தெரிந்த ஆலயம் – பலரும் அறிந்திராத தல வரலாறு 1
சென்னை சைதாப்பேட்டை

காரணீஸ்வரர் ஆலயம்

சாந்திப்பிரியா

நம்மில் பலரும் அது நடக்கும் இது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் எந்த ஒரு ஆலயத்திற்கும் செல்கின்றோம். ஆனால் அங்கு அந்த ஆலயம் எப்படி வந்தது, அதன் மகத்துவம் என்ன என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு ஆலயத்துக்குச் சென்றால் அதன் தலவரலாற்றை தெரிந்து கொண்டு வழிபடுவதின் மூலம் நம்பிக்கைகள் இன்னமும் ஆழமாகப் பதியும். அதன் விளைவாக எழுந்ததே இந்த சுருக்கமான தல வரலாறு.

காரணீஸ்வரர் ஆலய தெப்பக் குளமும் ஆலயமும்

தல வரலாறு:

ஒரு முறை வசிஷ்ட முனிவர் தாம் செய்ய இருந்த யாகத்துக்கு பல பொருட்களையும் வாங்க வேண்டும் என்பதினாலும் யாகம் தடங்கல் இன்றி நடைபெற வேண்டும் என்பதற்காகவும் இதைக் கேட்டாலும் உடனடியாகத் தரும் காமதேனுப் பசுவை சில நாட்கள் தமக்கு இரவலாகத் தந்து உதவ வேண்டும் என தேவேந்திரனான இந்திரனிடம் வேண்டுகோள் விடுக்க தேவேந்திரன் தனது காமதேனு பசுவை அவருக்கு சில நாட்கள் வைத்திருக்கும்படித் தந்தார். அந்தப் பசுவும் வசிஷ்டரிடம் இருந்தது. ஒரு நாள் அந்தப் பசு யாகம் நடந்து கொண்டு இருந்த இடத்தில் இடையூறு செய்ய  கோபமடைந்த வசிஷ்டர் அந்த காமதேனுப் பசுவை காட்டில் திரிந்து அலையும்  காட்டுப் பசுவாக மாறித் திரியுமாறு சாபமிட்டார். ஆகவே அதுவும் காட்டில் சென்று காட்டுப் பசுவாக மாறி சுற்றி அலைந்தது.

வெகு நாட்கள் ஆகியும் காமதேனு திரும்பி வராததைக் கண்ட தேவேந்திரன் அந்தப் பசுவின் நிலைப்  பற்றி விஜாரித்து அறிந்து கொண்டப் பின் வருத்தம் அடைந்தார். வசிஷ்டரை அவரால் எதிர்க்க முடியாது. அவர் மாபெரும் முனிவர், அவருடைய சாபத்தை தன்னால் அழிக்க முடியாது என்பதை உணர்ந்தவர். ஆகவே அவரிடமே சென்று சாப விமோசனம் பெற்று அதை திரும்பப் பெற என்ன செய்ய வேண்டும் எனக் கேட்க, தன் கோபத்தை நினைத்து வருந்திய வஷிஷ்ட முனிவரும் தான் இட்ட சாபத்தை திரும்பப் பெறும் சக்தி தமக்கே இல்லை என்பதினால் அவரும் தொண்டை மானிலத்தில் (தற்பொழுது ஆலயம் உள்ள இடம்) ஒரு சோலையை அமைத்து, அதில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தால் சிவபெருமானின் அருளினால் சாபம் விலகி காமதேனு அவருக்கு மீண்டும் கிடைக்கும் என அறிவுறைத் தந்தார்.

அதைக் கேட்ட தேவேந்திரனும் உடனேயே அங்கு சென்று தமது சக்தியினால் சோலைகள் அமைத்து ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அந்த சோலைக்குள் பல காலம் இருந்து தவம் செய்து பூஜை செய்தார்.  சிலகாலம் பொறுத்து அவர் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவர் முன் காட்சி அனித்து அவருக்கு என்ன வேண்டும் எனக் கேட்க தேவேந்திரன் நடந்தது அனைத்தையும் கூறி தமக்கு காமதேனுப் பசுவை திரும்ப கிடைக்க அருளுமாறு கேட்டார். சிவபெருமானும் மகிழ்ச்சி அடைந்து காமதேனுவை மீண்டும் அவருக்குக் கிடைக்க வழி செய்தார். சோலை வளர்த்து மழை பொழிவித்து அந்த இடம் குளுமையாக இருந்ததினால் அதை காரணி அதாவது குளுமை என அழைத்து, அங்கு ஈஸ்வரரை வழிபட்டதினால் காரணீ ஈஸ்வரர் என்ற பெயரில் ஆலயம் அமைய நாளடைவில் அது மருவி காரணீஸ்வரர் என ஆயிற்று. ஆலயம் சுமார் 750 வருடத்திற்கு முற்பட்டது எனக் கூறுகிறார்கள்.