அக்கல்கோட் ஸமர்த்த
மகராஜ் ஸ்வாமிகள் 
வரலாறும் அவர் மகிமைகளும்
சாந்திப்பிரியா

   

பாகம்-5

அன்று குசேலர்,  இன்றோ குச்சேலி !!!
அன்று ஒரு விசேஷ தினம் பலரும் ஸ்வாமிகளை தரிசனம் செய்ய வந்து இருந்தார்கள். அவரவர்கள் பலவிதமான பிரசாதங்களையும் கொண்டு வந்து ஸ்வாமிகளுக்கு தந்தவண்ணம் இருந்தார்கள். சிலர் கொண்டு வந்ததை தொட்டு ஆசிர்வதித்தார். சிலரது பிரசாதத்தில் ஒரு கை விரல் நுனியளவு எடுத்து சாப்பிட்டு அவர்களை திருப்தி  படித்தியபடி அனுப்பியவாறு இருந்தார். அலை மோதும் வண்ணம் அளவு கூட்டம் அங்கு இருந்தது. ஒருவர் பின் ஒருவராக ஸ்வாமிகளை அருகில் சென்று தரிசித்து விட்டு சென்று கொண்டு இருந்தார்கள்.
அந்தக் கூட்டத்தில் ஒரு ஏழைப் பெண்மணியும் வந்து இருந்தாள். சாயம் போன சேலை…ஆனால் ஸ்வாமிகளைக் காண வேண்டும் என்ற உறுதி… தன் வீட்டில் இருந்து தான் கொண்டு வந்திருந்த எளிய பிரசாதத்தை கொடுக்க வேண்டும் என்ற ஆவல். ஆனால் அவள் மனதில் பயம். தானோ பரம ஏழை. ஆகவே அதை ஸ்வாமிகள் அதை தீண்டுவாரோ மாட்டாரோ. அவரை நெருங்கக் கூட அங்கிருந்தவர்கள் தன்னை அனுமதிக்க மறுக்கின்றார்களே என வருந்தியவாறு ஒரு கோடியில் மூலையில் அமர்ந்து ஸ்வாமிகளை பார்த்தபடி இருந்தாள்.  சிறிது நேரம் ஆயிற்று. கூட்டம் என்னும் கலையவில்லை. அமர்ந்து இருந்த ஸ்வாமிகள் எழுந்து நின்றார்.
கோடியில் அமர்ந்து இருந்த அந்த ஏழைப் பெண்மணியை தன் அருகில் வருமாறு அழைத்தார். ஸ்வாமிகள் யாரை அழைக்கின்றார் எனத் தெரியாமல் அங்கு இருந்த  பணக்காரர்களும், வசதியாக இருந்த  மனிதர்களும்  நானா….நானா…..என ஒவ்வொருவராக கேட்க, ஸ்வாமிகளும்  அவர்களிடம் நீ இல்லை….நீ இல்லை எனக் கூறிவிட்டு, மீண்டும் மீண்டும் அந்த ஏழைப் பெண்மணியை நோக்கி தன் கையைக்  காட்ட அனைவரும்  ஒரே வியப்பு. எதற்க்காக அந்த ஏழைப் பெண்மணியை அவர் அழைக்கின்றார்?

ஸ்வாமிகள் அழைத்ததினால் அவர் அருகில் சென்று அவரை வணங்கினாள் அந்தப் பெண்மணி. அவள் எதுவுமே கூறும் முன் அவர் ‘ நீ கொண்டு வந்துள்ள பிரசாதத்தைக் கொடு’ என்றார். வெட்கத்துடன் தான் கொண்டு வந்திருந்த சிறிதளவு பிரசாத பாத்திரத்தை சுவாமிகளிடம் அவள் காட்ட அவர் அந்த பாத்திரத்தை வாங்கிக் கொண்டு அமர்ந்து கொண்டார். அதில் இருந்த சாப்பாட்டை எடுத்து உண்ணத் துவங்கினார்.  அதில் இரண்டு    கவளம் எடுத்து உண்டப்பின் மீதி இருந்த இரண்டு கவளத்துடன் அதை அவளிடம் திருப்பித் தந்தார். ‘விரைவில் உனக்கு நல்ல குறும்புக்காரப் பிள்ளைப் பிறப்பான்’ என அவளை ஆசிர்வதித்தார்.

நாற்பத்தி ஐந்து வயதான அந்தப் பெண்மணி திகைத்து நின்றாள். தனக்கு  குழந்தை இல்லை என்ற மனவருத்தம் இவருக்கு எப்படித் தெரிந்தது?  தான் ஏழை என்பதையும் பார்க்காமல் அத்தனைக் கூட்டத்திலும்  தன்னை அழைத்து தான் கொண்டு வந்து இருந்த மிக சாதாரமான பிரசாதத்தை ஆசையுடன் அனைவர் முன்னிலையிலும் உண்டாரே….ஸ்வாமிகளின் அன்புதான் என்னே…… கண்களில் கண்ணீர் வழிந்தோட அவள் ஸ்வாமிகளின் காலடியில் விழுந்து சிறிது நேரம் அழுது  புலம்பினாள்.  அங்கு நடந்தவற்றை  பார்த்தபடி நின்று இருந்த அனைவரும் அதிர்ந்து போனார்கள்.  ஒவ்வொருவரும் தான்தான் ஸ்வாமிகளின் உண்மையான பக்தர் என எண்ணிக் கொண்டு  பெருமையுடன்  பலவிதமானா திரவியங்கள் போட்ட மணக்கும்  பிரசாதத்தை ஸ்வாமிகளிடம் தந்தாலும் ஒரு ஏழையின் எளிய பிரசாதத்தை வாங்கிக் கொண்டு  அதை ஆசையுடன் அவர் உண்டது அவர் ஏழை – பணக்கார பந்தங்களைக் கடந்த உண்மையான தெய்வமே  என்பதை அல்லவா காட்டியது! ஸ்வாமிகளின் ஆசிகளைப் பெற்ற அந்தப் பெண்மணிக்கு அடுத்த ஆண்டே அழகிய குழந்தை பிறந்தது என்பது அதைவிட ஆச்சர்யமான செய்திதானே.

என் பாதுகைகள்  உன்னை ரட்சிக்கும்

தர்வார் பகுதியில் இருந்த சிறிய இடமே ஹவேரி எனும் சிறிய ஊர்.அங்கு பாலப்பா என்ற நகைக் கடை அதிபர் இருந்தார். அவருக்கு செல்வத்திற்கு பஞ்சமில்லை. மனைவி மற்றும் குழந்தைகளும் அன்புடன் இருந்தனர். ஒற்றுமையான குடும்பம் அது. காலம் ஓடியது. பாலப்பாவிற்கு சம்சார வாழ்கை அலுத்தது. இறை வழிப்பாட்டில் மனம் அதிகம் செல்லச் செல்ல தனக்கு ஒரு நல்ல குரு கிடைப்பாரா என தேடி அலைந்தார். மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். மகனுக்கு பூணூல் போட்டப் பின் பல இடங்களில் இருந்த ஆலயங்களுக்கும் மடங்களுக்கும் செல்லத் துவங்கினார். வீட்டை விட்டு வெளியேறி விட்டு இப்படியாக சுற்றிக் கொண்டு இருந்தவர் கனகாபுரியை அடைந்தார். அங்கு சில காலம் தங்கி அங்கிருந்த தத்தாத்திரேயர் ஆலயத்தில் சேவை செய்யத் துவங்கினார். அப்போது ஒரு நாள் அவர் கனவில் ஒரு முதியவர் தோன்றிக் கூறினார் ‘ நீ அக்கல்கோட்டிற்குச் சென்று ஸமர்த்த ஸ்வாமியிடம் அடைக்கலம் ஆகிவிடு’. கனவு கலைந்தது. அதன் பின் அவர் அதுபற்றி மறந்து விட்டார்.

இரண்டு மாதங்கள் கழிந்தன. ஆனால் சில நாட்களாக அவருக்கு அந்தக் கனவைப் பற்றிய எண்ணம் வலுக்கத் துவங்கியது.  ஏன் அங்கு போக மறுக்கின்றாய் என்று உள் மனம் அடிக்கடி கேள்வியை எழுப்பத் துவங்கியது. எனக்கு ஏன் அப்படி ஒரு கனவு வந்தது என சிந்திக்கத் துவங்கினார். அக்கல்கோட்டில் ஸமர்த்த ஸ்வாமி என்பவர் உண்மையில் இருக்கின்றாரா? மற்றவர்களிடம் விசாரித்ததில் அக்கல்கோட்டில் ஸமர்த்த ஸ்வாமி பற்றிய விவரம் கிடைக்க உடனே அங்கு கிளம்பிச் சென்றார்.
1870 ஆம் ஆண்டு.  ஸ்வாமிகளைக் கண்டார். ஓடிச் சென்று அவர் கால்களில் விழுந்தார். பாலப்பாவைக் கண்ட ஸ்வாமிகள் அவரை அன்புடன் வரவேற்றதும் இல்லாமல், ‘என்னுடைய சிஷ்யன் வந்துவிட்டான் பாருங்கள்’ என அனைவரையும் அழைத்துக் காட்டினார். எதற்காக இது நடக்கின்றது என பாலப்பவிற்கே புரியவில்லை. தான் அவர் சிஷ்யரா? எது எப்படி இருந்தால் என்ன எனக்கு நான் தேடிக்கொண்டு இருந்த குரு கிடைத்து விட்டார் என மகிழ்ந்த பாலப்பா அங்கு தங்கியவாறே ஸ்வாமிகளுக்கு சேவை செய்யத் துவங்கினார். ஸ்வாமிகள் பாலப்பாவிற்கு பக்தி மார்கத்தையும், ஆன்மீகத்தையும் நிறையவே போதித்தார்.  ஸ்வாமிகள் சமாதி அடைவதற்கு  சில நாட்களுக்கு முன்னால் திடீரென அனைவருக்கும்  ஸ்வாமிகள் சில பொருட்களை  தனது பரிசாக தந்தார். ஆனால் பாலப்பாவிற்கு ஒன்றும் தரவில்லை. அதனால் பாலப்பா மன வருத்தத்தில் இருந்தார். ஆனால் அதை யாரிடமும் கூறவில்லை. குரு சேவையும் குறைக்கவில்லை.

ஒரு நாள் ஸ்வாமிகள் பாலப்பாவை அருகில் அழைத்தார். தன் கழுத்தில் இருந்த மாலையைக் கயற்றி அவர் கழுத்தில் போட்டார்.  அது மட்டும் அல்ல தனது பாதுகைகளை கயற்றி அவரிடம் தந்து விட்டுக் கூறினார் ‘ இவை உன்னை ரட்சிக்கும். மக்களுக்கு நன்மை செய்ய நீ ஒரு மடத்தைத் துவக்கு ‘.   குருவின் ஆணையை ஏற்ற பாலப்பா தன் ஊருக்குச் சென்று குரு மந்திர் என்ற மடத்தை நிறுவி சுவாமிகளின் பாதுகைகளை அங்கு வைத்து அதை பூஜித்து வந்தார். சில மாதங்களில் ஸ்வாமிகள் சமாதி அடைந்தார். பாலப்பா புழுவாய் துடித்தார், அழுதவண்ணம் இருந்தார்.

அப்போது ஒரு நாள் அவர் கனவில் தோன்றிய ஸ்வாமிகள் கூறினார் ‘ நீ எதற்காக அழுகிறாய்?. இந்தப் பாதுகையில் உள்ள நான் உன்னுடன்தானே என்றும் இருக்கின்றேன். நீ பாதுகைக்கு பூஜை செய்வது எனக்காகத் தானே. அதைதான்  நான் மகிழ்ச்சியுடன் தினமும்   ஏற்றுக் கொள்கின்றேன் அல்லவா?.  ஆகவே கவலைப் படாதே.  இந்த பாதுகைகள் என்றுமே உன்னை ரட்ஷித்தவாறு இருக்கும்’ . இதக் கூறிவிட்டு ஸ்வாமிகள் கனவில் இருந்து மறைந்தே போனார்.
அதன்பின் பாலப்பா தனது பெயரை பிரும்மானந்தஸ்வாமி என மாற்றிக் கொண்டு சன்யாசத்தை ஏற்றுக் கொண்டார். அக்கல்கோட் ஸ்வாமிகளின் புகழைப் பரப்பியவண்ணம் சுற்றித்  திரிந்து வந்தவருக்கு  நிறைய பக்தர்கள் சேர்ந்தார்கள். அதன் பின் 1910 ஆம் ஆண்டு அவரும் குரு மந்திரின் உள்ளேயே அமர்ந்து இருக்கையில் சமாதி ஆகி தனது ஆசானுடன் கலந்தார்.
பாகம்-6……. தொடரும்