முதிராஜ் சமூகம்

சாந்திப்பிரியா

முதிராஜ் அதாவது முத்திரையர் எனும் சமூகத்தினர் தம்மை ஷத்ரியர்கள் எனக் கூறிக் கொள்கிறார்கள். அவர்கள் போர் வீரர்கள். திராவிட வழி வந்த மலைவாசியினர். விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவியதில் பெரும் பங்கு பெற்றவர்கள். இந்து மதத்தை பாதுகாக்க தம் உயிரையும் துச்சமெனக் கருதி போரிட்டவர்கள். முடிராஜாக்கள் வழி வந்தவர்களில் சந்திரகுப்த மௌரியா, அசோகன், புத்தரின் தாயார், வால்மீகி, ஹனுமான், சுக்ரீவர், இராம பக்தை சபரி, ஏகலைவன் என்று பலர் உள்ளதாகக் கூறுகின்றனர். முடிராஜாக்களில் ஒரு பிரிவினரை வல்லாளர் எனவும் இராஜ பரம்பரையினரை சோழர்கள் எனவும் கூறுகிறார்கள். முடிராஜாக்களின் அதாவது முத்திரையர்களின் தெய்வம் அங்கம்மா என்பதாகும். சோழ மன்னர்களும் அங்கம்மாவையே வணங்கி வந்தனர். நாளடைவில் அங்கம்மாவின் பெயர் மருவி அங்காளம்மா, அங்காளி, அங்காலி, அன்கால பரமேஸ்வரி மற்றும் அங்காள பரமேஸ்வரி என்ற பெயரில் பல தெய்வங்களாக ஆயின. சப்த கன்னிகைகளில் ஒருவராம் அங்காலம்மா. அவனை காளியின் அவதாரம் எனவும், திருமூர்த்திகளைப் படைத்த சக்தியின் அவதாரம் எனவும் கூறுகிறார்கள்.

அங்காளம்மா அல்லது அங்கம்மா

கிராமங்களில் பொதுவாக எல்லைப் பகுதியில் மரத்தடிகளில் உருவமற்று ஒரு கல் உருவில் அமர்ந்துள்ளாள் அங்காளம்மா. அவளுக்கென தனியான ஆலயங்கள் கட்டப்படவில்லை. அங்கெல்லாம் அங்கம்மா கொழுப்பு என்ற பெயரில் ஒரு முக்கிய இரவு பூஜை சடங்கு நடைபெறுகின்றது. கோதுமை மாவு மஞ்சள் தூள் கரி மற்றும் குங்குமம் போன்ற பொருட்களினால் கோலங்கள் போடப்பட்ட அந்த இடத்தில் இரவெல்லாம் மாடன் எனும் வீரன், இராவதேவராஜு போன்ற மாவீரர்களுடைய புகழ் பாடும் பாடல்களைப் பாடுவார்கள். அது முடிந்து ஆட்டு பலி தரப்பட்டு சடங்கு முடியும். அந்த சடங்கை தனிப்பட்ட முறையிலோ அல்லது தமது சமூகத்தினரின் சார்பிலோ எவராவது செய்வார்கள்.

வீரன் எனப்படும் மாடன் என்ற தெய்வம் கோனார், தேவர், பிறையர், நாடார் போன்ற சமூகத்தினரால் தமிழகப் பகுதிகளில் வணங்கப்படுபவர். கன்யாகுமரி மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளில் அவர் பிரபலமான கிராம தெய்வம். அவருடைய ஆலயங்கள் கிராம எல்லைகளில் அமைந்து இருக்கும். அவர் கைகளில் வாளேந்தி பிற ஆயுதங்கள் கொண்டு காட்சி தருபவர். அவர் இசக்கி அம்மனின் சகோதரர்.

இசக்கி அம்மன் குழந்தைகள் பேறு பெற குழந்தைகள் நல்லபடி வளர மற்றும் நல்ல சமூகம் அமைய வேண்டும் என்பதற்காக வணங்கப்படுபவள். மாடனை சிவன் மற்றும் பார்வதியின் படைப்பு என்று கூட கருதுகிறார்கள். அங்கம்மாவை வழிபடும் தேவர் சமூகத்தினரை மறவர், கள்ளர் மற்றும் அகமுதையார் அடங்கிய முக்குலத்தோர் என அழைக்கின்றனராம்.

ஆந்திராவில் தெலுங்கானா பகுதிகளில் அங்கம்மாவை நான்கு கைகளுடன் உள்ள தேவியாக வழிபடுகிறார்கள். ஆனால் கடலோறப் பகுதியில் குங்குமம் மற்றும் மஞ்சள் புள்ளிகளான ஒரு சித்திரத்தைப் போட்டு அதையே அங்கம்மாவாக கருதி வணங்குகின்றனர். அங்கம்மாவுக்கு ஆயிரம் கண்கள் உண்டாம். ஆகவே அந்த சித்திரத்தில் வைக்கப்படும் குங்குமப் பொட்டுக்களை அங்கம்மாவின் கண்களாகப் பாவிக்கின்றனர். அங்க் + அம்மா ஸ்ரீ = அங்க்கம்மா என வரும். அங்க் என்றால் கண் என்ற பொருள் உண்டு. ஆகவேதான பல பகுதிகளிலும் அந்த அம்மனின் அழகிய கண்களுக்கு முக்கியத்துவம் தந்து அவளை மீனாட்ஷி, காமாட்ஷி மற்றும் நாராயணி என்ற உருவிலும் மற்றவர்கள் பூஜிக்கின்றனராம். அங்கம்மாவை பார்வதியின் அவதாரம் எனவும் கூறுகிறார்கள். அம்மனுக்கு ஆயிரம் கண்கள் என்பதிhல்தான் ஒரே நேரத்தில் அனைத்து பக்தர்களையும் பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றாள் என நம்புகின்றனர்.

அங்கம்மாவை அங்காளி, அங்காளம்மா, மஹான்காளம்மா என்ற பெயர்களிலும் வழிபடுகிறார்கள். அங்கம்மாவின் திருவிழாவில் சாமி ஆடிவரும் பூஜாரி தனது பற்களினால் ஆட்டின் கழுத்து நரம்பைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சிக் குடித்தப் பின் துடிதுடிக்கும் அந்த மிருகத்தைத் தூக்கிக் கொண்டு அங்கம்மாவின் ஆலயத்துக்குச் செல்வார்களாம். ஒரு புராணக் கதையின்படி ஒரு முறை ஒரு மன்னன் தன்னை கழுகு மரத்தில் ஏற்றிக் கொன்றால் கூட சக்தியை வணங்க மாட்டேன் என சபதம் செய்ய பின்னர் அவனுக்கு அப்படிப்பட்ட மரணமே கிடைத்ததாம்.

அங்கம்மாவின் வழிபாட்டில் ஆயுதங்களும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. ஆயுதங்களை பூட்டப்பட்ட ஒரு ஓலைப் பாயில் பின்னிய கூடையில் வைத்து பூஜை அறையில் தொங்க விட்டு மாலை போட்டு அங்கம்மாவின் படத்துடன் சேர்த்து வணங்குகின்றனர்.

வழிபடப்படும் ஆயுதக் கூடையின் சித்திரம்
போத்தராஜு

தேவி அங்கம்மா மற்றும் மஹாகாளம்மாவின் சகோதரர் போத்தராஜு. அவர் பயங்கரமாகக் காட்சி தருவார். விழாக் காலங்களில் அவரைப் போலவே உடை அணிந்தவர்கள் ஊர்வலங்களின் முன்னால் செல்வார்கள். அவர்களில் சிலர் தம் உடம்புகளில் சாட்டையினால் அடித்துக் கொண்டே செல்வார்கள். போத்தராஜு தீய சக்திகளை அண்ட விடாது துரத்துபவராம். அவரைப் போன்று உடை அணிந்தவர்கள் நடனம் ஆடிக் கொண்டே செல்ல அவர் பின்னால் சாமியாடியபடி பெண்களும் நடனமாடிக் கொண்டே செல்வார்கள். இடுப்பில் மணியை கட்டிக் கொண்டு உடல் முழுவதும் மஞ்சளும் குங்குமமும் பூசிக் கொண்டு சிவப்பு நிறத் துணி உடுத்தி மேளதாளம் அடித்தபடி வருபவர்களின் மேளத்துக்கேற்ப நடனமாடிக் கொண்டு ஊர்வலத்தில் வரும் போதிராஜுக்கள் சில நேரங்களில் தம்முடைய சமூகத்தினரைப் பற்றிய வருங்கால வரலாற்றை சொல்லிக் கொண்டே செல்வார்கள். ஓங்கொல் மாவட்டத்தில் உள்ள அடன்கி என்ற கிராமத்தில் அங்கம்மாவின் சகோதரியாக போலரம்மா என்ற தேவியை வணங்குகிறார்கள்.

ஜுன்-ஜுலை மாதங்களில் பத்து அல்லது பதினைந்து நாட்கள் பாஜிலபள்ளி, ராஜன்பேட்டை, கடப்பா போன்ற இடங்களில் மஹாகாளி அங்கம்மாவுக்கு உணவு படைக்கும் விழா ’போனலு” என்ற பெயரில் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது. அப்போது மஞ்சள் மற்றும் குங்குமத்தினால் கோலங்கள் போடப்பட்ட பானைகளில் அரிசி, வெல்லம் மற்றும் பால் அல்லது தயிரை எடுத்து வந்து நேவித்தியமாகப் படைக்கிறார்கள். போனலு பண்டிகை முக்கியமாக காளிக்கு நடைபெறுகின்றது. அவள் நோய் நொடிகளை அழிப்பவள். முக்கியமாக பிளேக் எனும் நோய் வராமல் தடுப்பவளாம். அவர்கள் மைசம்மா, போச்சம்மா மற்றும் எல்லம்மாவையும் வணங்குகிறரர்கள்.

ஹைதிராபாத் உஜ்ஜயினி மஹாகாளி

இந்த காளியைப் பற்றி கூறப்படும் புராணக் கதை இது. 1813 ஆம் ஆண்டு இராணுவத்தில் பணியாற்றி வந்த சுருட்டி அப்பையா என்பவரை உஜ்ஜயினிக்கு மாற்றினர். அப்போது உஜ்ஜயினியில் பிளேக் நோய் பரவி பலர் மடிந்தனர் அப்பையா அங்கிருந்த மஹாகாளி ஆலயத்துக்குச் சென்று தான் அந்த நோயில் இருந்து தப்பி விட்டால் ஹைத்திராபாத்தில் அது போலவே ஒரு ஆலயம் எழப்புவதாக வேண்டிக் கொண்டாராம். அவர் மீண்டும் திரும்பி சொந்த ஊருக்கே வந்ததும் 1815 ஆம் ஆண்டு செகந்திராபாதில் ஒரு மரக்கட்டையில் அந்த கானி உருவை செதுக்கி முதலில் ஒரு ஆலயம் அமைத்தாலும் 1964 ஆம் ஆண்டு அந்த பழைய ஆலயம் புதுப்பிக்கப்பட்டு அந்த காளிக்கு கல்லினால் ஆன சிலை செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.