பஞ்சகாலத்தில் அவதரித்து பட்டினி தீர்க்கும்

தேவி சாகம்பரி
சாந்திப்பிரியா
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் துர்கம் என்ற அசுரன் இருந்தான். அவன் கடுமையான தவம் புரிந்து பிரும்மாவிடம் இருந்து அறிய வரங்களைப் பெற்று விட்டான்.  அந்த வரத்தின்படி அனைத்து வேதங்களும் மந்திரங்களும் அவனுக்கு அடிமை ஆயின.  மேலும்  அனைத்து உலகிலும்  நடந்த அத்தனை புண்ணிய காரியங்களின் பலன்களும், அனைத்து பூஜைகளின் பலன்களும் அவனை வந்தடையும். அந்த வரம் பெற்றவன் அனைவரையும் ஆட்டிப் படைத்தான்.  அனைத்தும் அவன் வசம் ஆகி விட்டதினால் செய்யும் எந்த காரியத்தின்  பலன்களும் மக்களையும், பூமியையும் சென்றடையவில்லை. மழை பொழிவது நின்றது. பூமி காய்ந்தது. பயிர்கள் வாடின.  அசுரனின் கொடுமையினால் பயந்த தேவர்கள் இடம்  இடமாக பெயர வேண்டி இருந்தது. வேத மந்திரங்களை ஓத முடியாமல்  ரிஷிகளும் முனிவர்களும் யாகங்களையும், பூஜைகளையும் செய்ய முடியாமல் திண்டாடினார்கள். அவர்களும் தமது உயிருக்கு பயந்து கொண்டு  குகைகளிலும், பொந்துகளிலும் சென்று மறைந்து கொண்டு வாழ வேண்டியதாயிற்று. ஏன் எனில் அனைத்து மந்திரங்களும் அந்த அசுரனின் கைகளில் இருந்ததே. மழை இல்லை, நீர் இல்லை, நெருப்பு இல்லை எனஅனைத்து இடங்களிலும் பஞ்சம் ஏற்பட்டது. பலர் மடியத் துவங்கினர் . அந்த நிலை நூறு ஆண்டுகள் தொடர்ந்தது. பட்டினியினால் அவதிப்பட்ட தேவர்களும் ரிஷி முனிவர்களும் மற்ற அனைவரும் வேறு வழி இன்றி பராசக்தியை வேண்டினார்கள். இந்த பிரபஞ்சத்தையே படைத்தவள் அல்லவா பராசக்தி. முனிவரால், தேவர்கள் என அனைவரும் அழைத்த குரலுக்கு செவி சாய்த்து அவர்கள் முன்னால் வந்தாள்.
அவர்கள் முன்னால் வந்து நின்றவள் உடல் முழுது ஆயிரமாயிரம் கண்கள். கண்களே உடம்போ என்பது போல காட்சி தந்தாள். அடுத்து சில நிமிடத்தில் அவள் உடல் முழுவதும் காய்கள், தானியங்கள், உணவுப் பண்டங்கள் மற்றும் கனிகள் , பழங்கள் பூத்துக் குலுங்கின .  தம்முன் தோன்றிய பராசக்தியிடம் அவர்கள் அந்த துர்கம் எனும் அசுரனின் கொடுமைகளைக் அனைவரும் கூறி அழ , அவர்களைக் கவலைப் படாதீர்கள் எனத் தேற்றியவள்  அவள் முதலில் தேவர்கள், ரிஷி முனிவர்களை சுற்றி நெருப்பு வளையம் அமைத்து அதன் மீது தனது சக்ராயுதத்தை காவலுக்கு அமைத்தாள். அது அந்த நெருப்பு வலயத்தை சுற்றி சுற்றிச் சென்று காவல் காத்தது.
தேவியும் அதற்குள் சென்று அமர்ந்து கொண்டு தன் உடலில் இருந்து பெரும் சேனையை வெளிக் கொண்டு வந்தாள். அவள் உடலில் இருந்து 64000 தேவர்கள் மற்றும் பத்து சக்தி தேவதைகள் வெளிவந்தனர். யாகமும், பூஜையும் செய்தால்தானே அவற்றின் பலன் அந்த அசுரனுக்குப் போகும். தேவி அமைத்ததோ வெறும் நெருப்பு வளையும், அவனை அழிக்கும் வளையமும் மட்டுமே . ஆகவே அழிவின் பலனும் அவனை சென்று அடைந்தது.
தேவி தான் படைத்த  படையுடன் சென்று அந்த அசுரனுடன் ஒன்பது நாட்கள் யுத்தம் செய்து பலன்களை இழந்த அவனை தன்னுடைய சூலாயுதத்தினால் குத்திக் கொன்றாள். ஆகவே துர்கமை அழித்த அவளை  துர்க்கை என அழைத்தனர்.
பஞ்சத்தைத் தீர்க்க அவதரித்தவளை சாகா என்றால் மாமிசமில்லாத உணவுப் பொருட்கள் + காரி என்றால் அதைக் கொண்டவள் என்ற பொருளில் சாகாரி தேவி என அழைத்தனர்.
பல இடங்களிலும் அவளைப் போற்றித் துதித்து வணங்கி நாட்டில் பஞ்சம் ஏற்படாது பாதுகாக்கும் தேவியாக காத்தருள அவளுக்கு ஆலயங்கள் எழும்ப வைத்தனர். சாகாரி தேவியின் ஆலயங்கள் கர்நாடகா, உத்திராஞ்சல் , உத்திரப் பிரதேசம்,  ராஜஸ்தான், கொல்கத்தா, மகராஷ்டிரா போன்ற இடங்களில் உள்ளன. சென்னையிலும் அவளுக்கு ஒரு ஆலயம் அமைய உள்ளதாம்.