்டு  விடுங்கள்….நான் ஓடிப் போய் விடுகிறேன்…..
இப்படி சில நிமிடங்கள் அனைவர் முன்னிலையிலும் அந்தக் காட்சி அரங்கேற அந்த பண்டிதன் திடீரென மயங்கி கீழே விழுந்தான். அவன் வாயில் நுரை தள்ளியது.  ஸ்வாமிகள் ஆகாயத்தைப் பார்த்துக் கத்தினார் ‘ போ……ஓடிப் போய் அதோ தூரத்தில் தெரியும் மைத்தானத்தில் உள்ள அந்த புளிய மரத்தில் சென்று அமர்ந்து கொள்…….’.
அதன் பின் சிறிது நேரம் அமைதி. கீழே விழுந்து கிடந்த பண்டிதர் தூங்கி எழுவது போல எழுந்தார். ஸ்வாமிகளைக் கண்டார். ஆச்சர்யத்துடன் அவரைப் பார்த்தவர் அவர் கால்களில் விழுந்து வணங்கி ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார்.  அவர் முகமே ஒரு உண்மையான பண்டிதரைப் போல தெளிவாக இருந்தது.
அவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு பிறகுதான் புரிந்தது அந்தப் பண்டிதரின் உடலில் ஒரு பேய் புகுந்து கொண்டு இத்தனை நாளும் அட்டகாசம் செய்து வந்துள்ளது என்ற உண்மை.  நாளடைவில் அந்தப் பண்டிதர் மீண்டும் நல்ல நிலைக்கு ஆளானார். அவர் வீடும் கலகலத்தது
……பாகம் -5 ………தொடரும்