ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள் – 20

மீன்குளத்தி மதுரை
மீனாஷி ஆலயம்
சாந்திப்பிரியா  
 

கேரளாவில் பள்ளசேனா என்ற சிறிய கிராமத்தில் உள்ளதே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டுள்ள மீன்குளத்தி மீனாஷி ஆலயம். ஆலயத்துக்கு கொடையனூர் சென்று அங்கிருந்து பள்ளசேனாவுக்கு செல்லலாம். இல்லை என்றால் பொள்ளாச்சி சென்று, அங்கிருந்து கோவிந்தபுரம் வழியே கொல்லன்கோட்டை அடையலாம். அல்லது பாலக்கட்டை சென்றடைந்து அங்கிருந்து எட்டிமறை என்ற ஊரின் வழியாக ஆலயத்துக்கு செல்லலாம். பாலக்காட்டில் இருந்து எவரும் ஊருக்குச் செல்லும் வழியைக் கூறுவார்கள்.

பல நூற்றாண்டுகள் முன்னர் வீர சைவ வெள்ளாளர்கள் என்ற சமூகத்தினர் கும்பகோணம், மதுரை, தஞ்சாவூர் போன்ற ஊர்களில் இருந்து கேரளாவுக்குச் சென்று வைர வியாபாரம் செய்து வந்தனர். நாளடைவில் அங்கு சென்று வருவது கடினமாக இருந்ததினால் பல குடும்பங்கள் பாலக்காட்டை உள்ளடக்கி இருந்த அன்றைய மலபாரில் சென்று தங்கினார்கள். அவர்கள் மதுரை மீனாஷி அம்மனை தமது குல தெய்வமாக கருதி வணங்கி வந்ததினால் போகும்போது தம்முடன் மீனாஷி அம்மன் ஆலயத்தில் இருந்து ஒரு கல்லையும் எடுத்துச் சென்று இருந்தனர். அதை ஒரு இடத்தில் வைத்து மீனாஷி அம்மனாக வழிபட்டனர். அதன் பின் சிலர் வருடாவருடம் மதுரைக்குச் சென்று குல தெய்வ தரிசனம் செய்துவிட்டு வருவார்கள்.

அவர்களில் ஒரு குடும்பத்தில் வயதானவர் இருந்தார். அவருக்கு அதிக வயதாகிவிட்டதினால் வருடாவருடம் மதுரைக்குச் சென்று அம்மனை வழி பட முடியவில்லை. ஒரு நாள் அவர் ஒரு குளத்தருகில் தம்முடைய ஓலைக் குடையை என்றும் போல வைத்து விட்டு குளித்து விட்டு வந்தார். ஆனால் அவரால் குடையை அந்த இடத்தில் இருந்து தூக்க முடியவில்லை. பயந்து போனவர் உள்ளூரில் இருந்தவர்களை அழைத்து வந்து அந்த அதிசயத்தைக் காட்ட வந்த எவராலும் அந்தக் குடையை தூக்க முடியவில்லை. அங்கு ஜோதிடர் (பிரசன்னம் கூறுபவர்) அழைத்து வரப்பட்டார். அவர் அந்த இடத்தில் மதுரை மீனாஷி குடுகொண்டு உள்ளாள் எனவும் ஆகவே அவர்கள் அந்த இடத்திலேயே அவளுக்கு ஆலயம் எழுப்பி வழிபடுமாறு கூறினார். அதன்படி அனைவரும் நிதி திரட்டி அங்கு ஆலயம் அமைத்தனர்.

ஆலயத்தில் சில தெய்வங்களின் சிலைகள்

ஆனால் நானூறு ஆண்டுகளுக்குப் பின்னால் அம்மன் மீண்டும் இன்னொருவர் கனவில் தோன்றி தனக்கு பெரிய ஆலயம் எழுப்புமாறுக் கூற அவள் கூறியபடி அந்த பழைய ஆலயத்தைத் தள்ளி இன்னொரு பெரிய ஆலயம் அமைத்தனர்.

குளத்து அருகில் ஆலயம் 

அதுவே மீன்குளத்தி மீனாஷி ஆலயமாயிற்று. அம்மன் மீன்கள் நிறைய இருந்த குளத்தின் அருகில் கிடைத்ததினால் அவள் பெயர் மீன் குளத்தி என ஆயிற்று. அவளை அனைவரும் மதுரை மீனஷியாகவே கருதி அங்கு வழி படுகின்றனர்.

ஆலய விலாசம்
Pazhayakavu Devaswom Pallassana.
P.O. Palakkad (Dist) – 678 505